Published:Updated:

``அன்றைக்கு நடந்த அவமானத்தை மறக்கவே மாட்டேன்!" - புல்லாங்குழல் கலைஞர் ராஜேஷ்

Rajesh Cherthala
Rajesh Cherthala

``இதுவரை பதிவிட்டதில், `இன்னிசை பாடிவரும்' பாடல்தான் அதிகம் பேரால் பார்க்கப்பட்டது. அந்தப் பாடலை இதுவரை 17 மில்லியன் பேர் பார்த்திருக்காங்க."

கேரள இசைப் பிரியர்கள் பலருக்கும் ராஜேஷ் ஷெர்தலா ரொம்பவே பரிச்சயம். புல்லாங்குழல் இசைக் கலைஞரான இவர், பல மொழி சினிமாவிலும் பணியாற்றியிருக்கிறார். தவிர, பல மொழிப் பாடல்களையும் புல்லாங்குழலில் இசைக்கிறார். அவை யூடியூபில் லட்சக்கணக்கான வியூஸைக் கடந்து பலராலும் பார்க்கப்படுகிறது.

Rajesh Cherthala
Rajesh Cherthala

அதில் பெரிதும் ஹிட் அடிப்பது தமிழ்ப் பாடல்களே. அந்த வகையில், `துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் இடம்பெற்ற `இன்னிசை பாடிவரும்' பாடல் 17 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. கச்சேரி பணிகளில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ராஜேஷ் ஷெர்தலாவிடம் ஒரு மாலைப் பொழுதில் பேசினோம்.

``கேரளாவில், ஆலப்புலா அருகிலுள்ள ஷெர்தலா கிராமம் என் பூர்வீகம். அப்பா, படகு கட்டுமானத் தொழில் செய்துவந்தார். ஏழ்மையான குடும்பம். ஸ்கூல் படிக்கிறப்போ நிறைய கல்சுரல் நிகழ்ச்சிகளில் கலந்துப்பேன். அப்படித்தான் எனக்கு இசை ஆர்வம் ஏற்பட்டுச்சு. என் உறவினர் மூலமாக நானும் புல்லாங்குழல் வாசிக்க கத்துகிட்டேன். அவருடைய புல்லாங்குழலை வாங்கிட்டுப்போய் ஸ்கூல் நிகழ்ச்சிகளில் வாசிப்பேன். ஒருகட்டத்துல பயிற்சி வகுப்பிலும் சேர்ந்தேன். 

Rajesh Cherthala
Rajesh Cherthala

கேரள மக்கள் தமிழ்ப் பாடல்களை அதிக அளவில் கேட்டு ரசிப்பாங்க. என் சின்ன வயசுல எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா பாடல்களை அதிகம் கேட்டு ரசிப்பேன். அவங்க பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசிச்சுப் பழகினேன். இசையை என் கரியராகத் தேர்ந்தெடுத்தேன். காலேஜ் படிக்கும்போது, பல இசைக்குழுக்களில் புல்லாங்குழல் வாசிச்சேன். ஒருமுறை என் திறமையை சந்தேகப்பட்டு, பெரிய நிகழ்ச்சியில் வாய்ப்பு கொடுக்க மறுத்தாங்க. அதனால ரொம்பவே உடைஞ்சுபோனேன். அன்றைக்கு நடந்த அவமானத்தை மறக்கவே மாட்டேன்

வெறித்தனமாக, இடைவிடாமல் பலமணி நேரம் பயிற்சி எடுத்தேன். ஒருநாள் அல்ல, தொடர்ச்சியா பல நாள்களுக்கு. இசை நிகழ்ச்சிகள் மூலமா என் திறமை சினிமா துறையினர் உட்பட பலருக்கும் தெரிஞ்சது. அதனால, `ரெயின் ரெயின் கம் அகைன்' என்ற மலையாளப் படத்துல முதன் முதலில் வாய்ப்பு கிடைச்சுது" என்கிற ராஜேஷ், பல மொழிகளிலும் சேர்த்து 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பின்னணி இசை மற்றும் பாடல் இசையமைப்புப் பணிகளில் பணியாற்றியிருக்கிறார். 

Rajesh Cherthala
Rajesh Cherthala

``மலையாளத்தில், இசையமைப்பாளர் பிஜிபாலின் ஏராளமான படங்களுக்கு வேலை செய்திருக்கேன். தமிழில் இளம் இசையமைப்பாளர்கள் சிலரிடம் வேலை செய்திருக்கேன். ஆனா, அந்தப் படங்களின் பெயர் எனக்குத் தெரியலை.

இதற்கிடையே, ஏழு வருஷத்துக்கு முன்பு தனி இசைக்குழுவைத் தொடங்கி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கச்சேரி செய்துட்டுவர்றேன். அனில் அம்பானி உட்பட, பல வி.ஐ.பி-கள் இல்ல நிகழ்ச்சிகளில் கச்சேரி செய்திருக்கேன். பிரபல புல்லாங்குழல் இசைக்கலைஞர் பண்டித் ஹரிபிரசாத் சௌரசியாகிட்ட ஏழு வருஷமா இசை கத்துக்கிறேன். 

Rajesh Cherthala
Rajesh Cherthala

சில ஆண்டுகளுக்கு முன்பு, பின்னணிப் பாடகர் ஹரிஹரன் சார் சென்னையில இசை நிகழ்ச்சி நடத்தினார். அதில், `பம்பாய்' படத்துல வரும் `உயிரே உயிரே' பாடலின் தொடக்கத்தில் வரும் புல்லாங்குழல் இசையை சிறப்பாக வாசிச்சேன்.

ஹரிஹரன் சார், வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா சார் உட்பட ஒட்டுமொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்னு என்னைப் பாராட்டினாங்க" என்று சிலாகிப்பவர், இந்தியாவின் முன்னணி பின்னணிப் பாடகர்கள் பலரின் இசைக் கச்சேரியிலும் பணியாற்றியிருக்கிறார். 

Rajesh Cherthala
Rajesh Cherthala

தனது யூடியூப் சேனலில் தமிழ்ப் பாடல்களைப் பதிவிடுவது குறித்துப் பேசியவர், ``என் யூடியூப் சேனல்ல பிரபலமான பல மொழிப் பாடல்களையும் புல்லாங்குழல் இசை வடிவில் பதிவிடுறேன். அதில், எனக்குப் பிடிச்ச எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களின் தமிழ்ப் பாடல்களையும் பயன்படுத்தறேன். அந்த வரிசையில், எனக்கு ரொம்பவே பிடிச்ச `இன்னிசை பாடிவரும்' பாடலைப் பதிவிட்டேன். தமிழ்ப் பாடல் என்பதால, யதார்த்த ஃபீல் வரணும்னு பொள்ளாச்சியில ஷூட் பண்ணினோம்.

பொதுவா, ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் பண்ணிட்டு, அந்தப் பாடலுக்கு ஏற்ப ஊர் பகுதியில் என் இசைக்குழுவுடன் காட்சிப் பதிவுகளைப் படமாக்குவோம். இதுவரை பதிவிட்டதில், `இன்னிசை பாடிவரும்' பாடல்தான் அதிகம் பேரால் பார்க்கப்பட்டது. அந்தப் பாடலை இதுவரை 17 மில்லியன் பேர் பார்த்திருக்காங்க.

Rajesh Cherthala
Rajesh Cherthala

அந்தப் பாடலுக்கு யூடியூப் மூலமாக நல்ல வருமானம் கிடைச்சுது. அது எவ்வளவுனு சொல்ல மாட்டேன். வருமானம் என்பதெல்லாம் எனக்கு இரண்டாம் பட்சம்தான். நிறைய நல்ல படங்கள் மற்றும் பாடல்களில் வேலை செய்றதுதான் என் முதல் இலக்கு" என்கிறார் ராஜேஷ், மகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு