Published:Updated:

மதுர மக்கள் - 4 | " 'மக்க கலங்குதப்பா'... யுவன், விஜய் சேதுபதி ரியாக்ஷன்?!"- 'மதிச்சியம்' பாலா

மதிச்சியம் பாலா

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

Published:Updated:

மதுர மக்கள் - 4 | " 'மக்க கலங்குதப்பா'... யுவன், விஜய் சேதுபதி ரியாக்ஷன்?!"- 'மதிச்சியம்' பாலா

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

மதிச்சியம் பாலா

'' 'மக்க கலங்குதப்பா' பாட்டு ரெக்கார்டிங் எல்லாம் முடிஞ்சுருச்சு. திடீர்னு ஒரு நாள் டைரக்டர் சீனு ராமசாமி சாரோட மேனஜர் போன் பண்ணி, பாலா ரெண்டு நாள்ல ஆண்டிபட்டிகிட்ட ஷூட்டிங் வந்துருங்கனு சொல்லிட்டு போனை வச்சுட்டார். சொன்னா நம்ப மாட்டீங்க அன்னிக்கு தேதிக்குக் கையில இருந்தது வெறும் அம்பத்தி அஞ்சு ரூபாய். ஆண்டிபட்டிக்கு ஃபுல் செட்டப்போட வண்டி புடிச்சு போயிட்டு வரணும்னா மூவாயிரத்தி ஐநூறு ரூபாய் வேணும். என்னோட மனைவி காதுல கழுத்துல கெடந்ததைக் கழட்டி குடுத்த பணத்துலதான் அன்னைக்கு ஷூட்டிங்கே போனேன். முன்ன பின்ன ஷூட்டிங் பார்த்தது இல்ல. கெளம்பி போனா சாவு வீட்டு செட்டப், நிஜமாவே சாவுதான் போலன்னு நின்னுட்டு இருந்தேன். டைரக்டர் வந்தாரு... 'என்னடா பாலா உன்னை பளிச்சுன்னு ஃப்ரேம் ஃபுல்லா காட்டலாம்னு இருக்கேன். தாடியோட சோகமா வந்து நிக்கிற'ன்னாரு. மாலைபோட்ருக்கேன் சார்னு சொன்னதும், அந்தக் காட்சிய விளக்கி சொன்னாரு. அடுத்த வருஷம் இந்தப் பாட்டோடா வெற்றியோட நீ ஐயப்பனைப் பார்க்கப்போகணும்ங்கிறதுதான் என்னோட ஆசைன்னு அவரு சொல்லவும் அங்கயே பக்கத்துல இருந்த பிள்ளையார் கோயில்ல மாலைய கழட்டிட்டு, தாடிய எடுத்துட்டு கேமரா முன்னால நின்னுட்டேன்.

மதிச்சியம் பாலா
மதிச்சியம் பாலா

ஷூட்டிங் ஸ்பாட்டுலயே சுத்தி இருந்த ஊருக்காரவுக எல்லாம் இந்தப் பாட்டு நிச்சயம் ஹிட் ஆகும்னு சொன்னாங்க. 'நீ ஜெயிச்சுட்டடா பாலா'ன்னு அப்பவே சொன்னாரு இயக்குநர்!" மண் மணம் மாறாமல் விவரிக்கிறார் 'மதிச்சியம்' பாலா.

'தர்மதுரை;யில் 'மக்க கலங்குதப்பா'வில் தொடங்கி, கும்மிப்பாட்டில் டாக்டர் பட்டம் எனத் தொடர்ந்து நாட்டுப்புறக்கலையை சார்ந்து பயணிக்கும் கலைஞன்.

நாட்டுப்புறக்கலை மீது ஆர்வம் எப்படி?

"கார்த்திகை மார்கழின்னாலே நம்ம ஊருல கோயில் எல்லாம் களைகட்டும். அப்போ எங்க அத்தை ராஜேஸ்வரி எட்டாவது படிக்கிறப்போ இருந்து கும்மிப்பாட்டு பாட கூட்டிப்போவாங்க. அப்போ அதை பாட ஆரம்பிச்சதுதான். அது அப்படியே காலேஜ் வரைக்கும் கூட இருந்துச்சு. கும்மிப்பாட்டு, புஷ்பவனம் குப்புசாமி ஐயா பாடல்களை மாதிரியா வச்சு நாமளே புதுசா வரிகள் மாத்திப்போட்டுக்கிறதுன்னு பழக ஆரம்பிச்சேன். அது காலேஜ் டைம்ல ரொம்ப உதவியா இருந்துச்சு. மதுரை காமராஜர் பல்கலைகழகத்துல படிச்சிக்கிட்டு இருந்தப்போ காலேஜ் சார்பா எங்க போட்டி நடந்தாலும் நம்மளும் பேரு குடுத்துருவோம். கலந்துக்கிட்ட எல்லா போட்டிலயும் முதல் பரிசுதான். கூடவே காலேஜ்லயே காதலிக்கிறதுக்குப் பொண்ணும் கிடைச்சது இந்த கும்மிப்பாட்டுனாலதான். இந்த கும்மிப்பாட்டாலதான் எனக்கு முதல் வருமானமும் கிடைச்சது. என்னோட முதல் வருமானம் தட்டு நிறைய தேங்காய் பழம், அப்பறம் 51 ரூபாய் காணிக்கை. இப்படித்தான் வாழ்க்கை ஆரம்பமாச்சு!

மதிச்சியம் பாலா
மதிச்சியம் பாலா

குடும்பம் பத்தி?

பூர்வீகம் மதுரை மதிச்சியம். அப்பா பேண்டுல கிளாரெட் வாசிக்கிறவரு, அம்மா வீட்டு வேல பார்த்துட்டு இருந்தாங்க. ஒரு அண்ணன், ஒரு தங்கச்சி.

ஜானகி இப்போ என் மனைவி... அப்போ எனக்கு காதலி. அவுங்க பிஎஸ்சி இயற்பியல், பார்த்ததும் பிடிச்சுருந்துச்சு. லவ் பண்றேன்னு சொன்னேன். முடியாதுன்னு சொன்னாங்க. ஒரே சோகப்பாட்டா பாடிக்கிட்டு இருந்தேன். 'மன்மதன்' படத்துல வரும் 'காதல் வளர்த்தேன்' பாட்டுதான் ரிங்டோன்.

ஒரு கல்சுரல்ஸ்ல முதல் பிரைஸ் ஜெயிச்சு ரேடியோல அறிவிச்சத கேட்டப்பிறகுதான் ஒத்துக்கிட்டாங்க. நா கருத்த பைய... அது செவத்த புள்ள... அவுங்க வீட்டுல முடியாதுன்னுட்டாங்க. ஆனா, இவுங்க கிளம்பி வர்றதுக்கு ரெடி ஆகிட்டாங்க!

கண்டேன் கருங்குயிலே காலையிலே

உன்னை பார்த்தேன் பசுங்கிளியே மாலையிலே

உன்ன நானும் பார்க்க வேணும் ஆசையோடு பேசவேணும்

தமுக்கம் வந்துரடி சேர்ந்து நாம பேசிக்கலாம்.

இப்படித்தான் பாட்டுப்பாடி விளையாட்டா ஆரம்பிச்சேன். ரெண்டு பேரும் ஒரே காலேஜ்தான். பொண்ணு வீட்டுல ஒத்துக்கல. பொண்ணு வீட்டுக்கு பொண்ணு கேட்டுப்போனப்போ, 'என் பொண்ண விட்டுருப்பான்னு கையெடுத்து கும்புட்டாங்க பொண்ணோட அம்மா. ஆனா கல்யாணம் பண்ணுனா என்னத்தான் பண்ணுவேன்னு வீட்டைவிட்டு வந்துட்டாங்க. இப்போ வரைக்கும் என்னோட முழு பலமும் என் மனைவி. தக்‌ஷேஷ், தக்‌ஷிகான்னு ரெட்டை குழந்தைங்க... வாழ்க்கை சந்தோஷமா போயிட்டு இருக்கு!"

'தர்மதுரை' வாய்ப்பு வந்த நாள் நியாபகம் இருக்கா?

"என்ன இப்புடி கேட்டுப்புட்டீங்க?! அது வாய்ப்புன்னு சொல்றத விட ஒரு வரம்னே சொல்லலாம். ஒரு நாள் அலங்காநல்லூர்ல பறையிசை கலைஞர் வலு ஆசானும் காரியாபட்டி நாதஸ்வர கலைஞர் ரவிச்சந்திரனும் போன் பண்ணி ஸ்டார் ரெசிடன்ஸில ஆடிஷன் நடக்குது எனக்கு தெரிஞ்சஆளெல்லாம் அனுப்பிருக்கேன் போயி பாருடான்னு சொன்னாரு. போயி சீனு ராமசாமி சாரைப் பார்த்தேன். பாடிக்காமிச்சேன். எனக்கு முன்னாலேயே மூணு நாளு பேரு போயிருக்காங்க. ஆனா சாவு வீட்டு பாட்டு பாடுறதான்னு சொல்லி வேணாம்னு சொல்லிட்டாங்க.

எனக்கு அப்படியெல்லாம் இல்ல... எல்லாமே சாமிதானேனு சரின்னு சொல்லிட்டேன். பாட்டைப் பத்தி சொன்னாங்க. நானே எழுதி பாடி காமிச்சேன். அந்தப் பாண்டி கோயில் சாமிய பாடுறதுக்கான பாட்டுல இருந்து சில வரிகளை உதாரணமா வச்சு, அந்த சமயத்துல இறந்துபோன என் அப்பாவ மனசுல வச்சுத்தான், 'பார்த்தாலே பச்ச முகம்'னு முழு பாட்டையும் எழுதுனேன்.

மதிச்சியம் பாலா
மதிச்சியம் பாலா

'ரொம்ப பிடிச்சுருக்கு... சரிப்பா கூப்பிடுறேன்'னு சொல்லிட்டாங்க. திரும்பவும் சென்னையில ரெக்கார்டிங் இருக்கு வான்னு ஏவிஎம் ஸ்டுடீயோவுக்குக் கூப்பிட்டாங்க. ரெக்கார்டிங் முடிச்ச உடனேயே யுவன் ஷங்கர் ராஜா சார், 'கண்டிப்பா இந்த பாட்டு ஹிட்டாகும் பாலா வாழ்த்துக்கள். வேற படங்கள் பாட்டு பாட வாய்ப்பு இருந்தா வந்து பாட முடியுமா?'ன்னு கேட்டாங்க.

விஜய் சேதுபதி அண்ணனும், 'உண்மையும் உழைப்பும் இருந்தா சினிமால ஜெயிச்சுரலாம் பாலா... நீ ஜெயிக்கலாம்! தைரியமா பண்ணு'ன்னு தைரியம் குடுத்தாரு. என்னோட முழுப்பெயர் நந்தபாலமுருகன். டைட்டில் கார்டுல பேரு போடணும் என்னடா போடுறதுன்னு டைரக்டர் கேட்டப்போ, 'மதுரை பாலா', 'சிம்மக்கல் பாலா'ன்னு சொன்னேன். அப்பறம் மதிச்சியத்துலதானே இருக்க, மதிச்சியம் பாலாவே நல்லாதான் இருக்குனு சொல்லி, நந்தபாலமுருகனை 'மதிச்சியம்' பாலாவா மாத்துனதும் அவர்தான்.