தமிழ் இசையுலகைத் திரையிசைப் பாடல்கள்தான் நெடுங்காலமாய் ஆக்கிரமித்து வருகின்றன. அத்தி பூத்தாற்போல் எப்போதாவது, ஏதாவதொரு தனியிசைப் பாடல் ஒட்டுமொத்த இசையுலகையும் திரும்பிப் பார்க்க வைக்கும். அவ்வளவுதான்! சமீப காலமாக இந்த நிலை இணையத்தின் உதவியாலும், மக்களின் ரசனை மாற்றத்தாலும் கொஞ்சம்கொஞ்சமாய் மாறி வருகிறது. திரையிசைப் பாடல்களைத் தாண்டி தனியிசைப் பாடல்களையும் தங்கள் செவிக்கு உணவாக தமிழர்கள் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இப்போது இண்டிபென்டன்ட் ஆர்ட்டிஸ்ட் எனப்படும் தனியிசைக் கலைஞர்களும் மக்களால் கொண்டாடப்படுகிறார்கள்.

தமிழ் தனியிசை வகைகளில் சொல்லிசை எனப்படும் `ராப்' பாடல்களைக் கண்டங்கள் தாண்டி பல கலைஞர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். யோகி-பி, எம்ஸி ஜெஸ், டாக்டர் பர்னில் ஆரம்பித்து ராப் மெஷின்ஸ், மதுரை சோல்ஜர்ஸ் என நிறைய கலைஞர்கள் தமிழ் சொல்லிசை உலகில் பல ஆச்சர்யங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சமீபத்திய சென்ஷேசன், அறிவு மற்றும் ஆஃப்ரோ! இவர்களின் `தெருக்குரல்' எனும் இசை ஆல்பம், சில நாள்களுக்கு முன்பு வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.
`தெருக்குரல்' ஆல்பத்தில் மொத்தம் ஆறு பாடல்களும் ஒரு ஒலி துணுக்கும் இடம் பெற்றிருக்கின்றன. முதல் பாடல் `கள்ள மௌனி'. இந்தப் பாடல் போலி போராட்டங்களையும் போலி போராளிகளையும் மக்களின் அரைவேக்காட்டுத்தன அரசியல் புரிதலையும் கலாய்த்து தள்ளுகிறது. பிரச்னையின் வேரைப் புரிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ள தயாராகவும் இல்லாமல் வாட்ஸ் அப் ஃபார்வாடுகளை நம்பி, ட்விட்டர், ஃபேஸ்புக்கில் புரட்சிப்போராட்டம் நடத்துபவர்களை வகைதொகை இல்லாமல் வைத்து செய்திருக்கிறார் பாடலாசிரியர் அறிவு. ஆங்காங்கே, சில அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களையும் வரிகளால் விளாசியிருக்கிறார். சிந்திக்க வைப்பதோடு சிரிக்கவும் வைக்கிறது இந்தக் `கள்ள மௌனி'.
அடுத்த பாடல், `ஆன்ட்டி இந்தியன்'. ஆல்பம் வெளியாவதற்கு முன்பே, சில மேடைகளில் இப்பாடலை அரங்கேற்றம் செய்துவிட்டார்கள். அப்போதே, அதிரிபுதிரி ஹிட் அடித்த `ஆன்ட்டி இந்தியனி'ன் ஸ்டூடியோ வெர்ஷனுக்காகக் காத்திருந்தவர்களுக்கு தரமான வெர்ஷனையே தந்திருக்கிறார்கள். வரிகள் ஒவ்வொன்றும் எளிய மக்களை நசுக்கும் அதிகார மையத்தை நெற்றிப்பொட்டில் அடித்து கேள்வி கேட்கிறது. ``நீ என்பது ஓட்டு மட்டுமே. நாடு என்பது வெறும் ரேட்டு மட்டுமே" அதில் சின்ன சாம்பிள். இனத்தால், நிறத்தால், மதத்தால், மொழியால் பிரிவினை அரசியல் செய்பவர்களை அனல் கக்கும் வரிகளால் வறுத்தெடுத்திருக்கிறார்கள்.
மூன்றாவதாக, ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களுக்கு எதிராய் நடந்த அநீதிகளைச் சொல்லும் சின்ன ஒலித்துணுக்கு. அதைத் தொடர்ந்து ஆல்பத்தின் முக்கியமான பாடலான, "ஸ்னோலின்" வருகிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசதிகாரத்தால் சுட்டுவீழ்த்தப்பட்ட ஸ்னோலினின் குரலாக ஒலிக்கிறது இப்பாடல். "நான் ஸ்னோலின் பேசுறேன். உன் காதில் விழுதா" என அறிவு ஆரம்பிக்கும்போதே இதயம் கனமாகிறது. "ஒருவேளை பொண்ணா பிறந்திருக்காம, மாடா பிறந்திருந்தா இந்த நாடே வந்திருக்கும்ல" என வரிகளால் இச்சமூகத்தைக் கூண்டில் ஏற்றி கேள்வி கேட்டிருக்கிறார்கள். `தனியிசை' என்பதற்கான அத்தனை நியாயங்களையும் கொண்டிருக்கிறது `ஸ்னோலின்'.

`ஸ்னோலின்' ஏற்படுத்தும் கனத்திலிருந்து `தமிழச்சி' நம்மை மெல்ல விடுவிக்கிறது. "நீ நீயாக இரு. அதுதான் பெண்மையின் அழகு" என்பதை கருப்பொருளாகக் கொண்டு பெண் விடுதலைப் பேசும் இப்பாடலை பெப்பியான மெட்டில் அமைத்திருக்கிறார்கள். "என் திமிரான தமிழச்சி... துணிவோடு அடிவெச்சி... எழுவாயே கருவாச்சியே..." என வரிகளும் அழகு! சீக்கிரமே, பல வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் இப்பாடலைக் கேட்கலாம்.
அடுத்ததாக `மிடில் கிளாஸ்' பாடல். இப்பாடலை அறிவுடன் சேர்ந்து, திரையிசை பின்னணிப் பாடகர் ரோஷன் ஜாம்ராக்கும் பாடியுள்ளார். `குஸி கேங்', `பாண்டா' போன்ற மேற்கத்திய ராப் பாடல்களின் சாயலில் உருவாகி வந்துள்ள இப்பாடல், மிடில் கிளாஸ் மனிதர்களின் வாழ்வியலை, மனநிலையைப் பகடி செய்கிறது. கடைசியாக, `ஓகே சார்'. அறிவுவின் இசைப் பயணம் ஆரம்பித்த கதையைப் பாடுகிறது.

யோகி-பியின் `வல்லவன்' ஆல்பத்திற்குப் பிறகு, தமிழ் தனியிசை கண்டிருக்கும் தரமான சொல்லிசை ஆல்பம் இந்த `தெருக்குரல்'. ஒரு இன்டி இசைக்கலைஞனிடமிருந்து வரும் பாடல், அவன் வாழும் சமூகத்தின் குரலாக இருத்தல் வேண்டும். மற்றவரை ஈர்க்கவேண்டும். அவர் மனதை உலுக்க வேண்டும். இன்னும், உத்வேகத்தை தரவேண்டும். சமூகத்தில் சிறிய மாற்றத்தையாவது உண்டுபண்ணவேண்டும். இத்தனை `வேண்டும்'கள் இருக்கின்றன. இந்த அத்தனை `வேண்டும்'களும் இந்த `தெருக்குரலி'ல் இருக்கின்றன!