பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சரிகமபதநி டைரி 2019

சௌம்யா
பிரீமியம் ஸ்டோரி
News
சௌம்யா

இந்த சீசனில் டாப் 3 யார்? சஞ்சய் சுப்ரமணியன், ரஞ்சனி - காயத்ரி, பாம்பே ஜெயஸ்ரீ என்கிற மூன்று பெயர்களை வெவ்வேறு வரிசையில் சொல்கிறார்கள் சபா நிர்வாகிகள். இசைப் பிரியர்கள் நடுவிலும் இதற்கு மாற்றுக்கருத்து இருக்காது என்பது நிச்சயம்!

பார்த்தசாரதி சுவாமி சபாவில் full form-ல் இருந்தார் அருணா சாய்ராம். சண்டித்தனம் செய்யாமல் குரல் ஒத்துழைத்தது. பக்கவாத்தியக் கலைஞர்கள் விட்டல் ரங்கன், என்.சி. பரத்வாஜ், எஸ்.கார்த்திக் மூவரும் பிடி நழுவாமல் அருணாவுடன் பயணம் செய்தார்கள்.

அருணா சாய்ராம்
அருணா சாய்ராம்

ஆபோகியில் வர்ணம் முடித்துவிட்டு நீலாம்பரியில் `நீகே தயராக' பாடல், அரைகுறை உறக்கத்தில் இருந்தவர்களைத் தட்டி எழுப்பியது. ப்ளீஸ் நோட்... அருணாவின் நீலாம்பரி தாலாட்டித் தூங்க வைக்கும் ரகமல்ல! மோகன கல்யாணி அன்றைய ஸ்பெஷல். சங்கதிகள் அடுத்தடுத்து அணிவகுக்க, நாகஸ்வரப் பிடிகள் துரத்திக்கொண்டு வர, அமர்க்கள ஆலாபனை அது. ஆபேரியில் `பஜரே ரே மானஸ' பாடலுக்கான ஸ்வரங்களில் `கொஞ்சும் சலங்கை’யில் காருகுறிச்சியும் எஸ்.ஜானகியும் நடத்திய ஸ்வரப் போர் நினைவுக்கு வந்து களிப்பூட்டியது. கோபாலகிருஷ்ண பாரதியின் `வழி மறைத்திருக்குதே' பாடலை, நந்தன் பாடிய அதே உருக்கத்துடன் பாடினால் மனம் பிசையும். அருணா சாய்ராமின் குரலில் கேட்டபோது பிசைந்தது.

வயலினில் உழுது உழுது பொங்கலுக்கு முன்பாகவே செம அறுவடை செய்திருக்கிறார் விட்டல்ரங்கன். இனிமையான வாசிப்பில் பாடுபவரைப் பின்தொடரும்போதும், தனியாக வாசிக்கும்போதும் மின்னுகிறார் இந்தப் படுசுட்டி இளைஞர். அருணா சாய்ராமின் பாராட்டு மொழியில் சொல்வதானால், பேஷப்பா!

சுதா ரகுநாதன்
சுதா ரகுநாதன்

கச்சேரியின் அடுத்த பேஷப்பா, இன்னொரு இளைஞர் என்.சி.பரத்வாஜின் மிருதங்க வாசிப்பு. அசாத்தியம். இவரும், அருணாவின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் கடம் கார்த்திக்கும் வாசித்த தனி ஆவர்த்தனம், ஸ்டேடியத்தில் அமர்ந்து வண்ணமயமான புத்தாண்டு fireworks பார்ப்பது போன்றதொரு குதூகலம் தந்தது!

‘கலாநிதி’ கச்சேரி என்றாலே மியூசிக் அகாடமியில் ஆர்ப்பாட்டமும் அலம்பலுமாக ஷோ காட்டுவார்கள். இந்த முறை சௌம்யாவின் சங்கீதம் போலவே சங்கீத வித்வத் சபையில் அவரின் கச்சேரியும் அமைதியாக, ஆடம்பரமின்றி நடந்தேறியது.

தோடியில் வர்ணம். பைரவம் ராகத்தில் தியாகராஜரின் ‘மரியாத காதய்யா’ பாடலை ஜீவனுடன் பாடினார் சௌம்யா. ஸ்வரங்களை அவர் வடிவாக அடுக்கிச் சென்றபோது, ஒரு முடிவோடுதான் அவர் வந்திருப்பது தெரிந்தது!

சௌம்யா
சௌம்யா

சீக்கிரமாகவே காம்போதிக்குள் புகுந்துவிட்டார் சௌம்யா. அங்கங்கே குரல் காலை வார நினைத்தாலும், அனுபவம் பெற்றுத் தந்த அறிவும், பிறவி இசை ஞானமும் அவரைக் கரம் பிடித்து அழைத்துச்சென்றது. காம்போதியின் டிரேடு மார்க் சங்கதிகளால் ஆலாபனையை சுவையாக்கி, ‘காம்போதி என்றாலே கீழேயும் மேலேயும் தாவித்தாவி சர்க்கஸ் செய்ய வேண்டும்’ என்ற கட்டுக்கதையைப் பொய்யாக்கினார். ‘எவரிமாட’வில் ‘சக்திகல மஹாதேவுடு நீநவ’ வரியில் செய்த நிரவல் ஹைக்ளாஸ்!

அடுத்து அருணாசலக் கவிராயர் ஆஜர். தன்னை விட்டுவிட்டு ராமன் வனம் செல்ல முடிவெடுத்தபோது அறச்சீற்றம் கொள்ளும் சீதையின் மனநிலையை எக்ஸ்ரே எடுத்துக்காட்டுவார் கவிராயர். ‘எப்படி மனம் துணிந்ததோ சாமி’ என்று பல்லவியில் ஆரம்பித்து, ‘கரும்புமுறித்தாப்போலே சொல்லல் ஆச்சுதோ...’ என்று சரணத்தில் மணாளனுக்கு டோஸ் விடுவார். இந்த உசேனி ராகப் பாடலை சோக, கோப ரசத்துடன் இசைத்தபோது ஒரு கணம் மேடையில் சீனிவாசனின் மகள் சௌம்யாவை மீறி, ஜனகனின் புத்ரி சீதாப் பிராட்டியார் காட்சி தந்தார்!

மாயாமாளவகெளள ஸ்வரங்கள் கொண்ட ‘பாடி’ ராகத்தில் ராகம் - தானம் - பல்லவி. ‘பாடி முக்திபெற வேண்டும். இறையை குருவை இசையைப் பாடி முக்தி பெறவேண்டும்’ என்பது பல்லவி வரிகள். பாடத்தெரிந்தவர்களெல்லாம் இந்த வழியில் முக்தி பெற முயலலாம்!

பாட ஆரம்பித்து வருடங்கள் பல ஆகிவிட்டாலும் குரலில் கலந்துவிட்ட தேன், சுவை குன்றாமலிருப்பது சுதா ரகுநாதனின் ப்ளஸ்.

ஆடியன்ஸ் பல்ஸ் பார்த்துப் பாடுவதில் வல்லவர் டாக்டர் சுதா. மியூசிக் அகாடமி கச்சேரியில் ரீடிங் கொஞ்சம் மிஸ் ஆகிவிட்டது. வர்ணத்தில் முருகையாவையும், தொடர்ந்த ஸாவேரியில் விநாயகரையும் சேவித்துக்கொண்டு சுதா பாடியது அபூர்வமாகக் காதில் விழும் நாராயணி, டக்க போன்ற ராகப்பாடல்களை. அந்நியமானார்கள் அரங்கில் இருந்தவர்கள்.

51 நிமிடக் காத்திருத்தலுக்குப் பிறகு தோடி கம்பீரமாக நுழைய, ரொம்ப நெருக்கமான ஒருவரைச் சந்திக்கும் உற்சாகத்தில் ஆர்வமானார்கள் ஆடியன்ஸ். பத்து நிமிடங்களுக்கு சுதாவின் தோடி ஆலாபனை. அதில் இரண்டுதடவை கிரகபேதம் செய்தார். ஓரிரு முறை தடுக்கிவிழப் பார்த்து சமாளித்தார். ஆலாபானைச் சுற்றில் வயலின் எம்பார் கண்ணன் வெற்றியாளர். `கொலுவமரெகதா' கீர்த்தனை, நிரவல் - ஸ்வர சுற்றுகளில் வெற்றிக் கம்பம் தொட்டார் சுதா!

ராகம் - தானம் - பல்லவிக்கு சிம்மேந்திரமத்யமம். இந்த ராகத்தை சாதாரணமாக விராட் - ரோஹித் ஸ்டைலில் விளாசக் கூடியவர் மேடம். நேரமின்மையால் கொஞ்சமாகத்தான் பாட முடிந்தது. விசிறிகள் மட்டுமல்ல, சுதாவும் வருத்தப்பட்டிருப்பார்.

நிற்க. டிசம்பரில் மட்டும் பத்துக் கச்சேரிகள் பாடியிருக்கிறார் சுதா ரகுநாதன். மார்கழியுடன் அப்படிப் பின்னிப் பிணைந்தவர். மகிழ்ச்சி! இருப்பினும் வருடத்துக்கு ஒன்றாக எண்ணிக்கையைக் குறைத்து, ஐந்தில் வந்து நின்றால் அவரது தேன் குரல் சேதமடையாமல், கூடும் கூட்டத்துக்கு நிறைவைத் தரும்!

பாம்பே ஜெயஸ்ரீ
பாம்பே ஜெயஸ்ரீ

மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் அரங்கில் நுழைந்ததும் முதலில் கண்களில் படுவது சங்கீத மும்மூர்த்திகளின் பெரிய சைஸ் ஓவியங்கள். அவற்றில் நடுவில் அமர்ந்திருக்கும் தியாகராஜரின் மந்தகாச வதனத்தில் மென்புன்னகை பூத்திருப்பது போல் தெரிந்தது. இங்கு பாம்பே ஜெயஸ்ரீ அடுத்தடுத்து பாடிய மூன்று பாடல்களுமே தியாகராஜர் இயற்றியதாக இருந்ததுகூடக் காரணமாக இருக்கலாம்! `எடுல ப்ரோதுவோ தெலிய' (சக்ரவாகம்), `மனவியால கிஞ்ச' (நளினகாந்தி), `மோக்‌ஷமு கலதா’ (சாரமதி) என்று முதல் ஓவர் ஹாட்ரிக்!

பின்டிராப் அமைதியில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் லெக்சர் கேட்பதுபோன்ற... பறக்கும் விமானத்தில் சாய்ந்து உட்கார்ந்து ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகளைப் படிப்பது போன்ற... மகேந்திரனின் `உதிரிப்பூக்கள்' சினிமாவை ஏகாந்தமாகப் பார்ப்பதுபோன்ற அலாதியான தொரு உணர்வு ஜெயஸ்ரீ கச்சேரி கேட்டபோது ஏற்பட்டது மெய்!

விரிவான சாரமதி ராக ஆலாபனையில் பத்து நிமிடங்களுக்கு மேல் சொக்க வைத்தார். கீழ் ஸ்தாயியில் சிறிது நேரம் வட்டமடித்துவிட்டு, கேன்வாஸில் ஓவியம் தீட்டுவதுபோல் சிறுக சிறுக வளர்த்து மணம் கமழும் பூக்களால் சாரமதிக்குப் பாமாலை சூட்டினார். மோக்‌ஷமு கலதா பாடலின் சரணத்தில் வரும், `வீணாவாதாந லோலுடௌ' வரியை ஹை பிட்சில் எடுத்து அதை நிரவல் செய்த விதம் சங்கீத தெரபி! ஹெச்.என்.பாஸ்கர், பத்ரி சதீஷ்குமார், ஸ்ரீசுந்தர் குமார் மூவரும் தெரபிஸ்ட்டுக்குப் பக்கா கூட்டணி!

கல்யாணியைக் கொஞ்சம் விரிவாக்கம் செய்துவிட்டு, `உன் தரிசனம் கிடைக்குமோ நடராஜா தயாநிதே' என்று பல்லவி வரிகளில் உருகினார் ஜெயஸ்ரீ.

எல்லாம் சரி... தமது கச்சேரியில் பாம்பே ஜெயஸ்ரீ நான்கைந்து அயிட்டங்களுக்கு மேல் பாடுவதில்லை என்று ரசிகர்களில் சிலரும், `எங்கள் சபாவில் பாட தேதியே கொடுப்பதில்லை' என்று சபா நிர்வாகிகளில் சிலரும் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். `குறையொன்றும் இல்லை...' என்று அனைத்துத் தரப்பும் கோரஸாகப் பாட ஜெயஸ்ரீ ஆவன செய்ய வேண்டும்!

- பக்கங்கள் புரளும்