Published:Updated:

"`கர்ணன்' பாட்டு... அப்பாவுக்கு மரியாதை செஞ்சதுல செம சந்தோஷம்!" - தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் மகன்!

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்

" 'கண்டா வரச் சொல்லுங்க...'' இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன், சுந்தர்ராஜனின் பாடலை எடுத்துவிட்டார்!" என்று சர்ச்சை வெடித்தது. சமூக வலைதளங்களில் விவாதங்களும் கிளம்பின. இதுகுறித்து அவரின் மகன் சொல்வது என்ன?

"`கர்ணன்' பாட்டு... அப்பாவுக்கு மரியாதை செஞ்சதுல செம சந்தோஷம்!" - தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் மகன்!

" 'கண்டா வரச் சொல்லுங்க...'' இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன், சுந்தர்ராஜனின் பாடலை எடுத்துவிட்டார்!" என்று சர்ச்சை வெடித்தது. சமூக வலைதளங்களில் விவாதங்களும் கிளம்பின. இதுகுறித்து அவரின் மகன் சொல்வது என்ன?

Published:Updated:
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள 'கர்ணன்' படத்தின் பாடல் ஒன்று, ’கர்ணன் அழைப்பு’ எனத் தலைப்பிடப்பட்டு சமீபத்தில் வெளியானது. பாடல் தொடங்கும் முன்னர், நன்றி கார்டில், ’தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்’ என்ற பெயர் இடம்பெற்றிருந்தது. யார் அந்த தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் என 90’s கிட்ஸூம், 2K கிட்ஸூம் யோசித்துக் கொண்டிருக்க, "இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன், சுந்தர்ராஜனின் பாடலை எடுத்துவிட்டார்!" என்று சர்ச்சை வெடித்தது. சமூக வலைதளங்களில் விவாதங்களும் கிளம்பின. செய்திகளும் வெளியானது.

”எனக்கு இப்ப 78 வயசு ஆகுது. 19 வயசுல, ஊர்ல இருக்க இளவட்ட பசங்க சேர்ந்து, ’வடபுதுப்பட்டி பாய்ஸ் நாடக கம்பெனி’னு ஒரு நாடக கம்பெனியை நடத்திட்டு வந்தோம். சுத்துப்பட்டி கிராமத்துல, திருவிழா வந்தாலே, எங்க நாடகம்தான். ஒரு நாள் வடபுதுப்பட்டில நடந்த நாடகத்தை பார்க்க வந்தார் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்...” எனத் தன்னுடைய கடந்த கால நினைவுகளுக்குள் சென்றார் சுந்தர்ராஜனின் நெருங்கிய நண்பர் வடபுதுப்பட்டி ராதாகிருஷ்ணன்.

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடல் பதிவின்போது...
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடல் பதிவின்போது...

“அவர் எனக்கு மாமன் உறவு முறை. ஊர் திருவிழாவிற்கு வந்தவர், எங்க நாடகத்த பாத்துட்டு, ‘நானும் பாடவா பாவா’னு கேட்டார். ‘பாடுங்க பாவா’னு நானும் சொல்ல, அன்னைக்கு ஆரம்பிச்சது, எங்க செட்டுல, ஆஸ்தான பாடகரா 25 வருஷமா, எங்க கூடவேதான் இருந்தார். வடபுதுப்பட்டி விநாயகர் கோயில்தான் எங்க சந்திப்புக்கான இடம். கார்த்திகை மாசம் ஆரம்பிச்சா போதும், அடுத்த ரெண்டு மாசம் எங்களை பிடிக்கவே முடியாது. ஒரு நாளைக்கு 5 இடத்துல பாடுவோம். 2 மாசத்துல 50 கச்சேரி வரை நடக்கும். நான்தான் அவருக்குப் பின்பாட்டு பாடுவேன். காலையில கோயில்ல உட்கார்ந்து ஐயப்பன் பாட்டு எழுதுவார். சாயங்காலம், பூஜையில அந்தப் பாட்டை பாக்காம படிப்பார். அது அவருக்கு கடவுள் குடுத்த ஞானம். மத்த மாசத்துல, நாடகம், பாட்டுக் கச்சேரினு பிஸியா இருப்பார். அதுக்கு தனித்தனிப் பாட்டு எழுதுவார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரை ராம்ஜி ஆடியோஸ், சுந்தர்ராஜனோட பாட்டுகளை ரெக்கார்டு பண்ணாங்க. அதைக் கேட்டுட்டுதான் சினிமாவுல வாய்ப்பு கிடச்சு அங்க போனார். சினிமாவுல ரெண்டு பாட்டு பாடினார். அதோட அவருக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அப்புறம் இறந்துட்டார். இப்ப கூட, அவரோட ஐயப்பன் பாடல்களைத்தான் டைரியில எழுதி வச்சு பாடுறேன். ஒவ்வொரு முறை பாடும்போதும், பாவாவே என்கூட இருக்குற மாதிரி இருக்கும்” என்றார் தழுதழுத்த குரலில்.

"அவரோடு பயணித்த நாட்களில் மறக்க முடியாத நிகழ்வுகள் பற்றி சொல்லுங்களேன்" எனக் கேட்டோம். “ஒரு முறை கேரளாவுக்கு கச்சேரிக்கு போயிருக்கோம். வண்டி, சாப்பாடு, எல்லா செலவும் போக, 2 ஆயிரம் ரூபாய் பேசியாச்சு. கச்சேரியில சுந்தர்ராஜன் பாட, கூட்டமே எந்திருச்சு ஆட ஆரம்பிச்சிருச்சு. எங்களுக்கு அன்பளிப்பு மட்டும் 3 ஆயிரம் ரூபாயை தாண்டி போகுது. அன்பளிப்போட பெயரைச் சொன்னால், பாட்டோட சேத்து, அந்தப் பெயரை போட்டுப் பாடுவார் சுந்தர்ராஜன். 'என் பேரா, உன் பேரா’னு கூட்டத்துக்குள்ள சண்டையாகி, கச்சேரியே கலவரமாகிடுச்சு.

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் குடும்பத்தினர்
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் குடும்பத்தினர்

இந்த மாதிரி எப்பவாது நடக்கும். அந்த சமயம், எங்களை பாதுகாப்பா கூட்டத்துல இருந்து வெளிய கொண்டுவரணும்னு நினைப்பார். அன்னைக்கும் அதே மாதிரி, யாருக்கும் எதுவும் ஆகாம, கேரளாவில் இருந்து எங்களை ஊருக்குக் கூட்டிவந்தார். அந்த சம்பவம் இப்பவும் கண்ணுக்குள்ளையே இருக்கு” என்றார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது தேக்கம்பட்டி கிராமம். சுந்தர்ராஜனின் குடும்பத்தினர் சந்திக்க அங்கே சென்றோம். மாசி மாத திருவிழாவிற்காக, மைக் செட் கட்டும் வேலைகள் ஊருக்குள் மும்முரமாக நடந்துவந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

”எங்க அப்பாவுக்கு என்னையும் சேத்து 6 பொம்பளப் புள்ளைங்க, ஒரு பையன். நான்தான் மூத்த பொண்ணு. எல்லாருக்கும் நல்லபடியா கல்யாணம் முடிச்சு வைக்கவே அவருக்கு ஆயிசு சரியா இருந்துச்சு. ஆரம்ப காலத்துல, 80 ரூபாய் சம்பளத்துக்கு இந்த ஏரியா போஸ்ட் மாஸ்டரா தான் வாழ்க்கையை ஆரம்பிச்சாரு. பாட்டு பாடுறதுல இருந்த ஆர்வத்தால, கிடைக்குற நேரத்துல, நாடகம், பாட்டுக் கச்சேரினு போவார். பக்கத்து ஊரான ஒக்கரப்பட்டி ரங்கசாமி வாத்தியார் கிட்ட தான் முறையா பாட்டு கத்துகிட்டார். எங்க அம்மாவும் அவருக்கு ரொம்ப சப்போர்ட்டா இருப்பாங்க. வீட்ல எப்பவுமே பாட்டு சத்தமாதான் இருக்கும். மதுரையில போய், பாட்டு கேசட் போட்டதுக்கு அப்புறம்., மலேசியா, சிங்கப்பூர், பாம்பே’னு நிறைய கச்சேரிக்கு அவரை கூப்பிட்டு போனாங்க. உளவாளி படத்துல ’மொச்சக்கொட்ட பல்லழகி…’ பாட்டு பாடுனார்.

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் மனைவியுடன்...
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் மனைவியுடன்...

அதுக்கு முன்னாடியே, ‘புளியங்கொட்ட பல்லழகி’னு அவர் பாட்டு பாட்டோட மெட்டுலையே அந்தப் பாட்டையும் பாட்டுனார். அதுக்கப்புறம் தான், எங்க அப்பா ரொம்ப பிரபலம் ஆனார். அதே நேரத்துல அவருக்கு உடல்நிலை சரியில்லாம போயிருச்சு. கணையத்துல கேன்சர் வந்துச்சு. சம்பாதிச்சு வச்சத எல்லாமும், அவரோட மருத்துவ செலவுக்கே சரியாப் போச்சு. என் தம்பி கச்சேரிக்கு போக ஆரம்பிச்சப்ப, ‘இந்த தொழில் வேண்டாம்டா… நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். இனி யாரும் பாடக் கூடாது’னு சொல்லிட்டார். இப்ப, எங்க கிட்ட அவர் பாடுன கேசட்டுகளைத் தவிர எதுவுமே இல்ல. இது தான் எங்க நிலைமை!” என ஏக்கத்தோடு பேசினார் கலையரசி.

“தமிழ்நாட்டுல, எங்க அப்பா பாடாத ஊரே இல்லைனு சொல்லலாம். தெம்மாங்கு பாடல்கள் தான் பாடுவார். அதுலையும் பல வகை இருக்குனு சொல்வார். இதுவரை 300 பாட்டுக்கு மேல பாடியிருக்கார். ‘அங்கே இடிமுழங்குதே…’ என்ற கருப்பசாமி பாட்டு ஒளிக்காத திருவிழாவே இல்லைனு சொல்லலாம். ஆனால், இன்னைக்கு டிவி நிகழ்ச்சிகளில் பாடுறவுங்களும் சரி, திருவிழா மேடைகளில் பாடுறவுங்களும் சரி, எங்க அப்பாவோட பாட்டை பாடிட்டு, அவங்க எழுதி பாடுன மாதிரி பேசுறாங்க. அந்த பாடல்களை அவர் எழுதி பாடும் போது, இவங்க பிறந்திருக்கவே மாட்டாங்க. இதெல்லாம் பாக்கும் போது ரெம்ப கஷ்டமா இருக்கும். பாட்டு எழுதி, மேளத்துக்கு ஆள் பிடிச்சு தான் மதுரை ராம்ஜி ஸ்டூடியோவுக்கு போவார். தன்னோட பாட்டு கேசட்டுல வருதுனு ரொம்ப சந்தோசமா இருப்பார். அதனாலேயே கனிசமான தொகைக்கு, பாட்டு பாடிட்டு வருவார். இப்பலாம், பாட்டுக்கு, குரலுக்கு, மெட்டுக்கு’னு ராயல்டி கேக்குறாங்க. அதைப் பத்தியெல்லாம் எங்களுக்கு தெரியாதுங்க. நாங்க அந்த அளவு விவரமான ஆளுங்களும் இல்லை. இந்த பாட்டு, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடுன பாட்டு’னு சொல்லிட்டு பாடுங்க’னு தான் கேக்குறோம்.” என்று அழுத்தமாக பேசினார் சுந்தர்ராஜனின் மகன் கர்ணன்.

சமீபத்துல, கர்ணன் பட பாட்டுல, உங்க அப்பா பெயர் போட்டிருப்பதும், அதனால் எழுந்த சர்ச்சை பற்றியும் தெரியுமா? என அவரிடம் கேட்டோம். “நல்லாவே தெரியும். எங்க அப்பா இறந்து 18 வருசமாச்சு. ஒவ்வொரு திருவிழாவுலையும் எங்க அப்பா குரல்தான் கேக்குது. ஆனால், ஒரு தடவை கூட அவர் பெயரை நாங்கள் கேட்டது இல்ல. ஆனால், முதல் முறையா, அவரோட பெயரை போட்டு மரியாதை செஞ்சது எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. இயக்குநர் மாரிசெல்வராஜ் என்னிடம் போனில் பேசினார். ’என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்க...’ என்றார். அந்த வார்த்தையே போதும்.” என்றார் கர்ணன்.

’அங்கே இடிமுழங்குதே… கருப்பசாமி’ என திருவிழா மைக் செட் ஒளிக்க, தேக்கம்பட்டியில் இருந்து புறப்பட்டோம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism