லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

“ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசையில் பாடுவது கனவு!” - மலேசிய செல்லப் பாடகியின் தமிழ்க் குரல்

சிட்டி நூர்ஹலிசா...
பிரீமியம் ஸ்டோரி
News
சிட்டி நூர்ஹலிசா...

என் குடும்ப உறுப்பினர்களைக்கொண்டே ஒரு மியூசிக் பேண்ட் வைத்திருந்த இசைக் குடும்பம்தான் எங்களுடையது. என் தாத்தா ஒரு வயலினிஸ்ட். என் இசை குரு அவர்தான். அம்மா, மாமாக்கள் அனைவரும் பாடுவார்கள்.

- க. செண்பகக்குழல்வாய்மொழி

“என்னுடைய இசை வாழ்க்கையில முக்கியமான பாடல்கள்ல ஒண்ணு... `முன்பே வா'. இரண்டு தலைமுறை கடந்தும் அந்தப் பாட்டு இப்பவும் ஹிட்டா இருக்கு. சமீபத்துலகூட மலேசிய பாடகி சிட்டி அந்தப் பாட்டை பாடினாங்க'' என்று கடந்த மார்ச் 19-ம் தேதியன்று சென்னையில் `பத்துத்தல' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னபோது, அரங்கமே அதிர்ந்தது.

ஆம், கடந்த ஜனவரி 28 அன்று மலேசியாவில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில், `சில்லுனு ஒரு காதல்' படத்தில் இடம்பெற்ற `முன்பே வா... என் அன்பே வா' என்ற பாடலை சிட்டி பாடியபோது, கிட்டத்தட்ட எழுபதாயிரம் பேர் நிறைந்த அரங்கில் எழுந்த ஆர்ப்பரிப்பும், உற்சாகக் கூக் குரல்களும் சிலிர்க்கவைத்தன.

மலேசியாவின் பட்டிதொட்டிகளில் மட்டுமல்லாது, உலக அளவில் இருக்கும் மலாய், சீன மொழி பேசும் மக்களிடை யேயும் செம வைரல். நிகழ்ச்சி முடிந்த நொடியில் இருந்து தொடர்ந்து மூன்று நாள்கள் சிட்டி நூர்ஹலிசா டாப் ட்ரெண்டிங்கில் இருந்தார். சோஷியல் மீடியாவே தெறித்தது. அனைத்து மலேசிய இந்தியர்களும் ஒரு மகிழ்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தனர்.

சிட்டி நூர்ஹலிசா...
சிட்டி நூர்ஹலிசா...

“ஏ.ஆர்.ரஹ்மான் என்ற கிரேட் கம் போஸர், உலகக் கலைஞர் முன், அவர் நிகழ்ச்சியில் பாடப்போகிறேன்... அது வும் தமிழில். அந்தச் சூழலில் என் பதற்றம் அளவேயில்லாமல் எகிறிக் கொண்டிருந்தது’’ என்று சொல்லும் சிட்டிக்கு, அந்தக் கணத்து உணர்வு இன்னும் அகலவில்லை.

டத்தோ ஸ்ரீ சிட்டி நூர்ஹலிசா (Dato’ Sri Siti Nurhaliza)... `மலேசியாவின் அடையாளம்' என்று சொன்னால் மிகையில்லை. அவர், பிரபல பாடகி மட்டுமல்ல, பிரபலமான பிசினஸ் வுமன். எல்லாவற்றுக்கும் மேலாக, மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து, இன்றைக்கு உச்சம் தொட்டிருப்பவர். அவள் விகடனுக்காக, மலேசியாவில் அவரைச் சந்தித்தோம்.

“இது நான் இந்திய ஊடகத்துக்கு அளிக்கும் முதல் பேட்டி. வணக்கம் அவள் விகடன் வாசகர்களே...’’

- பளீரென மனதைத் தொடும் சிரிப்போடு தொடங்கினார் சிட்டி.

“என் குடும்ப உறுப்பினர்களைக்கொண்டே ஒரு மியூசிக் பேண்ட் வைத்திருந்த இசைக் குடும்பம்தான் எங்களுடையது. என் தாத்தா ஒரு வயலினிஸ்ட். என் இசை குரு அவர்தான். அம்மா, மாமாக்கள் அனைவரும் பாடுவார்கள். மாமாக்கள் நடத்திய கல்யாணக் கச்சேரிகளில், நானும் ஆறு வயதிலேயே பாடத் தொடங்கி விட்டேன்’’ என்பவரின் எளிய பின்புலம், அவர் வெற்றியை இன்னும் வியக்கவைக்கிறது.

அப்பா, மலேசியாவின் பஹாங் மாநிலத்தில், காவல் துறையில் பணியாற்றியவர். ஏழு குழந்தைகள், ஒருவரின் சம்பாத்தியம் என்றிருந்த அந்தப் பெரிய குடும்பத்தின் பற்றாக்குறை சவால்களைச் சிறுமி சிட்டியும் புரிந்துகொண்டார். தன் அம்மா பலகாரங்கள், பிஸ்கட்களை விற்கத் தொடங்கியபோது, அதன் சாலையோர விற்பனைப் பிரிவு பத்து வயது சிட்டிக்கு அளிக்கப்பட்டது.

 குழந்தைகளுடன் சிட்டி நூர்ஹலிசா...
குழந்தைகளுடன் சிட்டி நூர்ஹலிசா...

``என் வயதுப் பிள்ளைகள் எல்லோரும் விளையாடிக்கொண்டிருக்கும்போது, நான் மட்டும் `குவே குவே (Kueh மலேசிய பலகாரம்)’ என்று கூவி விற்க வெட்கமாக இருக்கும். வாய்க்குள்ளேயே சொல்லிக்கொள்வேன். அனைவரும் அதைப் பார்த்து சிரித்தபடியே வாங்கிச் செல்ல, முதல் நாளே எல்லாம் விற்றுப்போனதில் உற்சாகம் தொற்றிக் கொண்டது. உடனே ஒரு ஐடியா... கூவி விற்பதையே பாடல் பயிற்சி ஆக்கினேன். ‘குவே குவே’ என்று ராகங்களில் கூவுவேன். யாராவது செல்லமாகத் தலையில் தட்டி, ‘எல்லாம் விற்றுவிட்டதே, இன்னும் என்ன..?’ என்று கேட்கும்போதுதான் ரியாலிட்டிக்கே வருவேன்’’ என்றவரிடம், ‘அந்தச் சிறுமிதான் இன்றைய தொழிலதிபருக்கு அடிப்படையா?’ என்றால், ‘`நிச்சயமாக’’ என்றவர், தன் நிறு வனம் பற்றி பகிர்ந்தார்.

“அழகு சாதனப் பொருள்கள் அதிக விலை யில்தான் தரமாகக் கிடைக்கும் என்பதை மாற்றி, எல்லா தரப்பினரும் வாங்கக்கூடிய விலையிலும் தரத்திலும் அவற்றைக் கொடுக்கக் கூடிய நிறுவனமாக எனது ‘சிம்ப்ளிசிட்டி’ நிறுவனத்தைத் தொடங்கினேன்.''

சிம்ப்ளிசிட்டி நிறுவனம், அது தொடங்கப் பட்ட 2010களிலேயே, மோஸ்ட் பிராமிசிங் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கான(SME) விருது வென்றது. ஆனால், சிட்டி, 90 களின் இறுதியில், தனது 19 வயதி லேயே, சொந்த புரொடக்‌ஷன் நிறுவனம் தொடங்கிய புலிக்குட்டிதான். ``சொந்த கால்ல நிக்கணும்கற பயிற்சி எனக்கு 10 வயதில் குவே விற்ற போதே வந்து விட்டது” என்று சொல்லிச் சிரிக்கிறார் சிட்டி.

இவருடைய இசைப் பாய்ச்சலும் பெரிது. இன்று உலகளவில் அதிகபட்ச விருதுகள் குவித்த பாடகர்கள் பட்டியலில், சிட்டி நூர்ஹ லிசாவுக்கு 27-வது இடம். `டைட்டானிக்’ புகழ் செலின் டியான் கூட, பட்டியலில் இவருக்குப் பின்தான்.

“இசைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகிவிட்டன. 16 வயதில் என் முதல் ரியாலிட்டி ஷோ வெற்றிக்குப் பிறகு, மக்களை மகிழ்விக்கப் பாட வேண்டும் என்பதுதான் மனதில் ஆழப்பதிந்து கிடக்கிறது. மலேசியாவுக்காக வெளிநாடுகளில் பாடும் போது, நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைத்துப் பாடுவேன். மலேசியாவில் என் ஆல்பத் தில் பாடும்போது, என் பெஸ்ட்டை கொடுக்க நினைப்பேன். அதுதான் இந்தப் பயணத்தில் நிறைய அவார்ட்கள் வந்திருக்கின்றன போல...’’

- மிகுந்த தன்னடக்கத்தோடு சொல்கிறார்.

புரொடக்‌ஷன் நிறுவனம், அழகு சாதன நிறுவனம் என வணிக வெற்றி யில் சிட்டி கருத்தாயிருந்தாலும், கொரோனா பாதிப்புகளில் இருந்து மீள, சிறுதொழில் வியாபாரிகளுக்கு அவர் செய்த உதவி, பெரிதும் பேசப்படுகிறது. சாலையோர உணவுக்கடை வியாபாரிகளுக்கு, தன் யூடியூப் சேனலில் இலவச ஃபுட் ரெவ்யூ செய்து, அவர்கள் தொழிலை முடக்கத்திலிருந்து மீட்கக் கை கொடுத்தார்.

``என் ஆரம்பமும் அதுதானே... எனக்கு அவர்களின் கஷ்டம் புரியும். ஆனால், ஒன்று... இன்றுவரை விதவிதமான பலகாரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன’’ எனச் சிரிக்கிறார். 2006லேயே கணவர் ஸ்ரீ காலித் மொஹமட் ஜிவாவுடன் இணைந்து தொண்டு நிறுவனத்தை தொடங்கி, தனித்து வாழும் தாய்மார்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஆதர வற்ற முதியவர்கள், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் என பலருக்கும் உதவி வருகிறார். அதற்கு நிதி திரட்ட, சிறப்பு இசைக் கச்சேரிகள் நடத்தினார். இன்று மலேசியாவின் மில்லியனர் பட்டியலில் இருக்கும் சிட்டியை மலேசியர்கள் கொண்டாட, அவரது எளிமை யும் உதவும் குணமும் முக்கியக் காரணங்கள்.

சிட்டியின் பர்சனல் வாழ்வும் சுவாரஸ்ய மானது. ``திருமணமாகி 11 வருடங்களுக்குப் பிறகுதான், என் முதல் குழந்தை சிட்டி அஃபியா பிறந்தாள். பிறகு மூன்று வருடங் களுக்குப் பிறகு பையன் அஃபால் பிறந்தான். அவனுக்கு இப்போது இரண்டு வயது. எல்லா பெண்களுக்கும் சொல்ல விரும்புவது... உங்கள் விருப்பங்கள் எதுவாக இருந்தாலும் நிறை வேறும்வரை நம்பிக்கையையும், உழைப் பையும், வாழ வேண்டும் என்ற விருப்பத்தையும் விட்டுவிடாதீர்கள்”

- உணர்ச்சிவசப்படுகிறார்.

``இன்னொரு பக்கம்... நான் பாட்டிகூட ஆகிவிட்டேன் தெரியுமா?” என்றவர், நம் குழப்பத்தை ரசித்துக்கொண்டே தொடர் கிறார். “கணவரின் குழந்தைகளையும் சேர்த்து எனக்கு ஆறு குழந்தைகள். ஆறு பேரன், பேத்திகள்கூட இருக்கிறார்கள். அழகான பெரிய குடும்பம்’’ என நிறைவாகச் சிரிக்கிறார்.

சிட்டி நூர்ஹலிசா...
சிட்டி நூர்ஹலிசா...

பேச்சு ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு மீண்டும் திரும்பியது. “சாரிடமிருந்து சர்ப்ரைஸாக ஒரு மெயில், `என் இசை நிகழ்ச்சியில் பாட விருப்பமா?’ என்று. என் கனவு மொமென்ட் அது. அதையேதான் பதிலாகவும் அனுப்பினேன். `முன்பே வா’ பாடல் சாருடைய சாய்ஸ் என்று அவர் குழு சொன்னபோது, நான் விடுமுறையில் வெளிநாட்டில் இருந்தேன். நிகழ்ச்சிக்கு சில நாள்கள் முன் நாடு திரும்பியதிலிருந்து விடாமல், கடுமையாக பிராக்டீஸ் செய்தேன். என் மகளுக்கும் பாடல் மனப்பாட மாகி எனக்கு வரிகளை எடுத்துக் கொடுக்கும் அளவுக்கு பிராக்டீஸ்.

ஏ.ஆர்.ஆர் சார் முன் சரியாகப் பாடிவிட வேண்டும் என்ற டென்ஷ னுடன் மேடையேறிய அடுத்த நொடி, எல்லாமே இசைமயம். மக் களின் ஆரவாரம், கைதட்டல்கள், உடன்பாடிய இசைக்கலைஞர்கள், கம்போஸர்கள்... என் பெஸ்ட்டை கொடுத் தேன் என்று நினைக்கிறேன். அதுதான் ஏ.ஆர்.ஆர் மேஜிக்...'’

- சொல்லிச்சிலிர்க்கிறார்.

``முன்பே வா பாடலை பாடச் சொல்லி இன்னும் நிறைய நிகழ்ச்சிகளுக்கு இப்போது அழைப்பு வந்த வண்ணம் இருக்கிறது” என்ற சிட்டியிடம், `விரைவில் ஏ.ஆர்.ஆர் இசையில் இந்திய இசை உலகுக்கு வரும் வாய்ப்பு இருக் கிறதா?’ என்றதும் பெரிதாய்ச் சிரிக்கிறார்.

``அது... என் பிரார்த்தனை, கனவு. அந்த வாய்ப்பு உடனே கிடைக்காவிட்டாலும், எதிர் காலத்தில் கிடைக்கும் அளவுக்கு அதற்காக உழைப்பேன். அதோடு, மலேசிய தமிழ் ஆல் பங்களில் மலேசிய பாடகர்களோடு பாட வும் முயற்சி செய்வேன். பார்ப்போம்... எதிர்காலம் தரவிருக்கும் வாய்ப்புகளை” என்றவர், விடை பெற்றபோது நமக்காக `முன்பே வா, என் அன்பே வா’ பாடலைப் பாடிக்கட்டியது செம மேஜிக்.

`வாடி ராசாத்தி இந்திய இசைக்கு’!

நன்றி:

புரொஃபஸர் லிம் வெங் மார்க், Dean, SBS
புரொஃபஸர் சுசிலா தேவி கே.சுப்பையா, Director of SCBR
சன்வே பல்கலைக்கழகம், மலேசியா