"கீரவாணி ஆஸ்கர் வென்றிருப்பது பெருமையாக உள்ளது. வாய்ப்பு மட்டும்தான் நான் கொடுத்தேன். கீரவாணி தனது திறமையால்தான் முன்னேறினார். நமது திறமையை யாரோ ஒருவர் கண்டுபிடித்து மியூசிக் பண்ணச் சொன்னது மனதில் நிற்காது. `என்னுடைய திறமைக்கு அது கிடைச்சது, இது கிடைச்சது, இப்போ ஆஸ்கர் கிடைச்சிருக்கு'ன்னு தோணும். அதனால், வாய்ப்பு கொடுத்ததையெல்லாம் நாம் பெரிதாக பீற்றிக்கொள்ளக்கூடாது!"மவுலி
முதிர்ச்சியுடன் பேசுகிறார் இயக்குநர், நடிகர் மவுலி. ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு முதன் முதலில் இசையமைப்பாளராகும் வாய்ப்பைக் கொடுத்தவர்.
'நாட்டு நாட்டு' பாடலுக்காக ஆஸ்கர் வென்று உலகளவில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய இசையமைப்பாளர் கீரவாணியை முதன்முதலில் இசையமைப்பாளராக தனது 'மனசு மமதா' படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநரும் நடிகருமான மவுலிதான். கீரவாணி ஆஸ்கர் வென்றுள்ளது குறித்து இயக்குநர் மவுலியைத் தொடர்புகொண்டு பேசினேன்.

"இசையமைப்பாளராக அறிமுகமானபோதே அவரது திறமைக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். தற்போது, அது நிறைவேறியதில் எனக்கு மகிழ்ச்சி!" - அவரே ஆஸ்கரை வென்ற உற்சாகத்துடனும் பெருமிதத்துடனும் தொடர்ந்து பேசினார்.
"தெலுங்கில் நிறையப் படங்களை இயக்கியுள்ளேன். என் படத்திற்கு எந்த இசையமைப்பாளர் இசையமைத்தாலும் கீரவாணி உதவிக்கு வருவார். இசையமைப்பாளராக ரமேஷ் விநாயகத்தை அறிமுகப்படுத்தியபோது கீரவாணி அவரிடம் பணிபுரிந்துகொண்டிருந்தார். அதேபோல, சக்ரவர்த்தி சார் மிகப்பெரிய இசையமைப்பாளர். படத்திற்குத் தேவையான ட்யூன்களை அவரிடம் கீரவாணி மூலமாகத்தான் வாங்கினேன். இப்படியே சென்றுகொண்டிருக்கும்போது, ஒருகட்டத்தில் 'கீரவாணி நீங்களே மியூசிக் பண்ணிடுங்க'ன்னு சொல்லி 'மனசு மமதா' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினேன். பாடல்களுக்கு பெரிய ஸ்கோப் இல்லாத படம்தான் அது. ஆனால், அதையும் சிறப்பாகச் செய்துகொடுத்தார் கீரவாணி.

அந்தப் படத்தின் வெற்றிக்குப்பிறகு, அடுத்ததாக 'அஸ்வினி' படத்தை இயக்கினேன். இந்தியாவில் அப்போது யாரும் ஸ்போர்ட்ஸ் படம் இயக்கியிருக்கவில்லை. நான் இயக்கிய 'அஸ்வினி'தான் முதல் ஸ்போர்ட்ஸ் படம். இந்தப் படத்திற்கும் கீரவாணிதான் இசையமைத்தார். அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட். படத்தைத் தமிழிலும் டப் செய்து வெளியிட்டோம். 75 நாள்கள் ஓடி சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்திற்குப்பிறகு கீரவாணிக்குத் தொடர்ந்து வளர்ச்சி மட்டும்தான். எல்லோரும் அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். ரொம்ப பிஸியாகிவிட்டார். அதில், எனக்குப் பெரும் சந்தோஷம்.
பொதுவாக இயக்குநர்கள் ஹீரோ, ஹீரோயின்களைத்தான் அறிமுகப்படுத்துவார்கள். ஆனால், நான் டெக்னிஷீயன்களைத்தான் அதிகமாக அறிமுகப்படுத்தியுள்ளேன். ஏனென்றால், டெக்னீஷியன்கள் கடைசிவரை உதவியாளர்களாகவே இருந்துவிடுவார்கள். ஒருகட்டத்தில் அலுத்துப்போய் சான்ஸ் கேட்கக்கூடாது என்று விட்டுவிடுவார்கள். அதனால்தான், நல்ல திறமையான டெக்னிஷீயன்களை அறிமுகப்படுத்திக்கொண்டே வந்தேன். பி.சி ஶ்ரீராம், வேலு பிரபாகரன் எனப் பலரை நான்தான் அறிமுகப்படுத்தினேன். கன்னடத்தில் பிரசாத் பாபுவையும் அறிமுகப்படுத்தினேன். அப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர்தான் கீரவாணி. ரொம்பத் திறமையானவர்.
நிறைய பேர் அதிர்ஷ்டத்தால் வருவார்கள். கீரவாணி அப்படியல்ல. அவரது குடும்பமே இசைக்குடும்பம். இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவர். அறிமுகப்படுத்தும்போதே, பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பது தெரியும். எனது எல்லா படங்களையும் கே.பி சாருக்குப் போட்டுக்காட்டுவேன். அப்படிப் பார்த்துவிட்டுதான் 'யார்டா மியூசிக் போட்டிருக்கா' என்று கேட்டுவிட்டு 'அழகன்' படத்தில் வாய்ப்பு கொடுத்தார். கீரவாணிக்கு ஆஸ்கர் தாமதம்தான். எப்போதே கிடைத்திருக்கவேண்டும்" என்பவரிடம், "கீரவாணிக்கு வாழ்த்து தெரிவித்தீர்களா அல்லது உங்களிடம் அவர் பேசினாரா?" என்று கேட்டோம்.

"நாங்கள் பேசி பதினைந்து வருடங்கள் இருக்கும். எப்போதாவது பார்த்தால் விஷ் பண்ணிவிட்டுச் செல்வார். அவரிடம் இனிமேல்தான் பேசவேண்டும். இப்போது பிஸியாக இருப்பார். இந்தப் பரபரப்புகள் அடங்கியபிறகு அவரிடம் பேசலாம் என்றிருக்கிறேன். நமது திறமையை யாரோ ஒருவர் கண்டுபிடித்து மியூசிக் பண்ணச் சொன்னது மனதில் நிற்காது. என்னுடைய திறமைக்கு அது கிடைச்சது, இது கிடைச்சது, இப்போ ஆஸ்கர் கிடைச்சிருக்குன்னு தோணும். அதனால், வாய்ப்பு கொடுத்ததையெல்லாம் நாம் பெரிதாகப் பீற்றிக்கொள்ளக்கூடாது. கீரவாணி தனது திறமையில் முன்னேறினார். வாய்ப்பு மட்டும்தான் நான் கொடுத்தேன்" என்கிறார் பெருந்தன்மையுடன்.