Published:Updated:

இவரது பாடல்கள் மட்டுமல்ல... இவரும் குறிஞ்சிப்பூதான்! - வித்யாசாகர் பிறந்தநாள் பகிர்வு

வித்யாசாகர்
வித்யாசாகர்

தங்கள் ஆதர்ச நாயகர்களை, நாயகிகளை வித்யாசாகரின் இசை பின்னணியில் ஒலிக்க, காணப்பெற்றவர்கள் நிச்சயம் பாக்கியவான்களே. `வா வா என் தேவதையே', `ஆராரோ ஆரிரரோ' என 2K கிட்ஸ்களைத் தாலாட்டி உறக்கத்தில் ஆழ்த்திய காரணமோ என்னவோ, இன்றும் பல 2K கிட்களுக்கு அவர் முகம் அறியாது.

தமிழ் சினிமாவின் தற்போதைய மாஸ் ஹீரோக்கள், மாஸ் ஹீரோக்களாகப் பரிணமிக்கத் தொடங்கிய காலகட்டம் அது. அவர்கள் காட்டிய மாஸான ஹீரோயிஸத்துக்கு, அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்ததில் இந்த இசையமைப்பாளருக்கும் பெரிய பங்குண்டு. ஆட்டம் போட வைக்கும் ஓப்பனிங் பாடல், `அட' போட வைக்கும் பின்னணி இசை, தேன் சொட்டும் காதல் பாடல்கள், கண்ணீர் கொட்டும் சென்டிமென்ட் பாடல்கள் என முழுமையான பங்களிப்பை அவர் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர்தான் இசையமைப்பாளர் வித்யாசாகர்!

கில்லி
கில்லி
``அந்தப் பாட்டுக்கு விஜய்யைத் தவிர வேறு யாராலும் டான்ஸ் ஆட முடியாதுன்னு தெரியும்!'' - வித்யாசாகர்

விஜய்க்கான மாஸ் பிம்பத்தைக் கட்டமைத்ததில் வித்யாசாகர் எடுத்து வைத்த செங்கல்கற்களின் எண்ணிக்கை ரொம்பவே அதிகம். விஜய் தன் ரூட்டை மாற்றிய `திருமலை'யில் `ஹூய்...' எனத் தொடங்கும் தப்பிசை, தப்பாமல் எனர்ஜி ஏற்றியது. விஜய் எனும் நாயகனை, தமிழ் சினிமாவுலகின் உச்சிக்கு உயர்த்திய `கில்லி' திரைப்படத்துக்கும் இசை வித்யாசாகர்தான். `அப்படிப்போடு' பாடல் பலர் வீட்டிலுள்ள குட்டிக்குட்டி ரசிகர்களுக்கு அவரைக் கொண்டு சேர்த்தது என்றால், `அர்ஜுனரு வில்லு' பாடலை ரஜினியின் `பாட்ஷா பாரு' பாடலுக்கு இணையாக ஒப்பிட்டு மகிழ்ந்தனர் விஜய்யின் ரசிகர்கள்.

விஜய் மட்டுமன்றி, வேறு சில சாக்லேட் பாய்களையும் பாய் நெக்ஸ்ட் டோர்களையும் கமர்ஷியல் ஏரியாவுக்குள் கைப்பிடித்து கூட்டிவந்தது வித்யாசாகரின் இசைதான்! விக்ரமுக்கு `தில்', `தூள்' என இரண்டே படங்களில் 200 அடி பாய வைத்தார். அஜித்துக்கு `ஜீ' மற்றும் `வில்லன்', மாதவனுக்கு `ரன்', தனுஷுக்கு `சுள்ளான்' என இவர் போட்டுக்கொடுத்த எல்லாப் பாடல்களும் குறி தப்பாமல் ரசிகர்ளின் மனதைக் கவர்ந்தன. சண்டைக்காட்சிக்கு ரகளையான ஒரு பாடல் என்பது இப்போது டிரெண்டாக இருக்கலாம். ஆனால், இதற்கு விதைபோட்டது தரணியும் வித்யாசாகரும்தான். `மதுரை வீரன்தானே' என கணீர் குரலில், நமக்குள் இருக்கும் வீரனை உசுப்பிவிட்டார் பரவை முனியம்மா. அவர் குரலும், அதன் இசையும் அது படமாக்கபட்ட விதமும், நினைக்கும்போது சிலிர்க்கிறது!

கர்ணா
கர்ணா

வித்யாசாகருக்கு `மாஸ்' ஒரு முகம் என்றால், க்ளாஸான இன்னொரு முகம் இருக்கிறது. அதுவே, பேரொளி பொருந்திய ஒரு முகம், தி மெலடி கிங்! வித்யாசாகரின் மெலடி என்றதும் நினைவுக்கு வரும் முதல் பாட்டு, `மலரே மௌனமா...' எஸ்.பி.பி அந்தப் பாடலை பாடி முடித்தவுடன், ``இது ஒரு குறிஞ்சிப்பூ” என்றார். குறிஞ்சிப்பூ கூட 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் பூத்துவிடும். ஆனால், கேட்க கேட்கத் திகட்டாத அப்படியொரு பாடல், இத்தனை ஆண்டுகளில் மீண்டும் ஒருமுறைகூட மலர்ந்துவிடவில்லை. `நூறு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா...', `பூவாசம் புறப்படும் பெண்ணே...', `பொய் சொல்லக் கூடாது காதலி...' என வித்யாசாகரின் மெலடிப் பாடல்களைப் பற்றி எழுதினாலே, பல பக்கங்களைத் தின்றுவிடும்.

நாம் அதிகம் அறிந்திடாத பாடல் என நினைக்கும், `கில்லி' படத்தின் `காதலா காதலை’ பாடல் இன்றும் பல காதல் ஜோடிகளின் நேசப்பட்டியிலில் இருக்கிறது. `தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தின் `கொலைகாரா' பாடலும்கூட இங்கு பலருக்கு ஃபேவரைட்! `நிலவே வா' படத்தில் இடம்பெற்ற `நிலவே நிலவே’ பாடலை எடுத்துக்கொண்டால் மெலடியிலும் அது புது ட்ரீட்மென்ட். எப்போதும் பாடலில் பல்லவி முடிந்து ஒரு இடையிசை வந்து பிறகு சரணம் தொடங்கும், பிறகு இரண்டாவது சரணம். இப்படித்தான் பெரும்பாலான பாடல்களின் வடிவமாக இருக்கும். அதைத் தகர்த்து, எந்த ஒரு வரியும் ரிப்பீட் ஆகாமல், ஆண் பாடுவதற்கு ஒரு மெட்டு, பெண் பாடுவதற்கு ஒரு மெட்டு என அற்புதமாகக் கோத்திருப்பார்.

இயற்கை
இயற்கை

ஆரம்ப காலத்தில் இவரது பின்னணி இசை பெரிதாக இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதைப் பிற்காலத்தில் சரி செய்துகொண்டார். `இயற்கை' படம் வித்யாசாகரின் ஒரு மைல்கல் ஆல்பம். `காதல் வந்தால் சொல்லி அனுப்பு’ என ஏங்க வைத்துவிட்டு, க்ளைமாக்ஸில் `அலையே அலையே’ என குஷியைக் கூட்டி, அந்த ஆனந்தத்தின் அதிர்ச்சிகரமான ஒரு முடிவுக்கு, பின்னணியில் பியனோவால் ஒன்று செய்திருப்பார். கேட்கையில் இதயம் கனமாகி, கண்கள் குளமாகிவிடும். அதைத் தொடர்ந்து வரும் ஹம்மிங்கில் நம்மையும் சிலுவையில் அறைந்திருப்பார். `இயற்கை' படத்தின் பின்னணி இசைத் துணுக்குகள், தூக்கம் வராத இரவுகளில் நம் கரம் பிடித்து நம் தனிமையைப் போக்க உதவும் உன்னதம்.

`தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ என புஷ்பவனம் குப்புசாமியைப் பாப் ஸ்டைலுக்கு இழுத்து வந்ததும், கர்னாடக இசைக்கலைஞர் சீர்காழி சிவ சிதம்பரத்தை, `முத்து முத்தா பேஞ்ச மழை தன்னேனன்னானே’ என நாட்டுப்புற பாடலை பாடவைத்தும் மாஸ்டர் ஸ்ட்ரோக். `ஆதி' படத்தில் `ஒல்லி ஒல்லி இடுப்பு’ பாடலின் அழகான ஒரு விஷயம், அனுராதா ஶ்ரீராமின் மாடுலேஷன். `அப்படி போடு’வில் ஓப்பன் த்ரோட்டில் பாடியவரை, இதில் பல்லைக் கடித்து பாட வைத்து வித்தியாசம் காட்டியிருப்பார் வித்யாசாகர்.

தூள்
தூள்

அவரின் பல பெப்பியான பாடல்களிலும் மெலடியின் வாசம் வீசும். காரணம், புல்லாங்குழல். `கொக்கர கொக்கரக்கோ’ பாடலின் முன்னிசை, `கொடுவா மீசை அருவா பார்வை’ பாடலின் இடையிசையிலும் புல்லாங்குழல் விளையாடும். `பசும்பொன்' படத்தில் வரும் `தாமரை பூவுக்கும்’ பாடல் எல்லாம் என்ன சொல்ல! சாதரணமாக ஆரம்பிக்கும் பல்லவி முடிந்ததும், இடையிசையில் தன்னுடைய இன்னோவேஷனை காட்டுவார். கடிகாரத்தில் சின்னமுள் எப்போது நகர்கிறது என்று தெரியாததைப்போல் பாடலில் வேரியேஷனை எந்த உறுத்தலும் இல்லாமல் கொண்டுவருவார். `உயிரோடு உயிராக' படத்தில் இடம்பெறும் `பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது’ பாடலில் முன்னிசை சாதாரண கிடாரில் தொடங்கி பிறகு ஶ்ரீனிவாஸின் மென்மையான குரலில் முதல் பல்லவி வரும். அப்படியே `இது எப்படி எப்படி நியாயம்’ வரியில் வெஸ்டர்ன் ஸடைலுக்குத் தாவி பாட்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருப்பார்.

Vikatan
வித்யாசாகர்
வித்யாசாகர்

90'ஸ் கிட்ஸ்களின் ப்ளேலிஸ்ட்டில் கட்டாயம் கால் பங்கு இடத்தை வித்யாசாகரின் பாடல்கள் நிரப்பியிருக்கும். தங்கள் ஆதர்ச நாயகர்களை, நாயகிகளை வித்யாசாகரின் இசை பின்னணியில் ஒலிக்க, காணப்பெற்றவர்கள் நிச்சயம் பாக்கியவான்களே. `வா வா என் தேவதையே', `ஆராரோ ஆரிரரோ' என 2K கிட்ஸ்களைத் தாலாட்டி உறக்கத்தில் ஆழ்த்திய காரணமோ என்னவோ, இன்றும் பல 2K கிட்களுக்கு அவர் முகம் அறியாது. அவர் இசையமைத்தப் பாடல்களைக் திரும்பக் கேட்டுப்பாருங்கள், உங்களைத் தூங்க வைத்த தாலாட்டுகள் மட்டுமல்ல, குத்தாட்டம் போடவைத்த குத்துப் பாடல்களும் அவருடையதுதான்! வித்யாசாகர் இசையமைத்த பாடல்கள் மட்டுமல்ல, அவரும் ஒரு குறிஞ்சிப்பூதான்!

அடுத்த கட்டுரைக்கு