Published:Updated:

இளையராஜா: காதலைத் தோற்றுவிப்பதும் இவரின் இசைதான், காதல் தோல்விக்கும் இவரின் இசைதான்!

இளையராஜா

ராஜா, அவரின்றி இங்கு காதல் மலர்வதில்லை, அந்தக் காதலின் பிரிவிலும் அவருடைய வயலினே இசைக்கிறது. அவரின் பாடல்களின்றி இங்கு திருவிழாக்கள் இல்லை. அவரின் இசையின்றி இங்கு புது வருடமும் பிறப்பதில்லை என்பதே நிதர்சனம்.

Published:Updated:

இளையராஜா: காதலைத் தோற்றுவிப்பதும் இவரின் இசைதான், காதல் தோல்விக்கும் இவரின் இசைதான்!

ராஜா, அவரின்றி இங்கு காதல் மலர்வதில்லை, அந்தக் காதலின் பிரிவிலும் அவருடைய வயலினே இசைக்கிறது. அவரின் பாடல்களின்றி இங்கு திருவிழாக்கள் இல்லை. அவரின் இசையின்றி இங்கு புது வருடமும் பிறப்பதில்லை என்பதே நிதர்சனம்.

இளையராஜா
இன்றுவரை இளையராஜாவுக்கும் கடைக்கோடி தமிழனுக்கும் இருக்கும் உறவின் ஆதாரமாக அவரின் இசை மட்டுமே இருந்து வருகிறது. இந்தக் கட்டுரை ராஜா வாங்கிய விருதுகள் குறித்தோ, சாதனைகள் குறித்தோ எழுதப்படவில்லை. அவர் தன் இசையைக்கொண்டு எப்படிப் பலருடைய வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் அவர்களை மகிழ்வித்தார் என்பதை மட்டுமே பேசவிருக்கிறது. சொல்லப்போனால், அதற்கான நன்றி மடல்தான் இது!

2000-க்குப் பின் பிறந்தவர்களுக்கு இளையராஜாவின் இசை பரிச்சயமாக சற்று காலம் பிடித்திருக்கும். ஏனென்றால் அந்த வயதுக்காரர்களின் வாக்கிடாக்கிகளிலும், டேப் ரெக்கார்டர்களிலும் பெரும்பாலும் ரஹ்மானும், யுவனுமே குடியிருந்தனர்.

எனக்கு இளையராஜாவின் இசை முதன்முதலில் அறிமுகமானது ‘ஜனனி... ஜனனி’ பாடலின் மூலமாகத்தான். தினமும் பள்ளிவிட்டு வரும் சமயம் மாலை நேரங்களில் என் அம்மா அதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது அதை பாடியவர் யார் என்றெல்லாம் தெரியாமலேயே நிறைய நேரங்களில் மனதிற்குள்ளேயே அதை நான் முணுமுணுத்திருக்கிறேன்.

இளையராஜா
இளையராஜா

முதன்முதலில் ஒரு நவீன கடவுள் வாழ்த்துப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. நானும் வளர்ந்தேன், என்னுடனே ராஜாவின் இசையும் என்னோடு தொடர்ந்து பயணிக்கத் துவங்கியது.

திரைப்பட இசையை தாண்டி அவர் இசையமைத்த ‘திருவாசகம்’ மிகவும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக, ‘பூவார் சென்னி மன்னன்’ எல்லாம் வேறலெவல் ரகம். எப்படி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடிய ‘ஹரிவராசனம்’ பாடல் தினந்தினம் கோயில்களில் ஒலிபரப்பப்படுகிறதோ அதேபோல அவருடைய ‘திருவாசகமும்’ ஒலிபரப்பப்படுகிறது.

பலர் ரிப்பீட் மோடில் பார்த்த படங்களின் லிஸ்டில் முதலில் என்றுமே இருப்பது ‘அபூர்வ சகோதரர்கள்’. அதில் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப இசையை அமைத்திருப்பார் இளையராஜா. அதில் வரும் கமலின் ராஜா கதாபாத்திரத்திற்கு, ‘ராஜா கைய வெச்சா’ பாடலுக்குத் துள்ளலான இசையும், ‘வாழவைக்கும் காதலுக்கு ஜே’வில் வாலிபம் ததும்பும் காதலும் எனக் கலந்து கொடுத்திருப்பார். மறுபுறம் அப்புவின் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் ‘புது மாப்பிளைக்கு’ பாடலில் எந்த அளவிற்கு மகிழ்ச்சியை கடத்தினரோ அதே அளவிற்கு ‘உன்ன நெனச்சேன்’ பாடலில் சோகத்தையும் கடத்தியிருப்பார். படம் நெடுக அப்புவைத் தொடரும் வயலின் இசை ஒரு மாயவலைதான். அது எப்பேர்பட்ட மனிதர்களையும் மயக்கிவிடும். அதே வயலின் மேஜிக்கை ‘தளபதி’ படத்திலும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலைக் கொண்டு செய்திருப்பார்.

இளையராஜா இசையமைக்கும் படங்களில் அமைந்திருக்கும் இசை வெறும் அப்படத்திற்கான இசையாக மட்டுமில்லாமல் அதில் தோன்றும் கதாபாத்திரங்களுக்கான இசையாக அமைந்து வருவதாலேயே அவை என்றும் இளமையாகவே உள்ளது. சில படங்களின், சில காட்சிகளில் அவர் அமைதியாக விட்டுவிடும் மௌனம் கூட அந்த இசைக்கு வலு சேர்ப்பவையாக இருக்கும்.

இளையராஜா
இளையராஜா

அதேபோல், ஒரே ட்யூனை வெவ்வேறு விதமாக அந்தந்த கதாபாத்திரங்களுக்கு கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு அமைப்பார். குறிப்பாக, ‘மௌனராகம்’ பி.ஜி.எம். கதையோடு பின்னிப்பிணைந்ததாலேயே அந்த இசையை கேட்கும்போது அக்காட்சியும் மனதினுள் வந்து செல்கிறது.

அதே வித்தையை ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படத்திலும் கச்சிதமாக நடத்திக் காட்டியிருப்பார். அதில், வருண் - நித்யா இருவருக்குமான காதல் பயணம், பால்யம் தொடங்கி வாலிபம் வரை பயணிக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் அக்காதலின் முதிர்ச்சியை, அந்தக் காதலின் ஆனந்தத்தை, அது ஏற்படுத்தும் வலியை மீட்டர் குறையாமல் வெவ்வேறு விதமாக கடத்தியிருப்பார்.

1986 - 2012 இரண்டு படங்களுக்குமிடையில் எத்தனை ஆண்டுகள். ஆனால், இரண்டிலும் அதே மேஜிக்கை அந்தந்த காலத்திற்கேற்றவாறு சற்றும் குறைவில்லாமல் செய்திருந்தார். இன்றும் அப்படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது அக்கதாபாத்திரங்களின் உணர்வுகளை குறைவில்லாமல் கடத்துவதற்கு அவரின் இசையே பெருந்துணையாக இருக்கிறது. அதையே இத்தலைமுறை இசையமைப்பாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

வளர்ந்து வரும் சமகாலத்து இசைக்கலைஞர்கள் பலர் ராஜாவின் பாடலுக்கு மறுஉருவம் கொடுக்கிறார்கள். அவை காலத்தோடு பொருந்திப்போவதோடு மேலும் அதன் மீது காதல் கொள்ள வைக்கிறது. ‘உங்களுடைய ட்யூன்களே எனது ட்யூனுக்கான இன்ஸ்பிரேஷன்’, என்று யுவன் கூறுகிறார். ‘நாங்கள் எப்போதும் ராஜா சாரின் ட்யூனைதான் காப்பி அடிப்போம். ஆனால் அது தெரியாது!’, என்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

இளையராஜா
இளையராஜா
#VikatanOriginals

‘நாயகன்’ படத்தின் ‘தென்பாண்டி சீமையிலே’ பாடலை எனக்கு என் தந்தை பாடினார். நாளை, நான் என் குழந்தைக்குப் பாடுவேன். ஒரு கலைஞன் ஒரு படத்திற்கான இசைப்பணியை மட்டும் செய்யாமல் அதில் பல தலைமுறைகளுக்குமான இசையை, பாடத்தைப் புகுத்தியது எப்படி என்று பல முறை பிரமித்திருக்கிறேன். இசையின் உயிர்நாடியை அன்போடு வருடி அதன் வடிவத்தை இவ்வுலகிற்குப் பரிசளித்தார் இந்த இசைராஜா!

இவ்வாறு அவர் உருவாக்கிய ஒவ்வொரு மாஸ்டர் பீஸும் என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை நிரப்பியுள்ளன. என் மனம் சோர்வுற்று இருக்கும் நேரங்களில் எனக்கு புத்துணர்வு ஊட்டியுள்ளன. என் பின்னிரவுகளை இனிமையாக்கியுள்ளன. என்னை காதலிக்க வைத்தது அவரின் இசைதான்!

இவற்றை ரசித்த என் மனதிற்கு அவரையும், அவரின் இசையையும் நேரில் அனுபவிக்கும் வாய்ப்பும் ஒருமுறை கிடைத்தது. நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த சமயம் ஒரு முறை அவருடைய இசைக்கச்சேரி எங்கள் ஊரில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த அறிவிப்பு வந்த நாள் முதலே, ஊரே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தது. நானும் பெரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தேன். இறுதியில் அந்த நாளும் வந்தது.

பிரமாண்டமான அரங்கம், ஹங்கேரி இசைக்குழுவினர் இளையராஜாவின் இசைக்குறிப்புகளுடன் தயார் நிலையில் இருந்தனர். 15,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள். வானிலிருந்த மேகங்களும் அவரின் இசையைக் கேட்க கூடி வந்திருந்தன. ஆனால், அவை நிகழ்ச்சி முடியும்வரை கூட்டத்தைக் கலைக்கவில்லை. மாலையைக் கடந்துதான் நிகழ்ச்சி தொடங்குவதாக அறிவித்தார்கள். நிகழ்ச்சியும் துவங்கியது. ராஜா மேடையில் அவதரித்தார்! அவரை முதல்முறையாக நேரில் பார்த்ததும் மெய்சிலிர்த்துவிட்டேன்.

இளையராஜா
இளையராஜா

‘ஜனனி... ஜனனி’ பாடலைதான் முதலில் பாடினார். அப்பாடல் என்னை மீண்டும் என் பள்ளிக்கால மாலை நேரங்களுக்குள் அழைத்துச் சென்றது. ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ள’ துவங்கி ‘தென்றல் வந்து தீண்டும் போது’ வரை எனது விஷ்லிஸ்ட்டில் இருந்த அத்தனையும் அவர் தலைமையில் அதே எனர்ஜியோடு அரங்கேறியது. சிலர் கண் கலங்கினர், கூடி வந்த மேகங்களும் சத்தமின்றி கண்கலங்கின. எல்லோருக்கும் அவர்களின் வாழ்வின் அங்கமாகவே ராஜாவின் இசை ஒலித்துக்கொண்டிருக்கிறது என்பதை அதில் உணர முடிந்தது. நள்ளிரவைத் தாண்டியும் நீண்ட அந்நிகழ்ச்சி இன்றும் என் நினைவுகளில் நீண்டுகொண்டேதான் இருக்கிறது.

ராஜா, அவரின்றி இங்கு காதல் மலர்வதில்லை, அந்தக் காதலின் பிரிவிலும் அவருடைய வயலினே இசைக்கிறது. அவரின் பாடல்களின்றி இங்கு திருவிழாக்கள் இல்லை. அவரின் இசையின்றி இங்கு புது வருடமும் பிறப்பதில்லை என்பதே நிதர்சனம்.

பல தலைமுறைகளுக்கான இசையை படைக்கும் இளையராஜா ஒரு இன்ஃபினிட்டிக்கான இசைக்கலைஞன்!