Published:Updated:

“இந்த இசை தெய்வ அர்ப்பணம்!”

 சஷாங்க் சுப்ரமணியம்
பிரீமியம் ஸ்டோரி
News
சஷாங்க் சுப்ரமணியம்

எனக்கு இசையும் வாழ்க்கையும் ஒண்ணு போலவே இருந்திருக்கு. எதைச் செய்தாலும் அதைத் தெய்வ அர்ப்பணமா செய்தால் நமக்கு எந்தக் குறையும் வராது.

புல்லாங்குழல் கலைஞர் சஷாங்க் சுப்ரமணியத்திற்கு பிரான்ஸ் தேசத்தின் ‘செவாலியே’ விருது கிடைத்திருக்கிறது. கலைநயம் பெருகி வழியும் அவர் இல்லத்திற்குப் போயிருந்தோம். எல்லாவற்றையும் இட்டு நிரப்புகிற அவரின் புல்லாங்குழல் இசை புதுவெள்ளமாய் இழுத்துப் போகிறது. காதோடு ரகசியத்தைச் சொல்வதுபோல ஒரு முறையீடு. உலகம் போற்றும் இசைஞரிடம் உரையாடலைத் தொடங்கினேன்.

‘‘இன்னொரு நாட்டிலிருந்து கிடைக்கிற விருது என்கிறபோது கூடுதல் சந்தோஷம். அதற்கும் மேலே நம்மை கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்கிற நிறைவு. ‘இன்னும் தொடர்ந்து நல்லா செயல்படணும்’னு சொல்லுற மாதிரி தோணுது. இந்த மாதிரியான என்கரேஜ் பன்றது எல்லோருக்கும் தேவைப்படும்...” மேலும் உரையாடலுக்குத் தயாராகிறார் சஷாங்க்.

“இந்த இசை தெய்வ அர்ப்பணம்!”

``இம்மாதிரி ஒரு கலையைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?’’

‘‘எங்க அப்பா பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்தார். அவருக்குப் புல்லாங்குழல்னா உயிர். வேலைக்குப் போன நேரம் போக சதா வாசிச்சுட்டே இருப்பார். சின்ன கச்சேரிகளுக்கு வாசிக்கப் போவார். நானும் அதில் கவரப்பட்டேன். ‘உனக்கு இது வேண்டாம்... கஷ்டம்பா! சொல்லித்தர மாட்டேன்; இஷ்டம்னா வாய்ப்பாட்டு கத்துக்கோ'ன்னு சொல்லிட்டார். வாய்ப்பாட்டும் கத்துக்கிட்டேன். எனக்குப் புல்லாங்குழல்தான் சரின்னு பட்டது. ஆறு வயசிலேயே வாசிக்க ஆரம்பிச்சுட்டேன். சின்ன வயசுல ஒரு நாளைக்கு 15 மணி நேரம்கூட அசுரத்தனமா பிராக்டீஸ் பண்ணியிருக்கேன். 12 வயசுல மியூசிக் அகாடமியில் வாசிக்க வாய்ப்பு கிடைச்சது. அதெல்லாம் பெரிய கொடுப்பினை. இந்தச் சமயம் அப்பாவோடு சேர்ந்து மாலியைச் சந்திக்கிறேன். அவர் அப்பாவிற்குச் சில அட்வைஸ் செய்தார். `நீங்க வீட்ல புல்லாங்குழல் வாசிக்காதீங்க, மத்த கச்சேரிக்குப் போக வேண்டாம். அவனால் சில விஷயங்கள் புதுசாகப் பண்ண முடியும்’னு சொன்னார். அப்பா புல்லாங்குழலை என்கிட்டே கொடுத்துட்டு வாசிக்கிறதை நிறுத்தினார். என்கூடவே இருந்து உதவினார். என்கிட்ட தனித்துவம் இருக்கான்னு மத்தவங்கதான் சொல்லணும். முதல் நாள் கச்சேரிக்கு பயத்தோடு போன மாதிரிதான் இப்பவும் போறேன். அதில் மாற்றமே இல்லை.”

``உங்களைப் புல்லாங்குழல் மேதை மாலியோட ‘மறுபிறப்பு'ன்னு சொல்றாங்களே...’’

‘‘அதை நான் சீரியஸா எடுத்துக்கறதில்லை. மாலி வாசிக்கும்போது நாமே நம்மை மறந்துடுவோம். மகா ஜீனியஸ். புல்லாங்குழலைப் பாட வச்சார் மாலி. வாசிக்கிறதைக் கேட்டா அப்படியே விழுந்து வணங்கும்படியாக இருக்கும். அவருக்கு சுயநலமே இல்லை. அவர் வாசித்ததை திரும்ப யாராலும் பண்ண முடியாது. அவர் மாதிரி வாசிக்க இனிமேல்தான் யாராவது பிறந்து வரணும். அவர் அந்தக் காலத்தில் வாசித்ததை அப்படியே எல்லோரும் புரிந்துகொண்டு இருப்பாங்களான்னு சந்தேகம் எனக்கு இருக்கு. ஒரு ராகத்தைத் தனியாக எடுத்து அப்படியே சஞ்சாரம் போவார். காலத்திற்கு முன்னாடி பயணிச்சிட்டே இருப்பார். தேவ வாத்தியத்தைக் கையில் வச்சிட்டு அப்படியே சொக்கி விழ வைப்பார். அவரைப் போய் என்னோடு சம்பந்தப்படுத்திப் பேசுறாங்க. நானே காதுபடக் கேட்டிருக்கேன். அதற்குத் தயார்படுத்திக்கத்தான் இன்னும் வாசிக்கிறேன்னு வச்சுக்கங்க. அந்த மகான் மாலி பக்கத்தில் எங்காவது வர முடியுமான்னு முயற்சி பன்றேன்.”

“இந்த இசை தெய்வ அர்ப்பணம்!”

``சங்கீதமும் இசையும் மனுஷனை எப்படி மாற்ற முடியும்னு நினைக்கிறீங்க?’’

‘‘வெளிநாடுகளில் பள்ளிக் குழந்தைகள்கிட்டே வாசிச்சிருக்கேன். ஆட்டம் போடுகிற பிள்ளைகள் அடங்கி அமர்வாங்க. எப்பவும் ஒரு நல்ல இசை உங்களைக் கட்டிப் போடும். பதற்றம் நீக்கி உங்களை அமைதிப்படுத்தும். பாட்டோ, இசையோ மனத்தையும் புத்தியையும் இணைக்கும் மந்திரமாக இருக்கணும். வாசிச்சதைத் திரும்ப வாசிக்காமல் புதுசா நாம் வாசிக்கிறதைப் புரிஞ்சுக்கிட்டா நம்மைக் கொண்டாடிடுவாங்க. அதை ஒவ்வொரு நாளும் உணர்ந்துகிட்டே இருக்கேன். மக்கள் அன்பைக் கொட்டுவது எவ்வளவு பெரிய விஷயம். கச்சேரியில் வந்து உட்காரும்போது எதிரே இருக்கும் ஆயிரக்கணக்கான முகங்களைப் பார்த்து மனம் நெகிழ்ந்திடும். அப்புறம் வாசிக்கிறதில் என்ன கஷ்டம்!’’

``இந்த வாழ்க்கை உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா, சந்தோஷமாக உணர்கிறீர்களா?’’

‘‘எனக்கு இசையும் வாழ்க்கையும் ஒண்ணு போலவே இருந்திருக்கு. எதைச் செய்தாலும் அதைத் தெய்வ அர்ப்பணமா செய்தால் நமக்கு எந்தக் குறையும் வராது. நாம் எது செய்தாலும் அவன் தருகிற பிச்சை. அதைத் திருப்பி அவனுக்கே அர்ப்பணம் செய்கிறோம்னு நினைச்சா நிறைவு வந்திடும். யாரையும் பார்த்துப் பொறாமைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. இன்னொருத்தர் நல்லபடியாக வாசித்தால் எனக்கு வாசிக்கத் தெரியும் என்பதே எனக்கு மறந்துபோகிறது. பாடுவதை, வாசிக்கிறதைக் கேட்கும்போது, அதை அனுபவிக்கிறபோது, அதில் இருக்கிற தெய்வத்தன்மைதான் எனக்குத் தெரியுது. நான் கத்துக் கிட்டதையெல்லாம் அடுத்த தலைமுறைக்குக் கொடுத்திட்டே இருக்கேன். முன்னாடி தலைமுறை எனக்கும் அப்படித்தான் கொடுத் தாங்க. வாழ்ந்து கொண்டிருக்கும் சஷாங்க்கும், வாசிக்கும்போது உள்ள சஷாங்க்கும் ஒண்ணுதான். வாசிக்கிறது வாழ்வின் ஒரு பகுதியாகவே போய்விட்டது. இந்தக் காலகட்டத்தை நான் அனுபவிச்சுக்கிட்டு இருக்கிறது உண்மை.’’