லதா மங்கேஷ்கர், பப்பி லஹரி, டார்செம் சிங் சைனி (Tarsame Singh Saini), பண்டிட் ஷிவ்குமார் சர்மா, மற்றும் பாடகர் கேகே என இந்தாண்டு மறைந்த இசைக்கலைஞர்களின் பட்டியல் நீளமானது. இவர்களின் மறைவு இந்திய இசையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அபுதாபியில் நடந்த 'IIFA Rocks 2022' விழாவில் கலந்து கொண்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
"இசை கலைஞர்களை இழப்பது மிக மிகக் கொடுமையானது. ஒவ்வொரு முறையும் அவர்கள் வேறொரு தளத்துக்கு உங்களை அழைத்து செல்லக்கூடியவர்கள். லதா ஜி, கேகே, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்ற கலைஞர்கள் மறைந்தது எனக்கு வருத்தமளிக்கிறது. இந்தப் பட்டியல் தொடரலாம். ஆனால் உலகம் மாறக்கூடியது, தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கும்" எனத் தெரிவித்தார்.

பாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பால் 2020-ல் மறைந்தார். லதா மங்கேஷ்கர் 2022 பிப்ரவரியில் மறைந்த போது நாடே அவருக்காக துக்கம் கடைபிடித்தது. சமீபத்தில், கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற பாடகர் கே.கே எதிர்பாராத விதமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிர் துறந்தார்.
International Indian Film Academy Awards (IIFA) சார்பில் நடந்த 'IIFA Rocks 2022' விழாவில் தனுஷ் நடித்த `Atrangi Re' படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது வழக்கப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், "இந்த மாலை இன்னும் சிறப்பு வாய்ந்தது. இரண்டு வருடங்களுக்கு பிறகு லாக்டௌன், துயரங்கள் எல்லாவற்றையும் கடந்து வந்திருக்கிறோம். இயல்புக்குத் திரும்புவதற்கு பல ஆண்டுகள் ஆகுமென முன்பு நினைத்திருந்தேன். இப்போது இயல்புக்குத் திரும்பியிருக்கிறோம். இந்த விழாவின் நிகழ்வுகளைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.