உலகெங்குமுள்ள இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருதுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆண்டிற்கான 65வது ‘கிராமி விருதுகள்’ லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் போன்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பெங்களூரைச் சேர்ந்த இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார். 'Best Immersive Audio Album' பிரிவில் 'டிவைன் டைட்ஸ்' (Divine Tides) என்ற ஆல்பத்திற்காக இந்த விருதை அவர் பெற்றுள்ளார். இதற்குமுன் 2015, 2022-ம் ஆண்டு அவர் இந்த கிராமி விருதை வென்றிருக்கிறார். தற்போது மூன்று கிராமி விருதை வாங்கிய ஒரே இந்தியர் என்ற பெருமையை ரிக்கி கேஜ் பெற்றுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், "தற்போது எனது 3வது கிராமி விருதைப் பெற்றுள்ளேன். சந்தோஷமாக உள்ளது. பேச வார்த்தைகள் இல்லை. இந்த விருதை இந்தியாவுக்குச் சமர்ப்பிக்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்ற ரிக்கி கேஜ்ஜூக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.