
படங்கள்: ஜெ.ஜீவானந்த்
தாய்ப்பாலைப் போல சுரக்கும் இளையராஜாவின் இசையே தமிழர்களுக்குக் கண்ணீரும் புன்னகையும். அவரின் இசை நிகழ்ச்சி வெகுகாலத்துக்குப் பிறகு சென்னையில் நிகழ்ந்தது என்பதால் ரசிகர்களால் தீவுத்திடல் நிறைந்திருந்தது. ‘ராக் வித் ராஜா’ எனப் பெயரிட்ட அந்த விழாவின் தருணங்கள் கொடுத்த மன எழுச்சி நிறைவானது. இசை நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் இவை...
கடந்த இரண்டு வருடங்களாகக் கொரோனாவின் கட்டுப்பாட்டினால் இறுக்கமாக இருந்த ரசிகர்கள் பெரும் விடுதலை பெற்றார்கள். கடைசிவரை மேடையில் இருந்த இளையராஜாவும் பார்வையாளர்களான ரசிகர்களும் உற்சாகம் குறையாமல் இருந்தார்கள்.


ஏறக்குறைய ஐந்தரை மணி நேரம் நடந்த இசை நிகழ்வில் இளையராஜா உட்கார்ந்து யாரும் பார்க்கவில்லை. சதா ரசிகர்களைப் பார்த்துக்கொண்டும், இசையமைப்பை மேற்பார்வையிட்டுக் கொண்டும், உரையாடிக்கொண்டும் இருந்தார்.
விழா ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே எஸ்.பி.பி நினைவை முன்வைத்துப் பேசினார். பிரிவின் நினைவூட்டலில் அவரது குரல் கரகரத்தது. எஸ்.பி.பி.சரணும் அப்பாவை நினைவுகூர்ந்தார். அதேபோல் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனும் நம் நினைவுகளை மீட்டினார்.


கச்சேரி தொடங்குவதற்கு முன்பே தனுஷ் வந்து உட்கார்ந்திருந்தார். கூடவே மகன்கள் யாத்ராவும் லிங்காவும். “நான் அம்மா வயிற்றிலிருந்த காலத்திலிருந்து என் கூடவேதான் நீங்கள் இருக்கிறீர்கள்” என்று தனுஷ் இளையராஜாவைப் பார்த்துச் சொன்னது பலத்த கைத்தட்டலைப் பெற்றது. ராஜா இசையமைத்த தாலாட்டுப்பாடலுக்கு தான் எழுதிய வரிகளைப் பாடும்போது தெளிவான குரலும் தனுஷின் இயல்பான பணிவும் சேர்ந்து அந்தக் கணத்தை உண்மையாக்கியது.
44 பாடல்கள் பாடினார்கள். மிக நல்ல தேர்வு என்றுதான் சொல்ல வேண்டும். ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடல் வரும்போது ராஜா அந்தப் பாட்டை ரஜினிகாந்தோடு தொடர்புபடுத்தி, கீழே இருந்த தனுஷுடன் பேசினார்.
சில குரல்கள் நம்மை இழுத்துச் செல்வதுபோல உணரப்பட்டும், சில குரல்கள் இனிமையாக இருக்குமாறும் மாறி மாறி பார்த்துக்கொண்டார். பிரத்யேகமாக விரும்பப்படுகிற அவர் பாடிய பாடல்களையும் பாடினார்.


நள்ளிரவு வரை ராஜாவுக்கு நாலைந்து காபி மட்டுமே போதுமானதாக இருந்தது. ரசிகர்களின் சந்தோஷ முழக்கங்கள், ஆர்ப்பரிப்பு அவரைப் பசிக்கவிடாமல் செய்தன.
நெடுநாள் பிரிந்திருந்த தம்பி கங்கை அமரன் வந்திருந்தார். மகன் பிரேம்ஜி ‘ஊருவிட்டு ஊருவந்து’ பாடும்போது எழுந்து வாழ்த்தினார். யுவன், பவதாரிணியும் பாடினார்கள்.
இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் மேடையேறி ‘ராஜாதி ராஜனிந்த ராஜா’ பாடலைப் பாடி, தன் குருவணக்கத்தைச் செலுத்தினார்.
இரண்டாண்டுகளுக்குப் பிறகு இசையை விருந்தாகவும் மருந்தாகவும் நுகர்ந்து மகிழ்ச்சியில் திளைத்தார்கள் ரசிகர்கள்.