Published:Updated:

`` `ஆட்டோகிராஃப்’ படத்தால வாழ்க்கையே மாறும்னு நினைச்சேன்; ஆனா..!” - பெருமாளின் போராட்ட வாழ்க்கை

சமீபத்தில் ஜீ தமிழ் `ராக் ஸ்டார்’ இசை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பெருமாள், இசை மழையால் பலரையும் ஆனந்தக் கண்ணீரில் நனைய வைத்தார். அந்த நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலானாலும், இவரது தற்போதைய நிலை பெரும் சோகமாகவே இருக்கிறது.

சுழன்று அடிக்கும் வறுமையால், கரை சேர வழி தெரியாமல் தவிக்கும் பெருமாள், தனது இசை ஆர்வத்தையே துடுப்பாய் பயன்படுத்தி எதிர்நீச்சல் அடித்து வரும் நம்பிக்கை மனிதர். விழிச்சவால் உடையவர், கேள்வி ஞானத்தால் புல்லாங்குழல் இசையில் அனுபவம் பெற்றவர். `ஆட்டோகிராஃப்’ திரைப்படத்தில் `ஒவ்வொரு பூக்களுமே’ பாடலில் புல்லாங்குழல் கலைஞராகவே தோன்றியிருப்பார். எதிர்பார்த்தபடி திரையிசை வாய்ப்புகள் அமையாமல், மேடை நிகழ்ச்சிகளில் வாசித்து வந்தவரை, கொரோனா காலகட்டம் முற்றிலுமாக முடக்கிப்போட்டுள்ளது.

பெருமாள்
பெருமாள்

சமீபத்தில் ஜீ தமிழ் `ராக் ஸ்டார்’ இசை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பெருமாள், இசை மழையால் பலரையும் ஆனந்தக் கண்ணீரில் நனைய வைத்தார். அந்த நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலானாலும், இவரது தற்போதைய நிலை பெரும் சோகமாகவே இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த பெருமாளின் வாழ்க்கையே போராட்டங்களால் சூழப்பட்டது. தனது வாழ்க்கைப் பயணத்தைக் கண்ணீருடன் பகிர்கிறார்.

``பெற்றோர் நெசவுத் தொழிலாளர்கள். விழிச்சவால் பாதிப்புடன்தான் பிறந்தேன். வீட்டுல எனக்கும் என் தம்பிக்கும் விழிச்சவால் பாதிப்பு உண்டு. எட்டாவதுவரை சொந்த ஊர்ல படிச்ச நிலையில, பிறகு சென்னையில ஸ்கூல் படிப்பை முடிச்சேன். வறுமை நிலையால, அப்போ பெற்றோர் என்னைப் பார்க்கக்கூட வரமாட்டாங்க. இப்படியே வருத்தப்பட்டும், வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வுக்கான வழி தெரியாமலும் கலக்கமாவே நாள்களைக் கடத்தினேன். சின்ன வயசுல இருந்தே இசையில ஆர்வம் அதிகம். கோயில் திருவிழாவுல வாங்கின புல்லாங்குழல்ல கேள்வி ஞானத்துலயே வாசிச்சுப் பயிற்சி பெற்றேன்.

பெருமாள்
பெருமாள்

பொருளாதாரச் சூழல் தடையா இருந்ததால, முறையா பயிற்சி எடுத்துக்கவும் முடியல. கவர்ன்மென்ட் ஸ்கூல்ல இசை ஆசிரியரா போகும் எண்ணத்துல, குரலிசையில டிப்ளோமா படிச்சேன். இசைக் கலைஞரா புகழ் பெறணும்னு நிறைய கனவுகளுடன் இருந்த நிலையில, குடும்ப வறுமையால சொந்த ஊருக்கே போக வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டுச்சு” என்று வருத்தத்துடன் கூறும் பெருமாள், திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளிலும் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் புல்லாங்குழல் இசைக் கலைஞராகப் பணியாற்றியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஊர் ஊரா போனேன். சின்னதும் பெரிசுமா நிறைய கச்சேரிகள்ல புல்லாங்குழல் வாசிச்சேன். அதனால, சொல்லிக்கிறதுக்காக வேலை இருந்துச்சே தவிர, போதிய வருமானமெல்லாம் கிடைக்கல. அப்பல்லாம் டீ, பிஸ்கட்தான் என்னோட உணவா இருக்கும். அந்தக் கடினமான சூழல்கள்லயும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் சார் உள்ளிட்ட பல்வேறு இசைப் பிரபலங்களுடன் இணைஞ்சு வேலை செய்யும் மகிழ்ச்சி மட்டும் கிடைக்கும். ஒருகட்டத்துல மேடை நிகழ்ச்சிகள்ல வாசிக்கும் வாய்ப்பு குறையவே, கல்யாணம், கடைத்திறப்பு விழாக்கள்லயும் வாசிக்கிறேன். கொரோனா வந்த பிறகு கடந்த ஒரு வருஷமா சுத்தமாவே எந்தக் கச்சேரி வாய்ப்புகளுமே இல்லாம சிரமப்படுறேன்.

குடும்பத்தினருடன் பெருமாள்
குடும்பத்தினருடன் பெருமாள்

இதுக்கிடையே, எங்க மாவட்டத்துலயே கவர்ன்மென்ட் ஸ்கூல் ஒண்ணுல தற்காலிக பகுதி நேர இசை ஆசிரியரா வேலை கிடைச்சது. ஒன்பது வருஷ பணி அனுபவம் முடிஞ்ச நிலையில இப்போ மாசம் 10,000 ரூபாய்தான் வருமானம் கிடைக்குது. அதுல போக்குவரத்துச் செலவுக்கே 2,500 ரூபாய் போயிடும். மீதமுள்ள வருமானத்துலதான் குடும்பத்தை நடத்திட்டு இருக்கேன். என்னோட கலைப் பயணத்துக்கு ஸ்கூல் நிர்வாகத்தினர் பெரிய ஊக்கமா இருக்காங்க. நடுவுல சில காலம் முறைப்படி இசை கத்துகிட்டாலும், கேள்வி ஞானம்தான் கைகொடுக்குது. ஓரிரு நாள்ல ஒரு பாடலோட டியூனை அப்படியே உள்வாங்கி, புல்லாங்குழல்ல வாசிச்சு அனுபவம் பெறுவேன்” என்று சிரிப்பவருக்கு, சினிமாவில் பணியாற்றுவது பெருங்கனவாக இருக்கிறது.

``சினிமாவுல பின்னணி இசைக் கலைஞரா புல்லாங்குழல் வாசிக்கணும்ங்கிறது என்னோட வாழ்நாள் ஆசை. அந்த வாய்ப்பு நிகழ்ந்திடாதான்னு காத்துகிட்டு இருந்த நிலையிலதான், `ஆட்டோகிராஃப்’ பட வாய்ப்பு கிடைச்சுது. `ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் பெரிய ஹிட்டாச்சு. அதனால, அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வரும்னு ரொம்பவே ஆவலோடு இருந்தேன். ஆனா, 17 வருஷங்கள் ஆகியும் இப்போ வரை எந்தப் பட வாய்ப்பும் வரல. வாழ்க்கை முழுக்கவே ஏமாற்றத்துலயே போயிட்டிருக்கு. அதனாலயே ஆசைகள், எதிர்பார்ப்புகளையே வெச்சுக்கிறதில்ல.

பெருமாள்
பெருமாள்

இந்த நிலையில, பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் சார், நிகழ்ச்சி இயக்குநர் டேவிட் சார் மூலமா ஜீ தமிழ் சேனல்ல `ராக் ஸ்டார்’ நிகழ்ச்சியில சிறப்பு அழைப்பாளரா கலந்துக்கும் வாய்ப்பு கிடைச்சது. அதுல, `மண்ணில் இந்தக் காதலன்றி’ பாடலையும், மனோ சாரின் `செண்பகமே’ பாடலையும் புல்லாங்குழல்ல வாசிச்சேன். இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் சார் உட்பட எல்லோரும் ரொம்பவே ரசிச்சு என்னை வாழ்த்தினாங்க. இப்படி, கோடை மழை மாதிரி சில நேரம் எனக்குப் பாராட்டுகள் கிடைச்சாலும் அதனால எந்த நிலையான பயனும் இருக்கிறதில்ல. அதன் பிறகு மறுபடியும் போராட்ட வாழ்க்கைதான்.

என் மனைவி கல்யாணியும் விழிச்சவால் உடையவங்கதான். அவங்களுக்கு எந்த வேலையும் அமையல. ஒரே பையன் ஸ்கூல் படிக்கிறான். அம்மாவும் வயசானவங்க. என்னோட வருமானத்தை நம்பிதான் மொத்தக் குடும்பமும் இருக்கு. வெளியுலகத்தைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும்னு அதிக ஆசை இருந்தும், இதுவரை அதுக்கான வாய்ப்புகள் அமையல. இசை, ஸ்கூல், வீடுதான் என் உலகம். பகுதி நேர ஆசிரியரா இருக்கிறதால, ஸ்கூல் இயங்காத இந்தக் காலகட்டத்துல எனக்கு வருமானம் கிடைக்காது.

குடும்பத்தினருடன் பெருமாள்
குடும்பத்தினருடன் பெருமாள்

கச்சேரி வாய்ப்புகளும் இல்லாததால, வறுமையின் பிடியில மொத்தக் குடும்பமுமா சிக்கித் தவிக்கிறோம். தன்மானத்துடன் வாழ முடியாததால, தவறான எண்ணங்களெல்லாம் வந்து போகுது. சரியான தூக்கம், நிம்மதியில்லாம தடுமாற்றத்துடன் இருக்கேன். இப்படி மன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் புல்லாங்குழலை எடுத்து கொஞ்ச நேரம் வாசிச்சு என்னைச் சாந்தப்படுத்திக்கிறேன். எங்க குடும்பக் கஷ்டத்துக்கு யாராச்சும் உதவி செஞ்சா பயனுள்ளதா இருக்கும்” - கண்ணீருடன் வேண்டுகோள் விடுக்கிறார் பெருமாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு