Published:Updated:

``அவங்க இல்லைனா நானும் இல்லை; என் இசையும் இல்லை!" - `பத்மஶ்ரீ' குறித்து பாம்பே ஜெயஶ்ரீ

இசைத்துறையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ஜெயஸ்ரீக்கு முத்தாய்ப்பாக தற்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பலரது வாழ்த்து மழையில் நனைந்துகொண்டிருந்தவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துப் பேசினோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கர்னாடக இசைப் பாடகர்களில் மிகவும் குறைவானோரே, திரையிசையிலும் ஜொலிக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவரது இனிமையான குரல் வளத்தால், சபாக்களில் மெய்ம்மறந்து சொக்கிப்போகும் ரசிகர்கள் அதிகம். சென்னையிலுள்ள இவரது வீடு எப்போதும் இசை மயமாகவே இருக்கும். இசை தாண்டிய வெளியுலகம் பெரிதாக அறியாதவர், இத்துறையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இசைப் பயணத்தில் முத்தாய்ப்பாக தற்போது ஜெயஸ்ரீக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பலரது வாழ்த்து மழையில் நனைந்துகொண்டிருந்தவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துப் பேசினோம்.

பாம்பே ஜெயஶ்ரீ
பாம்பே ஜெயஶ்ரீ

``மக்களை மகிழ்விக்கும் இசைக்கலைஞரா என்னோட வேலைகளைச் செய்றேன். விருதையெல்லாம் எதிர்பார்க்க மாட்டேன். எனக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதைக் கேள்விப்பட்டதும் கொஞ்சம் இன்ப அதிர்ச்சியானேன். உடனே போன் அழைப்புகளிலும் குறுஞ்செய்தி மூலமாகவும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிஞ்சது. என் மீது மக்களும் நலன்விரும்பிகளும் மாசற்ற அன்பு வெச்சிருக்கிறதை மீண்டும் ஒருமுறை தெரிஞ்சுக்க முடிஞ்சது. குறிப்பா, குழந்தைகள் உட்பட பலர் வாழ்த்துச் செய்தியையும் பாடலாவே அனுப்பியிருந்தாங்க.

அந்தச் சில மணிநேரத்தில் ரொம்பவே நெகிழ்ந்து போயிட்டேன். இதுவரை உணராத வகையில, மனசுல புதுசா பூ பூத்த நிறைவு. அன்றைய இரவு தூக்கம் மிகவும் வித்தியாசமான, விவரிக்க இயலாத நெகிழ்ச்சியான அனுபவத்தைக் கொடுத்துச்சு. இசைத்துறை, நடனத்துறை நண்பர்கள் பலரும் முந்தைய ஆண்டுகளில் பத்ம விருதுகளை வாங்கியிருக்காங்க. அப்போ அவங்களுக்கு வாழ்த்துச் சொல்லி சந்தோஷப்பட்டிருக்கேன். அவங்கள்லாம் இப்போ எனக்கு வாழ்த்துச் சொன்னது கூடுதல் மகிழ்ச்சி.

சித்ராவுடன் பாம்பே ஜெயஶ்ரீ
சித்ராவுடன் பாம்பே ஜெயஶ்ரீ

பாடகி சித்ரா சேச்சிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருக்கு. நான் மிகுந்த அன்பு வெச்சிருக்கும் அவங்க எனக்கு போன்ல வாழ்த்துச் சொல்லி மனம்விட்டுப் பேசினாங்க. என் குடும்பத்தினர் நெகிழ்ச்சியில் கண்கலங்கிட்டாங்க. சொல்லப்போனா, இந்த விருது அவங்களுக்குத்தான் சமர்ப்பணம். அவங்க இல்லைன்னா, நானில்லை; என் இசையில்லை. எல்லாமே தெய்வத்தின் அனுகிரஹம்; குருநாதரின் ஆசீர்வாதம்; மக்களின் அன்பு” என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார்.

`நறுமுகையே (இருவர்)', `வசீகரா என் நெஞ்சினிக்க (மின்னலே)', `பார்த்த முதல் நாளே (வேட்டையாடு விளையாடு)', `சுட்டும் விழி (கஜினி)', `யாரோ மனதிலே (தாம் தூம்)' உள்ளிட்ட ஹிட் பாடல்கள் பலவற்றையும் பாம்பே ஜெயஶ்ரீ பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Bombay Jayashri
Bombay Jayashri

``அமரர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயாதான் என்னைப் பின்னணிப் பாடகியா அறிமுகப்படுத்தினார். அப்போ ரொம்ப சின்ன பொண்ணா, திரையிசையில அடியெடுத்து வெச்சேன். அமரர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சார்தான் இளையராஜா சார்கிட்ட என்னை அறிமுகப்படுத்தி வெச்சார். அவருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி. `வியட்நாம் காலனி’ படத்துல `கை வீணையை ஏந்தும்’ பாடல் வாய்ப்பு கொடுத்த ராஜா சாரை என்றும் மறக்க மாட்டேன். ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட பல இசையமைப்பாளர்கள் சிறப்பான வாய்ப்புகள் கொடுத்தாங்க. இதனால, பின்னணிப் பாடகியாவும் மக்கள் மனசுல குடிகொள்ள முடிஞ்சது. பலதரப்பட்ட மக்கள் என்மீதும், நான் சுவாசிக்கும் இசையின்மீதும் அளவுகடந்த அன்பை வெச்சிருக்காங்க.

அவங்களுக்கெல்லாம் இசையால்தானே கைம்மாறு செய்ய முடியும். இசையை முழுமையா யாராலும் கற்றுத் தேர முடியாது. இசைங்கிற பெருங்கடல்ல நீந்திக்கிட்டே இருக்கணும். அதன் ஆழம் போகப்போகத்தான் இசை ஞானமும் அதிகமாகும். அதற்கான முயற்சிதான் இசைப் பயிற்சி. என் வீடு முழுக்க இசைக்கருவிகள் நிறைந்திருக்கும். இப்போதும் அதிகாலையில சாதகம் பண்ண ஆரம்பிச்சுடுவேன். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பாடிப் பயிற்சி எடுத்துகிட்டே இருப்பேன். அதனால ஒருபோதும் சோர்வே ஏற்படாது. அதுதான் இசையின் மகிமை.

என் மகனும் இசைத்துறையில் பணியாற்றவே விரும்புறார். அவரும் எந்நேரமும் பாடிப் பயிற்சி எடுத்துக்கிட்டே இருப்பார். இசைப் பயிற்சி இல்லாத நேரத்துல வீட்டில் ரேடியோவில் இசை ஒலிச்சுக்கிட்டே இருக்கும். இசையால் கிடைக்கும் நிம்மதி, நிறைவுக்கு ஒப்பீடே கிடையாது. கர்னாடக இசை உட்பட பலதரப்பட்ட இசையையும் இப்போதைய தலைமுறை குழந்தைகள் ஆர்வமா கத்துக்கிறாங்க. ஆனா, அவங்களுக்கு உரிய இசை வாய்ப்புகள் கிடைக்க காலதாமதம் ஆகலாம். அதனால, பொருளாதார தேவை உள்ளிட்ட பல காரணங்களுக்காகப் பலரும் வேறு துறைக்குப் போயிடுறாங்க அல்லது சரியான வாய்ப்புகள் கிடைக்கலையேனு ஆதங்கப்படுறாங்க.

`ஒரு ராகத்தை முழுமையா கத்துக்க ஒரு ஜென்மம் போதாது’ன்னு என் குருநாதர் அடிக்கடி சொல்வார். இசையை முழுமையா ஒரு ஜென்மத்தில் கத்துக்கவே முடியாது. இந்த விஷயத்தை உணர எனக்கு நீண்டகாலமாச்சு. அதுபோல, குருநாதர்களின் வழிகாட்டுதலோடு, ஒவ்வோர் இசைக்கலைஞருமே பொறுமையுடன் முழுமையான ஞானத்துடன் இசையைக் கத்துக்கிட்டே இருந்தால், நமக்கான வாய்ப்புகளும் புகழும் தானா வந்துசேரும். இசையின் ஆழத்தை நோக்கிப் போனா, ரத்தினங்கள் போல இத்துறையில புலமைத்துவமும் புகழும் பெறலாம். அப்படியான ரத்தினங்கள்ல ஒண்ணாவே பத்மஸ்ரீ விருதைப் பார்க்கிறேன்” - மெல்லிய புன்னகையுடன் பேசும் ஜெயஸ்ரீ, லாக்டெளன் காலகட்டம் குறித்தும் பேசினார்.

பாம்பே ஜெயஶ்ரீ
பாம்பே ஜெயஶ்ரீ

``என் வீட்டு மொட்டைமாடி எப்போதும் என்னோட மனம் விரும்பும் இடம். அங்குள்ள பூச்செடிகளோடு குழந்தை மாதிரி தினமும் பேசி மகிழ்வேன். அந்த இடத்துல இசைப் பயிற்சி எடுத்துக்கிறது எனக்கு ரொம்பவே பிடிக்கும். லாக்டெளன்ல அதிக நேரம் மொட்டைமாடியிலதான் செலவிட்டேன். அங்கேயே பயிற்சி எடுப்பதுடன், பாடல்கள் பாடி என்னோட யூடியூப் சேனல்ல பதிவிட்டேன். மத்தபடி சமையல், குடும்பத்தினருடன் உரையாடுறது, புத்தகம் வாசிப்புன்னு எல்லாவற்றுக்கும் நேரத்தைச் சரியாகச் செலவிட்டேன். அதேநேரம் கொரோனா சூழலால நானும் பல வகையில் வருந்தினேன்.

இந்த அண்டத்துல காரணமின்றி எதுவும் நடப்பதில்ல. கொரோனா வந்ததும், நாம வீட்டுக்குள் முடங்கியிருந்தது எல்லாத்துக்குமே நியாயமான காரணம் இருக்கும்னு நம்புறேன். இசையை மக்கள் நேரில் கேட்டு ரசிச்சு சந்தோஷப்படுறதைப் பார்க்கிறதுதான் எங்களுக்குப் பெரிய மகிழ்ச்சி தரும். குறிப்பா, கடந்த மார்கழியில சபாக்கள்ல பெரிசா இசைக் கச்சேரி நடக்கல. இதெல்லாம் கொஞ்சம் வருத்தமான விஷயம். அதைவிட, கொரோனாவால சாமான்ய மக்கள் உட்பட பலரும் பலவிதங்கள்ல ரொம்பவே பாதிக்கப்பட்டாங்க.

பாம்பே ஜெயஶ்ரீ
பாம்பே ஜெயஶ்ரீ
Vikatan

உடல்ரீதியா, பொருளாதார ரீதியா பாதிக்கப்பட்டவங்க நிலையை அறிஞ்சு நிறையவே வருத்தப்பட்டேன். அவங்களுக்காக கடவுளை வேண்டினேன். ஈடு செய்ய முடியாத அந்த இழப்புகள்ல இருந்து இந்த வருஷம் நாம எல்லோரும் இயல்புநிலைக்குத் திரும்பிடணும். முன்களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு கலந்த வேலையை நினைச்சு பலநாள் பெருமிதப்பட்டேன். அவங்கள்ல என் மாணவர்கள், சொந்தங்கள்னு பலரும் இருக்காங்க. அவங்களோடு பேசி, அவங்க பணிச்சூழல் குறித்துத் தெரிஞ்சுகிட்டு கண் கலங்கினேன். இந்த வருஷம் எல்லோருக்கும் சிறப்பானதாகவே அமையும்" என்று நிறைவாக முடித்தார் ஜெயஶ்ரீ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு