Published:Updated:

சந்தோஷின் இசை வெறும் போதையல்ல... அது ஒரு ராஜபோதை! #HBDSaNa

சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்

எம்.எஸ்.வி-யின் நீட்சியாக ராஜா வந்தார், ரஹ்மானின் இசையால் உந்தப்பட்டு வந்த இளம் இசையமைப்பாளர்கள் நிறைய... ஹாரிஸ் ஜெயராஜ் தொடங்கி அனிருத் வரை, ஜிப்ரான் முதல் சந்தோஷ் நாராயணன் வரை. இதில் சந்தோஷை மட்டும் கோடிட்டுக் காட்ட வேண்டிய அவசியம்?

மனதை வசியம் செய்யும் இசைக்கு சொந்தக்காரர், சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமாவின் டாப் பாடல்கள் என இந்த உலகத்தில் யார் லிஸ்ட் போட்டாலும் சரி, நிச்சயம் சந்தோஷின் பாடல் மிஸ் ஆகாமல் இடம் பிடிக்கும். அலட்டல் இல்லாத அன்பின் இசைஞன். இசை உலகில் தனக்கென தனிப் பாதையை உருவாக்கிய இசை நாயகனுக்கு இன்று பிறந்தநாள்.

'ஆரண்ய காண்டம்' படத்துக்கு எப்படி ஒரு கல்ட் ரசிகர் கூட்டம் இருக்கிறதோ, அதேபோல அப்படத்தில் யுவனின் பின்னணி இசைக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. என்றோ ஒரு பேட்டியில்... தியாகராஜன் குமாரராஜாவிடம் அப்படத்தின் பின்னணி இசை குறித்து கேட்ட போது, அதற்கு அவர் தந்த அட்டகாசமான‌ பதில் இது. ''படம் ஃபுல்லா சண்டை, கெட்ட வார்த்தை, அழுக்கான இடம். படம் பார்க்கிறவங்களுக்கு, அட்லீஸ்ட் மியூசிக் வழியாவது அந்த டென்ஷன குறைக்கலாம்னு பாத்தேன். அதுக்கு வெஸ்டர்ன் கிளாசிக்கல் யூஸ் பண்ணா நல்லா இருக்கும்னு தோணுச்சு" என்றார் தியாகராஜன் குமாரராஜா.

நீ... நான்... நாம் வாழவே... மனம் எங்கும் இசையை நிறைக்கும் சந்தோஷ் நாராயணன்! #HBDSanthosh

சந்தோஷ் நாராயணின், ''என்னடி மாயாவி நீ'' பாடலை கேட்கும்போதெல்லாம் தியாகராஜன் குமாரராஜா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. முதல் ஷாட்டில் இருந்து கடைசி ஷாட் வரை ரத்தம் தெறிக்கத் தெறிக்க‌ சண்டை நிறைந்த 'வடசென்னை' படத்தில், இப்படி ஒரு மென்மையான பாடல் ஆச்சர்யம்தான். ஆனால், நம் துரதிர்ஷ்டம், முழுப் பாடல் படத்தில் படமாக்கப்படவில்லை.

'வானம் பார்த்தேன்' பாடலின் ஆரம்ப வயலின்/புல்லாங்குழல் இசையும், நாயகன், நாயகியை நினைத்துப் பாடும் விதமும், 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி'யின் மெல்லிய தாக்கம் இருக்கும். அதேபோல‌, 'என்னடி மாயாவி நீ' பாடலில் 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி' பாடலின் மெல்லிய அடித்தளம் வைத்து சந்தோஷ் நாராயணன், தன் பாணியில் அற்புதமாய் இசையமைத்திருப்பார்.

இந்த இரண்டு பாடல்களையும் எத்தனை லட்சம் பேர் கேட்டிருக்கிறார்கள் என்று யூ-டியூப் மட்டும் சாட்சி சொல்லமுடியாது. பலரின் ப்ளேலிஸ்ட்டிலும் இந்தப் பாடல் காலம் முழுக்க ஒலித்துக்கொண்டேதான் இருக்கும். குறிப்பாக, பாடலின் நடுவே வரும் சித் ஸ்ரீராமின் ஹம்மிங், துணையாக பின்னணியில் ஒலிக்கும் பியானோ தாளங்கள், சன்னமான பேஸ் கிடார் இசை, பூப்போல மெதுவாய் விரியும் வயலின் ஆர்கெஸ்ட்ரேஷன் என இந்தப் பாடல் தரும் பிரமிப்பு, பரவசம். பல முறை கேட்ட பின்பும் தொடர்கிறது. இதுபோன்ற அபூர்வங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை.

எண்பதுகளுக்கு ராஜா; தொண்ணூறுகளுக்கு ரஹ்மான்; இரண்டாயிரங்களில் யுவ‌ன்; இந்த வரிசையில், கடந்த பத்தாண்டுகளில், தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவர் என்றால் சந்தோஷ் நாராயணன் என்று எவ்வித தயக்கமும் இன்றி தைரியமாகச் சொல்லலாம்.

''ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்,'' ''கண்ணுக்குள் நூறு நிலவா,'' ''மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு'' போன்ற பாடல்கள் ராஜா இசையமைத்தவை என்றால் நம்பும் ஒரு கூட்டம் இன்றும் இருக்கிறது. ஆனால், இம்மூன்று பாடல்களும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்தது. இந்த குழப்பத்திற்குக் காரணம், எண்பதுகளில் ராஜாவைத்தவிர வேறு இசையமைப்பாளர்கள் தங்களுக்கென்று ஒரு பாணி, தனித்துவம் இல்லாமல் இருந்ததுதான். இதனால், மக்கள் எந்த ஒரு நல்ல மெலடி வந்தாலும் அது ராஜாதான் இசையமைத்திருக்கக்கூடும் என்று இயல்பாக நினைக்க ஆரம்பித்துவிட்டனர். ஒரிஜினாலிட்டி இல்லாதன் காரணத்தாலேயே மற்ற இசையமைப்பாளர்களால் சில படங்களுக்கு மேல் சோபிக்க முடியவில்லை. பின், தொண்ணூறுகளில் முற்றிலும் ஒரு புது மாதிரி இசையை ரஹ்மான் கொண்டுவந்தபோது, அது எத்தகைய தாக்கத்தை தமிழ் சினிமா இசையில் உண்டு பண்ணியது என்று எல்லோருக்கும் தெரியும்.

எம்.எஸ்.வி-யின் நீட்சியாக ராஜா வந்தார், ரஹ்மானின் இசையால் உந்தப்பட்டு வந்த இளம் இசையமைப்பாளர்கள் நிறைய... ஹாரிஸ் ஜெயராஜ் தொடங்கி அனிருத் வரை, ஜிப்ரான் முதல் சந்தோஷ் நாராயணன் வரை. இதில் சந்தோஷை மட்டும் கோடிட்டுக் காட்ட வேண்டிய அவசியம்? கடந்த பத்து ஆண்டுகளில் வந்த சிறந்த பத்து பாடல்களை யார் தொகுத்தாலும், சந்தோஷின் பாடல்கள் அதிகம் இருக்கும். ''நீ நான் நாம் வாழவே,'' ''ஆசை ஓர் புல்வெளி,'' ''ஆகாயம் தீ பிடிச்சா,'' ''உசுரு நரம்புல நீ,'' ''பொட்டக்காட்டில் பூ வாசம்,'' ''ஏ சண்டக்காரா,'' ''மாய நதி இன்று,'' ''வானம் பார்த்தேன்,'' ''கண்ணம்மா,'' '' பூ அவிழும் பொழுதில்,'' ''என்னடி மாயாவி நீ,'' ''கார்குழல் கடலையே'' என நீள்கிறது பட்டியல்.

வெறும் காதல் பாடல்கள் மட்டுமல்ல; கானா, குத்துப்பாடல், வெஸ்டர்ன், பரிசோதனை முயற்சிகள், ராப் இசைப்பாடல்கள் என்று அத்தனை ஜானர்களிலும் சந்தோஷ் காட்டியிருக்கும் வித்தியாசம், திறமை, வியக்கவைக்கிறது. எப்படி, காலப்போக்கில், இளையராஜா என்பதே ஒரு தனி ஜானர் ஆனதோ, ரஹ்மானுக்கென்று ஒரு தனி ஸ்டைல் உள்ளதோ, சந்தோஷின் சில குறிப்பிடத் தகுந்த பாடல்களைக் கேட்டாலே அவர் இசையில் இருக்கும் தனி இலக்கணம், அழகியல் புரியும்.

ஒடுக்கப்பட்டோரின் அடையாளமாக, குறியீடாக வரும் கருப்பி எனும் நாயின் மரணத்தை விவரிக்கும் அந்தப் பாடல், கடந்த பத்தாண்டுகளில் வந்த மிக முக்கியமான experimental பாடல். அமெரிக்க வாழ் கறுப்பினர்கள் தங்கள் துயரத்தை, கோபத்தை, ராப் பாடல்வரிகள் வழியாக வெளிப்படுத்துவதற்கு இணையான பாடல் ''கருப்பி என் கருப்பி.'' அதுவே, ஒடுக்கப்பட்டோரின் எழுச்சியைப் பாடும்போது, அதே ராப் வரிகள், ஜாஸ் இசையின் அடித்தளத்தில், ஆங்கிலத்தில் ஒலிக்கிறது. இதற்கு ''வீரத் துரந்தரா'' பாடலை எடுத்துகாட்டாகச் சொல்லலாம். ஒரு பல்லவி, இரண்டு சரணம் போன்ற பழங்காலத்து கட்டமைப்புகளையெல்லாம் ஓர் ஓரமாகத் தள்ளி வைத்துவிட்டு, எந்தவொரு சட்டகத்திற்குள்ளும் சிக்காமல் சுதந்திரமாய் பயணிப்பதே சந்தோஷ் பாடல்களின் தனிச் சிறப்பு. இதற்கு பா.இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் கொடுத்த சுதந்திரமும், சுவாரஸ்யமான பாடல் தருணங்களும் மிக முக்கியக் காரணம்.

சந்தோஷ், ஜாஸ் இசையைப் பயன்படுத்தும் விதமே தனி அழகு. நாயகனும் நாயகியும் Bar-க்குச் செல்கிறார்கள். அங்கு திடிரென நாயகனுக்கும் இன்னொருத்தனுக்கும் கைகலப்பு ஏற்பட, நாயகன், அவனை பாட்டிலால் அடித்தவிட, மொத்த பாருக்குள்ளும் சச்சரவு, அடிதடி. படு லோக்கலான இப்படி ஒரு காட்சியில், அந்தச்‌ சூழலுக்கு துளியும் சம்பந்தமில்லாமல், Trumpet ஒலிக்க, சுத்தமான Jazz பின்னணியில் ''மாமா டவுசர் கழண்டுருச்சு'' என்ற ரகளையான ஒரு குறும்புப் பாடல் எத்தனை பொருத்தமாக அந்தக் காட்சியின் குழப்பத்தையும், அபத்த நகைச்சுவையையும் விவரிக்கிறது.

Santhosh Narayanan with his wife
Santhosh Narayanan with his wife

கானாவின் தந்தை தேவா என்றால், சந்தோஷ், அதை இன்னும் அடுத்த கட்டத்துக்கு கொண்டுசென்ற விதம் தமிழ் சினிமா இசையில் குறிப்பிடத்தக்க முயற்சி. வடசென்னைக்கென்று தனித்தன்மை கொண்ட இசையை, அங்குள்ள குரல்களையும், பாடலாசிரியர்களையும் வைத்தே அவர் கம்போஸ் செய்த பாடல்கள், இதுவரை நாம் அதிகம் கேட்டிராதது. குறிப்பாக, ''எங்க வீட்டு குத்து விளக்கு''' பாடலில் தெறிக்கும் குறும்புத்தனம், அதன் அருமையான டோலக்கின் தாளக்கட்டு, மெல்லிய பேஸ், கோரஸ் என எல்லாம் சேர்ந்து கேட்போருக்கு அப்படி ஓர் உற்சாகத்தைத் தருகிறது. இந்தப் பக்கம் கானா என்றால், அப்படியே நெல்லை பக்கம் போய், ''வணக்கம் வணக்க‌முங்க பாசமுள்ள சபையோரே'' என்று தவில் கிழிய அசல் நாட்டுபுற இசையையும் நமக்குத் தருகிறார்.

த்ரிஷா சிம்புவுக்காக வெயிட்டிங்... கெளதம் ரஹ்மானுக்காக வெயிட்டிங்! ஏன்?

அப்படியே யூ-டர்ன் எடுத்து வெஸ்டர்ன் பக்கம் வருவோம். சந்தோஷ் பாடல்களில் கிடாரை கொஞ்சம் கவனியுங்கள். அவை அற்புதமானவை. ''வா மச்சானே மச்சானே'' என்ற குத்துப் பாடலுக்கு என்னவொரு அழகான கிடார் தொடக்கம்; பாடல் முழுக்க தொடரும் சன்னமான பேஸ் கிடாரின் ஒலி; ''ஆசை ஓர் புல்வெளி,'' ''பொட்டக்காட்டில் பூ வாசம்'' போன்ற பாடல்களின் ஆரம்பத்தில் வரும் அற்புதமான கிடார் கார்ட்ஸ்; ''நான் நீ நாம் வாழவே'' பாடலில் வரும் மெல்லிய பேஸ் கிடார் ஒலிகள்; குறிப்பாக, ''உயிர் வாழ முள்கூட'' என்று பெண் பாட ஆரம்பிக்கும் போது, அவள் சொல்வதை ஆமோதிப்பது போல் வரும் பேஸ் கிடார் மீட்டல்; பின், ''தாபப்பூவும் நான்தானே'' என்ற இடத்தில் சடாரேன ஆர்கஸ்ட்ரேஷனுக்குத் தாவி, அது முடிந்ததும், மீண்டும் கிடார் தொடர்கிறது.

சந்தோஷின் பாடல்களில் மிகவும் அண்டர் ரேட்டட் என்றால், ''பூ அவிழும் பொழுதில்'' என்ற பாடலைச் சொல்லலாம். பிரதீப் குமாரின் பிரமாதமான குரலில், ரம்யமான கிடார் கார்ட்ஸ் மற்றும் கோரஸும் சேர்ந்து நம்மை ஒரு மயக்க நிலைக்குக் கொண்டு செல்லும். அந்த மயக்க நிலையோடு இரண்டாவது சரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தால், பாடல் பொசுக்கென்று முடிந்துவிடும். அதுதான் சந்தோஷ் நாராயணன்!

Santhosh Narayanan with Directors
Santhosh Narayanan with Directors
சந்தோஷ் இந்த யுகத்தின் பெரும் இசைக்கலைஞன். அவன் இசையால் தருவது வெறும் போதையல்ல... ராஜபோதை!
அடுத்த கட்டுரைக்கு