சினிமா
தொடர்கள்
Published:Updated:

“இளையராஜா இடம் நோக்கி என் பயணம்!”

இமான்
பிரீமியம் ஸ்டோரி
News
இமான்

கும்சிக்… கும்சிக்…’ ஸ்டூடியோ கதவிடுக்கில் கசியும் இசை தடதடக்கிறது.

சிவகார்த்திகேயன் – பாண்டிராஜ் படத்திற்கான இசைக் கோப்பு வேலையில் மூழ்கியிருந்த இசையமைப்பாளர் இமானை, ஒரு மழை நாளில் சந்தித்தேன்.

“கீ-போர்டு வாங்குறதே பெரிய விஷயமா இருந்த ஒரு சாதாரணக் குடும்பத்துலதான் நான் பிறந்தேன். ஆனா, என் அப்பா அம்மா என்னை இசைத்துறையில கொண்டுவரணும்னு ஆசைப்பட்டாங்க. நாங்க ஒரு கிறிஸ்தவக் குடும்பம். அதனால, ‘நம்ம பையன் சர்ச்ல கீபோர்டு வாசிக்கணும்’ங்கிறது அவங்களோட அதிகபட்ச ஆசை. அந்த ஆசை, என் எட்டு வயசுலேயே நிறைவேறிடுச்சு. பிறகு ஸ்கூல்ல வாசிச்சது, விளம்பரப் படங்களுக்கு வாசிச்சது, சீரியல், சினிமான்னு வளர்ந்தது எல்லாமே இறைவன் எனக்குப் போட்ட பிச்சைதான்.”

“உங்க மெலோடி பாடல்கள்ல இளையராஜா டச் இருக்குன்னு ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுது. அதை எப்படிப் பார்க்கிறீங்க?”

“யாரா இருந்தாலும் சரி, எந்த ஊர்ல இருந்தாலும் சரி, தமிழனாகவும், தமிழ் தெரிந்தவராகவும் இருக்கும்பட்சம் ராஜா சார் பாடல்களைக் கேட்கும்போது, இனம்புரியாத உணர்வு உங்களைச் சுண்டி இழுக்கும். மற்ற பாடல்களெல்லாம் முதல்ல மூளைக்குத்தான் போகும். ஆனா, ராஜா சார் பாடல்கள் மட்டும்தான் இதயத்தைக் கவ்வும். அப்படியான ஒரு இடத்தை நோக்கித்தான் என் முயற்சிகளும் இருக்கு.

 “இளையராஜா இடம் நோக்கி என் பயணம்!”

அந்தப் பயணத்துல இப்படியான விமர்சனங்கள் வருதுன்னா, அதை ஏத்துக்கத்தான் செய்யணும். தவிர, ராஜா சார் என்னைக்குமே என்ன மாதிரியான ஹீரோ, என்ன மாதிரியான படம்னு பார்த்து உழைக்கிறதில்ல; எல்லோருக்கும் ஒரேவிதமான உழைப்புதான். அதையும் நான் அவர்கிட்ட இருந்து கடைப்பிடிக்கிறேன்.”

“இமான் – யுகபாரதி கூட்டணியின் பாடல்கள் தனித்துவமா இருக்கே?!”

“புரிந்துணர்வுதான் காரணம். டியூனைக் கேட்ட அடுத்த நொடி, அவர்கிட்ட இருந்து வரிகள் வர ஆரம்பிச்சுடும். அவரோட இந்த வேகம் என்னை எப்போவுமே ஆச்சர்யப்படுத்தும். அதேமாதிரி, டியூனைக் கொடுத்துட்டு நான் வேற வேற இசைக்கோப்பு வேலைகளைப் பார்த்துக்கிட்டிருந்தாலும், அந்தச் சத்தம் அவரைத் தொந்தரவு பண்ணாது. அவர் மனசுக்குள்ளே அந்த டியூன் மட்டும்தான் ஓடிக்கிட்டிருக்கும். அதைக் கேட்டுக்கிட்டு அவர் பாட்டுக்கு எழுதிக்கிட்டிருப்பார்.”

“இமான் – ஷ்ரேயா கோஷல் கூட்டணியும் ரொம்ப ஸ்பெஷல்... அதெப்படி?”

“ஷ்ரேயா கோஷல் காட்டுற ஆர்வம் ரொம்ப முக்கியமானது. பாடுற ஒவ்வொரு வார்த்தைக்கும் என்ன அர்த்தம்னு தெரிஞ்சுக்கிட்டுதான் பாடுவாங்க. நானும் அந்தப் பாட்டோட முந்தைய காட்சி, அடுத்த காட்சி எல்லாத்தையும் விளக்கமா சொல்லிடுவேன். படத்தோட கேரக்டரை மனசுல ஏத்திக்கிட்டுப் பாடுறதுதான், அந்த ஸ்பெஷலுக்குக் காரணம்.”

“தொடர்ந்து பல புதுமுகங்களுக்குப் பாடுற வாய்ப்பைத் தர்றீங்களே!”

“ஒரு சக மனிதனா செய்யவேண்டிய விஷயமாதான் அதைப் பார்க்கிறேன். அறிமுகப்படுத்துறேன் பேர்வழின்னு திறமையில்லாதவங்களை நான் அறிமுகப்படுத்தலையே! எத்தனையோ திறமையானவங்க வாய்ப்புக்காகப் போராடிக்கிட்டிருக்காங்க. அவங்களுக்கு முடிஞ்சளவு வாய்ப்புகளை உருவாக்கித் தர்றேன். ‘தமிழன்’ படத்துல இருந்தே இதைப் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன்.

 “இளையராஜா இடம் நோக்கி என் பயணம்!”

ஒரு படத்துல குறைஞ்சது ஒரு பாடகரையாவது அறிமுகப்படுத்த நினைப்பேன். அப்படி இதுவரை நான் அறிமுகப்படுத்திய 135-க்கும் மேற்பட்ட பாடகர்களில், என் மனசுக்கு நெருக்கமானவங்க வைக்கம் விஜயலட்சுமி. அவங்க ஒரு தெய்வப்பிறவி.”

“அதேமாதிரி, தொடர்ந்து பிரபலங்களையும் பாடகர்களா அறிமுகப்படுத்துறீங்களே... அது உங்களுக்கு சிரமமா இல்லையா?”

“அடிப்படையிலேயே பாட்டுமேல ஆர்வம் இருக்கிறவங்களையும், திறமை இருக்கிறவங்களையும்தான் பாட வைக்கிறேன். சுட்டுப்போட்டாலும் பாட்டு வராதுன்னு சொல்றவங்களைப் பாடவைக்க முடியாது. சிவகார்த்திகேயன், ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன்... இப்படி நான் பாடகரா அறிமுகப்படுத்திய பிரபலங்கள் எல்லோருக்கும் கொஞ்சம் இசை ஞானம் இருக்கு. ‘தமிழன்’ படத்துல ‘உள்ளத்தைக் கிள்ளாதே’ பாட்டு ஷூட்டிங்ல பிரியங்கா சோப்ரா அந்தப் பாட்டை அடிக்கடி பாடிக்கிட்டிருந்ததைக் கவனிச்ச விஜய் சார், ‘நண்பா... அவங்க நல்லா பாடுறாங்க. என்னன்னு பாருங்க’ன்னு சொன்னார். பிரியங்கா சோப்ராகிட்ட கேட்டப்போ, அவங்களும் பாட ரொம்ப ஆர்வமா இருந்தாங்க. அதனாலதான் அது சாத்தியமாச்சு. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகு ஒரு படத்துல ஹீரோவும், ஹீரோயினும் அவங்க சொந்தக் குரல்ல பாடி, நடிச்சது அந்தப் படத்துலதான்னு பெயரும் கிடைச்சது.”

“இத்தனை ஆண்டு அனுபவங்கள் என்ன உணர்த்துது?”

“ ‘தமிழன்’ படம் பண்ணும்போது, ‘சின்னப் பையன்னாலும், பாட்டைப் பண்ணிடுவான். பி.ஜி.எம்முக்கு என்ன பண்ணுவான்’னு நினைச்சாங்க. அதனால, டெஸ்ட்டுக்காக ஒரே ஒரு ரீலை மட்டும் கொடுத்து, பி.ஜி.எம் பண்ணித்தரச் சொன்னாங்க. ‘அது நல்லா இருந்தா கண்டினியூ பண்ணலாம், இல்லைனா பி.ஜி.எம்முக்கு வேற ஆள் வெச்சுக்கலாம்’னு சொன்னாங்க. அப்போ பிரபலமா இருந்த வேறொரு இசையமைப்பாளரையும் அதுக்காகப் பேசி வெச்சிருந்தாங்க. அதையெல்லாம் நான் மனசுல ஏத்திக்காம, அந்த ரீலுக்கு என்ன தேவையோ, அதுக்கு பி.ஜி.எம் பண்ணிக் கொடுத்தேன்.

 “இளையராஜா இடம் நோக்கி என் பயணம்!”

தயாரிப்பாளர், இயக்குநர், விஜய் சார், எஸ்.ஏ.சி.சார்னு எல்லோரும் ஒண்ணா வந்து அதைக் கேட்டாங்க. அந்த ரீலோட முதல் சீனைப் பார்த்ததுமே, ‘ஓகேம்மா... நீயே கன்டினியூ பண்ணிடு’ன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. அந்த முதல் ரீல் வாய்ப்புன்னு நினைச்சுதான், இன்னைக்குவரை எல்லாப் படங்களுக்கும் வொர்க் பண்றேன்.”

“உடல் எடை குறைப்புக்குப் பிறகு எப்படி உணர்றீங்க?”

“ரொம்ப உற்சாகமா இருக்கேன். அரிசி, கோதுமை, மைதா, சர்க்கரை மாதிரியான உணவுப்பொருள்களை நான் தொடுறதே இல்லை. ரொம்பநாள் கழிச்சு என்னைப் பார்க்கிற இயக்குநர்கள் சிலர், ஏதோ ஏலியனைப் பார்க்கிற மாதிரி பார்க்குறாங்க. ‘எப்படியிருந்த நீ; இப்படி ஆகிட்ட’ன்னு கிண்டல் பண்றாங்க. உடல் ஆரோக்கியம் ரொம்ப அத்தியாவசியம். உடல் பருமன்தான் பல வியாதிகளுக்குக் காரணமா இருக்குன்னு உணர்ந்தேன். மேலும், சமீபத்துல நான் நடத்துற நேரடி இசை நிகழ்ச்சிகளும் இதுக்கு ஒரு காரணம். இவ்வளவு தூரம் செலவு பண்ணி நம்மளைப் பார்க்க ரசிகர்கள் மெனக்கெடுறப்போ, அவங்களுக்காக நாம என்ன மெனக்கெடுறோம்னு தோணுச்சு. அதுக்காகவே முக்கியமா உடம்பைக் குறைக்கணும்னு நினைச்சேன்.”