Published:Updated:

Ilaiyaraaja: 2கே கிட்ஸையும் காதல் கொள்ள வைக்கும் இளையராஜாவின் `Modern Love Chennai'!

இளையராஜா

இந்த ஆல்பத்தில் Rock, Waltz, Trance, Jazz, Country என்று உலக இசைப்பிரிவுகள் அனைத்தையும் வாரி இறைத்திருக்கிறார் ராஜா. இதில் எது சிறந்ததென்று வரிசைப்படுத்தாமல் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

Published:Updated:

Ilaiyaraaja: 2கே கிட்ஸையும் காதல் கொள்ள வைக்கும் இளையராஜாவின் `Modern Love Chennai'!

இந்த ஆல்பத்தில் Rock, Waltz, Trance, Jazz, Country என்று உலக இசைப்பிரிவுகள் அனைத்தையும் வாரி இறைத்திருக்கிறார் ராஜா. இதில் எது சிறந்ததென்று வரிசைப்படுத்தாமல் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

இளையராஜா
`அன்னக்கிளி' வெளியாகி 47 ஆண்டுகள் கழித்து இப்போது தியாகராஜன் குமாரராஜாவின் உருவாக்கத்தில் அமேசான் பிரைமில் வெளிவந்திருக்கிறது `Modern Love Chennai' ஆந்தாலஜி வெப் சீரீஸ். இந்த Modern Love சீரிஸின் இசைத்தொகுப்பில் இளையராஜா, எப்படி அன்னக்கிளியில் ஒரு பொறியாக எழுந்து நம்மை ஆக்கிரமித்துக் கொண்டாரோ அதே அளவு 47 ஆண்டுகள் கழித்து இதிலும் பிரமிக்க வைக்கிறார்.

"எண்பது வயதில் அவரின் இசைவீரியம் பிரமிக்க வைக்கிறது. இசையில் சிறிதும் தளராமல் அத்தனை மலைகளிலும் ஏறி தனிச்சிம்மாசனத்தில் அமர்ந்த பின்பும் கூட இத்தனை ஆர்வமும் முனைப்பும் ஒரு துளி கூட ராஜாவின் இசையில் குறையவில்லை. இந்த ஆல்பத்தில் உள்ள அத்தனைப் பாடல்களும் சரி. இசைக்கோர்வைகளும் சரி. Straight out of the Park என்று சொல்வார்களே அந்த ரகம்" என்கிறார் நவீன் மொஸார்ட். இசை ஆர்வலரான இவர், இளையராஜாவின் பின்னணி இசையைப் பற்றிய விமர்சனங்களால் பெயர் பெற்றவர். இவரிடம் பேசியதிலிருந்து...

Modern Love Chennai
Modern Love Chennai

"Modern Love சீரிஸில் யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஷான் ரோல்டன் என்று நவீன யுக இளைஞர்களின் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளர்களும் இருக்கிறார்கள். இந்தத் தொகுப்பில் 18 டிராக்குகள் இருக்கின்றன. அதில் இளையராஜா 13 டிராக்குகளை செய்திருக்கிறார். 2 டிராக் யுவன், 2 ஷான் ரோல்டன் மற்றும் 1 டிராக்கை ஜி.வி செய்திருக்கிறார்கள். இளையராஜாவின் 13 டிராக்குகளும் அதகளம்.

இளையராஜாவின் Modern Love Soundtrack கேட்க, கேட்க அதன் ஆச்சர்யம் புரியும். இதில் வரும் எல்லாப் பாடல்களும் ஏதோ ஒரு விதத்தில் நம்மை மீளமுடியாத ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இந்த ஆல்பத்தில் Rock, Waltz, Trance, Jazz, Country என்று உலக இசைப்பிரிவுகள் அனைத்தையும் வாரி இறைத்திருக்கிறார் ராஜா. இதில் எது சிறந்ததென்று வரிசைப்படுத்தாமல் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

தீ இன்பமே...

இந்தப் பாடலைப் பாடியவர் கிறிஸ்டோபர் ஸ்டான்லி. இந்தப் பாடல் எந்த வகையைச் சேர்ந்தது என்று அவ்வளவு சீக்கிரம் வகைமைப்படுத்த இயலாது. இதை 'Symphonic Rock ballad' என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் நமக்கு 'இளையராஜா' என்கிற ஜானர் மட்டுமே தெரிகிறது. 'ராக்' அமைப்பின் பின்னணியில் உள்ள மெயின் மெலடியும் அதைத் தாலாட்டும் வகையில் இளையராஜாவின் Branded தந்திக் கருவிகளும் ஒன்றோடொன்று போட்டிப் போட்டு நம்மை திக்குமுக்காட வைக்கின்றன. இதில் பாடுவதை கவனிப்பதா, இல்லை பின்னணியில் இந்தப் பாட்டோடு ஊஞ்சல் ஆடும் தந்திக் கருவிகளின் Ballad நடனத்தைக் கவனிப்பதா என்று நாமுமே திகைத்துப் போகிறோம்.

உண்மையிலேயே இந்த பாடல் 'தீ' இன்பம்தான். இறுதியில் 'அட போங்கடா என்று முடிப்பது அதுவரையில் ஒரு Intense ஆன அனுபவத்தில் இருந்துவிட்டு இசை முடியும் தறுவாயில் 'நொந்து' போய் அதைக் கைவிடுதலாக வருவது கூடுதல் 'கிக்'. \
Modern Love Chennai
Modern Love Chennai

யாமே குற்றம் (அ)

சூரியன் தோன்றுது சாமத்திலே

'யாமே குற்றம்' என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் இதயத்தை இரண்டு வகையில் நொறுக்கும் பாடல். ஒன்று, இந்தப் பாடலினூடே பயணிக்கும் Rimsky Korsakov-ன் 'Flight of the Bumble Bee' வகையிலான பியானா இசைக்கோர்வை. இன்னொன்று, இவ்வளவு சீக்கிரம் இது முடிந்துவிட்டதே என்கிற ஏமாற்றம்.

Rolling Stones-ன் 'Paint it black'கிற்கு இணையான நம்மூர் வகை பாடலெனவே சொல்லலாம். அதாவது, அந்த வகை அமைப்பைக் கொண்ட பாடல். ஆனால் மெயின் மெலடி, ராஜாவின் கற்பனை. இந்தப் பாடல் ராக் வகையைச் சேர்ந்தது. இதைப் பாடியவர் பிரியா மாலி. குறைந்த நேரமே வந்தாலும் இது எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடிக்கும் வகையில் அமைந்திருப்பது ஆனந்தமே.

பாவிநெஞ்சே...

இளையராஜாவின் பாடல்களில் பல ஜாஸ் பாடல்கள் வந்திருக்கின்றன. எனக்குத் தெரிந்தவரையில் 'நெற்றிக்கண்' படத்தில் வரும் ராஜா ராணி ஜாக்கி பாடல், அக்னி நட்சத்திரத்தில் ஒரு பூங்காவனம், ஹானஸ்ட்ராஜ் திரைப்படத்தில் வராமல் கேசட்டில் மட்டும் வந்த 'டே பை டே...' பிறகு டைம் படத்தில் 'நிறம் பிரித்து பார்த்தேன்... மீட்டாத ஒரு வீணை' மற்றும் தேவதை படத்தில் வந்த 'நாள்தோறும் எந்தன் நெஞ்சில்' பாடல் எல்லாமே Jazz இன் தாளக்கட்டு உடைய பாடல்கள். 2000-த்திற்கு பிறகு இளையராஜா ஜாஸ் இசையை அதிகமாகக் கொடுத்து இருக்கிறார். 'மும்பை எக்ஸ்பிரஸ்' ஆல்பம் முழுக்க ஜாஸ் தான். பின்னணி இசையாக 'ஜூலி கணபதி', 'தேவன்' படங்களில் முழுக்க ஜாஸ்தான் ஒலிக்கும். 'நீதானே என் பொன்வசந்தம்', மேகாவில் கள்வனே பாடல் வரை ஜாஸை இளையராஜா பிரமாதமாக உபயோகப்படுத்தி இருப்பார். அதன் உச்சமாக இந்தப் பாடலைச் சொல்லலாம். இதில் Smooth jazz ஆக அப்படியே வார்த்தைகளால் வழுக்கிக் கொண்டு போகிறது. அதுவும் ராஜாவின் குரலில் இந்தப் பாடலைக் கேட்பது சுகானுபவம். இந்த டிராக்கின் மிகச்சிறந்த பாடல் இதுதான் என்று இரண்டு வருடங்களுக்கு பின் பலர் உணரக்கூடும். அவ்வளவு இனிமையான, பிரமிப்பூட்டும் ஒரு பாடல்.

Modern Love Chennai
Modern Love Chennai

காமத்துப்பால் - மாடர்ன் லவ்

EDWARD GRIEG என்ற உலகப்புகழ் பெற்ற கம்போசர் ' In the Hall of the Mountain king 'என்கிற இசைக்கோர்வை கம்போஸ் செய்துள்ளார். ஒரு சிறுதுளி கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து ஒரு பெருவெள்ளமாய் மாறுகிறது என்பதை உணர்த்தும் ஒரு இசைக்கோர்வை. தியாகராஜன் குமாரராஜா இந்த இசைக்கோர்வையை Reference ஆக சொல்லி இதுபோல வேண்டுமென இதைக் கேட்டு வாங்கியிருக்கலாம்.

ஆனால் இதற்கு ஏன் காமத்துப்பால் என்ற பெயர்? காதலில் ஒரு சின்ன தொடுதல் எப்படிப் படிப்படியாக வேகமெடுத்து கலவியாகி அதில் உச்சம் தொடுகிறது என்பதை குறிக்கவே Edward Grieg-இன் இந்த இசைக்கோர்வையை குமாரராஜா Reference ஆகச் சொல்லி இருக்கலாம். பொதுவாக 'Western Classical' இசைப் போல் வேண்டும் என்று யாராவது ராஜாவிடம் கேட்டால் அது அவருக்கு அல்வா சாப்பிடுவதைப் போன்றது. எனவே அந்த விஷயத்தை Inspiration ஆக எடுத்து அதே போன்று ஒரு இசைக்கோர்வையை ஆனால் வேறு மெலடியோடு இளையராஜா கொடுத்திருக்கிறார். இனி இதைக் கேட்கும்போதெல்லாம் அதுவும் அல்லது அதைக் கேட்கும்போதெல்லாம் இதுவும் கண்டிப்பாக உங்களின் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது.

தென்றல் புதிது

மூன்றாம் பிறை படத்தின் 'பூங்காற்று புதிதானது' என்கிற கிளாசிக் சாகாவரம் பெற்றது. காதலென வந்துவிட்டால் தவிர்க்க முடியாத பாடல். மாடர்ன் லவ்வில் இதைப் போன்று ஒரு பாடல் இருக்க வேண்டுமல்லவா? யுகபாரதியின் வரிகளின் சாயல் கூட இதையே சொல்கிறது. இப்படிச் சொல்வதால் இரண்டும் ஒன்றல்ல. ஒரே காய்கறியை வைத்து சாம்பாரும், கூட்டும், பொரியலும் செய்வது போல.

புதிதாக காதலில் விழும் ஒருவனுக்கு வாழ்வின் மீது ஒரு புதுப்பிரியம் வரும். வாழ்வதற்கான காரணம் பிடிபடும். பூங்காற்று புதிதானது அதற்கான பாடல். அதே போல் தென்றல் புதிதுவிலும் இளையராஜாவின் இசையில் யுகபாரதியின் வரிகள் அதை முன்னிறுத்துகிறது.

பூத்திருக்கும் மலரைக் கண்டால்

பொன்னின் வண்டு விரைந்தோடும்.

மூத்திருக்கும் கடலைதானே

அலைந்து வளைந்து நதி ஓடும்.

அதில் பூங்காற்று புதிதானது. இதில் தென்றல் புதிது. இப்படி தென்றல் புதிது இன்றைய காலத்திற்கான, இளைய தலைமுறைக்கான 'பூங்காற்று புதிதானது' பாடல்.

Modern Love Chennai
Modern Love Chennai

ஆனால்...

அனன்யா பட் குரலை 'விடுதலை' படத்தின் 'காட்டுமல்லி'யில் கேட்டு இருப்போம். அவர் இதில் அட்டகாசமான ஒரு ஜாஸ் பாடலைப் பாடியிருக்கிறார். 'கடலலைகளில் உன் குரல்' என்று ஆரம்பிக்கும் அட்டகாசமான பாடல். இதன் ஆரம்பம் 'பளிங்கினால் ஒரு மாளிகை' பாடலை ஞாபகப்படுத்தினாலும் இது கிட்டத்தட்ட எல்லா அமெரிக்க ஜாஸ் பாடல்களிலும் இருக்கும், இந்த Genreக்கே உண்டான ஒரு மியூசிக்கல் Phrase, அவ்வளவுதான். ஏன், 'பளிங்கினால் ஒரு மாளிகை' பாடலே 1930 களில் வந்த Artie shaw-வின் Frenesi என்கிற பாடலில் இருந்து முழுமெலடியும் எடுத்தாளப்பட்டது. ஆரம்பம்தான் இப்படி ஆனால் 'ஆனாலு'க்குப் பிறகு வேறு ஒரு புதிய பரிணாமத்தில் வேறு தளத்திற்கு இது சென்று விடுகிறது.

சூறைக்காற்றில் தீபம் வாடுமோ

இது 'ஆனால்' பாடலை விட இன்னும் அட்டகாசம். எல்லா பாரம்பரிய ஜாஸ் பாடல்களைப் போல் ஆரம்பித்தாலும் (எப்படி ஜனனி ஜனனியும், அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலும் ஒரே ராகத்தில் உதித்தனவோ அதுபோலத்தான் இதுவும்!) இதன் உணர்ச்சியை இந்த மாடர்ன் லவ் இசை ஆல்பம் தருகிறது. சொல்லப் போனால், பழைய காதல், நவீன காதல் என்றில்லாமல் பொதுவாகக் காதல் என்பதே அதுதானே…

தேன்மழையோ

தேன்மழையோ, இசைச்சேர்க்கை இல்லாமல் வெறும் குரலை வைத்து இன்னொரு மாயாஜாலம். ஒருவித அமானுஷ்யத் தன்மையையும், உணர்வு நடுக்கத்தையும் ஒரு நிமிடத்தில் சொல்லும் பாடல். இதைப் பாடியதும் ஷிவானிதான். இதுவும் குறைந்த நேரத்தில் ஒலிக்கும் மற்றொரு சிறந்த பாடல்.

Modern Love Chennai
Modern Love Chennai

எங்கே எந்தன்...

இன்னொரு 1 நிமிட பாடல் இது. இந்தப் பாடல் முடியும் போது அதாவது 'காத்திருப்பேன் உந்தன் நினைவாக' என்று முடியும்போது அடுத்து 'உன்னை நினைச்சு நினைச்சு' பாடல் என்று தானாகவே பாடத் தோன்றுகிறது. ஆனால் இரண்டும் டியூனும் வேறு வேறு என்று கேட்டவுடனே புரிந்து விடும். யார் கண்டது? ஒரு வேளை சைக்கோவிற்கு போடப்பட்ட Alternate ட்யூன் இதுவாக இருக்கலாம்.

நெஞ்சில் ஒரு மின்னல்

கடைசியாக நெஞ்சில் ஒரு மின்னல். பாடல் அமெரிக்க பூர்வீக இசைக் கூறுகளோடு ஆரம்பிக்க, முதன்முதலில் காதலில் விழுந்த மகிழ்ச்சியைப் பாடலில் தெரிவிப்பதில் தொடங்குகிறது. 'Love love என்றே சொல் சொல் பேபி...' ராஜாவின் குரலில் பேபி என்று சொல்வது எவ்வளவு அழகாக இருக்கிறது. அநேகமாக 2k கிட்ஸ் இந்த பாடலைக் கொண்டாடித் தீர்ப்பார்கள் என்பது உறுதி. அதுவும்,

கணமும் மறுகணமும் பிரியாது...

உன் மனமும் என் மனமும் அதுபோல்

என்று வரும் இடத்தில் இசையும், வார்த்தையும், குரலும் மூன்றும் உச்சம் பெற்று கேட்போரைத் திக்குமுக்காட வைக்கிறது. யுகபாரதி இந்த ஆல்பத்தில் வரிகளின் உச்சம் தொடுகிறார். அவரின் தனித்தன்மையை எல்லா வரிகளிலுமே உணர முடிகிறது.
Modern Love Chennai
Modern Love Chennai

இதைத் தவிர்த்து /கண்ணில் பட்டு/ ஆர்கெஸ்ட்ரல் இசை, Uncertainty for the future மற்றும் Goodbye என்கிற முடிவு இசை மூன்றும் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் இசைக்கோர்வைகள். 'அன்னக்கிளி' மூலம் டிரெண்டிங்கில் இருந்த ராஜா, ஐந்து தசாப்தங்களாக, மூன்று தலைமுறைகளையும் தாண்டி இன்று நான்காவது தலைமுறைக்கும் இசைவிருந்து படைத்திருக்கிறார். நாற்பத்தேழு வருடங்கள் கடந்து இன்றும் இந்த 'Modern Love' ஆல்பத்தின் மூலம் இன்னும் டிரெண்டிங்கில் இருக்கிறார். கிட்டத்தட்ட எல்லா உலக இசையையும் இந்த ஆல்பத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

ராஜா ரசிகர்கள், வெறுப்பாளர்கள், "அவர் இசையை நாள் பூரா கேட்கலாம். ஆனால் அவர் பேச்சைக் கேட்க முடியாது" என்பவர்கள் என அனைவரும் அவசியம் கேட்க வேண்டிய ஒரு இசைத்தொகுப்பு!

- சவிதா