
இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்
தமிழிலிருந்து இந்திவரை மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளர், ராக் ஸ்டார் தேவிஸ்ரீ பிரசாத். அடுத்த ஆண்டிற்கும் சேர்த்து அவரது கால்ஷீட் டைரி நிரம்பியிருக்கிறது. பொங்கலுக்கு சிரஞ்சீவியின் `வால்டர் வீரய்யா'வுக்குத் தெலுங்கு தேசத்தில் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. இன்னொரு பக்கம் ‘புஷ்பா 2', ‘சூர்யா 42'-க்கான பாடல் கம்போஸிங்கிலும் பரபரக்கிறார் டி.எஸ்.பி.
எப்படிப் போச்சு இந்த 2022?
‘‘சூப்பரா! 2022-ல பயணங்கள் அதிகம் இருந்துச்சு. அமெரிக்காவில் என் கான்செர்ட் இருந்தது. அப்புறம், ‘பான் இண்டியா ராக் ஸ்டார்'னு எனக்குப் பெயர் வாங்கிக்கொடுத்த ‘ஓ பெண்ணே' ஆல்பத்தின் படப்பிடிப்பிற்காக ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்கான்னு மூணு நாடுகளுக்குப் பறந்தேன். இந்தியில் அஜய் தேவ்கனின் ‘த்ரிஷ்யம் 2'-க்காக மும்பை, கோவான்னு போக வேண்டியிருந்தது. தெலுங்குப் பட வேலைகளுக்காக ஹைதராபாத்திற்குப் பறந்தேன். பிலிம்ஃபேர் விருதுக்காக பெங்களூரு போயிட்டு வந்தேன். இப்படி, இந்த வருஷம் பயணங்களால் நிரம்பிய வருஷமாகிடுச்சு. அதனால ஸ்டூடியோவை விட்டு வெளிய கிளம்பறப்பவே கையோடு என் சவுன்ட் இன்ஜினீயரையும் அழைச்சிட்டுப் போயிட்டேன்.''

‘சூர்யா 42' பத்து மொழிகளில் வெளிவரும்னு சொல்றாங்க.. எப்படி இருக்கு வேலைகள்?
‘‘சூர்யா சாருக்கு ஒரு நன்றி சொல்லிக்கிறேன். அவரோட நான் இதுக்கு முன்னாடி ஒர்க் பண்ணின படங்களின் ஆடியோவும் சரி, படமும் சரி பெரிய வெற்றியாகியிருக்கு. அதைப்போல ‘சிறுத்தை' சிவா சாரோட ‘வீரம்' படமும், இசையும் பெரிய ஹிட். நாங்க மூணு பேரும் மீண்டும் ஒண்ணா சேர்ந்திருக்கோம். ‘சூர்யா 42'-க்கான பின்னணி இசைக்கு அருமையான ஸ்கோப் இருக்கு. படப்பிடிப்பும் செம விறுவிறுப்பாகப் போகுதுன்னு சொன்னாங்க. ஸோ, படத்தைப் பார்க்க உங்களை மாதிரியே நானும் ஆவலோடு காத்திருக்கேன்.''
நீங்க பாலிவுட்லேயும் பிஸியா இருக்கறதால இந்தக் கேள்வி. இந்தியில் ஒரு படத்துக்கு நான்கைந்து இசையமைப்பாளர்கள் ஒர்க் பண்ணுற சூழல் இருக்குது. இதை எப்படிப் பார்க்குறீங்க?
‘‘இது பல வருஷங்களாகவே அங்கே நடைமுறையில் இருக்குது. ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு இசையமைப்பாளர்ங்கிற டிரெண்ட் உருவாகிடுச்சு. முழுப் படத்துக்கும் ஒருத்தரே இசைன்னா நிறைய சுதந்திரம் கிடைக்கும். கதையோட ஜீவனைப் புரிஞ்சிக்க முடியும். அந்தக் கதைக்கான பின்னணி இசைக் கோப்பின்போதே, தீம் மியூசிக்கை உருவாக்க முடியும். அந்தக் கதையில் இல்லாத சிச்சுவேஷனை இசையில் வைக்கலாம். ஆனா, இப்ப ஒரு படத்துல ஒவ்வொரு பாட்டுக்கும் தனித்தனி இசையமைப்பாளர்... பின்னணி இசைக்கு வேற ஒருத்தர்னு பண்ணுறப்ப கதையோட ஆழம் தெரியாமல், கேட்ட சூழலுக்குப் பாட்டு போட்டுக் கொடுக்க மட்டும்தான் முடியும். ஸோ, மியூசிகல் கனெக்ட் மிஸ் ஆகும். இதை சரி, தவறுன்னு சொல்ல வரல. ஆனாலும் அப்படியும் ஹிட் ஆன பாடல்கள் நிறைய இருக்கு. ‘புஷ்பா'வின் பாடல்களை மட்டுமல்ல... அதோட பின்னணி இசையையும் பாலிவுட் இசையமைப்பாளர்களே பாராட்டினது சந்தோஷமா இருந்துச்சு. நாம இன்னொரு மொழியில ஒர்க் பண்ணுறப்ப அந்த மொழி நமக்குத் தெரிஞ்சிருக்கறது பலமா அமையும். என்னோட ஆரம்பகால இசை, பாலிவுட்டுக்கு ரொம்பப் பொருத்தமா இருக்குன்னு சொல்வாங்க.''

நீங்க சென்னையில்தான் இருக்கீங்களா? இல்ல, ஹைதராபாத்தில் இருந்து ஒர்க் பண்ணுறீங்களா?
‘‘இந்த டவுட் எல்லாருக்குமே வரும். ரொம்ப வருஷமாவே என் ஸ்டூடியோ சென்னையில்தான் இருக்கு. இங்கே இருந்துதான் என்னோட எல்லா மொழிப் படங்களுக்கும் ஒர்க் பண்ணுறேன். ஆனா, இங்கே இருக்கிறவங்க நான் ஹைதராபாத்திலேயே இருக்கேன்பாங்க. ஹைதராபாத்ல இருக்கிறவங்க நான் சென்னையில்தான் பெரும்பாலும் இருக்கேன்னு சொல்வாங்க. எப்படி இதைப் புரியவைக்கிறதுன்னு எனக்கும் தெரியல!''