தொடர்கள்
Published:Updated:

கானாவும் ஒப்பாரியும் களைகட்டும்!

 முனியம்மா
பிரீமியம் ஸ்டோரி
News
முனியம்மா

கண்ணா வா கண்ணா வா! காலம் முழுதும் ஒண்ணா வா நீ சிரித்தால் நான் சிரித்திருப்பேன் நீ அழுதால் நான் அழுதிருப்பேன்கண்ணா நீ நந்தவனம்கண்ணா நீ நந்தவனம்

`கிருஷ்ணா நீ பேகனே…’ எனப் புரியாத மொழியில் கண்ணனை அழைத்துப்பாடும் சபாக்களில் ‘டோலக்’ சகிதம் எட்டுக்கட்டை எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் கண்ணனைத் தன் கானா வழியாக அழைத்தவர் வியாசர்பாடி முனியம்மா. அவரது பாடலுக்கு ஆடிய கூட்டத்தில் அந்தக் கண்ணனேகூட ஆடியிருக்க வாய்ப்புண்டு. கர்னாடக சங்கீதக்காரர்கள் மட்டுமே சபையேறும் சென்னையின் சபாக்களில் கானா பாடிய பெண் பாடகர் என்கிற பெருமை கொண்டவர் முனியம்மா. வடசென்னையின் கானாப் பாடகர்கள் என்றாலே ஆண்கள்தான் என்று அடையாளப்பட்ட காலத்தில் முதல் பெண் கானாப் பாடகர் என்கிற பெருமை படைத்தவர் முனியம்மா. வியாசர்பாடியின் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பு ஒன்றில் வாழ்ந்துகொண்டிருக்கும் முனியம்மாவைச் சந்தித்தேன்.

“எனக்கு இப்போ 52 வயசாகுது கண்ணு. மூணு பிள்ளைங்க. வூட்டுக்காரரு அஞ்சு வருஷத்துக்கு முன்ன இறந்துட்டாரு. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளுலேர்ந்து நான் பாடிட்டுதான் இருக்கேன். எனக்குக் கூடப்பிறந்தவங்க ஒரு அண்ணன், ஒரு தம்பி. அவங்க கானா பாடுறவங்க. அவங்ககூட கச்சேரிகளுக்குப் போவேன். அவங்க பாடும்போது கவனிப்பேன். போகப்போக அவங்க பாடுறதைப் பிசிர் தட்டாமல் அப்படியே பாடப் பழகினேன். முதன்முதல்ல பல பேர் முன்னாடி பாடுனப்போ எனக்கு வயசு பதினஞ்சு. முதன்முதலில் பாடியது என் அண்ணனுக்காக. அண்ணன் ஜெயிலில் இருந்தாரு. அப்போ எழுதிவெச்ச பாட்டை, அண்ணன் ஜெயிலில் இருந்து வந்ததும் அவருக்காகப் பாடிக் காட்டினேன்” என்கிறார்.

கானாவும் ஒப்பாரியும் களைகட்டும்!

அண்ணன் ஜெயிலுக்குப் போய் வந்ததைத் தயங்கியபடியே சொன்னாலும் ``அண்ணனுக்காக என்ன பாட்டு பாடினீங்க?” என்று கேட்டதும் அத்தனை வலிமையும் அந்தக்குரலில் எங்கிருந்தோ சேர்ந்துகொள்கிறது.

``எத்தனை சிறையைக் கண்டேன்

நானும் கண்டேன் கடன் சிறையை

ஆனாலும் சென்ட்ரலோட அழகான சிறைய பாரு...”

கானாப்பாட்டு பாடினாலும் ஒப்பாரியும் முனியம்மாவின் முக்கியமான அடையாளம். முனியம்மா பாட வருகிறார் என்றால் வடசென்னையின் சாவு வீடுகள் கொண்டாட்டக் களைகட்டிவிடும் என்கிறார்அவர் மருமகனும் ’தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ குழுவின் கானாப் பாடகருமான முத்து.

“கானாப்பாட்டு பாடினாலும். கல்யாணத்துக்கு அப்புறம் அவங்களால பொதுவுல கானா பாட முடியலை. அதற்குப் பிறகு எங்க அத்தை முழுக்க முழுக்க இசை கத்துக்கிட்டது எல்லாமே ஒப்பாரி வழியாதான். இந்தப் பகுதி இறப்பு வீடுகள்ல ஒப்பாரியையே ஒரு போட்டியாதான் பாடுவாங்க. ஆனா எங்க அத்தை பாட வர்றாங்கன்னு தெரிஞ்சா அத்தனை போட்டியும் ஓய்ஞ்சுடும். வீட்டுல இருக்கும்போது மட்டும் பிள்ளைங்களுக்கு கானா பாடிக் காண்பிப்பாங்க. அவங்க புருசன் இறந்த அப்புறம்தான் மீண்டும் பாட ஆரம்பிச்சாங்க” என்றார். முனியம்மாவை ஒப்பாரி இசைக்கச் சொல்லிக் கேட்டோம்.

‘‘பாடுனா அழுதுருவேன் பரவாயில்லையா?’’ என்றபடியே பாடத் தொடங்கினார்.

“எங்கிருந்தபோதும் உன்னை மறக்கமுடியுமா?

என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா?”

என அவர் பாடத் தொடங்க, கேட்ட நமக்குமே தொண்டைக்குழி அடைக்கத் தொடங்குகிறது. பாடிமுடித்த பின் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார்.

கானாவும் ஒப்பாரியும் களைகட்டும்!

அவரை ஆசுவாசப்படுத்திவிட்டு மீண்டும் தொடங்குகிறார் முத்து, “இவங்க பாடுறதைக் கேட்டுத்தான் சென்னைக் கலைத்தெருவிழா வழியா அவங்களுக்கு மேடையில் பாடும் வாய்ப்பும் கிடைச்சது. மேல்தட்டு மக்கள் மட்டுமே பாடுற சபாவுல முதல்வாட்டி அவங்க ஏறிப்பாடினது, அதுவும் ஒரு பெண் கானாப் பாடகராப் பாடினது மறக்க முடியாத விஷயம். கானாப் பாட்டுன்னாலே ஆம்பளைங்கதான் பாடணும்னு ஒரு அடையாளம் இருக்கு. கானாப் பாட்டுக்கு எந்த ரூல்ஸும் கிடையாது. ஆனா அதை மாத்திக்காட்டியிருக்காங்க எங்க அத்தை” என்கிறார் முத்து.

தனது ஐம்பதுகளில் தன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறார் முனியம்மா. இந்த எட்டுக்கட்டைக் குரலுக்கு இருக்கும் குட்டி ஆசையெல்லாம் சினிமாவில் கானா பாட வேண்டும் என்பதுதான். ``எல்லாரையும் மாதிரி சினிமாவுல மைக் முன்னாடி பாடணும். ஆனா எனக்குத்தான் இத்தனை வயசு ஆச்சே, அதெல்லாம் நடக்குமா?’’ என்கிறார் ஏக்கத்துடன்.

அட, முனியம்மாவுக்கு சான்ஸ் கிடைக்காம வேற யாருக்குக் கிடைக்கும்?