கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

“பார்வையற்றவர்களுக்கு புல்லாங்குழல் மட்டும்தான் இசைக்க வருமா?”

காட்சன் ருடால்ப்
பிரீமியம் ஸ்டோரி
News
காட்சன் ருடால்ப்

பார்வையற்ற ஒருவர் இசைக்கருவிகள் இசைக்கறது வழக்கமான விஷயம்தான். ஆனால்...

`ஹே பெண்ணே... உன் பார்வை என் காதல் ஆயுதம்' என அனிருத்தும், ஸ்ரீநிஷாவும் காதல் கசியப் பாடிய ‘கிரிமினல் க்ரஷ்'தான் ஆல்டைம் ஹிட் ஆல்பம். இதற்கு இசையமைத்த காட்சன் ருடால்ப் பார்வையற்றவர். வெற்றிமாறனின் சிஷ்யர் மில்லன் இயக்குநராக அறிமுகமாகும் ‘வலைஞன்' படத்தின் மூலம் இப்போது இசையமைப்பாளராக சினிமாவிலும் கால்பதிக்கிறார். அவருடைய வாட்ஸப்பிற்கு மெசேஜ் தட்டினால், உடனுக்குடன் பதில் அனுப்பி அசரடிக்கும் காட்சனிடம் பேசினேன்.

‘‘இவ்வளவு பிஸியிலும் அனிருத் உங்கள் இசையில் பாடியிருந்தார்..!’’

‘‘லாக்டௌன் சமயத்துல ஒரு யூடியூபரா பயணத்தை ஆரம்பிச்சேன். ரஹ்மான் சார், அனிருத் சாரோட பாடல்களை மறுஆக்கம் பண்ண ஆரம்பிச்சேன். எல்லாருமே என்னை உற்சாகப்படுத்தினாங்க. எனக்கே ரொம்ப ஆச்சரியமான விஷயம், அனிருத் சார் வரைக்குமே என் இசை ரீச் ஆனது. ஒருநாள் ரொம்ப ஆசைப்பட்டு ‘என் மியூசிக் ஆல்பத்தில் நீங்க ஒரு பாடல் பாடணும்’னு அவர்கிட்ட கேட்டேன். ‘ட்யூன் அனுப்புங்க, பிடிச்சிருந்தா பாடுறேன்’னார். நான் அனுப்பின ட்யூனும் அதனுடைய காம்போசிஷனும் அவருக்குப் பிடிச்சுப் போய் பாட சம்மதிச்சார். பாடல் பதிவுக்காக அனிருத் சாரோட ஸ்டூடியோவுக்குப் போனபோதுதான் நான் பார்வையற்றவர் என்கிற விவரமே அவருக்குத் தெரியும். அதிர்ந்து போயிட்டார். ‘அருமையா இருக்கு ப்ரோ'ன்னு அவர் என்னை உற்சாகப் படுத்தினது இன்னும் மனசுக்குள் நீங்காமல் இருக்கு.''

“பார்வையற்றவர்களுக்கு புல்லாங்குழல் மட்டும்தான் இசைக்க வருமா?”

‘‘உங்களுக்கு இசையில் ஆர்வம் வந்தது எப்படி?’’

‘‘நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான். நாலு வயசு வரைக்குமே லேசான பார்வை இருந்தது. அதன்பின் நரம்பு பாதிப்பு காரணமா பார்வை போச்சு. எங்க அப்பா பால் நந்தகுமார் கட்டடப் பொறியாளரா இருந்தவர். இப்ப எனக்காக தன் வேலையை உதறிட்டு கூடவே இருந்து கவனிச்சுக்கறார். அம்மா நந்தினி, சமூக சேவை நிறுவனத்துல வேலை செய்யுறாங்க. நாலு சுவத்துக்குள்ள என் உலகம்னு இருந்தாலும், ஆரம்பத்திலிருந்து என் இசையின் முதல் ரசிகர்கள் அவங்கதான்.

எனக்கு இசையில ஆர்வம் வந்ததே செல்போனாலதான். ஏழு வயசில பழைய நோக்கியா போன் ஒண்ணு வச்சிருந்தேன். அதுல ரிங்டோன் கம்போஸிங் பண்ணும் வசதி இருந்துச்சு. அதுல விளையாட்டா ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்' பாடலை கம்போஸ் பண்ணி வீட்டுல காட்டினேன். அவங்க ஆச்சரியப்பட்டு, கீபோர்டு ஒண்ணு வாங்கிக் கொடுத்தாங்க. முறைப்படி கீபோர்டு கத்துக்க விரும்பி, மியூசிக் கிளாஸ்களுக்குப் போனால், சொல்லி வச்ச மாதிரி எல்லாருமே ‘உங்களுக்குப் பார்வை தெரியாததனால மியூசிக் நோட்ஸ் வாசிக்க முடியாது. அதனால பியானோ, கீபோர்டு எல்லாம் கத்துக்க முடியாது. புல்லாங் குழல்தான் உங்களுக்கு சரியா வரும்'னு சொன்னாங்க. அதை மாத்திக் காட்டணும்னு சவாலாக எடுத்துக்கிட்டேன். இப்ப பியானோவும் அழகா வாசிப்பேன். கச்சேரிகளுக்கு வாசிக்கவும் போவேன்.

நான் கீபோர்டு கத்துக்கக் காரணம் ராஜேஷ் மாஸ்டர். நோட்ஸ் எல்லாத்தையும் எனக்கு ஆடியோவாக மாத்திக் கொடுத்து உதவினதோடு, லண்டன் டிரினிட்டி தேர்வு எழுதப் பயிற்சி கொடுத்தார். எட்டு கிரேடிலும் சிறப்பா தேர்வானேன். ‘இந்தியாவில் பார்வையற்றவங்க யாரும் இதுவரை எட்டு கிரேடு முடிச்சதில்லை’ன்னு பாராட்டினாங்க.

இப்ப முதுகலை முடிச்சிருக்கேன். ஆனா, பி.சி.ஏ படிக்க ஆசைப்பட்டேன். காலேஜ்ல என்னைச் சேர்த்துக்கவும் செய்தாங்க. குழந்தையின் குதூகலத்தோடு சந்தோஷமா போனேன். அந்த சந்தோஷம் ஒரு மாசம் கூட நீடிக்கல. பல்கலைக்கழகத்துல இருந்து ‘பார்வையற்றவரால கம்ப்யூட்டர் கோர்ஸ் கத்துக்க முடியாது. அதனால உங்களை நீக்குறோம்’னு சொல்லிட்டாங்க. குழந்தைகிட்ட பொம்மையைக் கொடுத்துட்டு விளையாடிட்டு இருக்கும்போது பறிச்ச மாதிரி ஆகிடுச்சு.

“பார்வையற்றவர்களுக்கு புல்லாங்குழல் மட்டும்தான் இசைக்க வருமா?”

என்மீது பரிதாபப்பட்டால் எனக்கு சுத்தமாப் பிடிக்காது. நான் மொபைலில் வாட்ஸப்பில் சாட் பன்றதைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டிருக்காங்க. என் தேவை, தேடல்களை நானே நிவர்த்தி பன்றது மாதிரி எனக்கான மென் பொருள்களைக் கட்டமைச்சு வச்சிருக்கேன். முன்னாடியே நிறைய பேர் யூடியூப்ல என் இசையைக் கேட்டுட்டு மியூசிக் பண்ணக் கேட்டு வருவாங்க. எனக்குப் பார்வை இல்லைன்னு தெரிஞ்சதும் ‘சொல்லி அனுப்புறோம்'னு நழுவிடுவாங்க. ‘கிரிமினல் க்ரஷ்' இயக்குநர் ருத்ரா மணிகண்டன் சார் மூலமாகத்தான் ‘வலைஞன்' பட வாய்ப்பு வந்திருக்கு.

பார்வையற்ற ஒருவர் இசைக்கருவிகள் இசைக்கறது வழக்கமான விஷயம்தான். ஆனால் முப்பது இசைக்கருவிகள் வாசிக்கத் தெரிவதும் ஒரு படத்துக்கு இசையமைப்பாளர் ஆவதும் இந்தியாவிலேயே நான்தான்னு நிறைய பேர் சொன்னாங்க. பார்வை யற்றவர்கள் குறித்த விழிப்புணர்வு இங்கே இல்லை. எங்ககிட்டேயும் நிறைய திறமைகள் இருக்கு. சரியான வாய்ப்புகளைக் கொடுத்தால் நிரூபிப்போம்'' நம்பிக்கை ஒளிரப் புன்னகைக்கிறார் காட்சன்.