பேட்டி - கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

இசை - தமிழின் திசை!

James Vasanthan
பிரீமியம் ஸ்டோரி
News
James Vasanthan

“ ‘தமிழ் ஓசை’ குழு பற்றிச் சொல்லுங்கள்.”

பாலவாக்கம் கடற்கரையையொட்டி இருக்கிறது ஜேம்ஸ் வசந்தனின் ஒலிப்பதிவுக் கூடம். புறநானூற்றையும், திருக்குறளையும் இளைஞர்கள் பாடிக்கொண்டிருக்க, அவர்களுக்கான இசைக்குறிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தார் ஜேம்ஸ். ‘தமிழ் ஓசை’ என்ற இசைக்குழுவைத் தொடங்கி சங்கப்பாடல்களையும், திருக்குறளையும் இசைவடிவில் கொண்டு வருவதற்கான முயற்சியில் இருந்தவரைச் சந்தித்தேன்.

“சங்கப் பாடல்களை இசைவடிவில் கொண்டு வருவதற்கான எண்ணம் எப்போது தோன்றியது?”

“கல்லூரி நாள்களிலேயே எனக்குத் தமிழ்மொழியின் மீது பற்றுண்டு. மொழி சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நான் தொகுப்பாளராக இருந்ததற்குக் காரணம் மொழிப்பற்றுதான். கடந்த வாரம் உலகத் தமிழ் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ‘தமிழ் ஓசை’ யின் முதல் அரங்கேற்றம் நடந்தது. பாதிரியார் ஜெகத் கஸ்பரின் முயற்சி அது. பல்வேறு நாடுகளில் பெரும் முதலீட்டாளர்களாக உள்ள தமிழர்கள் அந்த விழாவில் பங்கேற்றனர். திருக்குறள், சங்கப்பாடல் மட்டுமன்றி, தாலாட்டு, ஒப்பாரி, கானா, கவிஞர் சுமதியின் ஒரு பாடலும் அதில் இடம்பெற்றன. பார்வையாளர்கள் ‘ஒன்ஸ் மோர்’ கேட்குமளவுக்கு விழா சிறப்பாக நடந்தது.”

“ ‘தமிழ் ஓசை’ குழு பற்றிச் சொல்லுங்கள்.”

“இப்படி ஒரு குழுவை உருவாக்க வேண்டும் எனப் பல நாள்களாக யோசித்துவந்தேன். அதற்கான சந்தர்ப்பம் இப்போதுதான் அமைந்துள்ளது. இதற்காக எனது ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தெரிவித்து ஆடிஷன் நடத்தினேன். நிறைய இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களில் 75 பேரைத் தேர்வு செய்து பாட வைத்துள்ளேன்.

இசை - தமிழின் திசை!

பலரும் இசைத்துறைக்குப் புதியவர்கள். இரண்டு மாதகாலப் பயிற்சிக்குப் பிறகு தற்போது அவர்களுக்குத் தமிழின்மீதும் ஆர்வம் அதிகரித்து விட்டது. நிச்சயம் அவர்களுக்கும் ரசிகர்களுக்கும் நல்லதொரு அனுபவமாக அமையும். சேலம் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர்.ஜெ.பிரேமலதா பாடல் தேர்வில் எனக்கு உறுதுணையாக இருந்தார்.”

“இதுபோன்ற முயற்சிகளைத் திரைப்படங்களில் அல்லாமல் தனியிசை ஆல்பமாகக் கொண்டு வரக் காரணம் என்ன?”

“திரைப்படங்களில் இதுபோன்ற முயற்சிகளுக்கு வாய்ப்புகள் குறைவு. தனியிசையில்தான் சமூகத்துக்கான விஷயங்களைச் சுதந்திரமாகப் பேச முடியும். கறுப்பர் இன மக்களின் விடுதலைக்கு வித்திட்டதில் தனியிசைக்குப் பெரும் பங்குண்டு. ‘தமிழ் ஓசை’ குழுவினரை வைத்து சென்னையில் ஒரு பிரமாண்ட அரங்கேற்றம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தவிர பள்ளிகள், கல்லூரிகள், ஐ.டி நிறுவனங்களில் இந்தப் பாடல்களை நிகழ்ச்சிகளாக வழங்கவும் தயார் செய்துவருகிறோம். தமிழ்மொழியின் மகத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு முன்னெடுப்புதான் இது. பலரும் இதற்கு ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகிறேன்.”

“திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வேலைகள் எப்படிப் போய்க்கொண்டிருக்கின்றன?”

“ஒரு படம் நானே எழுதி, இயக்கி, இசையமைத் திருக்கிறேன். அதை வெளியிடும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அது தவிர வெப் சீரிஸ் ஒன்றை இயக்கும், இசையமைக்கும் திட்டம் உள்ளது. சிலர் நடிக்கச் சொல்லியும் கேட்டுவருகிறார்கள்.”