Published:Updated:

"ரஹ்மான் - வைரமுத்து, யுவன் - முத்துக்குமார், ஹாரிஸ் - தாமரை... வாவ் பாடல்களைத் தந்த இசைக் கூட்டணி!"

இசையமைப்பாளர் - பாடலாசிரியர்கள்
News
இசையமைப்பாளர் - பாடலாசிரியர்கள்

இசையமைப்பாளர் - பாடலாசிரியர்களின் புகழ்பெற்ற கூட்டணிகள்.

திரையிசைப் பாடல்களிலிருந்து தமிழர்களை ஒருநாள்கூட பிரித்து வைக்க முடியாது. அந்தளவுக்கு மகிழ்ச்சியிலும் துயரத்திலும், வெற்றியிலும், ஏமாற்றத்திலும் உணர்வுபூர்வமாகக் கலந்துவிட்டன பாடல்கள். இவ்வாறு பாடல்களை உருவாக்குவதற்கு இசையமைப்பாளர் - பாடலாசிரியர் இருவரிடையே ஒரே உணர்வோட்டம் நிலவ வேண்டும். அப்படியிருக்கும்போதே மக்களை மயக்கும்விதமான பாடல்களைக் கொண்டுவர முடியும். தமிழ் திரையிசையில் அப்படியான இசையமைப்பாளர் - பாடலாசிரியர் காம்போ அன்று முதல் இன்று வரை தொடர்ந்தே வருகிறது. அவ்வகையான இசைக்கூட்டணி பட்டியல் நீளமானது. அவற்றில் நாம் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி - கண்ணதாசன் கூட்டணியிலிருந்து சந்தோஷ் நாராயணன் - உமாதேவி வரையில் பார்க்க விருக்கிறோம்.

எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி - கண்ணதாசன். இந்தக் கூட்டணி காலத்தால் அழியாத பாடல்களை உருவாக்கினார்கள் என்றால் அது மிகையில்லை. இந்தக் கூட்டணியில் பெரும்பாலும் எழுதப்பட்ட பாடல்களுக்கு மெட்டமைக்கப்பட்டன. அவற்றில், 'அச்சம் என்பது மடமையடா', 'போனால் போகட்டும் போடா', 'உள்ளத்தில் நல்ல உள்ளம்', 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே', 'மயக்கமா கலக்கமா', 'மலர்ந்தும் மலராத', 'நெஞ்சம் மறப்பதில்லை' உள்ளிட்ட ஏராளமான பாடல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

கண்ணதாசனைப் பற்றி எம்.எஸ்.விஸ்வநாதன் கூறும்போது, தாம் சொல்லும் மெட்டுக்கு உடனுக்குடன் வரிகளைச் சொல்வதைப் பார்த்த இயக்குநர் பாலசந்தர், 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் 'சிப்பி இருக்குது, முத்தும் இருக்குது' பாடலை வைத்தார் என்கிறார். அதேபோல கண்ணதாசன், எம்.எஸ்.வி-யைப் பற்றிப் பேசும்போது, 'ஒரு வெளிநாட்டுப் பயணத்தில் சாதாரண விஷயங்கள் பற்றி விஸ்வநாதனுக்கு ஏதும் தெரியவில்லை. ஆனால், இசை மியூசியத்தில் இருந்த பியோனாவில் புகழ்பெற்ற இசைக் குறிப்பைப் பிழையில்லாமல் வாசித்தார்' என்று குறிப்பிடுகிறார். அந்தளவுக்கு இருவருக்குள்ளும் பரஸ்பர அன்பும் புரிதலும் இருந்திருக்கிறது.

எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி - கண்ணதாசன் கூட்டணியில் உருவான பாடல்களின் வரிகள் இதோ :

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
கிராமத்து மக்களின் எளிய மக்களின் வாழ்வியல் பாடுகள், உணர்ச்சிகளை அம்மக்களின் சொற்களுடனே, உன்னதமான இசையில் பாடலாக்கும் சிறப்பான முயற்சிகளை முன்னெடுத்தது இளையராஜா - வைரமுத்து கூட்டணி

இளையராஜா - வைரமுத்து கூட்டணியில் உருவான பாடல்களைக் கேட்கவும், பார்க்கவுமே திரையரங்கத்துக்கு மக்கள் கூட்டம் வந்த வரலாறு உண்டு. வைரமுத்துவின் முதல் பாடலான, 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' (நிழல்கள்) இளையராஜாவின் இசையில் உருவானதே. அதைத் தொடர்ந்து கிராமத்து மக்களின் எளிய மக்களின் வாழ்வியல் பாடுகள், உணர்ச்சிகளை அம்மக்களின் சொற்களுடனே, உன்னதமான இசையில் பாடலாக்கும் சிறப்பான முயற்சிகளை முன்னெடுத்தவர்கள் இருவரும். மெட்டுக்குப் பாடலும், பாடலுக்கு மெட்டும் எனக் கலந்து பாய்ந்த வெள்ளமாகத் தமிழிசையை நிரப்பிக்கொண்டிருந்தது. 'ஆயிரம் தாமரை மொட்டுகளே', 'விழியில் விழுந்து உயிரில் கலந்து (அலைகள் ஓய்வதில்லை)', 'அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது (ராஜபார்வை)', 'வெள்ளைப் புறா ஒன்று ஏங்குது (புதுக்கவிதை)', 'பனிவிழும் மலர் வனம்', 'ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் (நினைவெல்லாம் நித்யா)', 'சாலையோரம் சோலையொன்று (பயணங்கள் முடிவதில்லை)', 'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி (தூறல் நின்னு போச்சு)', 'வெள்ளி சலங்கைகள் கொண்ட (காதல் ஓவியம்)', 'உன்னைத்தானே தஞ்சம் என்று... (நல்லவனுக்கு நல்லவன்)', 'பூங்காற்று திரும்புமா', 'வெட்டிவேரு வாசம்', 'ராசாவே உன்ன நம்பி (முதல் மரியாதை)', 'ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் (படிக்காதவன்)', 'நானொரு சிந்து', 'பாடியறியேன்', 'தண்ணித்தொட்டி தேடி வந்த (சிந்து பைரவி)', 'என்ன சத்தம் இந்த நேரம்', 'ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்', 'வான் மேகம் பூ தூவும் (புன்னகை மன்னன்)' உள்ளிட்ட ஹிட் பாடல்களின் பட்டியல் மிக நீளமானது.

'முதல் மரியாதை' படத்தில் எழுதிய அனைத்துப் பாடல்களுக்காக வைரமுத்துவுக்குத் தேசிய விருது கிடைத்தது. இவர் பெற்ற முதல் தேசிய விருது இதுவே. 'அலைகள் ஓய்வதில்லை' படப் பாடல்களுக்காக தமிழ்நாடு அரசு விருது அளிக்கப்பட்டது.

இளையராஜா - வைரமுத்து கூட்டணியில் உருவான பாடல்களின் வரிகள் இதோ :

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவரின் பெயரைக் கேட்டபோது 'ராஜா' என்றதும், 'ராஜா' என்றே பாடலின் முதல் வார்த்தையை எழுதினேன்'
வாலி

இளையராஜா - வாலி கூட்டணி பல தரப்பினருக்கும் பிடித்த வகையிலான விதவிதமான பாடல்களை அளித்தது. 'தாய் மூகாம்பிகை' படத்தில் 'ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ' என்ற ஆன்மிகப் பாடல் ஒரு புறம் என்றால், 'செம்பருத்தி' படத்தில் 'நிலா காயும் நேரம் சரணம்' எனக் காதல் பாடல் மறுபக்கம், 'தளபதி' படத்தில் ' சின்னத்தாயவள் தந்த ராசாவே' என்று கருணை வழியும் பாடல்... எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களை உருவாக்கிய கூட்டணி இது. 'ஜனனி ஜனனி...' பாடலைப் பாடாத இளையராஜாவின் நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை என்றே சொல்லுமளவுக்கு, அவருக்குப் பிடித்த பாடல். வாலி பேசுகையில், 'இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் இளையராஜா பணிபுரிந்தபோது, ஒரு டியூனை கிடாரில் வாசித்துக் காட்டினார். அப்போது இவரின் பெயரைக் கேட்டபோது 'ராஜா' என்றதும், 'ராஜா' என்றே பாடலின் முதல் வார்த்தையை எழுதினேன்' என்று குறிப்பிடுவார். அந்தளவுக்கு இருவரின் நட்பும் மரியாதையும் அளப்பரியது.

இளையராஜா - வாலி கூட்டணியில் உருவான பாடல்களின் வரிகள் இதோ :

மொழியின் எல்லைகளைத் தாண்டியே ஏ.ஆர்.ரஹ்மானின் மெட்டுகள் வருகின்றன. மொழிக்குச் சிக்காத மர்மம் அவற்றில் இருப்பதைப் பார்க்கிறேன்.
வைரமுத்து

1992-ல் 'ரோஜா' திரைப்படம் மூலம் அறிமுகமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பெரும் பலமாக விளங்கிக்கொண்டிருப்பவர் வைரமுத்து. இருவரும் இணைந்த முதல் படத்திலேயே தேசிய விருதுகளைக் குவித்தது இந்த ஜோடி. பாடல் வரிகளுக்காக வைரமுத்துக்கும், சிறந்த இசையமைப்பாளருக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் தேசிய விருது கிடைத்தன. வைரமுத்து ஒரு நேர்காணலில் ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றிப் பேசுகையில், "மொழியின் எல்லைகளைத் தாண்டியே ஏ.ஆர்.ரஹ்மானின் மெட்டுகள் வருகின்றன. மொழிக்குச் சிக்காத மர்மம் அவற்றில் இருப்பதைப் பார்க்கிறேன். அவர் ஒரு மெட்டை வழங்கியது, மீண்டும் மீண்டும் கேட்கிறேன். ஒரு கட்டத்தில் ஒலிப்பதிவுக் கருவியில் அதைக் கேட்பதை நிறுத்திவிடுகிறேன். என் மனசுக்குள் அதைச் சுழல விடுகிறேன். அந்த மெட்டு அதற்கான வார்த்தைகளைத் தேடுகிறவரை காத்திருக்கிறேன். நூற்றுக்கணக்கான வார்த்தைகளைப் பல்லவிக்குப் போட்டு பாடிப் பார்க்கிறேன். அவற்றில் சிறந்தது எதுவென்று என் அனுபவம், மனச்சான்று, ரசனையின் உள்நாதம் சொல்கிறதோ அதைக் கொடுக்கிறேன். அவற்றில் வெற்றி பெறுவதும் உண்டு; வெற்றி பெறாமல் போவது உண்டு. ஏ.ஆர்.ரஹ்மான் மெட்டுக்கு எழுதுவது தனித்திறமை!" என்று வியந்து பேசியிருக்கிறார். தொடர்ந்து ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை இந்தக் கூட்டணி உருவாக்கியது. பாரதிராஜா, பாலசந்தர், மணிரத்னம், ஷங்கர், கதிர், ராஜீவ் மேனன் எனப் பல இயக்குநர்களின் படங்களில் இந்தக் கூட்டணியின் பாடல்கள் எல்லோரையும் வசீகரித்தன. அந்த வசீகரம் கொஞ்சமும் குறையாமல் இன்றும் தொடர்ந்து வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் - வைரமுத்து கூட்டணியின் உருவான பாடல்களில் சில :

முத்துக்குமார் திடீரென்று போன் செய்து ஒரு வரியைச் சொல்லி, 'இது உங்களுக்காகத்தான் எழுதியிருக்கேன்' என்பார்.
யுவன் ஷங்கர் ராஜா

இளையராஜாவின் வாரிசான யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக்கு மிகப்பொருத்தமான பாடல் வரிகளைத் தந்தவர், நா.முத்துக்குமார். குறிப்பாக, இயக்குநர்கள் செல்வராகவன் மற்றும் ராம் ஆகியோருடன் இந்தக் கூட்டணி இணைந்து, பல வெற்றிகரமான பாடல்களை ரசிகர்களுக்குத் தந்திருக்கின்றனர். இந்தக் கூட்டணியின் பெரிய பலம், இதுவரை தமிழ்ப் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட சொற்களிலிருந்து விலகி, நவீன கதைகளில் பயன்படுத்தும் வார்த்தைகளையும் இணைத்தார்கள். அது பாடலைக் கேட்பவருக்குப் புதிய அனுபவத்தைத் தந்தன. இன்றும் நா.முத்துக்குமார் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் பகிரப்படும் பாடல்களில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவானவையே அதிகம் இருப்பதைப் பார்க்க முடியும். நா.முத்துக்குமாரின் முதல் விமானப் பயணம் யுவன் ஷங்கர் ராஜாவுடன்தான் அமைந்தது. ஒரு விழா மேடையில் யுவன் பேசுகையில், "முத்துக்குமார் திடீரென்று போன் செய்து ஒரு வரியைச் சொல்லி, 'இது உங்களுக்காகத்தான் எழுதியிருக்கேன்' என்பார். நானும், 'பத்திரமாகச் சேமித்து வையுங்கள்' என்பேன்." என்று இருவரின் நட்பைப் பற்றி கூறியிருப்பார். 'தேவதையைக் கண்டேன், நெஞ்சோடு கலந்திடு (காதல் கொண்டேன்)', 'கண் பேசும் வார்த்தைகள், நினைத்து நினைத்துப் பார்த்தேன் (7ஜி ரெயின்போ காலனி)', 'பறவையே எங்கு இருக்கிறாய் (கற்றது தமிழ்)', 'ஆனந்த யாழை மீட்டுகிறாள் (தங்கமீன்கள்)', 'என் காதல் சொல்ல (பையா)' உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை உருவாக்கிய கூட்டணியின் சில பாடல்கள் :

ஒரு வெள்ளிக் கொலுசுபோல இந்த மனசு சிணுங்கும் கீழ அணியாத வைரம்போல புது நாணம் மினுங்கும் மேல
தாமரை

பெண் பாடலாசிரியரின் பாடல்கள் ரொம்பவும் தனித்துக் கவனிக்கப்பட்டது, தாமரையின் பாடல்களிலிருந்து என்று சொல்லுமளவுக்குச் சிறப்பான வரிகளுக்குச் சொந்தக்காரர். ஹாரிஸ் ஜெயராஜுக்கு 'மின்னலே' முதல் படம். அதிலேயே பாடல் எழுத இணைந்தவர் தாமரை. இவர்கள் கூட்டணியின் உருவான 'வசீகரா' பாடல் ஒலிக்காத இடமே இல்லை என்றளவுக்குப் புகழ்பெற்றது. அதைத் தொடர்ந்து பலரையும் வசீகரிக்கும் வரிகளுடைய, புதிய சொற்களைப் பயன்படுத்திய பாடல்களை இந்தக் கூட்டணி தமிழ்த் திரையிசைக்கு வழங்கியது.

"அடை மழை வரும் அதில் நனைவோமே

குளிர் காய்ச்சலோடு சினேகம்" (மின்னலே)

"சந்தித்தோமே கனாக்களில்

சில முறையா பல முறையா

அந்தி வானில் உலாவினோம்

அது உனக்கு நினைவில்லையா " (வாரணம் ஆயிரம்)

"ஒரு வெள்ளிக் கொலுசுபோல இந்த மனசு சிணுங்கும் கீழ

அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல" (என்னை அறிந்தால்)

உள்ளிட்ட பாடல் வரிகளால் ரசிகர்களை ஈர்த்த கூட்டணியில் ஹாரிஸ் ஜெயராஜ் - தாமரை கூட்டணியின் உருவான பாடல்களில் சில :

என் டியூன் சரியில்லை என்றால், அதைச் சரியான காரணங்களோடு சொல்பவர் யுகபாரதி
இமான்

'ஆனந்தம்' படத்தில் 'பல்லாங்குழியின் வட்டம்' என்ற பாடலோடு திரையிசைப் பயணத்தைத் தொடங்கியவர் யுகபாரதி. அதைத் தொடர்ந்து வித்யாசாகர், தீனா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களோடு இணைந்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். சமீபமாக இசையமைப்பாளர் டி.இமானுடன் இணைந்து ரசனையான பாடல்களைத் தந்துவருகிறார். வாழ்வின் அற்புத கணங்களை மிக எளிய வார்த்தைகளில் பரிமாறும் விதமே இந்தக் கூட்டணியின் பலம்; அதுவே வெகுமக்களை ஈர்க்கவும் செய்கிறது. ஒரு நூல் வெளியீட்டு விழாவில் இமான் பேசுகையில், "திரையுலகில் சினிமாத்தனம் இல்லாமல் நடந்துகொள்ளும் நபர் யுகபாரதி. என் டியூன் சரியில்லை என்றால் அதைச் சரியான காரணங்களோடு சொல்பவர் அவர்" என்று இருவருக்குமான நட்பைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். இந்தப் புரிதலோடும், எளிய மனிதர்களின் உணர்வுகளைப் பாடலில் கடத்துவதில் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருக்கிறது இந்தக் கூட்டணி. அவற்றில் சில பாடல்கள் :

ஆகாயம் சாயாம தூவானமேது ஆறாம ஆறாம காயங்கள் ஏது
உமாதேவி

பாடலாசிரியர் தாமரையைத் தொடர்ந்து வெற்றிகரமாகத் தொடர்ந்து பாடல்களை எழுதிக்கொண்டிருக்கும் பெண் பாடலாசிரியர், கு.உமாதேவி. இவர் எழுதிய முதல் பாடல், 'மெட்ராஸ்' படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் 'நீ நான்' என்பதுதான். அந்தப் பாடல் அடைந்த வெற்றி, இந்தக் கூட்டணி தொடர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தந்துவருகிறது. இதுவரை குறைவான எண்ணிக்கையிலான பாடல்கள்தாம் என்றாலும், அழகான மொழியில் ஈர்ப்பான பாடல்களைத் தந்து வருகிறார்கள்.

நீ இருந்தும் நீ இருந்தும்

ஒரு துறவை நான் அடைந்தேன் - (கபாலி)

ஆகாயம் சாயாம தூவானமேது

ஆறாம ஆறாம காயங்கள் ஏது (காலா)

உள்ளிட்ட வரிகள் எல்லோராலும் ஈர்த்தன. இந்தக் கூட்டணி இன்னும் பல ஹிட் பாடல்களை அளிக்கும் என்ற நம்பிக்கையை ரசனை மிகுந்த இந்த வரிகள் நமக்கு உணர்த்துகின்றன. சந்தோஷ் நாராயணன் - உமாதேவி கூட்டணியில் உருவான பாடல்களில் சில :