சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“சங்கீதத்தின் தத்துவம் என்பது மகிழ்ச்சிதான்!”

சஞ்சய் சுப்ரமண்யன்
பிரீமியம் ஸ்டோரி
News
சஞ்சய் சுப்ரமண்யன்

கலைஞன் தனக்குப் பிடித்ததைச் செய்து, பாதித்ததை வெளிப்படுத்துகிறான்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு மேடையேறியிருக்கிறார் ‘சங்கீத கலாநிதி’ சஞ்சய் சுப்ரமண்யன். இசையுலகைப் பரபரப்பு தொற்றிக்கொள்ள, சமீபித்திருக்கிறது ‘டிசம்பர் சீசன்.’ கடந்த சில மாதங்களாகச் சமூக வலைதளங்களில் சஞ்சய் வெளியிட்டு வரும் 30 நொடி காணொலிகள் ரசிகர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை நிறைக்கின்றன. அவரின் முன்னெடுப்பான ‘சஞ்சய் சபா’ ரசிகர்களின் மனங்களை நிறைத்திருக்கிறது. மழை ஓய்ந்திருந்த ஒரு மாலை வேளையில் அவரது இல்லத்தில் நடந்தது இந்த உரையாடல்.

“சங்கீதமே வாழ்க்கை என்று எப்போது தீர்மானித்தீர்கள்?”

“16 வயதில் என்று சொல்லலாம். அன்று எனக்கிருந்த பல ஈடுபாடுகளில் சங்கீதம் கொஞ்சம் நன்றாக வந்தது. ஏழு வயதில் சங்கீதம் கற்கத் தொடங்கினேன். கோடை விடுமுறைக்குக் கல்கத்தாவிலிருக்கும் தாத்தா வீட்டுக்குப் போகும்போது, அங்கிருக்கும் எல்.பி. ரெகார்டுகளை இரண்டு, மூன்று முறை முழுவதுமாகக் கேட்டுவிடுவேன். இப்படியாக என்னுடைய மற்ற ஈடுபாடுகளைவிட சங்கீதத்தில் தீவிரம் கூடி, அதிலேயே நல்ல முன்னேற்றம் வந்துவிட்டது. 18 வயதில் முதல் கச்சேரி செய்தேன். ‘வாழ்க்கையில் நீ என்னவாகப் போகிறாய்’ என்ற கேள்விக்கு, ‘கிரிக்கெட்டர்’ என்றும், ‘இன்ஜினீயர் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிடுவேன்’ என்றெல்லாம் பதில் வரும். ஆனால், சென்னையில் இருக்க வேண்டுமென 15 வயதில் தீர்மானித்துவிட்டேன் - காரணம் சங்கீதம்!”

“சங்கீதத்தின் தத்துவம் என்பது மகிழ்ச்சிதான்!”

“18 மாதங்களுக்குப் பிறகு மேடையேறியிருக்கிறீர்கள்... இது என்ன மாதிரியான மாற்றங்களை உங்களிடத்தில் கொண்டுவந்திருக்கிறது?”

“கச்சேரிகள் இல்லாத இந்தக் கொரோனா காலகட்டத்தில், தினமும் வீட்டில் தம்புராவை வைத்துக்கொண்டு ஒன்றிரண்டு மணிநேரம் பாடியது, இசையை மட்டுமே கவனிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. இதை ஏன் செய்திருக்கக் கூடாது, இப்படிப் பாடியிருந்தால் எப்படி இருக்கும், இதை ஏன் இத்தனை ஆண்டுகளாகக் கவனிக்கவில்லை என இசை பற்றிய பல்வேறு கேள்விகள் அப்போது எனக்குள் எழுந்து அதற்கெல்லாம் பதிலும் கிடைத்தது. அதற்காக நிறைய சுயபரிசோதனைகள் செய்ய இந்தக் காலகட்டம் உதவியாக இருந்தது. இதற்கு முன்னால் இவ்வளவு நிதானமாக யோசிப்பதற்கு நேரம் கிடைத்ததில்லை. இந்தச் சிந்தனை ஒருவித அமைதியையும் புத்துணர்ச்சியையும், புதுப் போக்கையும் கொண்டுவந்தது. இப்போது மேடையேறியபோது, என்னையறியாமல் சில விஷயங்கள் மேம்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது!”

“இசை உங்களிடம் என்னவாக ஆகி நிற்கிறது?”

“கலைஞன் தனக்குப் பிடித்ததைச் செய்து, பாதித்ததை வெளிப்படுத்துகிறான். மகிழ்ச்சி, ஆதங்கம், வருத்தம், கோபம் என அந்த பாதிப்பு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த பாதிப்புதான் கலைஞனை இயக்குகிறது. என்னுடைய ‘சங்கீதத்தின் தத்துவம்’ என்பது மகிழ்ச்சிதான்; என் சங்கீதத்தில் செல்வாக்கு செலுத்துவது சந்தோஷம்தான். நான் பாடும்போது, என்னுடைய உணர்ச்சிகள் களிப்பு, குதூகலம், சந்தோஷம் என்பதாகத்தான் இருக்கின்றன. நான் விரும்புவதும், எனக்கு முதன்மையானதும் அதுவே!”

“இசைமீதான உங்கள் அணுகுமுறை எப்படித் தொடர்கிறது; முதல் கச்சேரி தொடங்கி இப்போது வரை என்ன உணர்கிறீர்கள்?”

“முதலில் மேடையேறும்போது பயம் இருக்கும்... நான் பாடுவது அதைக் கேட்பவர்களுக்கு முறையாகப் போய்ச் சேர வேண்டுமே என்கிற சிறு பதற்றம் இருந்தது. இன்றைக்கு அது இல்லை. அனுபவம் கூடி அணுகுமுறையில் நிதானம் வந்திருக்கிறது. 30 ஆண்டுகளில் நம்பிக்கை கூடியிருக்கிறது... வயது ஒரு காரணம்தானோ?!

கச்சேரிக்கு வருகிறவர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பினை முழுமையாகத் திருப்திப்படுத்தியிருக்கிறோமா என்றால்... தெரியாது. அதற்கு முயல்கிறோம். அதே நேரம், நாமும் சில விஷயங்கள் செய்ய ஆசைப்படுகிறோம். எனக்கு நாலு பாட்டு பிடித்திருக்கிறது, சில ராகம் பிடித்திருக்கிறது, சாகித்யங்களின் அர்த்தங்கள் பிடித்திருக்கின்றன. அவற்றைப் பகிர்ந்துகொள்ள மேடையேறுகிறேன். அதற்காக உழைத்து, பயிற்சி செய்து வந்திருக்கிறேன். ஆக, இரண்டு பேருமே எதிர்பார்ப்புகளோடு இருக்கிறோம். இருவரும் ஏதோ ஓரிடத்தில், ஒரு மையப் புள்ளியில் சந்திக்கிறோம், அல்லது, சந்திக்க முயல்கிறோம். அந்தச் சந்திப்பு தரும் சந்தோஷம், களிப்பு இத்தனை ஆண்டுகளாக அவர்களையும் வரச் செய்கிறது, என்னையும் மேடையேறச் செய்கிறது!”

“யூடியூபில் உங்கள் புதிய முன்னெடுப்பான ‘சஞ்சய் சபா’ குறித்து...”

“கொரோனா பாதிப்புகளின்போது, கச்சேரிகள் குறித்த ஒரு நிச்சயமின்மை நிலவியது. கடந்த ஆண்டு டிசம்பர் சீசனுக்காக, செப்டம்பரில் முதன்முறையாகக் காணொலிப் பதிவில் பாடினேன். இதுவே சில காலம் தொடரப்போகிறது எனத் தோன்றியது. நான் சங்கீத வகுப்பு எடுப்பதில்லை... எடுத்தாலும் பணம் வாங்குவதில்லை. கச்சேரியைத் தவிர வருமானத்துக்கான வழியில்லை. அப்பொழுது டிஜிட்டல் முன்னெடுப்பு குறித்த யோசனை தோன்றியது.

என் மனைவி ஆர்த்தி, 10 ஆண்டுகளாக என்னுடைய கச்சேரிகளைக் காணொலிப் பதிவுகளாக ஆவணப்படுத்திவருகிறார். அவற்றைச் சிறு காணொலிகளாக என்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கடந்த ஆறு மாதங்களாக வெளியிட்டுவந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. சேனலுக்கு உறுப்பினர் கட்டணம் செலுத்திக் காணொலிகளைப் பார்க்கும் வசதி யூடியூப்பில் அறிமுகமானபோது ‘சஞ்சய் சபா’ பிறந்தது. ‘சஞ்சய் சபா’வுக்காக பார்கவி மணியைச் சந்தித்தபோது, அவருடைய யோசனையில் On that note, short notes, notations உருவாகின.”

“எப்போதும் இளையராஜாவை விரும்பிக் கேட்பீர்கள், இல்லையா?”

“இப்போதும் கேட்கிறேன்... அதிலிருந்து வெளியே வரமுடியாது. இளையராஜாவின் பழைய பாடல்களை இன்று மறுபடியும் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்பிக் கேட்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. மொஸார்ட்டின் சங்கீதத்தைப் போல், இளையராஜாவின் இசை காலத்தைக் கடந்து நிற்கும். இன்றைய தலைமுறையினர் ராஜாவைக் கேட்பதைப் பார்க்கும்போது அந்த நம்பிக்கை உறுதிப்படுகிறது!”

“சங்கீதத்தின் தத்துவம் என்பது மகிழ்ச்சிதான்!”

“இப்போதைய உங்கள் தனிப்பட்ட ஈடுபாடுகள்...”

“கிரிப்டோகரன்சி பற்றிப் படித்துக்கொண்டு, அதைத் தொடர்ந்து கவனித்துவருகிறேன். ரொம்பப் புதிதாக இருக்கிறதே எனத் தேடிப் படிக்கிறேன். என் வயதுக்கு அத்தகைய சிக்கலான விஷயங்களைக் கற்றுக்கொள்ள நேரம் போதவில்லை. சமகாலத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது, புதிதாக என்ன வந்திருக்கிறது என்ற ஆர்வத்தில் இவற்றைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன்!”

“உங்களுக்குப் புலப்பட்ட உண்மை என்று நீங்கள் கருதுவது எதை?”

“ `சங்கீதம்ங்கிறது அநாவசியத்துல சேர்த்தி... வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் சங்கீதம் கிடையாது. நீ சங்கீதத்த வாழ்க்கையின் ஆதாரமா கொண்டு, அநாவசியத்துல இயங்கக் கூடிய மனிதனா நிக்கிற... இந்தச் சமூகம் உன்னை ஆதரிக்கிறதுன்னா, நீ அவர்களுக்கு நன்றியுடையவனா இருக்கணும்’ என்பார் செம்மங்குடி. நான் கண்டறிந்த உண்மையும் அதுவே. என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தச் சமூகத்துக்காக நான் எதுவும் செய்யவில்லை. சமூகம்தான் எனக்கு வேண்டியதைச் செய்கிறது. வாழ்க்கையின் அநாவசியங்களில் ஒன்றில் நான் இருப்பதற்கும், இயங்குவதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் இந்தச் சமூகம் என்னை அனுமதிக்கிறது. இதற்கே இந்தச் சமூகத்தின் மீது நன்றியுடையவனாக இருக்க வேண்டும்!”