Published:Updated:

ஏ.ஆர்.ரஹ்மானுக்காக, ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைத்திருக்கும் '99 ஸாங்ஸ்'... பாடல்கள் ஆன்மாவுடன் பேசுமா?!

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

மணிரத்தின் ரஹ்மானாக...கௌதம் மேனனின் ரஹ்மானாக...ஷங்கரின் ரஹ்மானாக அவரின் இசையை கேட்டுப் பழகிய நம் காதுகள் முதன் முதலாக ரஹ்மானின் ரஹ்மானாக அவர் இசையமைத்திருக்கும் பாடல்களை கேட்கப்போகிற அந்த உணர்வு எப்படியிருக்கும்?

சில வாரங்களுக்கு முன்பு 'அயலான்' படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'வேற லெவல் சகோ' என்ற பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சிலரும், ரஹ்மானின் வழக்கமான 'ஸ்லோ பாய்ஸன்' வகையறா என்று சிலரும் கூற கலவையான விமர்சனங்களே இந்த பாடலுக்கு கிடைத்திருந்தது. இந்நிலையில், நேற்று ரஹ்மானின் கதை-திரைக்கதையில் அவரே தயாரித்து இசையும் அமைத்திருக்கும் '99 ஸாங்ஸ்' படத்தின் பாடல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த ஆல்பம் எப்படி இருக்கிறது?

'99 ஸாங்ஸ்' படத்தின் இந்தி வெர்ஷன் பாடல்கள் கடந்த ஆண்டு லாக்டெளனுக்கு முன்பாகவே வெளியாகிவிட்டது. இந்தி வெர்ஷனையே ரஹ்மான் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இருந்தாலும், பாடல் வரிகளுக்கும் பாடலாசிரியர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் ரஹ்மான் என்பதால் இந்தப் படத்தின் தமிழ் வெர்ஷன் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. இந்நிலையில், நேற்று '99 சாங்ஸ்' படத்தின் தமிழ் ஆல்பம் வெளியாகியுள்ளது.

'99 ஸாங்ஸ்' என பெயரிடப்பட்டிருந்தாலும் ஆல்பத்தில் மொத்தமாக 14 ட்ராக்குகள்தான். ரஹ்மானின் ஹிட் ஆல்பங்களை எல்லாம் இரண்டு வகையாக பிரிக்கலாம். ரஹ்மானுடைய மனதுக்கு நெருக்கமான இயக்குநர்களின் படத்தில் அவர் பணியாற்றும் போது அநாயாசமாக தனது பெஸ்ட்டை கொடுப்பார். மணிரத்னம், ஷங்கர், ராஜீவ் மேனன், கௌதம் மேனன் போன்றோர்களுக்கு ரஹ்மான் கொடுத்திருக்கும் ஆல்பங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இன்னொன்று, படத்தின் கதைக்கருவில் ஏதாவது வித்தியாசம் இருந்து, அந்த கதை ரஹ்மானை அதிகம் நிர்பந்திக்கும் போதும் இசையில் வெளுத்து வாங்கிவிடுவார். இந்த '99 ஸாங்ஸ்' படத்தைப் பொறுத்தவரை கதை-திரைக்கதை இரண்டுமே ரஹ்மானுடையதுதான். தயாரிப்பும் அவரே. ஆக, இது முழுக்க முழுக்க ரஹ்மானுடைய சொந்தப்படம். முதன்முதலாக தன்னுடைய கதைக்குத் தானே இசையமைத்திருக்கிறார் ரஹ்மான். அந்தக் கதை தன்னுடைய இசை வடிவத்திற்காக ரஹ்மானை எந்தளவுக்கு நிர்பந்தித்திருக்கும்? மணிரத்தின் ரஹ்மானாக...கௌதம் மேனனின் ரஹ்மானாக...ஷங்கரின் ரஹ்மானாக அவரின் இசையை கேட்டுப் பழகிய நம் காதுகள் முதன் முதலாக ரஹ்மானின் ரஹ்மானாக அவர் இசையமத்திருக்கும் பாடல்களை கேட்கப் போகிற அந்த உணர்வு எப்படியிருக்கும்? இந்த கேள்விகள்தான் '99 ஸாங்ஸ்' ஆல்பத்தை ரொம்பவே ஸ்பெஷலானதாக மாற்றியிருக்கிறது.

ரஹ்மானின் சமீபத்திய ஆல்பங்களில் '99 ஸாங்ஸ்' தான் மிகச்சிறந்தது என்பதை கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். கேட்ட உடனேயே பிடிக்க வேண்டுமா!? ஸ்லோ பாய்ஸன் மெட்டீரியல் வேண்டுமா!? வித்தியாசமாக முயற்சி செய்திருக்க வேண்டுமா!? அத்தனைக்குமான பாடல்களும் இந்த ஆல்பத்தில் இருக்கிறது.

99 ஸாங்ஸ்
99 ஸாங்ஸ்

ஒரு ஸ்டேஷனிலிருந்து ஒரு ரயில் மெதுவாக கிளம்பிப் போகப் போக வேகம்பிடித்து, இன்னொரு ஸ்டேஷனை நெருங்கும் போது ஸ்லோவாகி அப்படியே ப்ளாட்ஃபார்மில் செட்டில் ஆவது போல 'ஓர் ஆயிரம் வானவில்' பாடல் அமைந்திருக்கிறது. விஜய் யேசுதாஸின் குரலில் மென்மையாக மெதுவாகத் தொடங்கி, ஒரு கோரஸுக்குப் பிறகு அப்படியே ஹைபிட்ச்சுக்கு சென்று ஹம் செய்கிற தொணியில் மீண்டும் மென்மையாக முடியும் இந்தப் பாடல் பலரின் உள்ளங்களை கொள்ளைக்கொள்ளும். அது தெரிந்தே, இந்த ராகத்தை இன்னும் வேறு இரண்டு பாடல்களின் இடையிலும் சொருகி மயக்கியிருக்கிறார் ரஹ்மான்.

பியானோ... கிட்டார்... புல்லாங்குழல் என எல்லாவற்றையும் கலந்துக்கட்டி கடைசியில் ரஹ்மானின் ஹம்மிங்கோடு ஸ்ரீகாந்த் ஹரிஹரணின் குரலில் 'சோஃபியா' பாடல் ரஹ்மானின் ட்ரேட்மார்க் மெலடி.

கிட்டாரை மெயினாக பயன்படுத்தி ஃபேர்வெல் டே-வில் பேண்ட் குழுவினருடன் நண்பர்கள் பற்றியும் கல்லூரி பற்றியும் பாடும் பாடலாக 'நாளை நாளை' என்ற பாடல் அமைந்திருக்கிறது. கல்லூரி... நண்பர்கள் என்றவுடன் 'முஸ்தபா...முஸ்தபா'வுக்குத்தான் நமது மனது செல்லும். ஆனால், இது கொஞ்சம் புதிதான ராக் ஸ்டார் பாணியிலான பாடலாக ஈர்க்கிறது.

வயலினோடு வித்தியாசமான இசைக்கோர்ப்புகளையும் சேர்த்து ஜூவாலாமுகி என்ற ஹைபிட்ச் பாடல் ஒன்றும் இருக்கிறது. இதனுடைய இன்னொரு வெர்ஷனை சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். ''ஏனோ வானிலை மாறுதே'' பாடலின் வாடை கொஞ்சம் வந்தாலும் சித் ஸ்ரீராமின் குரலில் இந்தப் பாடல் நல்ல உணர்வை தருகிறது.

ஜோனிடா காந்தி, சரண்யா ஸ்ரீநிவாஸ், ஸ்ரீஷா ஆகியோர் இணைந்து பாடியுள்ள "சீமந்தப்பூ" முழுக்க முழுக்க க்ளாஸிக். இசைஞானம் படைத்தவர்கள் மட்டுமே இந்த பாடலை டீகோட் செய்ய முடியும்.

''ஆகாய நீலங்களில்...'', ''சாய் சீரடி சாய்'' இரண்டுமே எந்த தொந்தரவுமின்றி நிசப்தமான ஒரு இடத்தில் அமர்ந்து கேட்டால் மனதுக்கு அவ்வளவு நிறைவாக இருக்கும். இந்த இரண்டு பாடல்களிலும்தான் அந்த ''ஓர் ஆயிரம் வானவில்'' ராகத்தை இடையில் பயன்படுத்தியிருப்பார். அது அப்படியே மெய் சிலிர்க்க வைக்கிறது. ஆகாய நீலங்களில் பாடலில் பியானோவை மயிலிறகால் வருடியதைப்போல அவ்வளவு மெதுவாக பிண்ணனி இசை இருக்க ஷ்ரேயா கோஷலின் குரலை மட்டுமே பிரதானப்படுத்தியிருக்கிறார் ரஹ்மான்.

99 ஸாங்ஸ்
99 ஸாங்ஸ்

அபய் ஜோத்கரின் குரலில் ஷாஷா திரிபாதியின் ஹம்மிங்கை மட்டும் பயன்படுத்தியிருக்கும் 'புன்னகை மாயை' என்னும் மெலடி தமிழை விட 'ஹும்னவா' என இந்தியில் மிகச்சிறப்பாக இருப்பதை போல் தோன்றுகிறது. 'குரு' படத்தின் ''ஆருயிரே மன்னிப்பாயா'' சாயலில் இருந்தாலும் ஹரிசரணின் குரலில் 'நீ இல்லா நானும்' பாடலும் ஈர்க்கவே செய்கிறது.

''வா வேங்கையே...'', ''பொய் சொன்னா பொசுக்கிடுவேன்'' போன்றவை ரஹ்மானின் வித்தியாச முயற்சிகள். ஃபியூஷனில் கலக்கும் ரஹ்மான், ''வா...வேங்கை''யில் ராப்பையும் நம் மக்களின் இசையையும் கலந்துக்கட்டியிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் உச்சம் 'The Oracle' எனும் தீம் இசைதான். பியானோவையும் வயலினையும் வைத்து ஒரு ஆகப்பெரும் மேஜிக்கை செய்திருக்கிறார். படமாக பார்க்கும் போது இந்த தீம் இசை இடம்பெறும் காட்சி புல்லரிக்கும் வகையில் உணர்ச்சிகரமானதாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

தமிழில் டப்தான் செய்யப்படுகிறது என்பதற்காக தெலுங்கு டப்பிங் படம் போல் அடித்துவிடாமல், பா.விஜய், மதன் கார்க்கி, தாமரை, விவேக், குட்டி ரேவதி ஆகியோரை வைத்து தரமான வரிகளை எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. ரஹ்மானும் சிரத்தையெடுத்து இசைவடிவிலும் தமிழுக்கென்று சில நுணுக்கமான மாற்றங்களை செய்திருக்கிறார். இந்தி வெர்ஷனையும் தமிழ் வெர்ஷனையும் அடுத்தடுத்து கேட்கும்போது இந்த மாற்றங்களை உணர முடியும். இந்தி வெர்ஷன் ஒரு வருடத்திற்கு முன்பாகவே ரிலீஸானதால் அதைக் கேட்டு ரசித்தவர்களுக்கு தமிழ் வெர்ஷன் பழக்கப்பட கொஞ்சம் நேரம் பிடிக்கிறது.

ரஹ்மானின் இசையில் எப்போதும் ஒரு அமைதியையும் அன்பையும் உணரமுடியும்.இயல்பாகவே எந்த வெறுப்புணர்வுக்குள்ளும் சிக்காமல் அமைதியை மட்டுமே நம்பியிருக்கும் ரஹ்மானின் குணாதிசயம் அவரின் ஒவ்வொரு ஆல்பத்திலும் வெளிப்படுவதாகவே தோன்றும். ரஹ்மானின் இசையை கேட்கும்போது அந்த அமைதி நம்மையும் ஆட்கொண்டு ஆன்மாவை தொடுவது போன்ற உணர்வை உண்டாக்கும். சமீபத்தில், சில பெரிய படங்களில் மாஸ் ஹீரோக்களுக்காக மசாலாத்தனமான இசையைக் கொடுத்திருப்பார் ரஹ்மான். அவை, வழக்கமாக ரஹ்மானின் இசைகள் செய்யும் எந்த மேஜிக்கையுமே செய்யவில்லை. ரஹ்மான் அவ்ளோதான்..அவரிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என ட்ரோல்கள் பறக்கத் தொடங்கும் போது '99 சாங்ஸ்' என்ற இப்படி ஒரு ஆத்மார்த்தமான ஆல்பத்தோடு வந்திருக்கிறார் ரஹ்மான். 'ரஹ்மானின் ரஹ்மானாக' ரஹ்மான் அமைத்திருக்கும் இந்த இசை நிச்சயம் அத்தனை பேரின் ஆன்மாவையும் தொடும்.

99 ஸாங்ஸ்
99 ஸாங்ஸ்

இந்த 14 ட்ராக்குகளுமே கவர்ந்தாலும் படத்தில் இதைத்தாண்டி சர்ப்ரைஸாக ஒரு பாடல் இருக்கும் என தோன்றுகிறது. ''ஒரு பாட்டு இந்த உலகத்தையே மாத்தி அமைக்கணும்... அப்படி ஒரு பாட்டு உங்கிட்ட இருக்கா?'' என ஒரு வசனம் படத்தின் ட்ரெய்லரில் வருகிறது. அப்படி ஒரு மாஸ்டர் பீஸான பாடலை படத்தில் ரஹ்மான் சர்ப்ரைஸாக வைத்திருப்பார் என்றே தோன்றுகிறது. வீ ஆர் வெயிட்டிங் ரஹ்மான்!

அடுத்த கட்டுரைக்கு