Published:Updated:

`தங்கச் சங்கிலிலாம் கொடுத்தார் ஜெயலலிதா; இப்போ...?'- தவிக்கும் ஆர்க்கெஸ்ட்ரா கலைஞர்கள்

இசை நிகழ்ச்சியில் அஜித்
இசை நிகழ்ச்சியில் அஜித்

"இசை நிகழ்ச்சியை ரசிச்சுக் கேட்ட ஜெயலலிதா, கடைசியில மேடையேறினார். தன்னோட தங்கச் சங்கிலியை ஒரு பாடகிக்கு அணிவித்து பெருமைப்படுத்தினாங்க."

`சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்...’

`கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்...’

`கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட...’

`ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...’

- இதுபோன்று, மேடை இசைநிகழ்ச்சிகளை மையப்படுத்திக் காட்சிப்படுத்தப்பட்ட தமிழ் சினிமா பாடல்கள் ஏராளம். திரைப்படப் பாடல்களை ஒலி, ஒளி வடிவில் கேட்டு ரசிப்பதைவிடவும், ஏராளமான இசைக்கலைஞர்களுடன் ஒரு பாடகர் பாடுவதை நேரில் கண்டு ரசிக்கும் அனுபவம் அலாதியானது. திரைமறைவில் மட்டுமே ஒலித்த பின்னணிப் பாடகர்களின் குரலை, வெகுஜன ரசிகர்கள் கூட்டத்துக்கு மத்தியில் நேரடியாக ஒலிக்கச் செய்தவர்கள் மெல்லிசைக் குழுவினர்.

பி.சுசீலா - எஸ்.ஜானகி
பி.சுசீலா - எஸ்.ஜானகி

மக்களை தன்வசப்படுத்தி இசைமழையில் ரசிகர்களை நனையச் செய்த இந்த மெல்லிசைக் குழுக்களுக்கு, தொலைக்காட்சிகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்தப் பின்னர் படிப்படியாக வரவேற்பு குறையத் தொடங்கியது.

இருப்பினும், திருமண நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் இசைக் கச்சேரிகளைத் தொடர்ந்து நடத்திவந்தனர். நேரடியாக 25,000 கலைஞர்கள் உட்பட ஒரு லட்சம் பேர் இந்தத் தொழிலை நம்பி வாழ்கின்றனர். டி.வி இசை நிகழ்ச்சிகள், சமூக வலைதளங்கள், ராயல்டி பிரச்னைகள் எனப் பலமுனை சவால்களை மீறியும் இடைவிடாமல் இசை மழை பொழிந்தவர்கள், கொரோனா பாதிப்பால் முழுவதுமாக முடங்கிப்போய் உள்ளனர். மூன்று மாதங்களாகத் தொழில் இன்றி, வருமானம் இன்றி வாழ்வாதாரம் இல்லாமல் தவித்துவருகின்றனர். தங்கள் தொழிலுக்கான எதிர்காலம் குறித்த அச்சம் இவர்களைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

பி.சுசீலா - உஷா உதூப்
பி.சுசீலா - உஷா உதூப்

சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கான இசைக்குழுக்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இருப்பினும், சாதகப் பறவைகள், லஷ்மன் ஸ்ருதி, கணேஷ் கிருபா, திண்டுக்கல் அங்கிங்கு ஆகிய இசைக் குழுக்கள்தான் இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன. 30 ஆண்டுக்காலமாக இயங்கிவரும் `சாதகப் பறவைகள்’ இசைக்குழுவின் உரிமையாளர் சங்கர் ராம், தங்கள் துறையின் தற்போதைய நிலை குறித்து ஆதங்கத்துடன் பேசினார்.

``பலதரப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கச்சேரி செய்வோம். உள் அரங்க நிகழ்ச்சிகளில் மெலோடி சினிமா பாடல்கள், தனி இசைப் பாடல்கள், கோயில் திருவிழாக்களில் பக்திப் பாடல்கள், ஸ்டார் ஹோட்டல் நிகழ்ச்சிகளில் வெஸ்டர்ன் வகை துள்ளல் இசைப் பாடல்கள், சபாக்களில் கர்னாட்டிக் பாடல்கள்னு எல்லாவகை பாடல்களையும் பாடுவோம்.

இசை நிகழ்ச்சியில் கமல்ஹாசன்
இசை நிகழ்ச்சியில் கமல்ஹாசன்

இதுல, வி.ஐ.பி வீட்டு நிகழ்ச்சிகளிலும் தனியார் நடத்தும் பெரிய நிகழ்ச்சிகளிலும் மட்டுமே லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும். அப்படியான நிகழ்ச்சிகளில் பிரபலமான பின்னணிப் பாடகர்களை அழைப்போம். அதிக இசைக் கலைஞர்களையும் பயன்படுத்துவோம். இதனால் செலவுகள் அதிகமாகி, இசைக்கலைஞர்களுக்குச் சில ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தாலே பெரிய விஷயமா இருக்கும்.

ஆண்டுதோறும் தை மாதப் பிறப்பை ஆவலுடன் எதிர்பார்ப்போம். அப்போதிலிருந்து பண்டிகை, கோயில் திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள்னு நிகழ்ச்சிகள் அதிகளவில் நடக்கும். அதனால, எங்களுக்கும் மாசத்துக்குச் சராசரியா ஏழு கச்சேரிகள் இருக்கும். சில மாசங்கள்ல அதைவிடவும் அதிகம் இருக்கும். ஓர் இசைக் கலைஞருக்கு மாதம் 20 – 30,000 ரூபாய்வரை வருமானம் கிடைக்கும். லாக்டெளன் அறிவிப்புக்குப் பிறகு கடந்த மூணு மாசமா ஒரு கச்சேரிகூட இல்லாம சும்மாதான் இருக்கோம்.

சங்கர் மகாதேவன் - ஹரிஹரன்
சங்கர் மகாதேவன் - ஹரிஹரன்

இப்பவே திருமண நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மட்டும்தான் அனுமதி கொடுக்கறாங்க. அதனால் எந்த கல்யாணத்திலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படறதில்லை. லாக்டெளன் தளர்வுக்குப் பிறகு மற்ற துறைகள் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பலாம். ஆனா, பொதுமக்கள் அதிகம் கூடும் எந்த விசேஷங்களும் வழக்கம்போல நடக்காது. `இனி நடக்கும் கல்யாண நிகழ்ச்சிகளிலும் இசைக் கச்சேரி செய்ய அரசு அனுமதிக்குமா? மக்கள் விரும்புவாங்களா? எங்களுக்கு வேலைவாய்ப்பு இருக்குமா?’ன்னு நிறைய கேள்விகளுக்குப் பதில் தெரியாம எங்க துறையினர் அனைவருமே கலக்கத்தில் இருக்கோம்.

வயலின், மிருதங்கம், நாகஸ்வரம், புல்லாங்குழல், தபேலா, கீபோர்டு, பியானோ, டிரம்ஸ் வாசிக்கிற கலைஞர்கள், பாடகர்கள் உட்பட எங்க இசைக்குழுவுல மட்டும் 50 இசைக்கலைஞர்கள் முழுநேரமா வேலை செய்றாங்க. இவங்க எல்லோருக்குமே இப்போ வேலை இல்லை. ரொம்பவே சிரமத்துலதான் எல்லோரும் இருக்கோம். இதே நிலைதான், தமிழகத்திலுள்ள மற்ற இசைக்குழுவிலுள்ள கலைஞர்களின் நிலையும்” என்கிறார் தளர்வான குரலில்.

சங்கர் ராம்
சங்கர் ராம்

இசைக் கருவிகளின் பின்னணி இசையைப் பதிவு செய்து, அதை சி.டி மூலமாக போட்டு, மேடையில் ஓரிரு பின்னணிப் பாடகர்கள் மட்டும் பாடுவார்கள். `கரோக்கி டிராக் சிஸ்டம்’ என்று அழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பம் இப்போது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், திருமண ஏற்பாட்டாளர்களுக்கான (வெடிங் பிளானர்) வரவேற்பும் அதிகரித்துள்ள நிலையில், இசை நிகழ்ச்சிகள் உட்பட திருமணத்தில் நடைபெறும் அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே ஏற்பாடு செய்கின்றனர். டிக்கெட் விநியோகம் இல்லாவிட்டாலும்கூட, ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் எல்லா இசைநிகழ்ச்சிகளுக்கும் ராயல்டி தொகை கட்டவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், செலவுகளைக் குறைக்க ஸ்டார் ஹோட்டல் நிகழ்ச்சிகளில் இசைக்கலைஞர்கள் யாருமே இல்லாமல் டி.ஜே சிஸ்டம் முறையில் வெறும் ஆடியோ பதிவாக பாடல்களை ஒலிக்கச் செய்யும் முறை அதிகரித்துவிட்டது. இதுபோன்ற சிக்கல்களால், தனிக்குழுவாகச் செயல்பட்டுவரும் மேடை இசைக்குழுக் கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

"1990-களில் எங்க துறைக்குப் பெரிய வரவேற்பு இருந்துச்சு. டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், சித்ரா, சங்கர் மகாதேவன், ஹரிஹரன் முதல் இப்போதைய பிரபல பின்னணிப் பாடகர்கள்வரை எங்க இசைக்குழுவில் பாடாதவர்களே இல்லை. அவங்களுக்கும் மக்களுக்கும் இடையே நேரடி பிணைப்பை ஏற்படுத்தியது, எங்களைப்போன்ற இசைக்குழுக்கள்தாம். அவங்க கலந்துகிட்டு பாடும் இசை நிகழ்ச்சிகள்ல கூட்டம் நிரம்பி வழியும். எங்க தொழிலுக்கும் பெரிய மதிப்பு இருந்துச்சு. அப்போல்லாம் ஒரே நாள்ல பலக் கச்சேரி செய்து பரபரப்பா வேலை செய்தோம். இசையமைப்பாளர் இளையராஜா சாரின் மகள் பவதாரணியின் கல்யாணத்தின்போது நாங்கதான் இசைக்கச்சேரி செய்தோம். காலையில இருந்து இரவுவரை இடைவிடாமல் செஞ்ச அந்தக் கச்சேரியை மறக்கவே முடியாது.

வீட்டைச் சுற்றி இயற்கை விவசாயம்... தேவயானி - ராஜகுமாரனின் லாக்டௌன் பொழுதுகள்!

மறைந்த ஜெயலலிதா அம்மா முதலமைச்சராக இருந்தபோது அவங்க கலந்துகிட்ட ஒரு நிகழ்ச்சியில நாங்க இசைக் கச்சேரி செய்தோம். ரசிச்சுக் கேட்டவங்க, கடைசியில மேடையேறி தன்னோட தங்கச் சங்கிலியை ஒரு பாடகிக்கு அணிவித்து பெருமைப்படுத்தினாங்க. தொடர்ந்து அவரும் கலைஞர் கருணாநிதியும் முதல்வர்களாக இருந்தபோது நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் நாங்களும், வேறுபல இசைக்குழுவினரும் கச்சேரி செய்தோம். இப்படிச் சிறப்பாக இருந்த எங்க தொழிலின் இன்றைய நிலை ரொம்பவே கவலைக்குரியதாக இருக்கு.

தொலைக்காட்சி ரியாலிட்டி இசை நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு அதிகமான பிறகு, எங்க இசை நிகழ்ச்சிகளுக்கான வரவேற்பும், வெளிநாட்டுக் கச்சேரி வாய்ப்புகளும் கணிசமாகக் குறைஞ்சுடுச்சு. எங்களைப் போன்ற இசைக்குழுக்களின் நலன் கருதி, `கரோக்கி டிராக்ஸ் சிஸ்டம்’ முறையில் பிரபல மூத்த பின்னணிப் பாடகர்கள் யாரும் பாடமாட்டாங்க. இதைப்போல, இளைய தலைமுறை பாடகர்களும் கடைப்பிடிச்சா இசைத்துறை ஆரோக்கியமா இருக்கும்.

இசைக்கலைஞர்கள்
இசைக்கலைஞர்கள்

சினிமா பாடல் இசைப் பதிவை மக்களால் நேரடியா பார்க்க முடியாது. டி.வி ரியாலிட்டி இசை நிகழ்ச்சிகள், யூடியூப்னு பல தளங்கள்ல பாடல்களைக் கேட்டாலும், நேரடியா இசை நிகழ்ச்சியைப் பார்க்கிற அனுபவம் வேறு எதிலும் கிடைக்காது. இருப்பினும், டிக்கெட் வாங்கி இசை நிகழ்ச்சியைப் பார்க்க வருவதற்கான ஆர்வம் ரசிகர்கள்கிட்ட இப்போ குறைஞ்சுட்டே வருது. இதுபோன்ற சவால்களை மீறி, எங்க அடையாளத்தைத் தக்கவெச்சுக்க சென்னையிலுள்ள காமராஜர் அரங்கம் மாதிரியான பெரிய அரங்கத்துல அவ்வப்போது கச்சேரி நடத்தறோம்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் வரையறைக்குள்கூட நாங்க இல்லை. இதனால் மற்ற துறை சார்ந்த தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் அடிப்படை சலுகைகள்கூட எங்களுக்குக் கிடைக்கிறதில்லை. இசை நிகழ்ச்சிகள் நடந்தால்தான் எங்களுக்கு வருமானம்.
சங்கர் ராம்

டிக்கெட் விநியோகம் செஞ்சு ரசிகர்கள் வரக்கூடிய இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளுக்கு ஐ.பி.ஆர்.எஸ் (Indian performing rights society) அமைப்புக்கு ராயல்டி கட்டவேண்டிய நிலை உருவானதால எங்களுக்கு வருமானம் கணிசமாகக் குறைஞ்சுடுச்சு. இந்த ஐ.பி.ஆர்.எஸ் அமைப்பு வரையறை இல்லாமல் ராயல்டி தொகையை வசூலிப்பதால், ஸ்டார் ஹோட்டல்கள்ல எங்களுக்குச் கச்சேரி வாய்ப்புகள் கிடைக்கிறதேயில்லை. இதெல்லாம் நகரப் பகுதியைச் சார்ந்த பிரச்னைனா, கிராமப்புறத்துல நிலைமை இன்னும் மோசம்” என்று வருத்தத்துடன் கூறும் சங்கர் ராம், கிராமப்புறங்களில் எதிர்கொள்ளும் சவால்களையும் பகிர்ந்தார்.

`மேடை மெல்லிசைத் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம்’ என்ற பதிவுசெய்யப்பட்ட அமைப்பாக இந்த இசைக்குழுக் கலைஞர்கள் செயல்படுகின்றனர். இதில், இத்துறையிலுள்ள நேரடி இசைக்கலைஞர்கள் 25,000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இசை நிகழ்ச்சியில் ஆன்ட்ரியா
இசை நிகழ்ச்சியில் ஆன்ட்ரியா

"தமிழகம் முழுக்க கோயில் திருவிழாக்களில் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்துவோம். அந்த இசை நிகழ்ச்சியைப் பார்க்க சுத்துவட்டார மக்கள் குடும்பத்தோடு வண்டிகட்டிட்டு வந்து ரசிச்ச காலமெல்லாம் மறக்க முடியாதவை. இப்ப நிலைமை படுமோசம். தங்களோட வேலைகளை முடிச்சுட்டு, மக்களுக்கு இரவு 8 – 9 மணிவாக்கில்தான் ஓய்வுநேரம் கிடைக்கும். அப்பதான் கச்சேரி பார்க்கவும் வருவாங்க. அதற்கேற்ப எங்க இசை நிகழ்ச்சிகளை இரவு 9 மணிக்குமேல ஆரம்பிச்சு நள்ளிரவு ஒருமணிவாக்கில் முடிப்போம். எந்த ஊரா இருந்தாலும் அங்க ஓரிரு நாள்தான் எங்க இசைக்கச்சேரி நடக்கும். எந்த வகையிலும் எங்க நிகழ்ச்சிகள்ல ஆபாசம் இருக்காது. குழந்தைகள் முதல் பெரியவங்கவரை கேட்டு ரசிக்கிற மாதிரியான நல்ல பாடல்களை மட்டும்தான் பாடுவோம்.

ஆனா, `ஆடலும் பாடலும்’ போன்ற மற்ற நடனக் குழுவினரால் ஏற்படும் பிரச்னைகளால் எங்களுக்கும் நேரக்கட்டுப்பாடுகளை விதிச்சிருக்காங்க. இரவு 10 மணிவரைதான் நிகழ்ச்சி நடத்த முடியும். இதனால திட்டமிட்டபடி போதிய நேரத்துக்கு இசை நிகழ்ச்சி நடத்த முடியாம சிரமப்படறோம். அதிக இரைச்சலை ஏற்படுத்தாத நவீன இசைக்கருவிகளைப் பயன்படுத்தித்தான் நிகழ்ச்சிகள் செய்கிறோம். எனவே, இசை நிகழ்ச்சிகள் நடத்த எங்களுக்குக் கூடுதலான நேரம் ஒதுக்கணும்னு தமிழக அரசிடம் கோரிக்கை வெச்சிருக்கோம்” என்கிறார்.

இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்

`மேடை மெல்லிசைத் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம்’ என்ற பதிவுசெய்யப்பட்ட அமைப்பாக இந்த இசைக்குழுக் கலைஞர்கள் செயல்படுகின்றனர். இதில், இத்துறையிலுள்ள நேரடி இசைக்கலைஞர்கள் 25,000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்தச் சங்கத்தின் தலைவராக ‘லஷ்மன் ஸ்ருதி’ லஷ்மனும், மாநில ஒருங்கிணைப்பாளராக சங்கர் ராமும் செயல்படுகின்றனர். தங்கள் துறையினருக்குத் தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது இந்தக் கலைஞர்களின் நீண்டகால கோரிக்கையாகவே இருக்கிறது.

"அமைப்புசாரா தொழிலாளர்கள் வரையறைக்குள்கூட நாங்க இல்லை. இதனால் மற்ற துறை சார்ந்த தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் அடிப்படை சலுகைகள்கூட எங்களுக்குக் கிடைக்கிறதில்லை. இசை நிகழ்ச்சிகள் நடந்தால்தான் எங்களுக்கு வருமானம். இந்தத் தொழிலைவிட்டால் வேறு எந்தத் தொழிலும் எங்க துறையினருக்குத் தெரியாது. இதுக்காக தொடர்ந்து தமிழக அரசுகிட்ட வலியுறுத்திக்கிட்டேதான் இருக்கோம். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டால்தான் வருங்காலங்களில் எங்க தொழிலைத் தொடர்ந்து நடத்தமுடியும். இந்தத் துறையிலுள்ள கலைஞர்களின் வாழ்வாதாரத்தையாவது காப்பாத்த முடியும். இனி இந்தத் தொழிலுக்குப் புதுத் தொழிலாளர்களின் வருகை இருக்காது என்பது எங்களுக்கு மிகப்பெரிய வேதனை.

இசை நிகழ்ச்சியில் ஆன்ட்ரியா
இசை நிகழ்ச்சியில் ஆன்ட்ரியா

கொரோனா அச்சம் நீங்கும்வரை எங்களால கச்சேரி செய்ய முடியாது. எனவே, தொழில்நுட்ப உதவியுடன் ஆன்லைன் வாயிலான இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கோம். சினிமா, அரசியல் உட்பட எந்தக் கூட்டமா இருந்தாலும் பார்வையாளர்களுக்குச் சோர்வு ஏற்படாமல் இருக்க எங்களைப்போன்ற இசைக்குழுவினரின் பங்களிப்பு அவசியம். எனவே, எங்க தொழில் அழியாமல் நடக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கணும்” என்று வேண்டுகோளுடன் முடித்தார் சங்கர் ராம்.

அடுத்த கட்டுரைக்கு