Published:Updated:

கேரள ராப் பாடகர் வேடன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: கலை வேறு, கலைஞன் வேறா?!

வேடனின் மீது பெண்கள் சிலர் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது, தொடர்ந்து இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஒருங்கே ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு சுயாதீனக் கலைஞராக உருவெடுத்து, மலையாளச் சூழலில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக வளர்ந்து வந்த பாடகர் வேடன் மீது பெண்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளைச் முன்வைத்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் வேடன்; ஒடுக்குமுறை, சாதியம், மதம், ஆண்டைகள் & அடிமைகள், நிலம் & கூலி ஆகியவைற்றைக் கடுமையாகச் சாடும் காத்திரமான வரிகளைக் கொண்டு இவர் வெளியிட்ட பாடல்கள் உடனடிப் புகழ்பெற்றன.

“மகிழ்ச்சியுடன் வாழ உரிமை உண்டு. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று நினைப்பவர்களுக்கும், எப்போதும் விளிம்பு நிலையிலேயே வைக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இந்தப் பாடல் சமர்ப்பிக்கப்படுகிறது” என்ற அறிமுகத்தோடு வெளியான ‘Voice of the Voiceless' என்ற பாடலின் மூலம் கேரளத்துக்கு வெளியேயும் கவனம் பெற்றார் வேடன்; அன்றாட வாழ்வின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அறைகூவலாக அமைந்த ‘வா’ என்ற பாடல், இவர் மீதான கவனத்தையும் எதிர்பார்ப்பையும் மேலும் அதிகப்படுத்தியது.

வேடன்
வேடன்

சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான புதுக்குரலாக ராப் இசை மூலம் வெளிப்பட்ட வேடன், பெண்கள் சிலரிடம் மோசமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. வேடனின் மீது பெண்கள் சிலர் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது, தொடர்ந்து இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஒருங்கே ஏற்படுத்தியிருக்கிறது.

வேடனால் பாதிப்புக்குள்ளான பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை Women Against Sexual Harassment என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், தன்னுடைய நடத்தைக்கு மன்னிப்புக் கோரும் விதமாகக் குறிப்பு ஒன்றைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேடன் வெளியிட்டிருந்தார்.

Sexual Harassment
Sexual Harassment
சித்திரிப்பு படம்

“இதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்; உங்கள் எல்லா விமர்சனங்களையும் நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். நேர்மையுடனும், எந்தப் பாசாங்கும் இன்றி என்னுடைய ஆழ்ந்த மன்னிப்பை உரித்தாக்குகிறேன். என்னுடைய தவறுகளைத் திருத்திக் கொள்ளும் விதமாக அதிகபட்ச பொறுப்புணர்வுடன் இதைப் பதிவிடுகிறேன்” என்று வேடன் அந்தக் குறிப்பில் கூறியிருக்கிறார்.

மேலும், “என்னுடைய குணத்தில் கவலைகொள்ளத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நண்பர்கள் சிலர் சுட்டிக்காட்டியதன் தீவிரத்தை இப்போதுதான் உணர்கிறேன். வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட சில நிகழ்வுகள், என்னுடைய இந்த நடத்தைக்குக் காரணமாக இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்கிறேன். இப்பிரச்னையைக் களைவதற்கு உதவியை நாடப் போகிறேன், தேவையென்றால் சிகிச்சையும் எடுத்துக் கொள்வேன்” என்றும் அதில் விளக்கமளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேடனின் இந்த மன்னிப்பை ஏராளமானோர் நிராகரித்திருந்த நிலையில், நடிகை பார்வதி அந்தப் பதிவுக்கு ‘லைக்’ இட்டிருந்தார்; பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகத் தீவிரமாகக் குரல் கொடுக்கும் பார்வதி, அந்தப் பதிவுக்கு ‘லைக்’ இட்டிருந்தது இரட்டை நிலைப்பாடு என்ற ரீதியில் பார்வதியை நோக்கி விமர்சனங்கள் எழுந்தன. இதனால், பார்வதியும் ஒரு மன்னிப்புக் குறிப்பைத் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட நேரிட்டது.

“பாடகர் வேடனுக்கு எதிராகத் துணிச்சலுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பெண்கள் அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆண்கள் தங்கள் தவறுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை என்ற எண்ணத்தில் வேடனின் அந்தப் பதிவை ‘லைக்’ செய்துவிட்டேன். இது கண்டிப்பாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றல்ல. பாதிக்கப்பட்டவர்கள் மதிக்கப்படுதல் மிகவும் முக்கியம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்று பார்வதி தன்னுடைய குறிப்பில் தெரிவித்திருந்தார்.

பள்ளிகளில் தொடரும் பாலியல் அத்துமீறல்; எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?

சென்னையைச் சேர்ந்த இசை விமர்சகர் ஆர். ஸ்ரீனிவாசன் இதுகுறித்துப் பேசும்போது, “சுயாதீன இசை மீது சிறப்புக் கவனம் கொண்டிருக்கிறேன் என்ற முறையில், வேடனின் முதல் பாடலிலிருந்து அவரைக் கவனித்து வந்தேன். சுயாதீன இசையின் தீவிரம் அதில் வெளிப்பட்டது. ஆனால், இப்போது அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கின்றன. அடக்குமுறைக்கு எதிராக எழுதுகிற ஒருவர், இன்னொரு விதத்தில் பெண்கள் மீது ஒடுக்குமுறையில் ஈடுபட்டிருக்கிறார் என்பது துரதிஷ்டவசமானது! இது போன்ற சம்பவங்களுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட கலைஞர்கள் மீதான நம்பகத்தன்மை ஒட்டுமொத்தமாக அடிபட்டுப் போகிறது'' என்றார்.

ஆர். ஸ்ரீனிவாசன்
ஆர். ஸ்ரீனிவாசன்
இதுகுறித்துப் பேச வேடனைத் தொடர்புகொண்டேன். “அதைப் பற்றி பேசுவதாக இல்லை; பேசுவதற்கும் எதுவும் இல்லை. இப்போது என்றில்லை, எங்கேயும், எப்போதும் இதுகுறித்து பேச விரும்பவில்லை... அதற்கான மனநலம் என்னிடம் இல்லை. நன்றி” என்று பதிலளித்தார்.

கலைஞர்கள் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும்போது, கலையும் கலைஞனும் வேறு வேறு என்ற பேச்சும் தொடர்ந்து எழுகிறது. “பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் எல்லா துறைகளிலும் நடக்கின்றன. ஆனால், கலைஞர்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எழும்போது, கலை வேறு கலைஞன் வேறு என்ற பேச்சு எழுகிறது; கலைஞன் சமூக நீதியின் பக்கம் நிற்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் என்பதால் இந்தக் கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும், எழுதும் ஒரு எழுத்தாளர், ‘அப்படியெல்லாம் இருந்தாலும் அவர் நன்றாக எழுதுகிறார்’ என்பார்கள். சாதிய அதிகாரத்தைத் தன்னுள் புகுத்திக் கொண்ட சிந்தனையின் வெளிப்பாடே இது!” என்கிறார் குட்டி ரேவதி.

கவிஞர் குட்டி ரேவதி
கவிஞர் குட்டி ரேவதி

மேலும் தொடர்ந்த அவர், “குற்றம்சாட்டப்பட்டிருக்கும் வேடன், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக எழுதியிருப்பதாக அறிகிறோம். சாதி எதிர்ப்பின் அடிப்படையே பாலியல் அதிகாரம், படிநிலை ஆகியவற்றின் எதிர்ப்புதான். சாதிய எதிர்ப்புச் சிந்தனையைச் செயல்படுத்துபவராக இருந்திருந்தால், இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டிருக்க மாட்டார். ஆக, ஒழுக்கம் சார்ந்த ஒன்றாக மட்டும் இதைப் பார்க்காமல், சமூக நீதிக் கண்ணோட்டத்திலும் அணுக வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு