கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

“இந்தியாவில் தனியிசைக்கு இடமில்லை!”

அறிவு
பிரீமியம் ஸ்டோரி
News
அறிவு

இந்தியா முழுமைக்குமான இசை அடையாளமா ஏ.ஆர்.ரஹ்மான் சார் இருக்கார். அவரைச் சந்திச்சுப் பேசுறதுக்கான வாய்ப்பு கிடைச்சது.

தனியிசைப் பாடல்கள், சினிமாப் பாடல்கள் எனக் கலந்துகட்டி அதிரடியாய் விளையாடி வருகிறார், அறிவு. பாடலாசிரியர், பாடகர், அரசியல் கலைஞர் எனப் பன்முகம் கொண்டவர். சமீபத்தில் அவரது ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் இணையத்தைக் கலக்கி வருகிறது. வாழ்த்துகள் சொல்லிப் பேச ஆரம்பித்தேன்.

``தனியிசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஆரம்பித்த ‘மாஜா’ங்கிற தளத்திற்குள்ள நீங்க எப்படி இணைஞ்சீங்க?’’

“லாக்டெளன் முடிஞ்சு சென்னைக்கு வந்தபோது, படங்கள்ல வொர்க் பண்ண சில வாய்ப்புகள் கிடைச்சது. அப்போது, மாஜா நிறுவனத்துல இருந்து அழைப்பு வந்தது. ‘ரஹ்மான் சார், தனியிசைக்காக ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்போறார். குறிப்பா, தமிழ்த் தனியிசைக் கலைஞர்கள் அதில இடம்பெறுவாங்க’ன்னு சொன்னாங்க. நான் இதுவரை தனிப்பட்ட முறையிலும் ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’க்காகவும் பாடல்கள் எழுதி பாடிக்கிட்டிருக்கேன். மாஜாவோடு சேர்ந்து வொர்க் பண்றது அடுத்த கட்டமா இருந்தது. உலகம் முழுக்க இருக்கிற தனியிசைக் கலைஞர்களோட வொர்க் பண்ற வாய்ப்பா இதைப் பார்த்தேன். சந்தோஷ் நாராயணன் சாரோட தொடர்ந்து, நிறைய திரைப்படங்கள்ல வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன். அவருடைய மகளும் பாடகியுமான தீயும் இருக்காங்கன்னு சொன்னாங்க. அப்படித்தான் ‘என்ஜாய் எஞ்சாமி’ ஆரம்பமானது.”

“இந்தியாவில் தனியிசைக்கு இடமில்லை!”

`` ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் இந்த அளவுக்கு வைரலாகும்னு நினைச்சீங்களா?’’

“வழக்கமா நம்ம பண்றதுல இருந்து இது ஒரு பெரிய ஸ்டெப்தான் அப்படிங்கிறதனால நிச்சயம் நிறைய பேருக்கு இந்தப் பாடல் போய்ச் சேரும்னு நம்பிக்கை இருந்தது. இதுல வேலை செஞ்ச எல்லோரும் இதை ரொம்ப நம்பினோம். இந்தப் பாடலை எழுதுறதுக்கு நிறைய டிஸ்கஷன்கள் நடந்தது. அதுக்காக ‘காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன் சாரைச் சந்திச்சு நிறைய பேசினேன். ஊர்ல உள்ள ஒப்பாரிப் பாடல்களை எல்லாம் இணைச்சு, நம்ம மண்ணுக்கான பாடலா இருக்கணும்னு நினைச்சு வேலை பார்த்தோம். இந்த அளவுக்குப் போய்ச் சேர்ந்திருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இன்னும் நிறைய தனியிசைக் கலைஞர்கள் வெளிச்சத்துக்கு வர்றதுக்கான வழியா இதைப் பார்க்கிறேன்.”

``பாடல் பார்த்துட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் என்ன சொன்னார்?’’

“இந்தியா முழுமைக்குமான இசை அடையாளமா ஏ.ஆர்.ரஹ்மான் சார் இருக்கார். அவரைச் சந்திச்சுப் பேசுறதுக்கான வாய்ப்பு கிடைச்சது. தனியிசை பத்தி நிறைய விஷயங்கள் பகிர்ந்துக் கிட்டார். ‘இந்த பேண்டமிக் காலத்துல இந்தப் பாடல் எல்லோருக்கும் பாசிட்டிவிட்டியைக் கொடுத்திருக்கு’ன்னு சொன்னார்.”

``பாடலை அந்த இசைக்குள் பொருத்துவது ஆரம்பத்தில் எவ்வளவு சவாலா இருந்தது, இப்போ எவ்வளவு சுலபமா இருக்கு?’’

“தமிழ் வாசிக்கிறதை சின்ன வயசிலிருந்து ஒரு பழக்கமா வெச்சிருந்தேன். பாடப்புத்தகங்கள்ல தமிழ்ப்புத்தகத்தை மட்டும் அன்னிக்கே படிச்சு முடிச்சுடுவேன். தமிழ் ஐயாவோ தமிழ் அம்மாவோ பாடம் எடுக்கும்போது, ‘அடுத்து இப்படிச் சொல்லுவாங்க பாரேன்’னு பக்கத்துல இருக்கிற பசங்ககிட்ட சொல்வேன். இந்த மாதிரி ஜாலியான, தமிழை நேசிக்கிற பையனா வளர்ந்தேன். அது எனக்குக் கைகொடுத்ததுன்னு சொல்லலாம். மத்தபடி, இங்கிலீஷ் பாடல்கள் எல்லாம் கேட்டதில்லை. நாட்டுப்புறப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள்னு எளிய மக்களுடைய வாழ்க்கையைப் பேசுற கலைஞர்களோடவே வளர்ந்தேன். கல்லூரி வரைக்கும் படிக்க வாய்ப்பு கிடைச்சதனால, இந்த மாடர்ன் சமூகத்துக்கு ஏத்த மாதிரியான இசையை எப்படிக் கொடுக்கலாம், சமகாலப் பசங்களுக்கு எப்படியான பாடல் பிடிக்கும்னு நினைச்சுப் பண்ண ஆரம்பிச்சேன். சவால், சுலபம்னு நான் பார்க்கலை. அதே வேலையைத்தான் பார்க்கிறேன். எழுதி எழுதி எனக்குள்ளயே வெச்சிக்குவேன். இப்போ வெளிய தெரியுது அவ்ளோதான் வித்தியாசம்!”

“இந்தியாவில் தனியிசைக்கு இடமில்லை!”

``உங்களுக்கு எந்த ஜானர்ல பாடல்கள் பண்றது எளிமையா இருக்கு?’’

“நம்முடைய பாடல் கேட்குற வங்களைத் தொந்தரவு செய்யணும், கேள்வி கேட்கணும். ராப் பண்றது எனக்கு எளிமையா இருக்கு. அதுக்குன்னு அதுக்குள்ளேயே இருந்திடக்கூடாது. அதை மீறி வரணும்னுதான் நினைக்கிறேன்.”

``தனியிசைக் கலைஞர்களின் இலக்கு சினிமாவாகத்தான் இருக்கணுமா?’’

“ஆங்கிலப் படங்கள்ல பாடல்கள்னு தனியா கிடையாது. ஆனா, மைக்கேல் ஜாக்சன், எமினெம், ஜஸ்டின் பைபர்னு உலகப் புகழ்பெற்ற பாடகர்கள் இருக்காங்க. பெரும்பாலும் அவங்க திரைப்படங்கள்ல தோன்றுவது கிடையாது. தனியிசைக்கு அங்கீகாரமும் மேடையும் அங்கே நிறைய இருக்கு. அந்தச் சூழல் தனியிசையைத் தனியாப் பாதுகாக்குது. இந்தியச் சூழல் அப்படி இல்ல. தனியிசைக் கலைக்கான இடமே இங்க இல்லை. இப்போதான் அது உருவாகுது. நம்ம ஊர் சினிமாவைக் கொண்டாடுகிற மண். மக்கள்கிட்ட நம்ம கலை போகணுங்கிறதுதான் நோக்கம். அதனால, அதுலயும் நம் பங்களிப்பு இருக்கலாம்.”

`` ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலின் கடைசியில உங்களுடைய பாட்டியைக் கூட்டிட்டு வந்திருக்கீங்களே!’’

“இந்தப் பாடல்ல ‘வள்ளியம்மா பேராண்டி’ன்னு ஒரு வரி வரும். அதைக் காட்சிப்படுத்தும்போது, நம்ம ஊர் மக்களைக் காட்டலாம்னு தோணுச்சு. சந்தோஷ் நாராயணன் சாரும் அந்தப் பாடலின் இயக்குநர் அமித்தும் ஓகே சொன்னாங்க. அப்புறம்தான், எல்லோரையும் கூட்டிட்டு வந்தோம். வள்ளியம்மாள் பாட்டி - என் அம்மாவின் அம்மா. நம் தலைமுறைக்கான வேர்களே நம் முன்னோர்கள்தான். எத்தனை பேர் தாத்தா பாட்டியோட உரையாடுறாங்கன்னு தெரியலை. எங்க தாத்தா இருந்த நிலைக்கும் இப்போ நான் இருக்கிற நிலைக்குமான வித்தியாசமே கல்விதான். அதுதான் இந்த இடைவெளியை நிரப்பியிருக்கு. இதற்கிடையில பெரிய போராட்டமே இருந்திருக்கு. அந்தப் போராட்டத்துல எங்கேயாவது களைப்படைந்தி ருந்தாலோ சலிப்படைந் திருந்தாலோ நான் இங்க இல்லை. அதனாலதான், முன்னோர்களுக்கு சமர்ப்பணமா பண்ணினோம்.”

“இந்தியாவில் தனியிசைக்கு இடமில்லை!”

``தொடர்ந்து ஒப்பாரிப் பாடல்கள் பத்திப் பேசிக்கிட்டி ருக்கீங்களே?’’

“ஒப்பாரிக் கலைக்கு அவ்ளோ பவர் இருக்கு. நீங்க அழவே கூடாதுன்னு நினைச் சாலும் ஒப்பாரி அழ வைக்கும். அந்த அளவுக்கு உணர்வுகளுடன் கலக்குற ஒரு கலை வடிவம். அப்படிப்பட்ட கலைக்கு இந்தச் சமூகத்துல எந்தவித இடமும் கிடையாது. நிராகரிக்கப்பட்ட கலை வடிவமா மட்டுமே இருந்துக் கிட்டிருக்கு. இப்படி ஒண்ணு இருந்ததுன்னு டாக்குமென்ட் பண்ற ஒரு கலையாகவே இருக்கு. ஒவ்வொரு கிராமத்திலும் ஒப்பாரி பாடுறவங்க இருக்காங்க. அவங்கெல்லாம் தங்களை பாடலாசிரியர், பாடகர்னு அடையாளப் படுத்திக்கிறதில்லை. ஒப்பாரிங்கிறது அழ வைக்கறது மட்டுமல்ல; ஆறுதலும் தரும். தவிர, அந்த மண்ணைப் பற்றிய விஷயங்களையும் பாதுகாத்துக்கிட்டே இருக்கும். நிறைய ஒப்பாரிக் கலைஞர்களை சந்திச்சு ஒப்பாரி நிகழ்ச்சிகளை நடத்திக்கிட்டு வர்றோம். எனக்கு ஒப்பாரி பாடணும்னு ஆசை இருந்தது. அது, ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல்ல நடந்தது.”

``உங்களுக்குன்னு தனியா ரசிகர்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க. இசைத்துறையில எந்த இடத்துக்குப் போகணும்னு நினைக்கிறீங்க?’’

“நான் பார்த்து வியந்த கலைஞர்களைப் பற்றியும் நான் பார்த்த வேர்களைப் பற்றியும் பேச மேடை கிடைச்சிருக்கு. எனக்குக் கிடைச்ச அளவுக்கான அங்கீகாரம் அவங்களுக்குக் கிடைக்கலை. ஆனா, அவங்க எல்லாம் மூத்தவர்கள். அவங்க பாடல்கள்ல இருக்கக்கூடிய மண்வாசத்தையும் நேர்மையையும் இந்தத் தலைமுறைக்குக் கடத்தினாலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். தவிர, இந்தத் தலைமுறைக்கான ராப் பாடல்களைத் தர்றதும் என் பயணமா இருக்கணும்னு நினைக்கிறேன்.”