
வார்த்தைகள்தான் இன்னும் புழக்கத்தில் இருக்கு. வார்த்தை வந்த பின்னாடிதான் டியூன் மனசுக்குள்ளே வரும். சில சமயம் யூகிச்சு ஹிட்டாகியிருக்கு.
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
அமைதியாக வந்து அமர்கிறார் சைமன் கே.கிங். மிகவும் கவனத்தில் வந்துகொண்டிருக்கும் இளம் இசையமைப்பாளர். கறுப்பு வெள்ளைக் கட்டைகளில் விரல்கள் அலைபாய, கண்கள் சிரிக்கின்றன சினேகமாக! `555'-ல் ஆரம்பமாகி `பேப்பர் ராக்கெட்' வரைக்கும் வந்திருக்கிறார்.
``ஆச்சர்யமாக நான்தான் முதலில் என் குடும்பத்திலிருந்து இசைக்கு வந்திருக்கேன். அப்பா, அம்மாவுக்கெல்லாம் அரசுப் பணி தான். வட சென்னையில் பிறந்தேன். சின்ன வயசிலேயே மியூசிக் பிடிச்சிருந்தது. ஆனா அதை கரியராக எடுத்துக்கொள்ள தயக்கமிருந்தது. மெகா சீரியல், ஹலோ எஃப் எம்-னு மியூசிக் பண்ணிக்கிட்டே இருந்தேன். எல்லாமே அனுபவத்தில் சேர்ந்து கொண்டேயிருந்தது. அப்போ மியூசிக் டைரக்டர்கள் குறைவுதான். இயக்குநர் சசி சார் அப்போ புதியவர்களுக்கு இடம் கொடுத்துக்கிட்டே இருந்தார். அவர் கொடுத்த வாய்ப்புதான் `555.’ இங்கு நாம் நிலைத்து நிற்கிறதும், மக்களின் மாறுகிற ரசனைகளைப் புரிஞ்சுக்கிட்டு இசை அமைக்கிறதும் சவால்தான். இந்த சவால்தான் என்னை எனக்கே சுவாரஸ்யமாக்குது.''
``இன்னும் இளையராஜா, ரஹ்மான் பாதிப்பு இருக்கிறதை எப்படி எடுத்துக்குறீங்க?’’
''எம்.எஸ்.வி., ராஜா, ரஹ்மான் எல்லாம் ஒரு தலைமுறைக்கும் மேலே ஆட்சி செய்தாங்க. அவங்க ல்லாம் இசையமைப்பாளர் என்பதற்கும் மேலே. அந்த வரிசை இன்னும் நிரப்பப்படாமலேயே இருக்கு. இன்னும் பத்து வருஷத்துக்குப் பிறகுதான் இன்னொருத்தர் அந்த இடத்துக்கு வர முடியும்னு தோணுது. அவங்களோடு ஒப்பிடும்போது நாங்க மாணவர்கள்தான். அந்த இடத்தை அடைய முடிவதும், அடைவதும் சாதாரண விஷயம் இல்லை. உழைப்பும், நீண்ட பயணமும் தேவை. இவர்களுக்கு நடுவே நாங்களும் மியூசிக் பண்றோம் என்பதே பெரிய விஷயம்தான். இவர்களின் பாடல்களே பெரிய ஞானத்தைக் கொடுத்து, கத்துக்கத் தூண்டுது. சினிமா இசைக்கு அடிப்படையாக இவங்க மூணு பேருமே போதும்போலத் தோணுது.

``நிறைய புது இளைஞர்கள் வந்தும் மெலடி காணாமல் போயிடுச்சே..?’’
``வாழ்க்கை வேகமாகிவிட்டது. நின்று நிதானிக்கிற மாதிரி ஓர் இடமும் அமையவில்லை. முன்னாடியெல்லாம் பாட்டு கேட்பதற்கென்று நேரமெல்லாம் தனியா வெச்சிருந்தோம். இப்ப செல்போனைத் திறந்தால் பாட்டா வந்து கொட்டுது. திரும்பத் திரும்ப பாட்டுக் கேட்டதெல்லாம் பழங்கதை ஆச்சு. மாதத்துக்கு நாலு படம் வருகிற காலம் போய், வாரத்துக்கு நாலு படம் என்று ஆகிப்போச்சு. பெரிய நட்சத்திரங்கள் பாட்டு மட்டும் உடனே ரீச் ஆகுது. பாட்டு ரேடியோவில் உட்கார்ந்து கேட்டது போய், வீடியோவும் சேர்ந்தே கிடைக்குது. கவனம் சிதறி பாட்டுக்கான வெளி குறையுது.''
``ஒரு பாட்டு `ஹிட்' அடிக்கும்னு யூகிக்க முடியுமா?’’
``சில படங்களில் ரொம்ப கச்சிதமான இடங்கள் வந்துடும். எனக்கு வார்த்தைகள் ரொம்ப முக்கியம். அதிலேயே கதை சொல்ல முடியணும். வார்த்தைகள் உணர்வுபூர்வமா வந்துட்டாலே அந்தப் பாடலுக்கு பாதி உயிர் வந்த மாதிரிதான். பாடல் வரிகளில் கதை சொல்ற காலம் எப்பவும் அழகு. கண்ணதாசன் பாடல்களில் படத்தின் ஆழமும் தெளிவும் தெரிஞ்சுடும். ஒரு பாடலை ஞாபகப்படுத்தும் போது உங்களுக்கு வார்த்தைதான் ஞாபகத்துக்கு வரும். மெட்டு வராது.
வார்த்தைகள்தான் இன்னும் புழக்கத்தில் இருக்கு. வார்த்தை வந்த பின்னாடிதான் டியூன் மனசுக்குள்ளே வரும். சில சமயம் யூகிச்சு ஹிட்டாகியிருக்கு. பல சமயம் நினைச்சுப் பார்க்காமல் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்கு. சமயங்களில் இரண்டு மூன்று நிமிஷத்தில் இந்தப் பாடல் நல்லா வரும்னு தெரிஞ்சுடும். அந்த மாதிரி சமயங்களில் வெறும் டியூனைப் பாடிக் கேட்பதே இனிமையாக இருக்கும். அது எப்படின்னு சொல்லத் தெரியாது. வேற ஒண்ணும் நம்ம கையில் இல்லை. எப்படிப் பார்த்தாலும் நாம் வெறும் கருவிதான். இப்ப `சத்யா' படத்தில் போட்ட `யவ்வனா' பெரிய ஹிட் ஆனது. அந்த மாதிரிதான்னு சொல்லத் தோணுது.''