
அனிலின் அடையாளங்கள் இவை மட்டுமல்ல. சமூகத்தின் அடித்தட்டுப் படிகள்வரை இசையைக் கொண்டு சென்ற முன்னோடி.
“இசை, வெறுமனே அனுபவிச்சுட்டுக் கைவிடுற விஷயமில்லை... அது பெரும் சக்தி. மூளையோட ரசவாதச் செயல்பாடுகளை இசையால முழுமையா கட்டுப்படுத்தமுடியும்... ஒரு அறிவியல் சூத்திரத்தைக் கேட்கும்போது நம் மூளையில வெறும் மூணு சதவிகிதப் பகுதிதான் வேலை செய்யும். ஆனா, ஒரு பாடலைக் கேட்கும்போதோ, பாடும்போதோ 30 சதவிகிதம் வேலை செய்யும்... முறைப்படி இசையைப் பயன்படுத்தினா இறுக்கமா இருக்கிற நம் கல்விச்சூழலையே மாத்தமுடியும்...” - மிகுந்த நம்பிக்கையும் உறுதியும் தொனிக்கப் பேசுகிறார் அனில் ஸ்ரீனிவாசன்.

நாடறிந்த பியானோ இசைக்கலைஞர். இசைச்சேவைக்காக சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர். யூடியூப்பில் அனில் நடத்துகிற ‘Unplugged with Anil’ நிகழ்ச்சி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. எஸ்.பி.பி முதல் சித் ஸ்ரீராம் வரை எல்லோர் நினைவுகளையும் கிளறி, பியானோவால் காலத்தை உயிர்ப்பித்துக் கிறங்கடிப்பவர்.
அனிலின் அடையாளங்கள் இவை மட்டுமல்ல. சமூகத்தின் அடித்தட்டுப் படிகள்வரை இசையைக் கொண்டு சென்ற முன்னோடி. ‘இசைவழிக் கல்வி’ என்ற பெயரில் இவர் உருவாக்கிய புதிய கற்பித்தல் முறை, அலுப்பூட்டும் நம் பள்ளிக்கல்வியை ரசனைக்குரியதாக மாற்றியிருக்கிறது. தமிழகத்தின் 21 மாவட்டங்களில், 377 பள்ளிகளில் இவரது, ‘ராப்சோடி மியூசிக் பவுண்டேஷன்’, அறிவியல், கணிதம், ஆங்கிலம், புவியியல் போன்ற பாடங்களை இசையின் மூலம் கற்பித்துவருகிறது. பியானோவைச் சுமந்துகொண்டு கிராமப்புறங்களில் இருக்கும் அரசுப்பள்ளிகளைத் தேடிப் பயணித்துக் கொண்டேயிருக்கும் அனில் ஸ்ரீனிவாசனோடு ஒரு மாலை நேரத்தில் உரையாடினேன்.

“கடந்த அஞ்சு வருஷத்தில ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களுக்குப் போயிருக்கேன். பெரும்பாலான பள்ளிகள்ல இசை வகுப்புகள் இருக்கு. ஆசிரியர்களும் இருக்காங்க. வகுப்புகள்ல உக்காந்து, பாடம் எடுக்கிறதைக் கவனிச்சிருக்கேன். எதார்த்தம் என்னன்னா, இசையோட மகத்துவம் நிறைய பேருக்கு முழுசா புரியலே. மியூசிக் படிக்கிற பிள்ளை, ஏ.ஆர்.ரஹ்மானாவோ எம்.எஸ்.சுப்புலட்சுமியாவோ ஆயிடணும்னு பெத்தவங்க நினைக்கிறாங்க. ஆசிரியர்களைப் பொறுத்தவரை, நல்லாப் பாடுற ரெண்டு புள்ளைகளை மட்டும் கவனத்துல வச்சுக்கிட்டு அவங்களுக்கு மட்டும் சொல்லிக்கொடுத்துட்டு கடமையை முடிச்சுக்கிறாங்க.
எல்லாப் பள்ளிகளிலேயும் உடற்கல்வி வகுப்புகள் இருக்கு. அந்த வகுப்புல கிரிக்கெட் விளையாடுற எல்லாப் பிள்ளைகளும் விராட் கோலி ஆகுறதில்லை. உடற்கல்விங்கிறது, உடம்பை வலுவா, ஆரோக்கியமா வச்சுக்கச் சொல்லிக்கொடுக்கிறது. கிட்டத்தட்ட இசையும் அப்படித்தான். ‘மியூசிக்கல் ஃபிட்னஸ்’னு சொல்லுவோம். இசையை ஆழ்ந்து கேட்டு ரசிக்கிறப்போ கவனச்சிதறல் இல்லாம மனசை ஒருநிலைப்படுத்த முடியும். இசைவழியா கத்துக்கொடுக்கும்போது கடினமான விஷயங்கள்கூட எளிதாப் புரியும். வகுப்பறையோட சூழலை மாத்தி, பள்ளியைப் பிள்ளைகளோட விருப்பத்துக்குரிய இடமா மாத்துற சக்தி இசைக்கு இருக்கு... அதனாலதான் பத்து வருஷமா இதைச் சுமந்துக்கிட்டு ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்கேன்...” மனம் திறந்து பேசுகிறார் அனில்.
சென்னைதான் அனிலுக்குப் பூர்வீகம். அப்பா ஸ்ரீனிவாசன், சிறு தொழிற்சாலை ஒன்றை நடத்தினார். அம்மா, செங்கற்பட்டில் பிறந்தவர். இரண்டு சகோதரர்கள். மூத்தவர் கார்த்திக், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். அடுத்த சகோதரர் தீபக், ஆடிட்டர். எப்போதும் இசை ஒலிக்கும் வீடு. அனிலின் மனைவி பெயர் அர்ச்சனா, பொறியாளர்.
“என் வாழ்க்கையை வடிவமைச்சது அப்பாவும் அம்மாவும்தான். ரெண்டு பேருக்குமே இசையில தீராத ஈடுபாடு உண்டு. அப்பா முறைப்படி இசை கத்துக்கிட்டவர். பேச்சாளரும்கூட. அம்மா கோல்ப் பிளேயர்.

எனக்கு அப்போ மூணு வயசு... ஜி.ராமநாதன்னு ஒரு நண்பர் வீட்டுக்கு அப்பாவும் அம்மாவும் விருந்துக்குப் போயிருக்காங்க. ‘நானும் வருவேன்’னு அடம்பிடிச்சு கூடப்போயிருக்கேன். வீட்டுக்கு நடுவுல பியானோ இருந்திருக்கு. நான் அதை வாசிச்சிருக்கேன். அதைப்பாத்து ஆச்சர்யப்பட்டு, அந்தப் பியானோவை எனக்கே பரிசாக் கொடுத்துட்டார் ராமநாதன் சார். பன்னெண்டு வயசு வரைக்கும் பியானோ கத்துக்கிட்டேன்.
திடீர்ன்னு அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. படுக்கையில விழுந்துட்டார். தொழில் நின்னுபோச்சு. நாங்கள்லாம் அப்போதான் பள்ளி, கல்லூரின்னு நிக்குறோம். அம்மா, எல்லாத்தையும் தன் தோள்ல சுமந்துக்கிட்டு நம்பிக்கையா நின்னாங்க. அவங்க வலியை உணர்ந்து, நாங்களும் எல்லாக் கனவுகளையும் ஓரமா வச்சுட்டு முழுசா படிப்புல கவனம் செலுத்தினோம்.
படிச்சு முடிச்சு மும்பை மற்றும் சென்னையில் வேலை. ஓரளவுக்குக் குடும்பச்சூழல் சரியாச்சு. அமெரிக்காவில உயர்கல்வி படிக்கணும்கிறது சின்ன வயதுக் கனவுகள்ல ஒண்ணு. பேங்க்ல லோன் வாங்கி அப்ளை பண்ணிட்டேன்.
யு.எஸ்ல புகழ்பெற்ற ஒரு கல்லூரியில எம்.பி.ஏ கிடைச்சுச்சு.
என் பியானோ ஈடுபாட்டைப் பார்த்த ஒரு அமெரிக்க நண்பர், அவரோட எலெக்ட்ரானிக் பியானோவை எனக்குப் பரிசாக் கொடுத்தார். ஒருமுறை சென்னை வந்தப்போ, மாண்டலின் சீனிவாசன் முன்னால வாசிக்கிற வாய்ப்பு கிடைச்சுச்சு. அதுதான் என் வாழ்க்கையில நடந்த முக்கியத் திருப்பம். ரசிச்சுப் பாராட்டினார். அவரோட சகோதரர், ராஜேஷ்கூட சேர்ந்து ஒரு ஆல்பம் செய்ற வாய்ப்பும் கிடைச்சுச்சு. கொலம்பியா யுனிவர்சிடியில பி.ஹெச்டி சேர்ந்தேன்.
அந்தச்சூழல்ல ‘மாண்டலின்’ சீனிவாசனும் ராஜேஷும் யு.எஸ் வந்தாங்க. அவங்கக்கூட கான்செர்ட் பண்ண ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா பிரபலமானேன். ஒருநாள், பிஹெச்.டி படிப்பு, யு.எஸ் எல்லாத்தையும் விட்டுட்டு சென்னைக்கு வந்து நின்னேன். அப்பாவும் அம்மாவும் அதிர்ந்துபோயிட்டாங்க.
‘படிப்புல மனசு ஒட்டலே... பிடிச்சமாதிரி இசையோட வாழ்ந்துடுறேன்’னு சொன்னேன். ‘ரொம்பத் தப்பா முடிவெடுத்திட்டே... என்னால உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது... மூணு மாதம் டைம் எடுத்துக்கோ... அதுக்குள்ள ஏதாவது செய்’னு சொல்லிட்டார் அப்பா. ஆனா, ஒரே வாரத்துல பரபரன்னு வேலைகள் வந்திடுச்சு. அதுக்கப்புறம், உக்கார, நிக்க நேரமில்லாத அளவுக்கு மேடைகள்... வேலைகள்... எல்லா ஆளுமைகள்கூடவும் பக்கத்துல நின்னு வாசிச்சாச்சு...” - உற்சாகமாகப் பேசுகிறார் அனில் ஸ்ரீனிவாசன்.
“நிறைய பள்ளிகளுக்குச் சிறப்பு விருந்தினரா போறதுண்டு. இசை எவ்வளவு பெரிய சக்தி... அதை ஏன் பள்ளிக்கல்விக்குள்ள முழுமையா கொண்டு போய்ச் சேர்க்கலேன்னு கேள்வி வந்துச்சு. அதுக்கப்புறம் பள்ளி பள்ளியா ஏறி இறங்கினேன். நிறைய படிப்பினைகள் கிடைச்சுச்சு. மற்ற வேலைகளைக் கொஞ்சம் தள்ளிவச்சுட்டு, ‘ராப்சோடி மியூசிக் பவுண்டேஷன்’னு ஒரு அமைப்பை ஆரம்பிச்சேன். நானே உக்காந்து, எல்.கே.ஜியில இருந்து எட்டாம் வகுப்பு வரைக்கும் அறிவியல், கணிதம், புவியியல், ஆங்கிலத்துக்கு இசைவழிப் பாடங்கள் எழுதினேன். பாடங்களோட கான்செப்டை மட்டும் எடுத்து, பாடல் எழுதி இசை கோத்து... மிகப்பெரிய வேலை.

ஏற்கெனவே இந்தத் துறையில அனுபவமுள்ள சுதா ராஜா, உதவிசெய்ய முன்வந்தாங்க. ரெண்டு ஆசிரியர்களை வேலைக்கு எடுத்தோம். நாலு தனியார் பள்ளிகள்கிட்ட பேசி முதல்ல அங்கே ஆரம்பிச்சோம். நல்ல விளைவுகள் கண்முன்னாடி தெரிஞ்சுச்சு. விக்ரம்கபூர் சென்னை கமிஷனரா இருந்தப்போ, மாநகராட்சிப் பள்ளிகள்ல வாய்ப்பு கொடுத்தார். இன்னைக்கு, தமிழகம் முழுவதும் 377 பள்ளிகள்ல இசைவழிக் கல்வி வகுப்புகள் நடக்குது. இதுல அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளோட எண்ணிக்கை 337...” - பெருமிதமாகச் சொல்கிறார் அனில்.
பாடல்கள் வழி கிரகிக்கமுடியாத சூத்திரங் களையும் மொழிப்பாடங்களையும் எளிய முறையில் பயிற்றுவிப்பதுதான் இசைவழிக்கல்வி. கூடவே, மரபுப் பாடல்களையும் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள்.
“தொடக்கத்துல 3 வருஷம், நான் வேலை செஞ்சதுல கிடைச்ச மொத்த வருமானத்தையும் ‘ராப்சோடி’யில போட்டேன். இப்போ நிறைய நல்ல உள்ளங்கள் உதவத் தொடங்கியிருக்காங்க. 200 ஆசிரியர்கள் இந்தத் திட்டத்துல இணைஞ்சிருக்காங்க. இந்த வேலை நடந்துக்கிட்டிருக்கும்போதே, பெரும்பாக்கத்துல ஒரு பள்ளிக்கூடத்துக்கு வகுப்பறைகள் கட்டுற வேலையையும் ஆரம்பிச்சோம். சென்னையில சாலையோரத்துல வாழ்ந்த மக்களை பெரும்பாக்கத்துலதான் குடியமர்த்தியிருக்காங்க. அவங்க பிள்ளைகளுக்கான பள்ளி, ரோட்டரி கிளப் உதவ முன்வந்தாங்க. அமெரிக்காவுல இருக்கிற நண்பர்கள்கிட்ட உதவி கேட்டேன். எல்லாரும் சேர்ந்து ஒரு கோடி கொடுத்தாங்க. என்னோட இசை நிகழ்ச்சிகள் மூலம் 50 லட்சம் கிடைச்சுச்சு. நான் இந்த வேலை செஞ்சுக் கிட்டிருக்கிறதைக் கேள்விப்பட்டு எஸ்.பி.பி சார் ரெண்டு லட்சம் தந்தார். இப்படி நிறைய உதவிகள் வந்துச்சு. டாடா நிறுவனம் உதவினாங்க. 7.5 கோடி செலவுல கட்டி முடிச்சாச்சு...” என்கிறார் அனில்.
இந்தப்பள்ளியின் விளையாட்டு மைதானம், லேப் போன்ற உள்கட்டமைப்புப் பணிகளுக்கு 15 லட்சம் தேவைப்பட்டது. அதைத் திரட்ட, 100 நாள்கள் 100 பாடல்களுக்கு பியானோ வாசித்து சோஷியல் மீடியாவில் போடப்போவதாக அறிவித்தார் அனில். 21 நாள்களில் 15 லட்சத்தை வாரி வழங்கி விட்டன நல்ல உள்ளங்கள்!

“நிறைய திட்டங்கள் இருக்கு. தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாப் பள்ளிக்குள்ளயும் இசைவழிக் கல்வியைக் கொண்டுபோகணும். பள்ளிகளை குழந்தைகளை ஈர்க்கிற இடமா மாத்தணும். எல்லாக் கனவுகளுக்கும் காலம் கைகொடுக் கணும்..!’’ - உணர்வுபூர்வமாகப் பேசுகிறார் அனில்.
அனிலோடு உரையாடும் தருணத்தில் நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. சினேகத்தோடு கைகொடுத்து விடைகொடுக்கிறார். அவரது பற்றுதலில் அவ்வளவு நம்பிக்கை!