Published:Updated:

ஸ்வர்ணலதா குரல், மினிபஸ் மிதப்பு, கொய்யா வாசனை! - பிறந்தநாள் சிறப்பு கட்டுரை

Swarnalatha

`மாசி மாசம்' பாடலை இப்போதே கேட்கத் தோன்றுகிறதா... அதற்கு முன், `ஆசை மச்சான் வாங்கித்தந்த மல்லிகைப்பூ' பாடலைக் கேட்டுவிடுங்கள். ஒரு நிமிடம் பொறுங்கள், `மலைக்கோயில் வாசலில்'பாடலை முதலில் கேட்பதுதானே சிறப்பு. எந்தப் பாடலிலிருந்து தொடங்குவது என்பதற்கான பதில் என்னிடம் இருக்கிறது...

ஸ்வர்ணலதா குரல், மினிபஸ் மிதப்பு, கொய்யா வாசனை! - பிறந்தநாள் சிறப்பு கட்டுரை

`மாசி மாசம்' பாடலை இப்போதே கேட்கத் தோன்றுகிறதா... அதற்கு முன், `ஆசை மச்சான் வாங்கித்தந்த மல்லிகைப்பூ' பாடலைக் கேட்டுவிடுங்கள். ஒரு நிமிடம் பொறுங்கள், `மலைக்கோயில் வாசலில்'பாடலை முதலில் கேட்பதுதானே சிறப்பு. எந்தப் பாடலிலிருந்து தொடங்குவது என்பதற்கான பதில் என்னிடம் இருக்கிறது...

Published:Updated:
Swarnalatha
ஸ்வர்ணலதாவின் குரலை என்னவென்று சொல்வது? சித்திரையின் வெயில், மார்கழியின் வாடை, ஆடிக் காற்று, ஐப்பசியின் மழை... எப்படி விவரிப்பது?

இவையெல்லாம் சேர்த்து எக்காலத்திற்கும், எண் திசைக்கும், எல்லா உணர்வுகளுக்குமானது எனச் சொன்னாலும் போதவில்லை. ஒரு ஆர்மோனியக் கலைஞனுக்கும், இசைக் காதலிக்கும் பிறந்த குழந்தை ஸ்வர்ணலதா. கேரளாவில் பிறந்து, கர்நாடகாவில் வளர்ந்து, தமிழ் இசையுலகில் நுழையும் கனவோடு சென்னை வந்தடைந்தார். 3 வயதிலேயே, கர்னாடக மற்றும் இந்துஸ்தானி இசை வடிவங்களைத் தன் சகோதரியிடம் கற்றுக்கொண்ட ஸ்வர்ணலதா, தந்தையிடம் ஆர்மோனியம் வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.

Swarnalatha
Swarnalatha

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொரு கனவுக்கும், நிஜமாகும் நாளொன்று இருக்கிறது. அப்படி ஒருநாள், மெல்லிசை மன்னரிடமிருந்து ஓர் அழைப்பு. தன் 14-வது வயதில், `நீதிக்கு தண்டனை' எனும் படத்தில் `சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' என்கிற பாடலைப் பாடினார். அதுவும், கே.ஜே.யேசுதாஸுடன் இணைந்து. அடுத்து, மெல்லிசை மன்னரைத் தொடர்ந்து இசைஞானியின் இசையில் பாடுவதற்கான வாய்ப்பு கிட்டியது. `குரு சிஷ்யன்' படத்தின் `உத்தமபுத்திரி நானு', இளையராஜாவின் இசையில் ஸ்வர்ணலதா பாடிய முதல் பாடல். பிறகு, `சத்ரியன்' படத்தில் `மாலையில் யாரோ மனதோடு பேச' என்கிற குரல், உண்மையிலேயே செவிகளுக்குள் மார்கழி வாடையை மெதுவாக வீசியது. அதோடு, `வருகிறாள் ஒரு இசைதேவி' என செய்தியும் செவிக்குள் விழ, ரசிகர் பட்டாளம் உருவாகத் தொடங்கியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்வர்ணலதாவின் குரலில் உள்ள `வெர்சடைல்' தன்மைக்கு சிறந்த உதாரணம், `சின்னத்தம்பி' படத்தின் பாடல்கள். ஒரே மெட்டு, இருவேறு உணர்வுகள். `போவோமா ஊர்கோலம்' என புன்னகையைப் பூக்கவிட்டு, `நீ எங்கே என் அன்பே' எனக் கண்ணீர் விட வைத்திருப்பார். அதற்கான அங்கீகாரமாக, பல லட்சம் ரசிகர்களும், தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதும் கிடைத்தது. `என் ராசாவின் மனசிலே' படத்தின் `குயில்பாட்டு வந்ததென்ன' பாடல், குயிலின் இசையைவிட இனிமையானது. `மெலடி பாடல்கள் என்றால், ஸ்வர்ணலதா அடித்து நொறுக்குவார்' என்கிற நேரத்தில்தான் அந்தவொரு பாடல் வந்தது.

Swarnalatha
Swarnalatha

`கேப்டன் பிரபாகரன்' படத்தில் வரும் `ஆட்டமா தேரோட்டமா'. இன்றும் பலருக்கு, ஸ்வர்ணலதா என்ற பெயரைக் கேட்டதும் முதலில் உதிக்கும் பாடல். லைட் மியூசிக் ஆர்கெஸ்ட்ராக்களின் ஸ்பீக்கர்கள், இந்தப் பாடலைப் பாடிப்பாடி மகிழ்ந்தன. ஸ்பீக்கரின் முன் பலர் ஆட்டமாடி அயர்ந்து போயினர். இந்தப் பாடலை யார் பாடினாலும், அதனுள் ஸ்வர்ணலதாவின் குரல் கேட்கும். அந்த மாயம்தான் எப்படியென இன்றுவரை புரியவில்லை. `சக்திவேல்' படத்தில், `மல்லிகை மொட்டு' பாடல், `உன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன்' படத்தில் `என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட', `சின்னத்தாயி' படத்தில் `நான் ஏரிக்கரை' என்கிற பாடல்களை கேட்கும்போதெல்லாம் மினி பஸ்ஸில் மிதக்கும் உணர்வு, கூடவே கொய்யாப்பழத்தின் வாசம்!

`மாசி மாசம் ஆளான பொண்ணு' பாடலை இப்போதே கேட்கத் தோன்றுகிறதா, அதற்கு முன், `ஆசை மச்சான் வாங்கித்தந்த மல்லிகைப்பூ' பாடலைக் கேட்டுவிடுங்கள். ஒரு நிமிடம் பொறுங்கள், `மலைக்கோயில் வாசலில்' என மீனா விளக்கேற்றும் வேளையில் பாடும் அந்த ஆனந்த கானத்தை முதலில் கேட்பதுதானே சிறப்பு. அப்படியும் முடிவுக்கு வந்துவிட முடியாது, `ராக்கம்மா கையைத்தட்டு' பாடல் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டதாயிற்றே! சரி, எந்தப் பாடலில் இருந்து தொடங்குவது என்பதற்கான பதில் என்னிடம் இருக்கிறது. `வள்ளி' படத்தின் `என்னுள்ளே என்னுள்ளே' பாடல். ஆனால், இதிலும் ஒரு சிக்கல். இந்தப் பாடலைக் கேட்டால் அடுத்தடுத்த பாடல்கள் என நகர்வது கடினம். ஒரே பாடலில் சிக்கி, மூழ்கி, மயக்க நிலையில் கிடக்கவேண்டியதுதான்.

Swarnalatha
Swarnalatha

இசைஞானி, ஒரு படத்தின் அத்தனை பாடல்களையும் ஒரே பாடகியைக் கொண்டு பாட வைத்தது, 'கும்மிப்பாட்டு' படத்தில்தான். அதில் வரும் 6 பாடல்களுக்கும் குரல் நம் ஸ்வர்ணலதாதான்! மெல்லிசை மன்னர் ஏற்றிவைத்த சிறு தீபம், இசைஞானியின் இசையில் பெரும் ஜுவாலையாக வளர்ந்து, இசைப்புயலின் இசையில் பட்டொளி வீசிப் பரவியது. முதல் பாடல் `உசிலம்பட்டி பெண்குட்டி'. சாகுல் ஹமீது மற்றும் ஸ்வர்ணலதாவின் குரலை சேர்ந்து கேட்கையில் எவ்வளவு மகிழ்ச்சியில் மனம் குதிக்கும் தெரியுமா. இனி, இப்படியொன்று நிகழ வாய்ப்பே இல்லை என்ற எண்ணம் தோன்றுகையில், அமைதியாகி அமர்கிறது. `முக்காலா முக்காபுலா', `குளிருது குளிருது', `காதெலெனும் தேர்வெழுதி', `மெல்லிசையே',`காதல் யோகி',`எவனோ ஒருவன்' என ரஹ்மான்- ஸ்வர்ணலதா கொடுத்த ஹிட் பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், எதுவும் இந்தப் பாடலுக்கு இணையில்லை.

பாரதிராஜாவின் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான படம், `கருத்தம்மா'. அதில், 'போறாளே பொண்ணுத்தாயீ... போகிற போக்கில் மனச தொட்டு... எனும் அற்புதமான பாடல். வைரமுத்துவின் நெஞ்சைத் தொடும் தமிழை, தன் குரலின் வழியாக ஆன்மாவைத் தொட வைத்திருப்பார் ஸ்வர்ணலதா. சீமைக்கருவேலங்காடுகளில் சுற்றித்திரியும் மயில்களின் அகவலும், குயில்களின் கூவலும் இணைத்துக் கட்டியது போன்ற குரல். அந்தப் பாடலை பாடிமுடித்ததும், ஸ்வர்ணலதாவுக்கு கண்ணீர் சுரந்திருக்கிறது. அந்தக் கண்ணீர்தான், அந்தப் பாடலைக் கேட்கையில் நம் கண்ணில் துளிர்விடுகிறது. 37-வது வயதில் மண்ணுலகம் பிரிந்த அவர் உடலை எடுத்துச் சென்ற ஊர்வலத்தில், இறுதியாக ஒரு பாடல் ஒலிக்கப்பட்டது...

Swarnalatha
Swarnalatha
`போறாளே பொன்னுத்தாயீ... போகிற போக்கில் மனச தொட்டு...'