
வங்கத்தில் பவுல் சங்கீதத்தைப் பாடியபடி, Wandering Minstrels எனப்படும் பாடற்கலைஞர்கள் சாலைகளில் போவார்கள். நான் குழந்தையாக இருந்தபோது அவர்களுடைய திறமையில் ஈர்க்கப்பட்டு அவர்களைப் பின்தொடர்வேன்.
அடையாறில் இருக்கிறது ‘தி ஸ்கூல் ஆஃப் மியூசிக்.’ உள்ளே சென்றபோது ரம்மியமான சூஃபி பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது, அடுத்த இரண்டே நிமிடத்தில் பாரதியாரின் பாடல், அடுத்து ஒரு ஹிந்துஸ்தானி இசை, அதைத் தொடந்து வங்காளப் பழங்குடியினரின் பாட்டு என ஒரு சிறிய சங்கீத நிகழ்ச்சியே அரங்கேறியது. அங்குதான் பாடகர், நடனக் கலைஞர், களரி வீரர் என கலையின் எல்லா வடிவங்களையும் வகைகளையும் நேசிக்கும் மோனாலி பாலசுப்ரமணியனின் அறிமுகம் கிடைத்தது.
மேற்கு வங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மோனாலியின் தந்தை ராக்கெட் சயின்டிஸ்ட் என்பதால், திருவனந்தபுரத்திற்குக் குடும்பத்தோடு வந்தார். அதனால் மோனாலிக்குக் கேரளாவில் படிப்பு முடிந்ததும், சென்னையில் வேலை. அந்த ஐ.டி நிறுவனத்தில்தான், தன் காதல் கணவரான கோயம்புத்தூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியனைச் சந்தித்துத் திருமணமும் செய்துகொண்டார். அதன்பின் சென்னைவாசியாக மாறிவிட்டார் இந்த வங்காளப் பெண்.

“15 வருடங்கள் ஐ.டி துறையில் வேலை. திடீரென ஒரு நாள், இந்த கார்ப்பரேட் உலகத்திலிருந்து விடுபட்டுக் கலை உலகத்திற்குப் போக வேண்டும் என்று தோன்றியது. அதுவரை காலச்சக்கரத்தில் வேகமாகச் சுழன்றுகொண்டிருந்த வாழ்க்கை கொஞ்சம் நிதானமாகி அழகானது. அதே வீடு, அதே சாலைகள், 15 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த சென்னை இன்னும் பிரகாசமாக மாறியது போல தோன்றியது. அதே உற்சாகத்தில் பாட்டு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன். இசை நிகழ்ச்சிகளில் பாடினேன். வழக்கமான அட்டவணை போட்ட வாழ்க்கையாக இல்லாமல் இசை, நடனம், வீணை, பியானோ என ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவமாக மாறியது. இன்று சென்னையில் மட்டும் மூன்று இடங்களில் என் ‘தி ஸ்கூல் ஆஃப் மியூசிக்’ இயங்கிவருகிறது’’ என்கிறார்.
பெங்காலி, மலையாளம், இந்தி, தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், தெலுங்கு, ஒடியா, அஸ்ஸாமி, மராத்தி எனப் பல மொழிகளில் சரளமாகப் பாடக்கூடியவர் மோனாலி. பல பின்னணிப் பாடகர்கள், இசை அமைப்பாளர்கள், நாடக நடிகர்கள், ஸ்டாண்ட்-அப் காமெடியன்கள் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள், வாய்ஸ் கல்ச்சர் எனப்படும் குரலைச் சரியாகப் பயன்படுத்துவதைக் கற்றுக்கொள்ள இவரிடம் பயிற்சி எடுக்கிறார்கள்.

“வங்கத்தில் பவுல் சங்கீதத்தைப் பாடியபடி, Wandering Minstrels எனப்படும் பாடற்கலைஞர்கள் சாலைகளில் போவார்கள். நான் குழந்தையாக இருந்தபோது அவர்களுடைய திறமையில் ஈர்க்கப்பட்டு அவர்களைப் பின்தொடர்வேன். பல மணி நேரம் அவர்கள் பாடலை மெய்மறந்து கேட்பேன். இசையில் எனக்கிருக்கும் ஆர்வத்தைப் பார்த்து என் பெற்றோர்கள் கர்நாடக இசையைக் கற்றுக்கொடுத்தனர். அப்படியே ஹிந்துஸ்தானி இசை, கபீர்தாசரின் கவிதைகளில் மயங்கி நானே சூஃபி கற்றுக்கொண்டேன். அடுத்து ரவீந்தர சங்கீத், நஸ்ரூல் கீத், சென்னைக்கு வந்ததும் பாரதியார் கவிதைகளில் ஆர்வம் உண்டாகி அவர் பாடல்களுக்கு நானே இசையமைத்துப் பாடினேன்.
அதன்பின் நடனத்தின்மீது கவனம் திரும்பியது. பரதநாட்டியம், கதக், ஒடிசி, மோகினியாட்டம் போன்ற பாரம்பரியக் கலைகளுடன் மேற்கத்திய நடனங்களான ஜாஸ், சல்சா போன்றவற்றையும் பயின்றேன். இதற்கு நடுவே பியானோ, வீணை, வயலின், கிட்டார், சிதார் போன்ற இசைக் கருவிகளையும் கற்றுக்கொண்டேன்.

எல்லாம் கற்றுக்கொண்ட பின்னும், கேரளாவின் தற்காப்புக் கலையான களரிப்பயிற்று கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் நிறைவேறாமலே இருந்தது. அப்போதுதான் சென்னையிலிருக்கும் ஒரு களரிப் பயிற்சி மையம் பற்றித் தெரியவந்தது. உடனே கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இப்போது பத்து ஆண்டுகளாக இசை, நடனத்துடன் சேர்த்துக் களரியும் செய்து வருகிறேன். களரி என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. வெறும் உடலுக்கு மட்டும் இல்லாமல், மனதையும் உறுதி செய்யும் கலைதான் களரி.

குஜிலி பாட்டு
சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில், எழுத்தாளர்கள் நாட்டில் நடக்கும் முக்கியமான செய்திகளை, சமூக நிகழ்வுகளை 8-16 பக்கம் கொண்ட சிறிய புத்தகத்தில் பாடல்களாக எழுதி, அந்தப் பாடல்களுக்கான ராகம், மெட்டு, தாளங்களைக்கூட புத்தகத்தில் குறிப்பிட்டு வெளியிடுவார்கள். அதைச் சென்னையில் இருக்கும் குஜிலி பஜார் என்ற தெருவில் விற்றார்கள். இன்று அதை ஈவ்னிங் பஜார் என்று அழைக்கிறோம். இந்தப் புத்தகங்களில், சென்னையில் முதல் முறையாக டிராம் அறிமுகப்படுத்தப்பட்ட சம்பவம், ராயபுரத்தில் ரயில் பயணம் எப்படி இருக்கும், கிண்டி ரேஸ் எப்படி நடக்கும், சென்னையில் பஞ்சம் ஏற்பட்டபோது மக்கள் எப்படி செத்து மடிந்தார்கள் என்றெல்லாம் இருக்கும். செய்தித்தாள்களின் இசை வடிவமான இந்த குஜிலி பாடல்களை நானும், எழுத்தாளர் நிவேதிதா லூயிசும் இணைந்து நிகழ்த்தினோம். இந்த குஜிலி பாடல்கள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தபோது, தடை செய்யப்பட்டன. பின்னர் நாளிதழ்கள் தோன்ற ஆரம்பித்ததும் படிப்படியாக மறைந்தன. நம் சென்னையின் நூறு ஆண்டுக்கால வரலாற்றைச் சொல்லும் இந்த குஜிலி இலக்கியத்தை மீண்டும் உயிர்ப்பித்ததில் நானும் ஓர் அங்கமாக இருந்ததில் எனக்குப் பெருமை.

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு இசை தெரபி
நான் பாட்டு வகுப்புகள் எடுத்துக்கொண்டிருந்த போது, ஒரு அம்மா தன் குழந்தையை அழைத்து வந்தார். அந்தக் குழந்தைக்கு உடல் குறைபாட்டுடன், பார்வை மற்றும் பேச்சு சவால்களும் இருந்தன. ‘என் குழந்தைக்குப் பாட்டு சொல்லிக் கொடுப்பீர்களா?’ என்று அந்த அம்மா கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. தனித்துவமான சில வகுப்புகளை வடிவமைத்து, இசை சொல்லிக் கொடுத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக பல பெற்றோர்கள் தங்கள் சிறப்புக் குழந்தையுடன் வர ஆரம்பித்தார்கள். குழந்தைகள் எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதற்காகச் சிறப்புக் குழந்தைகளுக்கெனத் தனி வகுப்புகள் இல்லாமல், எல்லோருடன் சேர்த்து அவர்களுக்கும் பாட்டு, இசைக் கருவிகள், ஓவியம் கற்றுக்கொடுக்கத் தொடங்கினோம். அடுத்ததாக, ஸ்கேன் (SCAN - Special Child Assistance Network) எனும் அமைப்புடன் இணைந்து, ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு துறையைச் சேர்ந்த கலைஞரை அழைத்து ஒரு நிகழ்ச்சி செய்வோம். அதில் எல்லோருடனும் சேர்ந்து சிறப்புக் குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் நாள் முழுக்க ரசிப்பார்கள். மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் வாழ்க்கையில் ரசனையைக் கூட்டியிருக்கிறது கலை.


பாகுபாடுகளை உடைக்கும் கலைக்கூடம்!
நம் சமூகத்தில் எப்படி மதம், சாதி, மொழி எனப் பல பிரிவினைகள் இருக்கிறதோ, அதே போல இசையிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது. மரபு சார்ந்த `க்ளாசிக்கல் மியூசிக்’ என்று சொல்லப்படும் சில இசை வடிவங்களும் நடனங்களும் மேம்பட்டவையாகப் பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மற்ற கலைகளுக்கு வழங்கப்படுவதில்லை.
எல்லாக் கலைகளுமே மிகப்பெரிய வரலாற்றை, முக்கியத்துவத்தை, அழகியலைச் சுமந்து மக்களோடு பயணிக்கின்றன. கலையில் இருக்கும் பாகுபாடுகளை உடைக்கும்விதமாக, எல்லா விதமான கலைகளையும் சமமாக மேடையேற்றி, யார் வேண்டுமானாலும் எந்தக் கலையையும் கற்கலாம் என்ற சூழலை உருவாக்கியிருக்கிறோம். அந்தக் கலைக்கூடத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்து இசை கற்பித்துவருகிறேன். மிகவும் குறைந்த கட்டணத்தில் எல்லாக் கலைகளையும் கற்க முடியும். அந்தக் குறைந்த கட்டணத்தைக் கட்ட முடியாதவர்களுக்கு இலவசமாகவே பயிற்சி வழங்கப்படுகிறது” என்கிறார் மோனாலி. இதைத் தாண்டி இரண்டு திரைப்படங்களிலும் வங்காள மொழியில் இவர் பாடியுள்ளார்!