பாரம் மிகுந்த நேரங்களை எங்கேயாவது இறக்கி வச்சுட்டு அங்கிருந்து நகர்ந்துபோக நமக்கு இசை தேவைப்படுது. இசையோட கைகள் நம்ம பாரத்தை ஏந்திக்கும்போது அது தர்ற தற்காலிக நிம்மதி நமக்கு பேரமைதி. அந்த இசைக்கு எத்தனையோ வடிவங்கள் இருக்கு. அதற்குப் பெயரும் இருக்கு. அப்படி ஒரு மலர்ச்சியை உண்டுப்பண்ணும் பெயர்கள்ல முகங்கள்ல நம்ம ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அவ்வளவு பெரிய இடமிருக்கு.
அந்தப் புன்னகையை நிம்மதியை சந்தோஷத்தை ரஹ்மான் தந்த பாடல்களில் தேடுறது தமிழர்களின் வழக்கமா இருக்கு. 29 ஆண்டுகளுக்கு முன்னாடி திலீப் சேகர் என்கிற அறிமுக இசை அமைப்பாளரோட முதல் பாடலான 'சின்ன சின்ன ஆசை' கேட்காத திசையோ, பாடாத இதழோ, ரசிக்காத மனசோ இல்லை. துளிர்க்கிற கண்ணீரோட ரஹ்மானின் இசையைக் கேட்டால் எந்தச் சொல்லும் மனசை அள்ளும்.

பொதுவா பாட்டுக் கேக்குறதை ரெண்டுவிதமா நம்ம செய்வோம். முதல் விஷயம் வேலை செய்யும்போது அலுப்பே தெரியாம வேலை சுமூகமாகப் போகனும். ரெண்டாவது, தன்னந்தனியா பஸ்ல, ரயில்ல ஓரச் சீட்டுல உக்காந்து போகும்போது அதுக்குன்னு தனியா ஒரு பிளேலிஸ்ட் இருக்கு. முதல் விஷயத்துல பாட்டு வரிகளுக்குள்ள ஆழ்ந்துபோறது கிடையாது. ரெண்டாவது விஷயத்துல வரிகளையும் இசையையும் ஆராய முடியும். இத்தனை நாள் கவனிக்காம விட்டுட்டோமேன்னு நிறைய வரிகளை ரஹ்மான் பாட்டில் ரசிக்கமுடியும்.
இப்ப இருக்கிற நிறைய இளைஞர்களுக்கு ரஹ்மான்தான் வாத்தியார். ஏலேலோன்னு 'சின்ன சின்ன ஆசை'யில் வந்த குரல் இன்றுவரைக்கும் ஞாபகம் இருக்கு. அப்புறம் ஆஸ்கர் மேடைல அவார்ட் வாங்கிட்டு ரெண்டு கையிலும் வச்சுக்கிட்டு அன்பா... வெறுப்பான்னு வாழ்க்கைக் கேட்டப்போ அன்பைத் தேர்ந்தெடுத்த ஆஸ்கர் தமிழன் அவர். காதலோட கூச்சலையும், கடவுளோட மௌனத்தையும் இசையாக்கிய கலைஞன். சங்கீதம் மட்டுமில்லை இங்கிதமும் தெரிஞ்சு இருக்கணும் என்று சொல்ல மட்டும் செய்யாமல் வாழ்ந்தும் காட்டுகிறவர் ரஹ்மான்.
தலைமுறைகள் தாண்டி ரசனை பரப்புற ரஹ்மானை இன்னும் பெர்சனலாக பார்க்கலாம்.
* ரஹ்மானுக்குன்னு வீட்டுல செல்லப்பெயரே கிடையாது. அவருடைய சகோதரிகள் கூப்பிடுவதெல்லாம் வாய் நிறைய 'ரஹ்மான்' தான்.

* பத்மா சேஷாத்திரி ஸ்கூல்ல குடும்பச் சூழல் காரணமாக அவர் படிச்சது ஒன்பதாம் வகுப்பு வரைக்கும்தான்.
* இன்னைக்கு அவரோட பிறந்த நாளா இருக்கலாம். ஆனா அவர் அதை விமரிசையா கொண்டாடியதே இல்லை. ஆழ்ந்த அமைதியோட இந்த நாளைக் கழிச்சிருவார்.
* எங்கே போனாலும் உணவைத்தேடி அலையவே மாட்டார். சிம்பிளா ரசம் சாதம் போதும்.
* தங்க நகை அணியிறதேயில்லை. ஒரு நெளி பிளாட்டின மோதிரம் மெலிவா விரல்ல கிடக்கும். கடிகாரம் கட்டவே மாட்டார்.
* எம்ஜிஆர், சிவாஜி பாடல்கள் பிடிக்கும். யாரும் இல்லைன்னா அவரே வாய்விட்டு பாடுவார்.
* இசைக்கோர்ப்பின்போது கைகளை விரித்து, 'புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது' என ரஹ்மான் பாடுனா படத்துக்கான அத்தனை வேலைகளும் முடிஞ்சிருச்சுன்னு அர்த்தம்.
* குடும்பத்தோட வெளிநாடுகளுக்கு போயிருவார். விடுமுறைன்னா பயணம்தான். இப்போ அதிகம் குவைத்தில்தான் கழிக்கிறார்.
* ஹைதராபாத், நாகூர் தர்காவுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு தடவை போயிருவார். உருகிக் கரைந்து நிற்கிற ரஹ்மானை அங்கே பார்க்க முடியும்.
* முக்கியமான இசை விழாக்கள்ல ரஹ்மான் உடையெல்லாம் அதிக கவனம் எடுத்து செய்ததாக இருக்கும். அதையெல்லாம் ரெடி பண்ணித்தருவது அவரது மனைவி சாய்ரா, மும்பை டிசைனர் தீபக்.
* ரஹ்மானுக்கு ரெண்டு செல்ல பெண்கள். கதீஜாவுக்கு இப்போதான் நிச்சயதார்த்தம் முடிஞ்சிருக்கு. ரஹீமாவும் மகன் அமீனும் இசையில் படுவேகமாக முன்னேறிக்கிட்டிருக்காங்க.
* தன்னுடைய சகோதரிகள் ரெஹானா, பாத்திமா, இஷரத் மூணு பேர்க்கிட்டயும் பாசத்தைப் பொழிவார் ரஹ்மான்.
* காபி குடிக்கும்போது அதிகம் சர்க்கரை சேர்த்து குடிக்கிற பழக்கம் உண்டு.
* ஹஜ் யாத்திரைக்கு இரண்டு முறை சென்று வந்துவிட்டார் ரஹ்மான்.

* எங்கே கிளம்பினாலும் தந்தை சேகர் படத்தை வணங்கிவிட்டுத்தான் வெளியே செல்வார்.
* இயக்குநர் மணிரத்னம் எந்த நொடி நினைத்தாலும் ரஹ்மானைச் சந்திக்க முடியும். அவரென்றால் ரஹ்மானுக்கு அவ்வளவு மரியாதை.
* ரஹ்மான் மிகவும் குறைவாகப் பேசுவார். ஆனால் நெருங்கிய நண்பர்களிடம் நிறைய பேசுவார். ஆனாலும் தனிமை விரும்பி.
* ரஹ்மானுக்கு ரொம்பப் பிடித்தது வீடியோ கேம்ஸ்தான். வீட்டிலிருக்கும்போது குழந்தைகளோடு அவர் விளையாடும் சத்தம் வீட்டை ரெண்டாக்கும்.
* தியேட்டர், பார்ட்டி, பொழுதுபோக்கு இடங்கள் என எங்கேயும் ரஹ்மானைப் பார்க்க முடியாது. ரஹ்மானின் உலகமெல்லாம் வீடும் அலுவலகமும்தான்!