Published:Updated:

``இதுதான் எல்லாத்துக்கும் தாய்க்கருவி!’’ - ஒரு பறைக்கலைஞனின் போராட்டப் பகிர்வு

முத்துப்பாண்டி, ராஜ்குமார்

`பறை என்றால் 'பேசு' என்று அர்த்தம். கேரளாவில் இன்னும் இச்சொல் புழக்கத்தில் உள்ளது. இங்கே அதை சாதியின் பின்புலத்தில் வைத்துப் பார்ப்பது உண்மைதான். ஆனால், முன்பு போல் இல்லாமல் கொஞ்சம் மாறி, நல்ல வரவேற்பும் இருக்கிறது.’

Published:Updated:

``இதுதான் எல்லாத்துக்கும் தாய்க்கருவி!’’ - ஒரு பறைக்கலைஞனின் போராட்டப் பகிர்வு

`பறை என்றால் 'பேசு' என்று அர்த்தம். கேரளாவில் இன்னும் இச்சொல் புழக்கத்தில் உள்ளது. இங்கே அதை சாதியின் பின்புலத்தில் வைத்துப் பார்ப்பது உண்மைதான். ஆனால், முன்பு போல் இல்லாமல் கொஞ்சம் மாறி, நல்ல வரவேற்பும் இருக்கிறது.’

முத்துப்பாண்டி, ராஜ்குமார்

``எட்டாம் வகுப்பு படிக்கும்போது பறை அடிச்சேன். அதன்மேல் கொண்ட ஆர்வத்தால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அன்று பரீட்சைக்குப் போகாமல் அப்பாவுடன் சேர்ந்து ஒரு சாவுக்கு தப்பு அடிக்கப் போனேன். அதோட சரி, பள்ளிக்கூடம் பக்கம் போகவே இல்லை" என்று சொல்லும் பறை இசைக் கலைஞர் முத்துப்பாண்டி, திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டியைச் சேர்ந்தவர். இவரது குடும்பம், நான்கு தலைமுறையாக பறை இசைக் கருவி செய்தல் மற்றும் பறை அடித்தல் தொழில் செய்துவருகிறது. தன் ஊர் நண்பர்களைக் கூலிக்கு அமர்த்தி, அண்ணன் ராஜ்குமாருடன் இணைந்து பறை மூட்டிக்கொண்டிருந்தவரை சந்தித்துப் பேசினோம்.

நான்கு தலைமுறையாக பறை செய்தும் இசைத்தும் வருகிறீர்கள். உங்கள் தாத்தா, அப்பா காலத்துக்கும் உங்கள் காலத்துக்குமான வேறுபாடு ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா?

முத்துப்பாண்டி
முத்துப்பாண்டி

தாத்தா அப்பா காலத்தில் பறையடிப்பவருக்கு சரியான ஊதியமோ, மரியாதையோ கிடையாது. பொருளாதாரத்துக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். அந்த மாதிரியான நேரங்களில் இதையெல்லாத்தையும் விட்டுட்டு வேற வேலைக்குப் போயிருக்கிறார்கள். அவர்களை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். தப்பு அடிக்கப் போற இடங்களில் இழிவாகப் பேசுவதும் நடத்துவதும் நடந்திருக்கிறது. ஆனால், காலப்போக்கில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. நான் இந்தத் தொழிலுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என் தலைமுறையில் இருப்பவர்கள் பெரும்பாலும் அவ்வாறு நடப்பதில்லை. அவர்களின் பார்வை மாறியுள்ளது. பறை இசைக் கலைஞர்களின் திறமைக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. குறிப்பிட்ட சாதிக்கான இசையாகப் பார்க்காமல், 'தமிழரின் இசை' என்று எல்லோரும் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

முதல்முறை பறை இசையைக் கற்றுக்கொண்டது எப்போது... என்னமாதிரியான அனுபவங்களைக் கொடுத்தது?

முத்துப்பாண்டியின் நண்பர்கள்
முத்துப்பாண்டியின் நண்பர்கள்

அப்போது பறையடித்தவர்கள், ஓர் உள்ளுணர்வோடு வாசித்தார்கள். இடைவிடாமல் ஆடிக்கொண்டு வியர்வை சொட்டச்சொட்ட அடிப்பார்கள். அதில் ஒரு துள்ளல், சிரிப்பு, சோகம், புன்னகை, அன்பு எல்லாம் கலந்திருக்கும். அந்த ஆர்வமும் ஈடுபாடும் எனக்குள்ளும் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தியது. ஒருமுறை மனைவிக்கு அறுவைசிகிச்சை செய்து வீட்டில் விட்டுவிட்டு ஒரு நிகழ்ச்சிக்கு தப்பு அடிக்கப் போய்விட்டேன். அங்கு போகிறவரைக்கும் மனைவி ஞாபகம் இருந்தது. தப்பு அடிக்க ஆரம்பித்த பின் மறந்துட்டேன். பிறகு, அறுவைசிகிச்சை செய்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டதாக, வீட்டிலிருந்து போன் போட்டுச் சொன்னதும்தான் ஞாபகம் வந்து ஓடிவந்தேன். இப்படி ஏராளமான விஷயங்களை மறந்துவிடுவேன்.

தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இந்தத் தொழிலை நீங்கள் செய்வதை உங்கள் மனைவி எப்படிப் பார்க்கிறார்?

முத்துப்பாண்டி, ராஜ்குமார் நண்பர்களுடன்
முத்துப்பாண்டி, ராஜ்குமார் நண்பர்களுடன்

ஆரம்பத்தில் கொஞ்சம் எதிர்ப்பு இருந்தது. அதான், உங்கள் தாத்தா, அப்பா எல்லாம் செய்துட்டாங்க இல்ல. நீங்களும் எதுக்கு பறையைப் பிடிச்சுத் தொங்கிக்கிட்டு இருக்கீங்க. வேற வேலைக்குப் போகவேண்டியதுதானே என்று சொன்னாங்க. அப்புறம் காலப்போக்கில் அவங்களே மனம் மாறிட்டாங்க.

பறை இசைக் கருவி செய்வதற்குத் தேவையான பொருள்கள் என்னென்ன... அவற்றை எங்கிருந்து வாங்குகிறீர்கள்... எப்படிச் செய்வீர்கள்?

``இதுதான் எல்லாத்துக்கும் தாய்க்கருவி!’’ - ஒரு பறைக்கலைஞனின் போராட்டப் பகிர்வு

எருமைத்தோல், வேப்பங்கட்டை, புளியங்கொட்டையில் செய்த பசை இவை மூன்றும்தான் அடிப்படையான பொருள்கள். ஆந்திராவிலிருந்து வாங்கிவரும் பதப்படுத்திய எருமைத்தோலின் ரோமங்களை நீக்கிவிட்டு, இரவு முழுவதும் தண்ணீரில் ஊறப்போடுவோம். அதேபோல், புளியங்கொட்டையை ஊறவைத்து, அரைத்துப் பசையாக்கி சூடாக்கி வைத்திருப்போம். சாதாரண மில்லில் புளியங்கொட்டையை மாவாக அரைக்க மாட்டார்கள். இதற்கென்று தனியான ஒரு இயந்திரம் திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ளது. அங்கு போய்தான் அரைத்துக்கொண்டுவருவோம். ஊறவைத்த தோலை அடுத்த நாள் காலையில் வெளியில் எடுத்து, ஏற்கெனவே மூன்று வேப்பங்கட்டைகளை இணைத்துச் செய்த வட்டமான கட்டையில் பசைதடவி, தோலில் துளையிட்டு கயிறுகொண்டு பறைமூட்டுவோம். அவ்வாறு மூட்டிய பறைகளை நிழலில் இரண்டு நாள்களும் வெயிலில் ஒரு நாளும் காயவைப்போம். அதன்பிறகு, இசைக்கப் பயன்படுத்தலாம்.

`பறை' என்கிற வார்த்தை சாதிக்குரியதாகவும், பறையிசையை சாவுக்கான கருவியாகவும் பார்க்கப் பழகிப்போன தமிழக மக்களின் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது?

ராஜ்குமார்
ராஜ்குமார்

பறை என்றால் 'பேசு' என்று அர்த்தம். கேரளாவில் இன்னும் இச்சொல் புழக்கத்தில் உள்ளது. இங்கே அதை சாதியின் பின்புலத்தில் வைத்துப் பார்ப்பது உண்மைதான். ஆனால், முன்பு போல் இல்லாமல் கொஞ்சம் மாறி, நல்ல வரவேற்பும் இருக்கிறது. இங்குள்ள கல்லூரி, மகளிர் குழு, இசைக் குழு, ஐடி பணியாளர்கள் என ஏராளமானோர் பறையடிப்பதை ஆர்வமாகக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களிடம் கற்கும் மாணவர்களுக்கு எங்களிடம் பறையை ஆர்டர் செய்து வாங்குகிறார்கள். மேலும், தமிழகக் கலாசாரத்தைக் காப்பதற்கு இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்லாது, வெளிநாடுவாழ் தமிழர்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பறை இசைக் கருவியை ஏற்றுமதி செய்கிறோம். சில நாள்களுக்கு முன் அமெரிக்காவுக்கும் அனுப்பிவைத்திருக்கிறோம். இன்னும் நிறைய மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கிறோம்.

இருக்கிற கருவிகளுக்கெல்லாம் தாய்க் கருவி பறை, தாய்ச் சொல் பறை என்று சொல்லப்பட்டாலும், பறையிசைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது கொடுக்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுகிறதே. அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நண்பர்களுடன் பறைமூட்டுதல்
நண்பர்களுடன் பறைமூட்டுதல்

தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது உண்மைதான். மிகவும் நலிவடைந்து போயிருந்த பறை இசை, கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் மீண்டும் புத்துயிர் பெற்றுவருகிறது. எந்த அங்கீகாரமும் இல்லாமல் வெளியுலகத்துக்கும் தெரியாமல் எத்தனையோ கலைஞர்கள் மறைந்து போய்விட்டார்கள். இன்னும் எனக்கு முன்னோடியாக நிறைய கலைஞர்கள் பரந்த அளவில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும். மூத்த பறையிசைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது கொடுத்தால், எங்களைப் போன்ற இளைஞர்களுக்குப் பெரிய உந்துதலும் நம்பிக்கையும் ஏற்படும். இந்தக் கலையும் விரிவடைய வழிவகுக்கும்.