Published:Updated:

`இசையை ரசிக்காதவன் ஜடம்!' - ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரத்தில் கொதித்தெழுந்த அமைச்சர் ஜெயக்குமார்

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த விஷயத்தை எளிதில் கடந்தாலும், தமிழ்த் திரையுலகம் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

`இசையை ரசிக்காதவன் ஜடம்!' - ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரத்தில் கொதித்தெழுந்த அமைச்சர் ஜெயக்குமார்

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த விஷயத்தை எளிதில் கடந்தாலும், தமிழ்த் திரையுலகம் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

Published:Updated:
ஏ.ஆர்.ரஹ்மான்

இசை... சாதி, மதம், மொழி, இனம், தேசம் கடந்தது என்பது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகளோ என நாம் ஐயப்பட்டிருந்த காலத்தில், இரண்டு கைகளிலும் ஆஸ்கர் விருதுகளை ஏந்தி, ரஹ்மான் நின்றபோது இசையின் வல்லமை நம் கண் முன்னே நிரூபணமானது. அரசியல் ரீதியாக தமிழ் - இந்தி, தென்னிந்தியர் - வட இந்தியர் என ஆயிரம் பிரிவுகள் இருந்தபோதும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடித் தீர்த்தபோது, கலையில் பிரிவினைகள் இல்லைதான் போலும், என நாம் அகம் மகிழ்ந்தோம். ஆனால், அதிகம் பேசாத, அளந்து அதிலும் நேர்மறையாக மட்டும் பேசக்கூடிய ஏ.ஆர்.ரஹ்மான், ``பாலிவுட்டில் எனக்கு எதிராக ஒரு கும்பல் செயல்படுகிறது... எனக்கு வரும் வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கிறது'' எனச் சொல்ல ஒட்டு மொத்த தேசமும் ஒரு கணம் அதிர்ந்துபோனது. குறிப்பாக, தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய கொந்தளிப்பு உண்டானது.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ்த் திரையுலம் மட்டுமல்ல, தமிழக அரசியல் களமும் ரஹ்மானுக்கு ஆதரவாகக் களம் இறங்கியது. ``எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவுக்கே புகழ் சேர்த்த நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்னுடைய மனப்பூர்வமான ஆதரவைப் பதிவு செய்து கொள்கிறேன்” என்றார், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

``ஏ.ஆர்.ரஹ்மான் பிரச்னை இன்று, நேற்று நடப்பதில்லை. நடிகர் கமல்ஹாசன் திரைப்படம் இந்தியில் வெற்றி பெற்றபோது அவர் தமிழர் என்பதற்காக வட இந்தியாவில் புறக்கணிக்கப்பட்டார் என்பதுதான் உண்மை. புராண காலத்திலிருந்தே வட இந்தியர்கள் தமிழர்களை ஒதுக்கி வருகின்றனர். தற்போதுகூட தமிழகத்தில் உள்ள நகரங்களில் வட இந்தியர்கள் அதிகளவில் உள்ளனர். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தினால் தமிழகத்தில் வட இந்தியர்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். இனி தமிழகத்தில் தமிழர்களுக்கு இடம் இருக்காது. இதேபோல்தான் ஏ.ஆர்.ரஹ்மான் வட இந்தியர்களால் ஒதுக்கப்பட்டுள்ளார்'' என ஆதங்கப்பட்டார் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ச்சியாக திரை உலகம் சார்ந்து ஆதரவுக் குரல்கள் வந்துகொண்டே இருந்தநிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் குற்றச்சாட்டு குறித்து, இந்தி நடிகரும் பிரபல இயக்குநருமான சேகர் கபூர் தன் ட்விட்டர் பதிவில், ``உங்களுடைய பிரச்னை என்ன தெரியுமா? நீங்கள் ஆஸ்கர் விருது வாங்கிவிட்டீர்கள். பாலிவுட்டில் இருந்துகொண்டு ஆஸ்கர் வாங்கியது உங்கள் தவறு. பாலிவுட்டிற்குத் தேவையானதைவிட உங்களிடம் அதிக திறமை உள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது'" என்று பதிவிட, ``தொலைத்த பணம் திரும்பக் கிடைக்கும். புகழ் திரும்ப வரும். வீணாக்கிய நம்முடைய வாழ்க்கையின் முக்கியமான நேரம் திரும்ப வராது. அமைதியாக இருப்போம். நகர்ந்து செல்வோம். நாம், செய்வதற்கு நிறைய சிறப்பான விஷயங்கள் இருக்கின்றன’' என சேகர் கபூருக்கு மட்டுமல்லாமல், தனக்கு ஆதரவாகப் பேசும் அனைவருக்காகவும் பதில் தந்தார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

சினேகன்
சினேகன்

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த விஷயத்தை எளிதில் கடந்தாலும், தமிழ்த் திரையுலகம் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

இந்த சம்பவம் குறித்து கருத்து கேட்க பாடலாசிரியர் சினேகனைத் தொடர்புகொண்டேன்:

``பலகாலமாக பாலிவுட்டில் தென்னிந்திய கலைஞர்களுக்கு இருக்கும் பிரச்னைதான் இது. ஆனால், எந்தப் பிரச்னைக்கும் போகாத, யாரையும் குறை சொல்லாத ரஹ்மான் சாரே வருத்தப்படும்போது, விஷயத்தின் வீரியம் புரிகிறது. பாலிவுட்டில், அவர்களுக்கான தேவைகளுக்கும் வெற்றிகளுக்கும் நம்மை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்களைவிட மேலெழும்போது அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது. தமிழ் சினிமாவிலும் இப்படியொரு குழு மனப்பான்மை இருக்கிறதுதான். ஆனால், கலைக்கு எல்லை கிடையாது, பாகுபாடு கிடையாது. கலை மக்களுடைய சொத்து, கலாசாரத்தின் அடையாளம் கலைஞனும் அப்படித்தான். மொழி தாண்டி, இனம் தாண்டி நிறபேதம் பாராமல் கலைஞனைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து'' என்றார் பாடலாசிரியர் சினேகன்.

இசைக்கு எப்போதும் ரசிகனாக இருக்கும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் இதுகுறித்துப் பேசினேன்.

``உலகளவில் இசைக்கு மயங்காதவர் யாருமில்லை, இசையை ரசிக்காதவனை ஜடம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை உலகளவில் போற்றப்படுகின்ற நிலையில், அவரைச் சிறுமைப்படுத்துவது என்பது நிச்சயமாக வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இருக்கும் திறமையால் அவர் இன்னும் உளகளவில் பல சாதனைகளைப் படைப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அரசியல் எல்லா இடத்திலும் இருக்கிறது. அது திரைத்துறையிலும் இருக்கிறது. ஆனால், தன்னம்பிக்கையும் திறமையும் இருந்தால் நமக்கு எதிரான சூழ்ச்சிகளை எளிதாக வெல்ல முடியும். ஏ.ஆர்.ரஹ்மானைப் பொறுத்தவரை, அபார ஆற்றலும் திறமையும் கொண்டவர். அவரின் புகழை இப்படிக் கீழறிக்கிவிடலாம் என நினைப்பது சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என நினைப்பது போலானதுதான்.

ஜெயகுமார்
ஜெயகுமார்

எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே

உன்னை இடர வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே

அத்தனையும் தாண்டி காலை முன்வையடா

நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா...

எனும் பாடல் ஒன்று இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானும் அப்படி எதையும் பொருட்படுத்தாமல் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கக்கூடியவர், நிச்சயமாக அவர் வெற்றி பெறுவார். பாலிவுட்டுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது... எங்கிருந்து வருகிறார் என்று பார்க்காதீர்கள், திறமையைப் பாருங்கள். வட இந்தியர்- தென்னிந்தியர் என்கிர பிராந்தியக் கண்ணோட்டத்தை பாலிவுட் மாற்றிக்கொள்ள வேண்டும். ரஹ்மானைப் புறக்கணித்தால் நஷ்டம் ரஹ்மானுக்கு இல்லை, பாலிவுட்டுக்குத்தான்'' என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

இறுதியாக, தமிழக திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும், பா.ஜ.க-வின் மாநில கலை, கலாசாரப் பிரிவு செயலாளருமான இசையமைப்பாளர் தீனா பேசும்போது,

``வட மாநிலம் தென் மாநிலம் என்கிற பிரச்னை இப்போது கொஞ்சம் தலை தூக்கியிருக்கிறது. அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தித் திரை உலகத்துக்காக மிகவும் டெடிகேட்டிவ்வாக முப்பதாண்டுகாலம் வேலை செய்திருக்கிறார். அவரை, தென்னிந்தியராக அல்லாமல், ஒட்டு மொத்த இந்தியாவும் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், இப்படியொரு விஷயம் நடந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. ரஹ்மானைப் புறக்கணிக்கிறார்கள் என்பது முழுக்க முழுக்க உண்மைதான். அவரே மிகவும் தேர்தெடுத்துதான் வேலை செய்வார். அதையும் சில கும்பல்கள் தடுத்து வருகிறார்கள்.

தீனா
தீனா

ஏ.ஆர்.ரஹ்மான் யாரிடமும் சான்ஸ் கேட்டு நிற்பவர் அல்ல. அவரை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கியிருப்பது மிகவும் வருத்தத்தைத் தருகிறது. தேசிய கீதத்துக்கு அடுத்ததாக ஒட்டு மொத்த தேசத்தையும் இணைக்கும் வந்தே மாதரம் பாடலை நம் நாட்டுக்குக் கொடுத்தவர் அவர்தான். அவருக்கு இப்படியொரு நிலை நிச்சயம் வரக்கூடாது.

பாலிவுட்டில் உள்ளவர்கள் தென்னிந்தியர் - வட இந்தியர் என்கிற பிரிவினையின் காரணமாக அவரிடம் இப்படி நடந்துகொண்டிருந்தால் கண்டிப்பாக அதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ரஹ்மானின் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இப்படி நடந்துகொண்டிருந்தால் நிச்சயமாக திருத்திக்கொள்ள வேண்டும். எங்கள் பா.ஜ.கட்சியின் அகில இந்தியக் கலை- கலாசார பிரிவுக்கு இந்த விஷயத்தைக் கொண்டு செல்வேன். நல்லதொரு மாற்றத்தை உருவாக்குவேன்'' என்கிறார் இசையமைப்பாளர் தீனா.