
கிராமங்கள்ல எல்லாரோட வாழ்க்கையுமே இசை யாலதானே நிரம்பியிருக்கு. பக்கீர்கள், பண்டாரங்கள்னு இசைக்கு மட்டும்னே மனிதர்கள் வாழ்ந்த காலங்கள் உண்டு.
மம்மது அய்யாவுக்கு வயது 76. தேடலும் ஓடலும் சிறிதும் தொய்வில்லாமல் தொடர்கிறது. 20 ஆண்டுக்கால கடும் உழைப்பில் 6,000 சொற்களெடுத்துக் கோத்த தமிழிசைப் பேரகராதியை வெளியிட்ட கையோடு 100 பண்களைத் தேர்வுசெய்து ஏறுநிரல், இறங்குநிரல் ஆய்ந்து, வயலின், புல்லாங்குழல், நாகஸ்வர இசையில் 33 மணி நேர குறுந்தகட்டையும் வெளியிட்டுத் தமிழிசையை ஆவணப்படுத்தி யிருக்கிறார். கருத்தரங்கம், ஆய்வரங்கம், இசைக்கருவிகள் கலைஞர்களைத் தேடிய பயணங்களெனப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நா.மம்மதுவுக்கு உமறுப் புலவர் விருதளித்துப் பாராட்டியிருக்கிறது தமிழக அரசு.
மம்மது, குற்றாலத்துக்கு அருகிலிருக்கும் இடைகால் கிராமத்தில் பிறந்தவர். இளங்கலையில் கணிதமும் முதுகலையில் தத்துவமும் இசையில் எம்.பிலும் படித்தவர். நெடுஞ்சாலைத்துறையில் எழுத்தராகப் பணியில் இணைந்து கண்காணிப் பாளராக ஓய்வு பெற்றவர். குடும்ப மரபு வழியாகவே மம்மதுவை வந்தடைந்திரு க்கிறது இசை.
“நாடகமும் இசையும் இணைந்ததுதான் அப்பா நாகூர்மைதீனோட வாழ்க்கை. அப்பாவோட மனநிலையை எப்படியாவது மாத்தணும்னு நினைச்ச தாத்தா, அவரை ரங்கூனுக்கு அனுப்பிவெச்சார். அங்கேயும் போய் குலேபகாவலி நாடகம் போட்டார் அப்பா. ரங்கூன்ல பிழைச்சது போதும்னு அப்பாவை ஊருக்கே அழைச்சுக்கிட்டார் தாத்தா. இங்கே விவசாயமும் கலையுமா வாழ்ந்தார் அப்பா.
கிராமங்கள்ல எல்லாரோட வாழ்க்கையுமே இசை யாலதானே நிரம்பியிருக்கு. பக்கீர்கள், பண்டாரங்கள்னு இசைக்கு மட்டும்னே மனிதர்கள் வாழ்ந்த காலங்கள் உண்டு. பயிற்சியோ படிப்போ இல்லாம பிறப்புல இருந்து இறப்பு வரைக்கும் பாட்டு மூலமாவே உணர்வுகளை வெளிப்படுத்துற வாழ்க்கை முறை நம்மோடது. தாலாட்டு, நலுங்கு, ஒப்பாரின்னு எல்லாத்துக்கும் பாட்டிருக்கு. நிறைவான வாழ்க்கை வாழ்ந்து செத்துப்போனவங்களுக்கு பதினாறு நாளும் ஊர்கூடி மாரடிச்சுப் பாடுவாங்க. கோயில்கொடைகள்லயும் பாட்டும் கச்சேரியும்தான் நடக்கும்.
இதெல்லாம்தான் எனக்குள்ள இசையார்வத்தைத் தூண்டியிருக்கணும். திருநெல்வேலி இந்துக் கல்லூரியில படிச்சப்போ, சிவஞான மாபாடியத்துக்கு உரையெழுதின சி.சு.மணி அய்யா ஆசிரியரா இருந்தார். அவர்தான், ‘இது கல்யாணி’, ‘இது முகாரி’ன்னு ராகங்களை வகைபிரிச்சறிய கத்துக் கொடுத்தார். தொ.பரமசிவன், வளனரசு, லூர்துசாமி எல்லாரும் அவரோட மாணவர்கள்தான். ‘நம் தமிழிசை மூவாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. பாடுதுறை பத்தி நுட்பமா ஆய்வு செய்...’ன்னு அவர்தான் என்னை இந்தப் பாதையில திருப்பினார்.
படிப்பு முடிஞ்சதும் நெடுஞ்சாலைத்துறையில பணி கிடைச்சு மதுரைக்குப் போனேன். அது என் பயணத்தைப் பெரிசாக்குச்சு. மதுரை கலைகளின் நகரம். பாஸ்கர தாஸ், விஸ்வநாத தாஸ், சங்கர தாஸ்னு மூன்று தாசர்கள் வாழ்ந்த ஊர். ஊர் ஊராப் போய் கலைஞர்களைச் சந்திச்சேன். ஆவணப் படுத்தினேன். வீ.ப.கா.சுந்தரம் அய்யாவைச் சந்தித்தபிறகுதான் இதுக்குள்ள செய்ய வேண்டிய வேலைகள் பத்தி ஒரு வரையறை செய்ய முடிந்தது. மிகப்பெரிய தொன்மமும் வரலாறும் கொண்ட தமிழிசையைப் பின்னுக்குத் தள்ளுறது, ஆவணப் படுத்துறதுல காட்டுற மெத்தனம்தான். அந்த நிலையை மாத்தணும். சொற்களஞ்சியம், பண் களஞ்சியம், இசைக்கருவிகள் களஞ்சியம் மூன்றையும் முழுமையா தேடியெடுத்து ஆவணப்படுத்தணும்னு திட்டமிட்டேன். முதற்கட்டமா சொற்களஞ்சியம் கொண்டு வந்தாச்சு. கிட்டத்தட்ட 6,000 வார்த்தைகளோட பொருள் அதுல இருக்கு. ஆனாலும் அது முழுமையானதில்லை. இன்னும் ஏராளமான சொற்கள் இருக்கு. அதுக்கான பயணம் தொடர்ந்துகிட்டே இருக்கு.

இனி எழுத்து மட்டும் போதாது. காணொலியாகவும் நிறைய விஷயங்களைப் பதிவு செய்யணும். பண் களஞ்சியத்தைத் தமிழ், ஆங்கிலம்னு ரெண்டு மொழிகள்ல நூலா கொண்டு வந்தேன். கூடவே வீடியோக் களாகவும் தயாரிச்சோம். அமெரிக்காவுல இருக்கிற தொழிலதிபர் பால்பாண்டியன் முதுகெலும்பா நின்னு இந்தப் பணிக்கு உதவினார். அடுத்து இசைக்கருவிகள் களஞ்சி யத்துக்கான வேலைகள்ல இறங்கியிருக்கேன். இது மிகப்பெரிய பணி. நம் நிகழ்த்துகலைகள்ல நிறைய கருவிகள் பயன்படுத்தப்படுது. கோயில்கள்லயும் பல அபூர்வமான இசைக்கருவிகள் பயன்பாட்டில் இருக்கு. மீனாட்சியம்மன் கோயில்ல தவண்டைன்னு ஒரு இசைக்கருவி வாசிக்கிறாங்க. திருவாரூர்ல ஐமுக முழவம்னு ஒரு கருவி இருக்கு. இன்னைக்கு இதுமாதிரி இசைக் கருவிகளையெல்லாம் இசைக்க ஆளேயில்லை. பல கருவிகள் வழக்கொழிஞ்சே போச்சு. எல்லாத்தையும் தேடியெடுத்து ஆவணப்படுத்த பெரும் பொருட்செலவு பிடிக்கும்.
இதேமாதிரி நம் நாடகங் களையும் காணொலியா பதிவு செய்து பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கு. 200க்கும் மேற்பட்ட பழைமையான நாடக ஸ்கிரிப்ட்கள் இருக்கு. சங்கரதாஸ் சுவாமிகள் மட்டும் 96 நாடகங்கள் எழுதியிருக்கிறதா சொல்லப்படுது. 16 நாடகங்கள் மட்டுமே ஆவணப்படுத் தப்பட்டிருக்கு. அதிலயும் ஐந்து நாடகங்கள்தான் களத்துல நிகழ்த்தப்படுது. நம் வாழ்க்கைமுறை, பண்பாடு, மரபுன்னு இந்த நாடகங் களுக்குள்ள நம்ம வரலாறே இருக்கு. எல்லாத்தையும் தேடிப் பிடிக்கணும்...”
உற்சாகமாகப் பேசுகிறார் மம்மது!