Published:Updated:

`இதனாலே எனக்கும் இயக்குநருக்கும் விவாதம் வரும்!' - `தயாரிப்பாளர்' ஏ.ஆர்.ரஹ்மான்

A.R.Rahman at 99 songs movie press meet
A.R.Rahman at 99 songs movie press meet

`99 சாங்ஸ்' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் (YM புரொடக்‌ஷன்), இணை திரைக்கதாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார், ரஹ்மான்.

இசையில் புது முயற்சிகளை அறிமுகப்படுத்தி ரசிகர்களை இசைவயப்படுத்தும் ஏ.ஆர். ரஹ்மான், இந்த முறை `99 சாங்ஸ்' படத்தின்மூலம் தயாரிப்பாளராகவும் (YM புரொடக்‌ஷன்), இணை திரைக்கதாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

Rahman
Rahman

மியூசிக்கல் டிராமா ஜானரில் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில், சம்மரில் வெளியாக இருக்கிறது `99 சாங்ஸ்' திரைப்படம். படத்தில், மொத்தம் 15 பாடல்கள் உள்ளன. இதில் டால்பீ அட்மாஸ் மியூசிக் 3D டெக்னாலஜியை ரஹ்மான் பயன்படுத்தியுள்ளார் என்பது இந்தப் படத்தின் ஹைலைட். இந்த டெக்னாலஜியை படத்தின் இசை மூலம் அறிமுகப்படுத்தும் முதல் இந்திய இசையமைப்பாளர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

`99 சாங்ஸ்' பட இசை வெளியீட்டில் ரஹ்மான், ``வழக்கமா படங்களுக்கு இசையமைக்கும்போது, இயக்குநர், பாடலாசிரியர்னு எல்லாரும் இருப்பாங்க. அந்தச் சூழ்நிலையில் நிறைய டிஸ்கஷன்ஸ், ஐடியா ஷேரிங்ஸ் நடக்கும். ஆனா, இந்தப் படத்துல நான் ரைட்டர். பெரும்பாலும் ரைட்டர் சொல்றது தயாரிப்பாளர்க்கு ஒத்து வராது. ஆனா, இந்தப் படத்துக்கு ரைட்டர், தயாரிப்பாளர்னு ரெண்டுமே நான்தான். அதனால, கதை தொடர்பாவும் பாடல் தொடர்பாகவும், எனக்கும் இயக்குநருக்கும் நிறைய விவாதங்கள் போயிட்டே இருந்தது.

99 songs movie pressmeet
99 songs movie pressmeet

``படத்துல அறிமுகப்படுத்தியிருக்கிற டால்பீ அட்மாஸ் மியூசிக் டெக்னாலஜி, நிச்சயமா ரசிகர்களுக்குப் புதுவிதமான அனுபவமா இருக்கும். குறிப்பா, இசை ரசிகர்களுடைய அனுபவத்தை தெரிஞ்சுக்கிறதுக்கு ஆர்வமா இருக்கேன். இசைக்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய, இசை தொடர்பான கதைங்கிறதால, படத்துல வரக்கூடிய ஒவ்வொரு பாடலின் ட்யூனுக்கும் கிட்டத்தட்ட நாலு வெர்ஷன் போட்டோம். இந்த மாதிரி நிறைய மாற்றங்களுக்குப் பிறகுதான் கதையும், பாடல்களும் ஃபைனல் ஆச்சு. என்னுடைய இசைப் பயணத்துல இந்தப் படம் சவாலா இருந்தது மட்டுமில்லாம, ஒரு அழகான அனுபவமாவும் இருந்தது" என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்.

புதுமுகங்கள் இஹான் பட், எடில்சி வர்காஸ் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது, பேஸ் கிட்டாரிஸ்ட் ராகுல் ராம், கம்போசர் ரஞ்சித் பாரட் ஆகியோருடன் மனிஷா கொய்ராலா, லிசா ராய் ஆகியோரும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி படத்தை இயக்கியுள்ளார். இவர், `ஹார்ட் கோர்' இசைக்குழுவின் முன்னாள் தலைவராகவும், `The Dewarists' மற்றும் `Bring On The Night' உள்ளிட்ட MTV நிகழ்ச்சிகளுக்குட் தலைமைதாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

99 songs trailer launch
99 songs trailer launch

இந்தப் படம் குறித்து நடிகை மனீஷா கொய்ராலா, ``என்னுடைய `பாம்பே', `தில் சே' படங்களுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைச்சார். அதுக்கு முன்னாடி இருந்தே ரஹ்மானுடைய இசைக்கு ரசிகை நான். ரொம்ப நாளைக்குப் பிறகு, அவர் படத்துல வொர்க் பண்றதுல ரொம்ப சந்தோஷம். இந்த உலகத்தோட கடைசி மேஜிக் இசையாதான் இருக்க முடியும். அதை `99 சாங்க்ஸ்' படம் பார்க்கும்போது கண்டிப்பா உணர முடியும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இசை மற்றும் காதலைச் சுற்றி இந்தக் கதை நகரும் என இந்தப் படத்தின் பாடல் ஒன்றை, கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிட்டது படக்குழு. பாடல்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், போனி கபூர் உள்ளிட்ட பல பிரபலங்களும் ரஹ்மானுக்கு தங்களது வாழ்த்துகளை ட்விட்டரில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

இந்த வருடம், தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் `அயலான்', மணிரத்னம் இயக்கத்தில் `பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு