Published:Updated:

`நானன்றி யார் வருவார்' ஏ.பி.கோமளா தற்போது எப்படியிருக்கிறார்?

1940-களின் இறுதியில் ஆரம்பித்து 1970-களின் ஆரம்பம் வரை கோமளாவின் பெண்மை பொங்கும் குரல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னந்திய ரசிகர்களின் காதுகளைச் சொக்க வைத்திருக்கிறது.

A.P. Komala
A.P. Komala

பழைய 'உத்தமப்புத்திரன்' படத்தில் நடிகர் சிவாஜி நடித்த 'ஹா... யாரடி நீ மோகினி' பாடல் நினைவிருக்கிறதா? 'அந்தப் பாட்டை மறக்க முடியுமா' என்பவர்களுக்கு, அந்தப் பாட்டில் 'விந்தையான வேதனை; வீராவேசம் ஆகுமா...' எனத் தன் குரலிலேயே மான்குட்டி துள்ளலை நம் காதுகளுக்குள் கடத்திய அந்தப் பின்னணிப் பாடகி ஏ.பி.கோமளாவை நினைவிருக்கிறதா? 1940-களின் இறுதியில் ஆரம்பித்து 1970-களின் ஆரம்பம் வரை கோமளாவின் பெண்மை பொங்கும் அந்தக் குரல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னந்திய ரசிகர்களின் காதுகளைச் சொக்க வைத்திருக்கிறது.

A.P. Komala in her young age
A.P. Komala in her young age

'மாலையிட்ட மங்கை' படத்தில் 'நானன்றி யார் வருவார்' என்றொரு டூயட். டி.ஆர்.மகாலிங்கமும் ஏ.பி.கோமளமும் பாடியிருப்பார்கள். வழக்கமாக மேல் ஸ்தாயியில் ஜஸ்ட் லைக்  சஞ்சாரம் செய்கிற மகாலிங்கம் அந்தப் பாடலில் 'நானன்றி யார் வருவார்' எனக் கீழ் ஸ்தாயியில் கொஞ்ச, கோமளாவோ 'ஏனில்லை' என மேல் ஸ்தாயியில், தன் குரலில் காதல் குழைத்து மிரட்டியிருப்பார். 'ராஜராஜனில்', 'நிலவோடு வான்முகில் விளையாடுதே', 'நான் பெற்ற செல்வ'த்தில் 'மாதா பிதா குரு தெய்வம்', 'தூக்குத் தூக்கி'யில் 'சுந்தரி செளந்தரி நிரந்தரியே' எனக் கோமளாவின் குரலால் புகழ் கொண்ட பாடல்கள் தமிழ்த் திரையுலகில் எக்கச்சக்கம். 

கோமளா அம்மாவுக்கு தற்போது 85 வயதாகிறது. சென்ற புதன்கிழமை அன்றுதான் (28.8.2019) கோமளா அம்மாவின் பிறந்த நாளை அவருடைய தங்கை கங்காவும் சில சிஷ்யப் பிள்ளைகளும் கொண்டாடியிருக்கிறார்கள். ஆம், தன்னுடைய பிறந்த நாளை தெரிந்துகொள்ளும் நிலையில் தற்போது கோமளா அம்மா இல்லை. மடிப்பாக்கத்தில் இருக்கிற சிறிய வாடகை வீடொன்றில் தன் தங்கையுடன் வசித்து வருகிறார். முதுமை அவரைப் படுக்கையில் கிடத்தி வைத்திருக்கிறது. மூச்சுவிடுவதைத் தவிர அவருடைய உடலில் மிகப்பெரிய இயக்கங்கள் இல்லை.

A.P. Komala with her student
A.P. Komala with her student

அவரைப் பராமரித்து வருகிற அவருடைய தங்கை கங்காவிடம் பேசினோம். ''ஒரு வருஷமா அக்கா படுக்கையிலதான் இருக்காங்க. பேச்சு நின்னுப் போச்சு. காதும் கேட்கறதில்ல. கத்திப் பேசினா ஒண்ணு ரெண்டு வார்த்தைங்க காதுல விழும். சாப்பாடு எடுத்துக்கிறதும் நின்னுப்போச்சு. சாதத்துல சூப், ரசம்னு விட்டுத் தண்ணியா அரைச்சு கொடுத்துட்டிருக்கேன். இதையும் அக்காவை உட்கார்த்தி வைச்சு ஊட்டித்தான் விடணும்.

எனக்கும் வயசு 76 ஆயிடுச்சு. ஏதோ உடம்புல தெம்பு இருக்கிறதால அக்காவைப் பார்த்துக்கிட்டிருக்கேன். அக்கா ஹாஸ்பிடல்ல இருந்தப்போ எங்களோட பெரியக்கா, சின்னக்கா பசங்கயெல்லாம் வந்து பார்த்துக்கிட்டாங்க'' என்றவர், ''அக்காவுக்கு சங்கீதம்தான் எல்லாமே. அதனால, அவங்க கல்யாணமே பண்ணிக்கலை. நானும் கல்யாணம் பண்ணிக்காம அவங்களோடவே இருந்துட்டேன். அக்கா, ரேடியோவில் வேலைபார்த்தவங்க. அதனால, அரசாங்க பென்ஷன் வருது. இந்தப் பேட்டியைப் படிச்சுட்டு யாராவது நாங்க உதவிக் கேட்கிறோம்னு நினைச்சுக்கப் போறாங்கம்மா. அக்காவோட தற்போதைய நிலைமையை நீங்க கேட்டதால சொன்னேன்'' என்றார்.

A P Komala with her Sister Ganga and disciple Karpagam
A P Komala with her Sister Ganga and disciple Karpagam

ஏ.பி.கோமளா அம்மாவிடம் தன்னுடைய நான்காவது வயது முதல் சங்கீதம் கற்றுக்கொண்ட அவருடைய சிஷ்யைகளில் ஒருவரான, இசையில் டாக்டர் பட்டம் பெற்ற கற்பகம் அவர்களிடமும் பேசினோம். ''என்னோட குருவை நான் ஆன்ட்டினுதான் கூப்பிடுவேன். அந்தக் காலத்துல எல்லா இசையமைப்பாளர்கிட்டேயும் பாடியிருக்காங்க. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கையால கலைமாமணி விருது வாங்கியிருக்காங்க. அவங்களோட சிஷ்யர்கள் நாங்க இன்னிக்கு உலகம்பூரா ஓஹோன்னு இருக்கோம். எல்லாமே ஆன்ட்டி போட்ட சங்கீதப் பிச்சைதான்.

சங்கீதத்தைத் தாண்டி அவங்களுக்கு சமையல்கூட தெரியாது. போன வாரம் எஸ்.ஜானகி அம்மாகூட கோமளா ஆன்ட்டியை வந்து பார்த்துட்டுப்போனாங்க. அவங்க பிறந்த நாளப்போ போய்ப்பார்த்தேன். அவங்களுக்கு என்னை அடையாளம் தெரிஞ்சுதான்னு தெரியலை. ஆனா, நான் ஒரு கீர்த்தனை பாடறப்போ 'பேஷ் பேஷ்' என என்னைப் பாராட்ட முடியாம கண்களை அப்படியே விரிச்சாங்க. கடந்த 35 வருஷமா என் பாட்டை ஆன்ட்டி பாராட்டுறப்போ எல்லாம் அப்படித்தான் கண்களை விரிச்சுப் பாராட்டுவாங்க. ஸோ, சங்கீதம் மட்டும்தான் அவங்களோட நினைவுகள்ல இன்னமும் இருந்துக்கிட்டிருக்கு.

A.P. Komala  - present
A.P. Komala - present

ஆன்ட்டி அகில இந்திய வானொலியில கிளாஸ் ஆர்ட்டிஸ்ட். சினிமாவுலேயும் நிறைய ஹிட் பாடல் பாடியிருக்காங்க. உத்தமப்புத்திரன் பாட்டெல்லாம் இன்னிக்கு யங்டர்ஸ் வரைக்கும் தெரியும். ஆனா, அதுல அவங்களும் பாடியிருக்காங்கன்னு எத்தனை பேருக்குத் தெரியும். அவங்களுக்கு வயசாயிடுச்சு. ஹெல்த்தியாவும் இல்லை. சொல்றதுக்கு கஷ்டமாயிருந்தாலும் ஆன்ட்டி நம்மையெல்லாம் விட்டுப் போறதுக்கு முன்னாடி இப்படியொருவர் சினி ஃபீல்டுல புகழோட இருந்தாங்கன்னு இந்தத் தலைமுறையில எல்லாருக்கும் தெரியணும்'' என்பவரின் குரலில் குருபக்தியும் ஏக்கமும் கலந்து ஒலிக்கிறது.

ஏ.பி.கோமளாவின் குரல் பல தலைமுறைகளைத் தாண்டியும் ஒலிக்கும் என்பதுதான் அவருக்கு நம்முடைய ஆறுதல்!