சினிமா
Published:Updated:

“நாகஸ்வரம் கத்துக்க வீட்டை விட்டு ஓடிவந்தேன்!”

டி. சிவலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
டி. சிவலிங்கம்

மகனின் இசையார்வத்தை முதலில் அங்கீகரித்த தந்தை, தானே முதல் ஆசிரியராக இருந்து நாகஸ்வரப் பயிற்சியளித்திருக்கிறார்

50 ஆண்டுகளுக்கும் மேலாக நாகஸ்வர இசையில் முன்னணியில் இருக்கிறார் சேஷம்பட்டி டி. சிவலிங்கம். இசையுலகின் பெரும் அங்கீகாரங்கள் இவரை அலங்கரித்திருக்க, இந்த ஆண்டு இவருக்கு ‘இசைப் பேரறிஞர்’ விருது வழங்கிச் சிறப்பித்திருக்கிறது தமிழ் இசைச் சங்கம்.

தர்மபுரி மாவட்டம் சேஷம்பட்டி கிராமத்தில், 1944-ல் பிறந்த சிவலிங்கத்துக்கு அவரின் தந்தை தீர்த்தகிரியிடமிருந்து இசையார்வம் தொற்றிக் கொண்டிருக்கிறது.

“அப்பா விவசாயம் பண்ணிட்டிருந்தார்... அப்பப்ப நாகஸ்வரமும் வாசிப்பார். வெளியூர்க் கச்சேரிகளுக்கு என்னையும் அழைச்சிட்டுப் போவார். நான் தாளம் போடுவேன். அப்பதான் எனக்கு நாகஸ்வரம் வாசிக்க ஆசை வந்துச்சு... நான் அப்போ நாலாவது படிச்சிட்டிருந்தேன்” என்றபடி நினைவுக்குள் மூழ்கினார் சிவலிங்கம்.

“நாகஸ்வரம் கத்துக்க வீட்டை விட்டு ஓடிவந்தேன்!”

மகனின் இசையார்வத்தை முதலில் அங்கீகரித்த தந்தை, தானே முதல் ஆசிரியராக இருந்து நாகஸ்வரப் பயிற்சியளித்திருக்கிறார். தொடர்ந்து, ஜலகண்டபுரம் பாலகிருஷ்ணனிடம் பாடம் கேட்க மகனை அனுப்பிவைத்தார். சிவலிங்கத்தின் ஆர்வத்துக்குத் தஞ்சாவூர் சென்றால் நன்றாகக் கற்றுக் கொள்ளலாம் என்று பெரியவர்கள் வழிசொன்னார்கள். குடும்பச் சூழல் காரணமாகத் தந்தை மறுத்துவிட, வீட்டிலிருந்து சொல்லிக்கொள்ளாமல் கிளம்பிவிட்டார் சிவலிங்கம்.

“திருவெண்காடு மாசிலாமணி வாத்தியாரைத் தேடிப் போனேன். நைட்டு பத்து மணிக்கு வாத்தியார் வீட்ல போய் நின்னேன். சாப்பாடு போட்டு அன்னிக்கு ராத்திரி தங்க வச்சார்” நினைவுகளில் கரைகிறார் சிவலிங்கம்.

கீவளூர் கணேசனிடம் சிவலிங்கத்தை அழைத்துச் சென்றார் மாசிலாமணி. அங்கு ஒன்றரை மாதம் பாடம் கேட்ட சிவலிங்கம், தான் இங்கிருக்கும் செய்தியைக் கடிதம் மூலமாக வீட்டுக்குத் தெரியப்படுத்தினார். நாகஸ்வரப் பள்ளியில் சேர்ந்து பயிலும் ஆர்வம் சிவலிங்கத்துக்கு எழ, சென்னை இசைக் கல்லூரியில் சேரச் சொல்லி அறிவுறுத்தினார் திருவிடைமருதூர் வீறுச்சாமி. ஆனால், சென்னை மீதான மிரட்சி சிவலிங்கத்தைத் தடுத்தது.

பிறகு ஒருவாறாக சமாதானம் அடைந்து, இசைக் கல்லூரி முதல்வர் கீரனூர் ராமசாமிக்குக் கடிதம் எழுதினார் சிவலிங்கம். உடனடியாக வந்து சேரச் சொல்லி பதில் வந்தது. சென்னை வந்த சிவலிங்கத்தின் இசைப் பயணத்தின் ஆரோகணம் அன்று தொடங்கியது.

“மொதல்ல எனக்கு இந்தச் சூழல் ஒத்துவரல... ஊருக்குத் திரும்பிடலாம்னு இருந்தப்ப, ‘ஏம்பா நானெல்லாம் இல்லையா... ஊர்ல போய் என்ன பண்ணுவ, இங்கேயே இரு... நிறைய கச்சேரி கேட்கலாம், நிறைய நிறைய வாசிக்கலாம்’ன்னு இசைக் கல்லூரி முன்னாள் மாணவர் முத்தையா எனக்கு ஊக்கம் கொடுத்தார். மந்தைவெளில அன்னிக்குக் கீரைத் தோட்டமா இருந்த செயிண்ட் மேரிஸ் ரோட்டுப் பகுதியில வீடெடுத்துத் தங்கினோம். வாசிப்பும், கச்சேரிகளுமா அந்தக் காலகட்டம் ரொம்ப அற்புதமா அமைஞ்சது. திருவாரூர் லெட்சப்பாவிடம் மூன்று வருஷம் நாகஸ்வரம் கத்துக்கிட்டேன்... என்னுடைய வாழ்க்கை வேறொரு கட்டத்துக்கு நகர்ந்துச்சு” நெஞ்சில் கைகள் கோத்துக்கொள்ள, சிவலிங்கத்தின் பார்வை சூன்யத்தில் நின்றது.

“நாகஸ்வரம் கத்துக்க வீட்டை விட்டு ஓடிவந்தேன்!”

அகில இந்திய வானொலியில் ‘பி கிரேடு’ ஆர்ட்டிஸ்டாக வாசிக்கத் தொடங்கியவர், ‘ஏ டாப் கிரேடு’ ஆர்ட்டிஸ்டாக உயர்ந்தார்;

“கல்யாணி, தோடி, காம்போதி ராகங்கள்ல ரொம்ப லயிச்சு வாசிப்பேன். தினமும் சாதகம் பண்ணினாதான் சீவாளி உதட்டுல நிக்கும். தினமும் சாதகம் பண்றதுலயும் ஒரு சுகம். வேற என்ன பிரச்னை இருந்தாலும், நாகஸ்வரத்த எடுத்துட்டா மனசு அதுல கரைஞ்சிடும். சொல்லமுடியாத அமைதி மனசுல படரும்... ராத்திரி சாமி புறப்பாட்டுல வாசிக்கிறதுல தன்னையறியாம ஒரு சுகம் உண்டு” நாகஸ்வரத்தைப் பிரியத்துடன் வருடிக்கொடுக்கிறார் சிவலிங்கம்.