
சுகா
‘ராஜாவைப் பாத்துட்டு வரலாம்டா’ என்பார் ‘வாத்தியார்’ பாலு மகேந்திரா. சாலிகிராமத்தில் உள்ள வாத்தியாரின் வீட்டிலிருந்து கிளம்பி அருணாசலம் சாலையின் பரபரப்பான போக்குவரத்துக்கிடையே பெரும்பாலும் நடந்துதான் செல்வோம்.
பிரசாத் ஸ்டூடியோவின் வாயிலுக்குள் நுழையும் போது ஆங்காங்கே படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும். அதற்கான பரபரப்பையும் இரைச்சலையும் கடந்து வலது பக்கம் திரும்பும் போது இடது ஓரத்தில் பெரிய சைஸ் பிள்ளையார் துதிக்கையில் மறைத்திருக்கும் புன்சிரிப்புடன் அமர்ந்திருப்பார். அவரைத் தாண்டிச் சென்றால் வலது பக்கத்தில் ஒரு கட்டடம். ஊரை விட்டு விலகி எங்கோ காட்டுக்குள் தனித்து அமைந்தி ருக்கும் ஓர் ஆலயம் போல. பிற மாநிலத்திலிருந்து வந்திருக்கும் இசைக்கலைஞருக்கு அங்கு ஒரு வேலையும் இருக்காது. ஆனால் சென்னைக்கு வந்தால் நேராக பிரசாத் ஒலிப்பதிவுக்கூடத்துக்கு வர வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயம். அப்படித்தான் அந்த இடம் திகழ்ந்தது. பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தின் தடித்த மரக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால் ஒரு விஸ்தாரமான கூடம். ஒரு மூலையில் உள்ள மனிதரின் மூச்சுக் காற்றின் சத்தத்தை மறு மூலையில் உள்ள மற்றொரு மனிதர் கேட்கலாம். மூச்சடைக்க வைக்கும் நிசப்தம்.

‘இங்கேதான்டா நம்ம பாட்டு எல்லாம் ரெக்கார்டு ஆச்சு’ சொல்லியபடியே செல்வார் ‘வாத்தியார்.’
ஒவ்வொரு இடமாகக் கூர்ந்து பார்த்தபடியே செல்வேன். ஓர் இடத்தில் யேசுதாஸ் அமர்ந்து ‘என் இனிய பொன் நிலாவே’ பாடுவார். இன்னொரு இடத்தில் நின்றபடி எஸ். ஜானகி அருகில் நிற்கும் பாலசுப்பிரமணியத்தைப் பாராமலேயே ‘ஓ வசந்த ராஜா’ பாடுவார். இதற்குள் மற்றொரு தடித்த மரக்கதவை நெருங்கியிருப்போம். செருப்பை வெளியே விட்டுவிட்டு உள்ளே நுழைந்தால் வெள்ளை உடையில் நெற்றியில் திலகமிட்ட இளையராஜா சிரித்தபடி, ‘வாங்க’ என்பார். அந்த அறை முழுக்க ஒரு சுகந்த நறுமணம் கமழும்.
புகைப்படங்களில் அமர்ந்திருக்கும் ரமண மகரிஷியும், யோகி ராம்சுரத்குமாரும் அந்த அறையில் இளையராஜாவுடன் அமர்ந்திருப்பதாகவே தோன்றும். இசை தவிர வேறேதும் அந்த இடத்தில் பேசத் தோன்றாது. எதுவுமே பேசத் தோன்றாது என்பது இன்னும் சரியாக இருக்கும். வாத்தியார் படங்களுக்கான கம்போஸிங் அநேகமாக அரைமணிநேரத்துக்குள் முடிந்துவிடும். வாத்திய இசைச் சேர்ப்பு மற்றும் குரல் பதிவு நடைபெறும் போது மொத்த அரங்கும் வேறாக மாறிவிடும். அப்போதும்கூட வாத்தியங்கள் இசையும், பாடகர், பாடகிகளின் குரல்களும் மட்டுமே நம் காதுகளுக்குக் கேட்கும். கிட்டத்தட்ட ஐம்பதிலிருந்து எழுபது பேர் அமர்ந்து இசைத்தாலும் அங்கு இசை தவிர வேறெந்த சின்ன சத்தத்தையும் நாம் கேட்டுவிட முடியாது. தத்தம் வாகனங்களில் இசைக்கருவிகளை சுமந்தபடி வந்து இறங்கி, பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்துக்குள் நுழையும் இசைக்கலைஞர்கள், ஒலிப்பதிவில் வாசிக்கும் போதும் சரி, வாசித்து முடித்து ஒலிப்பதிவுக் கூடத்தை விட்டுக் கிளம்பும் போதும் சரி, ஒரு பிரார்த்தனையை, பூஜையை நிறைவேற்றி விட்டுச் செல்வதுபோலவேதான் அவர்கள் முகபாவமும் உடல்மொழியும் அமைந்திருக்கும்.

நான் இயக்கிய ‘படித்துறை’ திரைப்படத்தின் இசைப்பதிவுக்காகத் திருநெல்வேலியிலிருந்து கணியன் இசைக் கலைஞர்கள் பிரசாத் ஒலிப்பதிவுக்கூடத்துக்கு வந்திருந்தார்கள். முன்பின் அறிந்திராத அந்த ஒலிப்பதிவுக் கூடம் அவர்களுக்கு முதலில் அச்சத்தை ஏற்படுத்தியது. குளிரூட்டப்பட்ட ஒலிப்பதிவுக் கூடத்தில் அவர்களின் வாத்தியத்தை உஷ்ணப்படுத்த வாத்தியத்தில் மின்சலவைப்பெட்டி(Iron box) வைத்து சூடுபடுத்தினார்கள். இன்னொரு பக்கம் ‘படித்துறை’ படத்துக்காக கணேஷ், குமரேஷ் சகோதரர்கள் வயலின் வாசிக்க, கர்னாடக சங்கீதப் பாடகிகள் சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஶ்ரீ குரல்களில் பாடல் பதிவாகிக் கொண்டிருந்தது. அவர்கள் பதிவு முடிந்ததும் கணியன் இசைக்கலைஞர்களின் வாசிப்பு துவங்கியது. பிரசாத் ஒலிப்பதிவுக் கூடம் அதுவரை கேட்டிராத நாதத்தைக் கேட்டது. தன்னிடம் வாசிக்கிற எல்லா இசைக் கலைஞர்களையும் வரவழைத்து அந்தக் கலைஞர்களின் தாளலயத்தை ரசிக்கச் செய்தார், இளையராஜா. நிறைவில் அந்தக் கலைஞர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
ஒருநாள் ஒலிப்பதிவு அறையிலிருந்து, இசைக்கருவிகளின் இசைப்பதிவு நடைபெறும் ஒலிப்பதிவுக் கூடத்தைத் தாண்டி இளையராஜா அவர்களுடன் அவரது அறைக்குச் சென்று கொண்டிருந்தேன். சட்டென்று நின்றவர், அந்த இடத்தைக் காண்பித்துச் சொன்னார். ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னியே. அந்தப் பாட்டு ‘மனிதா மனிதா’, அதை இங்கேதான் ரெக்கார்டு பண்ணினேன்.’ எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அதன் வயலின் குழு இசையைக் கேட்டு நான் அது மும்பையில் பதிவு செய்யப்பட்ட பாடல் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

வட இந்தியப் புகழ்பெற்ற பாடகரான உதித் நாராயணன் அத்தனை பக்தியுடன் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்துக்குள் நுழைவதைப் பார்த்திருக்கிறேன். அவர் மட்டுமா, லதா மங்கேஷ்கர் ஆஷா போஸ்லே சகோதரிகள், உஸ்தாத் சுல்தான் கான், ஹரிபிரஸாத் சௌரஸ்யா, அஜோய் சக்ரபர்த்தி, அவரின் மகள் கௌஷிகி சக்ரபர்த்தி. இவர்கள்போக நம் பெருமைமிகு கலைஞர் பாலமுரளிகிருஷ்ணாவிலிருந்து பாம்பே ஜெயஶ்ரீ வரை எத்தனை பேர்! மாண்டலின் ஶ்ரீநிவாஸ், திருவிழா ஜெய்சங்கர் என அவர்கள் அனைவரையும் வேறு ஆளாக மாற்றிவிடும் வித்தையை பிரசாத் ஒலிப்பதிவுக் கூடம் சத்தமில்லாமல் செய்துவந்தது.
வேறெதற்கோ சென்னை வந்த ஆஷா போஸ்லே, ஒலிப்பதிவுக்கூடத்துக்கு இளையராஜாவைப் பார்க்க வந்திருக்கிறார். அப்போது ஒலிப்பதிவாகிக்கொண்டிருந்த ஒரு பாடலின் மெட்டைக் கேட்டு மெய்மறந்து அதையே பாடிப் பாடிப் பார்த்து ரசித்திருக்கிறார். பாடல் பதிவின்போது பாடிக்கொண்டிருந்த யேசுதாஸ் மற்றும் எஸ்.ஜானகியின் கவனம் கலையும் அளவுக்கு ஆஷா போஸ்லே ரசித்துத் தள்ளிய அந்தப் பாடல், ‘தென்றலே என்னைத் தொடு’ திரைப்படத்தின் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ பாடல்.
கேரளத் திரைப்பட இயக்குநர்களான பரதன், பத்மராஜன், அடூர் கோபாலகிருஷ்ணன், கே.ஜி.ஜார்ஜ், ஐ.வி.சசி, ஜோஷி, ஃபாஸில், விஸ்வாம்பரன், சத்யன் அந்திக்காடு, ஜிஜோ, மோகன், ராஜீவ் நாத், பிரதாப் போத்தன், பத்ரன், ப்ரியதர்ஷன், டென்னிஸ் ஜோஸஃப், ஜோமோன், சி.பி.பத்மகுமார், ஜோஷி மேத்யூ, ராஜீவ் அஞ்சல், அனில்பாபு, ஷியாம பிரசாத், சித்திக், வினயன்.
கன்னடத்தில் சங்கர் நாக், சித்தலிங்கையா, ராஜேந்திர சிங் பாபு, சுனில்குமார் தேசாய், எஸ்.நாராயண், நகத்திஹல்லி சந்திரசேகர், ஏ.எக்ஸ்.பிரபு, கே.எம்.சைதன்யா, சாய் பிரகாஷ், ஆர்.சந்துரு, ஶ்ரீநிவாஸ் ராஜு, பி.எம்.கிரிராஜ், ஏ.எம்.ஆர்.ரமேஷ்.
தெலுங்கில் பாப்பு, பானுமதி ராமகிருஷ்ணா, தாசரி நாராயண ராவ், சிங்கீதம் சீனிவாசராவ், கோதண்டராமரெட்டி, வம்சி, கொம்மினேனி சேஷகிரி ராவ், ராகவேந்திர ராவ், மோகன் காந்தி, ராம் கோபால் வர்மா, கமலாகர காமேஸ்வர ராவ், கிருஷ்ண வம்சி, கீத கிருஷ்ணா, க்ராந்தி குமார், உமாமகேஸ்வர ராவ், குமார் நாகேந்திரா, குணசேகர்.
இவர்கள் அனைவருமே அவரவர் தேசத்திலிருந்து தமிழ்நாட்டின் தலைநகரில் உள்ள சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்தனர். அவரவர் ஊர்களில் ஒலிப்பதிவுக் கூடங்கள் இல்லாமலில்லை. இவர்கள் அனைவரிடமும் தனித்தனியே கேட்டாலும் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடம் குறித்த தத்தம் பிரத்தியேக அனுபவங்களை உணர்ச்சிபூர்வமாகச் சொல்வார்கள். பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தைத் தமிழ்த் திரைப் படங்களிலும் காண்பித்தார்கள். இளையராஜாவின் நண்பரான இயக்குநர் பாரதிராஜா ‘நிழல்கள்’ திரைப்படத்தில் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் நடந்த பாடல் பதிவைப் படமாக்கினார். `வாத்தியார்’ பாலுமகேந்திரா ‘ரெட்டைவால் குருவி’ திரைப்படத்தில் இளையராஜாவின் கம்போஸிங் அறையைப் படமாக்கிப் பதிவுசெய்து மகிழ்ந்தார். பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் தனது ‘சாதனை’ திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஒரு திரைப்பட இயக்குநராக இளையராஜாவுடன் பாடல் கம்போஸிங்கில் பங்குபெறச் செய்தார்.
கே.பாலச்சந்தர் அவர் பங்குக்கு ‘புதுப் புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தைப் படமாக்கினார். இளையராஜாவின் தீவிர ரசிகரான கமல்ஹாசனோ ஒரு படி மேலே போய் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தைத் தனது ‘ராஜபார்வை’ திரைப்படத்தின் டைட்டில்ஸ் முழுவதும் காட்டியதோடு அல்லாமல், தானே இசைக்குழுவினருடன் அமர்ந்து வயலின் இசைத்தார். இப்படி பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்துடன் தம்மைத் தொடர்புபடுத்தி மகிழ்ந்தார்கள், நம் திரைக்கலைஞர்கள்.
இன்றைக்கு பிரசாத் ஒலிப்பதிவுக் கூடம் மூடிக்கிடக்கிறது. மத்திய மந்திரிகளே இளையராஜாவைப் பார்ப்பதற்காக பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்து அவரது அறையில் அமர்ந்து பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் யாரிடமும் உதவி கேட்காத இளையராஜா சட்டப்படி, காவல்துறையை நாடியிருக்கிறார். இந்த நேரத்தில் இப்படி ஒப்பிடாமல் இருக்க இயலவில்லை. இந்த கோவிட் காலத்தில் அடைந்துகிடக்கும் கோடிக்கணக்கான மனிதர்களின் மனதுக்குப் பெரிய ஆறுதலாக இருக்கும் இளையராஜாவைப் போன்ற ஒரு கலைஞர் மேற்கு வங்கத்திலோ, கேரளத்திலோ பிறந்திருந்தால் இந்நேரம் இந்த ஒலிப்பதிவுக் கூடம், ஒரு கலைக்கூடம் என்பதை உணர்ந்து, அதை அருங்காட்சியகமாக மாற்றி, அரசு தன்னுடைமையாக்கி, அந்த ஒப்பற்ற கலைஞனுக்கு வழங்கி கௌரவப்படுத்தியிருக்கும். தான் இசையமைத்த ஆயிரம் படங்களில், பத்தாயிரம் பாடல்களில் பெரும்பாலானவற்றை இளையராஜா பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில்தான் உருவாக்கியிருக்கிறார். இளையராஜாவுடன் வளர்ந்த, இளையராஜாவால் வளர்ந்த எண்ணிலடங்கா கலைஞர்கள் நினைத்தால் அரசாங்கத்தை அணுகி ‘தமிழர்களுக்கும் கலைஞர்களை கௌரவிக்கத் தெரியும்’ என மேற்கு வங்கத்துக்கும் கேரளத்துக்கும் சவால் விடலாம்.