பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கடல் அலையைத் தழுவும் காற்றின் அலை!

நமது முன்னேற்றத்துக்கான வானொலி’
பிரீமியம் ஸ்டோரி
News
நமது முன்னேற்றத்துக்கான வானொலி’

பண்பலை என்றாலே மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பேசும் தொகுப்பாளர்கள், கொஞ்சம் சுமாரான நகைச்சுவை, கொஞ்சம் சமூக அக்கறை என்றாகிவிட்டது.

னால் இவற்றிலிருந்து தனித்து நிற்கிறது ஒரு பண்பலை. கடலோடிகளுக்காகக் கடலோடிகளால் நடத்தப்படும் `கடல் ஓசை 90.4 எப்.எம்’.

மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோவை தலைவராகக்கொண்டு, மீனவர்கள் நலனுக்காக உருவானது, `பாம்பன் நேசக்கரங்கள் அறக்கட்டளை’. இந்த அறக்கட்டளையின் சார்பில் மீனவர்களுக்காக தொடங்கப்பட்ட சமுதாய வானொலி இது. 2016 ஆகஸ்ட் 15-ல் தொடங்கப்பட்ட இந்தச் சமுதாய வானொலி, இப்போது நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

கடல் அலையைத் தழுவும் காற்றின் அலை!

`நமது முன்னேற்றத்துக்கான வானொலி’ என்ற டேக்லைனுடன் இயக்கிவரும் 10 பேரும், `கோடை எப்ஃஎம்’ பண்பலையில் பணியாற்றிய சோமாஸ் கந்தமூர்த்தியிடம் பயிற்சிபெற்ற மீனவ சமுதாய இளைஞர்கள். அவர்களில் ஒருவரான சேலஸ், எம்.காம். பட்டதாரி. பாம்பன்காரர். `கடல் ஓசை’ தொடங்கப்பட்டதிலிருந்து தொகுப்பாளினியாக இருப்பவர். காலை 7 மணி முதல் 9 மணி வரை ஒலிபரப்பாகும் `தண்டோரா’ நிகழ்ச்சியில், அன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை, காற்றின் வேகம், கடலின் தட்வெப்பம் என இவர் அளிக்கும் பல்வேறு அத்தியாவசிய தகவல்கள், கடல் அலைகளைக் கடந்து மீனவர்களைச் சென்றடைகிறது. தகவல்களுக்கு இடையே மண்ணின் மைந்தர்களான மீனவர்கள் எழுதி இசையமைத்துப் பாடும் பாடல்களும் ஒலிபரப்பாகின்றன.

மீனவர்களின் வாழ்விடங்கள், கடற்கரைப் பகுதிகளுக்குச் சென்று கடல் மற்றும் தொழில் சார்ந்த அனுபவங்களைப் பதிவுசெய்யும் மற்றொரு தொகுப்பாளர் லெனின். சாமானியர்கள் முதல் சக்சஸ் மனிதர்கள் வரை அடையாளம் கண்டறிந்து, வாரம் ஒரு முறை ‘உள்ளூர் நாயகர்கள்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் அறியச்செய்கிறார். `மீனவ நண்பன்’, `சமுத்திரம் பழகு’ போன்ற நிகழ்ச்சிகளின் மூலம், மீனவர்கள் தொடர்புடைய நலத்திட்டங்கள், அன்றைய தினம் எந்தப் பகுதியில் எந்த மீன் கிடைக்கும், மீனவர்களுக்கான அரசு அறிவிப்புகள் போன்றவற்றையும், கடல் பற்றி பல்வேறு தகவல்களையும் கலகலப்பான குரலில் சுவாரஸ்யமாக அளிக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங்

நாம் அங்கே சென்றபோது, ‘ஏலோ ஏலோ ஈரோட்டி வாங்கு... வாங்குடா தோழா வளர்ந்தா தருவேன் தேங்காயும் மிளகும் தெறிபட்ட பாக்கும்... மஞ்சள்-இஞ்சியும் மணமுள்ள செம்பகமும்... செம்பக வடிவே திருமுடிக்கு அழகு’ எனப் பாடிக்கொண்டிருந்தார் ஒருவர்.

‘`வயற்காட்டு பணியில் ஈடுபடும் பெண்களுக்கு தனிப் பாடல்கள் இருப்பது போல, கடலோடிகளுக்கும் தனிப் பாடல்கள் உண்டு. ‘அம்பா பாடல்’ என அழைக்கப்படும் அந்தப் பாடல்கள், கடலில் போட்ட வலைகளை இழுக்கும்போதும், படகினை கரையில் ஏற்றி வைக்கும்போதும் சோர்வு தெரியாமல் இருக்கப் பாடுவார்கள்’’ என்கிறார், பல்வேறு பாடல்களை எழுதி, மெட்டமைத்துப் பாடிவரும் மீனவரான தர்மபுத்திரன்.

 `நீங்கள்
கேட்டுக் கொண்டிருப்பது கடல் ஓசை 90.4... இது மீனவர்கள் முன்னேற்றத்துக்கான வானொலி’
`நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது கடல் ஓசை 90.4... இது மீனவர்கள் முன்னேற்றத்துக்கான வானொலி’

கடல் ஓசை சமுதாய வானொலியின் நிலையப் பொறுப்பாளர் காயத்ரி உஸ்மான். ‘`நான் ஒரு சவுண்ட் இன்ஜினீயர். சென்னையில் ஹலோ எஃப்.எம்., துபாயில் `ரேடியோ சலாம்’ ஆகிய பண்பலைகளில் வேலை செய்திருக்கிறேன். நாம் பார்க்கும் வேலையை சுவாரஸ்யமாகத் தொடர, புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அப்படியான புதிய தேடலே இந்தக் கடல் ஓசையில் இணைத்தது. கடலோடிகள் எனக்குத் தினம் தினம் ஆச்சர்யங்களை அளித்துவருகிறார்கள்.

கடல் அலையைத் தழுவும் காற்றின் அலை!

கடலைப் பற்றி புரிந்துகொள்வதோடு கடலோர மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் பணியாற்றுகிறோம் என்ற ஆத்ம திருப்தி கிடைக்கிறது. மீனவ மக்களின் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறேன். 11 பேர் பணியாற்றுகிறோம். ‘கடல் ஓசை’ மட்டும்தான் மீனவர்களுக்கு மட்டுமேயான சமுதாய வானொலியாக உள்ளது’’ என்கிறார்.

`நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது கடல் ஓசை 90.4... இது மீனவர்கள் முன்னேற்றத்துக்கான வானொலி’
சேலஸ்
சேலஸ்

``மீனவர்களின் தொழில் குறித்த தகவல்களைத் தாண்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும், கடலின் தூய்மைக் காவலனாக விளங்கும் ஆமைகள், மீன் வளங்களையும் பாதுகாக்கும் அரணாக இருக்கும் பவளப்பாறைகள், தீவுகள் குறித்த விழிப்புணர்வுத் தகவல்களையும் பரிமாறுகிறோம். மீனவர்களது வாழ்க்கை முறை, பெண் கல்வி எனப் பன்முகம்கொண்ட நிகழ்ச்சிகளையும் அளிக்கிறோம். மீனவ சமுதாயத்தின் சில குடும்பங்களில் இன்னமும் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லை. 17 வயது முடிந்ததுமே திருமணம் நடத்திவிடுகிறர்கள். எனவே, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் விஷயங்களில் அக்கறையோடு இயங்கிவருகிறோம். இதனால், பாம்பன் மக்கள் எங்களோடு ஐக்கியம் ஆகிவிட்டனர். நிறைய பேர் எங்களைத் தொடர்புகொண்டு, தங்களின் பாரம்பர்ய பழக்கங்கள், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். மீனவ கிராமப் பெண் பிள்ளைகள் பலரும் சூழலியல் சார்ந்த விஷயங்களை வானொலியில் பேசிவருகிறார்கள். அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.250 தருகிறோம். ஒரு மாதத்தில் 10 நிகழ்ச்சிகள் செய்தால், அவர்களுக்கு 2,500 ரூபாய் வரை கிடைக்கும். இதன்மூலம் அவர்களுக்கு சிறு வருவாயையும் ஏற்படுத்தித் தருகிறோம்’’ என்கிறார் காயத்ரி உஸ்மான்.

லெனின்
லெனின்

இந்த சேவைக்கான அங்கீகாரமாக, இந்தியச் சமுதாய வானொலிகள் கூட்டமைப்பின் விருதையும் பெற்றுள்ளார்கள்.

`நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது கடல் ஓசை 90.4... இது மீனவர்கள் முன்னேற்றத்துக்கான வானொலி’ என்ற குரல், தீவுப் பகுதிக்குள் 10 கிலோமீட்டர் முதல், தீவுக்கு வெளியே இருமேனி கடல் பகுதி வரை வீசிக்கொண்டிருக்கிறது.