பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சரிகமபதநி டைரி 2019

மஹதி
பிரீமியம் ஸ்டோரி
News
மஹதி

கச்சேரியை விறுவிறுப்பாக அமைத்துக் கொள்ள விரும்பும் ஒரு சில பெண்டிர்களில் மஹதியும் ஒருவர்.

றைந்த மேதை எம்.பாலமுரளிகிருஷ்ணாவின் கருடத்வனிராக தில்லானாவைக் கேட்கும்போது நடுக்கமாக இருந்தது. எந்த நிமிடமும் நம்மீது மோதிவிடுமோ என்று நினைக்க வைக்கும் சோழவரம் ரேஸ் கார் வேகம். மியூசிக் அகாடமியில் எஸ்.மஹதி இந்தத் தில்லானாவைப் பாடினார்.

சரிகமபதநி டைரி 2019

66வது மேளகர்த்தா ராகமான சித்ராம்பரி ப்ளஸ் 56வது மேள ராகம் சண்முகப்ரியாவில் ராகம் - தானம் - பல்லவி. சித்ராம்பரியில் அழுத்தமாக ஆலாபனை செய்து கொண்டிருந்தவர், காந்தாரத்தில் கிரகபேதம் செய்து சண்முகப்ரியாவுக்குள் மஹதி நுழைந்தது அழகுப் பிரவேசம். பல்லவிக்குள் புகுமுன் 66 மைனஸ் 56 = 10 மைனஸ் 7 ஸ்வரங்கள் = மூன்று என்றெல்லாம் ஏதோ கணக்கு கிளாஸ் எடுத்தது யாருக்காக? அதையெல்லாம் விளக்கி அகாடமியில் மெடல் வாங்க வேறு சிலர் இருக்கிறார்களே!

கச்சேரியை விறுவிறுப்பாக அமைத்துக் கொள்ள விரும்பும் ஒரு சில பெண்டிர்களில் மஹதியும் ஒருவர். ஆனால், துபாயில் இறங்கி லண்டனுக்கு கனெக்டிங் ப்ளைட் பிடிக்கும அவசரத்தில் ஒரே ஓட்டம். பாடும்போது அங்கங்கே இடைவெளி விட்டு, சற்று அமைதிகாத்துப் பின்னர் தொடர்ந்தால் கிடைக்கும் அனுபவம் தனி!

J.B.கீர்த்தனா
J.B.கீர்த்தனா

சார்ஸுர், டிசம்பரில் நடத்திய கலைவிழாவில் ‘மயிலை டு கன்னியாகுமரி’ என்பது பொது தீம். இதில் பாடியவர்கள், பல்வேறு தலங்களுக்குப் புனிதப் பயணம் சென்று வந்தார்கள். அக்கரை சகோதரிகள் சுப்புலட்சுமி - ஸ்வர்ணலதாவின் வாய்ப்பாட்டு டூயட்டில் கரூரில் முதல் ஸ்டாப். அடுத்து ஸ்ரீராகத்தில் ஒரு பாடல். தொடர்ந்து கௌள, வராளி, பைரவி என்று வெவ்வேறு ராகங்களில் பல்வேறு பாடல்கள். முக்கியமாக, சுப்புலட்சுமி பைரவி ராகத்தை கனமாகக் குழைத்துவிட்டு, சகோதரிகள் இருவரும் பாடிய சியாமா சாஸ்திரியின் ஸ்வர ஜதியில் காஞ்சி காமாட்சியின் தரிசனம்!

அன்று இளையவர் ஸ்வர்ணலதாவுக்கு ஜுரம். காலையில் டாக்டரிடம் சென்று ஊசி போட்டுக் கொண்டு வந்தாராம். மேடையில் ஆரம்பத்தில், பார்க்க பலவீனமாக இருந்தாலும் முடிவில் பலம் கூடிவிட்டது. கற்ற கலை காலை வாரி விடாதுதானே!

னவரி முதல் நாள். புள்ளினங்கள் பூபாளம் பாடி முடித்துவிட்டன. மினி ஹாலில் B.கண்ணன், மதுர வீணை. பாம்பே வி.ஆனந்த் (வயலின்), தஞ்சாவூர் முருகபூபதி (மிருதங்கம்), மடிப்பாக்கம் முரளி (கடம்). என்.சுந்தர் என்பவர் மோர்சிங், தபலா இரண்டையும் வாசித்தார். கண்ணன் தன் கச்சேரிகளில் ஒவ்வொரு பாடலின் பயோடேட்டாவையும் அறிவித்துவிட்டு வாசிக்கத் தொடங்குவார் என்பதாக நினைவு. ஆனால், இந்தக் கச்சேரியில் முக்கால் பகுதி மௌனச் சாமியாராகி வீணை மட்டும் வாசித்துக் கொண்டிருந்தார்! ராகம் - தானம் - பல்லவிக்கு முன்னால்தான் மௌனம் கலைத்தார்.

அக்கரை சகோதரிகள்
அக்கரை சகோதரிகள்

“நாம் அனைவரும் தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது... ராகத்தின் பெயரிலேயே தர்மம் இருக்கும். தர்மவதியில் பல்லவி வாசிக்கப் போகிறேன்...” என்று அறிவித்த பின் கண்ணன் வாசித்த தர்மவதி, தியானம் செய்வது மாதிரியாக இருந்தது. மீட்டலில் அதிர்வேட்டெல்லாம் கிடையாது. `சந்திரசேகரம் பஜேஹம்’ என்ற பல்லவி வரிகளில் காஞ்சி மகா பெரியவருக்கு அபிஷேகமும் ஆராதனையும் செய்தார்.

ஒவ்வொரு வருடமும் வீணைக்காக மெகா உற்சவம் நடத்துகிறார் கண்ணன். தவிர, ஒரே மேடையில் 108 வீணைக் கலைஞர்களை வாசிக்க வைக்கிறார். ‘கடை விரித்தேன்… கொள்வாரில்லை’ என்ற வள்ளலாரின் வரிகளை நினைவுபடுத்தாத வகையில், இவரின் தொடர் முயற்சிகளால், வீணைக்கு ஆதரவு பெருக வேண்டும்!

மஹதி
மஹதி

டந்த 12 வருடங்களாக கிருஷ்ண கான சபாவுடன் இணைந்து MLA (Musicians Living Abroad) கச்சேரிகள் நடத்திவருகிறார், சீனியர் மிருதங்க வித்வான் காரைக்குடி மணி. வெளி நாடுகளில் வாழும் இசைக் கலைஞர்களை வரவழைத்து மேடை கொடுக்கிறார். இவர்களுடன் நம்மூர் வித்வான்களும் உண்டு. சபாநாயகர் மாதிரி மையமாக அமர்ந்து சபா நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு நடத்திச் செல்கிறார் காரைக்குடி மணி!

இங்கு ஒரு நாள் சங்கரன் நம்பூதிரி பாடினார். எர்ணாகுளத்தில் வசிப்பவருக்கு வயலின் வாசித்த ஏ.ஜி.ஞானசுந்தரம் இங்கிலாந்தில் எம்.எல்.ஏ! சாருகேசி வர்ணத்துடன் ஆரம்பித்த சங்கரன் நம்பூதிரி, தோடியை மெயினாகக் கொண்டு அவசரம் அவரமாக ஆலாபனை செய்தார். அதில் அசைவுகள் அதிகம். கிரகபேதமும் உண்டு. ஊத்துக்காடு வேங்கடகவியின் ‘வேணுகான ரமண...’ பாடல். நிறுத்தி நிதானமாகப் பாடியிருந்தால் ரசித்திருக்கலாம். கொடுத்து வைக்கவில்லை!

நாரதகான சபா மினி ஹாலில் கிரிஜாசங்கர் சுந்தரேசன் வாய்ப்பாட்டு.

கருவிலேயே தொண்டை கட்டிவிட்டதோ என்று நினைக்குமளவு, கரகரக்குரல் கிரிஜாசங்கருக்கு. அதுவும்கூட கேட்பதற்கு சுகமாகவே இருக்கிறது. இரண்டு தம்புராக்களுடன் சுருதி சுத்தமாகப் பாடுகிறார். அன்றைய பூர்விகல்யாணியும் சரி, ‘ஞான மொஸக ராதா’ பாடலில் ‘பரிபூரண நிஷ்கலங்க’ வரிகளில் நிரவலும் சரி, பாடகர் படிக்கும் இசைப் பள்ளியின் பெருமையை எடுத்துரைத்தது.

கிரிஜாசங்கர், சங்கரன் நம்பூதிரி, சுமித்ரா வாசுதேவ்
கிரிஜாசங்கர், சங்கரன் நம்பூதிரி, சுமித்ரா வாசுதேவ்

இந்த சீசனில் தியாகராஜரின் கரகரப்ரியா ராக ‘சக்கநி…’யைப் பாடிய 232–வது பாடகர் கிரிஜாசங்கர்! ஸ்ரீ ராமபிரானின் பக்தியெனும் ராஜ வீதியில் பலரும் நடந்து நடந்து சாலை இப்போது அழுக்கு படிந்திருக்கும், சுத்தப்படுத்த வேண்டும்! அது ஒருபக்கமிருக்க, கிரிஜாசங்கரின் கரகரப்ரியாவில் ஜீவன் இருந்தது பாராட்டத்தக்க அம்சம். கீப் இட் அப்!

மேடையில் எல்லாக் கலைஞர்களும் ஆடவராக இருக்கும்போது ஒருவித Dress code இருப்பது நலம். கருங் காபி கலரில் ஒருவரும், மற்றவர்கள் சிவப்பு, கட்டம் கட்டம், நீலம் என்று பெயின்ட் டப்பாக்களை அடுக்கி வைத்த மாதிரி மேடையில் காட்சி தருவது பார்ப்பதற்கு உறுத்தல்.

கல் 11.45 ஸ்லாட்டில் மியூசிக் அகாடமியில் பாடிய J.B.கீர்த்தனா, வருங்காலத்தில் ஜொலிக்கப்போவது உறுதி. கவனம் செலுத்தி கச்சேரிப் பட்டியலைத் தயாரித்து, குரலெடுத்துப் பாடல்களை விறுவிறுவென்று பாடுகிறார். கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்து, இரண்டு உள்ளங்கைகளிலும் குழந்தையைப் படுக்க வைத்துக் கொஞ்சித் தாலாட்டும் பாவனையில் கீர்த்தனா கீர்த்தனைகளைப் பாடுவது க்யூட்!

கண்ணன்
கண்ணன்

நாட்டையில் வர்ணம், நடபைரவியில் பாபநாசம் சிவனின் ‘ஸ்ரீ வல்லி…’, கேதாரத்தில் ‘ஆனந்த நடன பிரகாசம்…’ என்று ஒவ்வொரு மணியாகக் கோத்தார். பிரதானமாகக் கல்யாணி. இனிமைக் குரலில் பாடி ராகத்தை மெருகேற்றியது சிறப்பு. வரும் வருடங்களில் கீர்த்தனா அதிகம் கவனித்துக் கேட்கப்பட வேண்டியவர்.

மியூசிக் அகாடமியில் பாடிய சுமித்ரா வாசுதேவ், சங்கீத கலாநிதி ஆர்.வேதவல்லியின் சீனியர் மாணவி. குரு பக்தை. வடமொழியில் சுலோகம் ஒன்றைப் பாடிவிட்டுதான் மற்றதெல்லாம். எந்தவித அலட்டலுமில்லாமல் பூஜை அறையில் கடவுளர்களுக்கு அர்ப்பணிப்பது மாதிரி பாடுகிறார். சாமா, ஸாவேரி, பிருந்தாவனசாரங்கா, சுரட்டி உள்ளிட்ட ராகங்களில் அமைந்த பாடல்களை அழகான குரலில் ஆழ்ந்த ஞானத்துடன் பாடினார், சமூக வலைதளங்களில் விளம்பரத்துக்கு அலையாத சுமித்ரா வாசுதேவ்.

வரும் வருடங்களில் சுமித்ராவும் அதிகம் கவனித்துக் கேட்கப்பட வேண்டியவர்.

Tailpiece: கலைஞர்கள் மேடையில் பிளாஸ்க்கிலிருந்து சுடுநீர் ஊற்றிக் குடிக்க புத்தம் புது எவர்சில்வர் டம்ளர்களையே பயன்படுத்துகிறார்கள். டிசம்பருக்குமுன் புதுசாகப் பட்டுப்புடவைகள், வேட்டி - ஜிப்பாக்கள் வாங்கி அடுக்கி வைப்பதுபோல் பாத்திரக்கடைகளில் புது லோட்டாக்களும் வாங்குவார்களோ!

நிறைவு