
“ `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ பட வாய்ப்பு எப்படி வந்தது?”
‘மாவுளியோ மாவுளி’ - சமீபத்தில் ஹிட் அடித்த பாடல்களில் ஒன்று. `குரங்கன்’, `கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்’ என, தனியிசைக் குழுவின் முக்கிய நபராக இயங்கிக்கொண்டிருந்த டென்மா, இப்போது `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் மூலம் திரையுலகிலும் பயணம் தொடங்கியிருக்கிறார்
“டென்மா - பெயர்க் காரணம்?”
“என் நிஜப்பெயர் வேற. ஆனால், சாதி, மதம், பாலினம் சார்ந்த எந்த அடையாளமும் இல்லாத ஒரு பெயரைத் தேடிட்டிருந்தேன். எனக்கு மாங்கா காமிக்ஸ் படிக்குறது பிடிக்கும். `மான்ஸ்டர்’ங்கிற மாங்கா காமிக்ஸ்ல வர்ற ஒரு கதாபாத்திரத்தின் பெயர் கென்ஸோ டென்மா. எவ்வளவு தோற்றாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்துகிட்டே இருக்கிற கதாபாத்திரம். என் வாழ்க்கையின் அந்தக் காலகட்டத்தில் அப்படி ஒரு பெரிய நம்பிக்கை எனக்குத் தேவைப்பட்டது. அதனாலேயே, டென்மா என் மனதுக்கு ரொம்ப நெருக்கமான பாத்திரமா மாறுச்சு. அதன் பெயரையும் எனக்காக நான் எடுத்துக்கிட்டேன். டென்மான்னு கூப்பிடுறதுக்கும் சின்னதா இருக்குல்ல, அதுவும் ஒரு காரணம்!”
“தனியிசைக் கலைஞர் நீங்க. முதன்முறையா சினிமாவுக்கு இசையமைச்ச அனுபவம் எப்படி இருந்தது?”
“நிச்சயம், வேற மாதிரியான அனுபவம்தான். தனியிசைக் கலைஞரா இருக்கும்போது பாடலை, நேரடியா மக்கள் கிட்டேயே பாடிக்காட்டலாம். அதன்பிறகு, அவங்களுக்குப் பிடிச்சிருந்தால் ரெக்கார்டிங் போகலாம். ஆனால், சினிமா அப்படியே தலைகீழ். நேரடியா ரெக்கார்டிங். பிறகுதான் மக்கள் பாடலைக் கேட்கறதும், கேட்காமல் இருக்குறதும். சினிமாவில் பாடல்கள்ங்கிறது படத்தின் விளம்பரத்துக்கான கருவியும் கூட.

அதனால், கண்டிப்பா பாடல்கள் ஹிட் அடிக் கணும். பெரும்பாலான மக்களிடம் சென்று சேரணும்ங்கிறதும் ஒரு முக்கியமான சவால். எனக்கு இசை தெரியாது. மக்கள் கிட்டே இருந்துதான் நான் இசையைக் கத்துக்கிட்டேன். அதை இப்போ திருப்பிக் கொடுக்கணும். அவ்ளோதான்!”
“ `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ பட வாய்ப்பு எப்படி வந்தது?”
“ `கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்’ காலத்தில் இருந்தே பா.இரஞ்சித்துக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ஒருமுறை, `சினிமாவுக்கு இசையமைக்க ஆசை இருக்காடா?’ன்னு கேட்டார். `நான் இதுலேயே சந்தோஷமா இருக்கேன் சார்’னு சொல்லிட்டேன். இன்னொரு நாள், என் இசைத் துணுக்கைக் கேட்டவர், `சினிமாவுக்கெல்லாம் உங்களை மாதிரியான ஆள்கள் வரணும்’னு சொன்னார். `யாரும் வாய்ப்பு கொடுக்கமாட்றாங்க சார். அதனாலேயே, நாங்களும் கேட்குறது இல்லை’ன்னு சொல்லிட்டேன். அப்புறம், படத்தின் இயக்குநர் அதியன் ஒருநாள் கூப்பிட்டு கதை சொன்னார். `எனக்கு எதுக்குக் கதை சொல்றீங்க’ன்னு நான் கேட்க, `நீங்கதான் படத்துக்கு மியூசிக்’னு சொல்லிட்டார். ரஞ்சித் சாரும் `என்னடா, பண்றியா?’ன்னு கேட்கும்போது `பண்ணமாட்டேன்னு இல்லை. ஒருவிதமான பயம் இருக்கு’ன்னு சொன்னேன். ஏன்னா, சினிமாங்கிறது பெரிய ஊடகம். அதனுடைய தாக்கம் பெரிது. என் டீம்ல சிலரும் நம்பிக்கையா `பண்ணிடலாம்’னு சொன்னாங்க. ரஞ்சித் அண்ணனும் நம்பிக்கை கொடுத்தார். நீலம் புரொடக்ஷன், சமூகத்துக்கு அவசியமான பல விஷயங்களைப் பண்ணிட்டிருக்கு. யோசிச்சுப் பார்த்தேன். `பண்ணலாமே’ன்னு எனக்கும் நம்பிக்கை வந்தது. பண்ணிட்டேன்.”
“பா.இரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடல்களைக் கேட்டாரா?”
“சந்தோஷ் நாராயணன் எனக்கு நல்ல நண்பர். அவரை நான் முதன்முறையா சந்திச்சது `அட்ட கத்தி’ ரெக்கார்டிங்லதான். நான் சவுண்ட் இன்ஜினீயரா வேலை பார்த்தேன். `நிலமெல்லாம்’ பாடல் வெளியானபோது போன் செய்து பேசினார். ‘நீ இப்போ இசையமைக்குறது. வெளியே இருக்குற பல தனியிசைக் கலைஞர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். இது ஆரோக்கியமான விஷயம்’னு சொன்னார்.”
“தனியிசையைத் தாண்டி, உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்?”
“கண்டிப்பா யுவன் சங்கர் ராஜா. `காதல் கொண்டேன்’, `7ஜி ரெயின்போ காலனி’, `புதுப்பேட்டை’, `சர்வம்’ பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். `நினைத்து நினைத்துப் பார்த்தால்” பாட்டுதான் என்னுடைய மோஸ்ட் ஃபேவரைட். ஆனால், `தேவதையைக் கண்டேன்...’ பாட்டு கேட்டால் மட்டும் நான் அழுதுடுவேன். அந்தப் பாட்டை முதன்முறையா கேட்கும்போதும் நான் அழுதேன். அதன்பிறகு, எப்போ கேட்டாலும் அதே உணர்வு. இப்போ சமீபத்துல யுவன் ஆல்பம் கேட்டுக்கிட்டு இருந்தப்போ, அந்தப் பாட்டு வந்துடுச்சு. `அச்சச்சோ நாம இப்போ சந்தோஷமா இருக்கோம். இந்தப் பாட்டு நம்மளை அழ வெச்சிடுமே’ன்னு உடனே ஸ்கிப் பண்ணிட்டேன். காது, மூளையைத் தாண்டி நேரா, ஆன்மாவைத் தொடுற கலைஞர் அவர்...” சிலிர்ப்புடன் சிரிக்கிறார் டென்மா.