சினிமா
தொடர்கள்
Published:Updated:

கர்னாடக சங்கீதத்தில் ராஜா!

இளையராஜாவுடன் ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
இளையராஜாவுடன் ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள்

எந்தக் கச்சேரியாக இருந்தாலும் அசுரத்தனமான உழைப்பைக் கொடுப்பவர்கள் ரஞ்சனியும் காயத்ரியும்.

ஆயிரம் பிறைகள் கண்டவரும், ஓராயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்தவருமான இளையராஜாவுக்கு, கர்னாடக இசையில் புகழின் உச்சத்திலிருக்கும் ரஞ்சனி - காயத்ரி சகோதரிகளின் ‘சதாபிஷேகப் பரிசு’ ராஜா பை ராகா என்னும் வண்ணப் பூங்கொத்து!

சென்ற ஞாயிறன்று மியூசிக் அகாடமி அரங்கில் நடந்த கலகல பளபள நிகழ்வில், கர்னாடக இசை ராகங்களில் இளையராஜா மெட்டமைத்துள்ள பாடல்கள் சிலவற்றைத் தேர்வு செய்து கர்னாடக முறைப்படி கச்சேரி செய்தார்கள். அதாவது பக்கவாத்தியங்களாக வயலின் - மிருதங்கம் - கடம் மட்டும்! டிரம்ஸ், குடம், அண்டாவெல்லாம் கிடையாது.

‘‘எத்தனையோ தடவை இதே அகாடமி மேடையில் நிறைய கச்சேரிகள் பாடியிருக்கிறோம். ஆனால் இந்தக் கச்சேரி வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெற வேண்டிய ஒன்று’’ என்று உடன்பிறப்புகள் உணர்ச்சிவசப்பட்டார்கள். ‘‘தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் வரிசையில் ராஜாவுக்கும் இடமுண்டு’’ என்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் சிம்மாசனம் போட்டு அமர வைத்தார்கள்.

கர்னாடக சங்கீதத்தில் ராஜா!

ஏழு மணிக்கு கச்சேரி ஆரம்பமாவதற்கு 10 மணித்துளிகளுக்கு முன்னால் அரங்கில் பலமான கைத்தட்டல். அது எரிச்சலின் மிகுதியால் ஒலித்தது. 6.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ‘தாமதத்துக்கு மன்னிக்கவும்... வாகன நெரிசலில் ராஜா சார் சிக்கிக்கொண்டுவிட்டார். அவர் வந்துகொண்டே இருக்கிறார்’ என்றது மைக் அறிவிப்பு. ‘ஞாயிறு மாலை ஏது நெரிசல்’ என்று முணுமுணுத்தது ஹால்!

தியாகராஜர் காம்போதி ராகத்தில் அமைத்துக் கொடுத்திருக்கும் ‘மறி மறி நின்னே...’ என்ற சாரமதி ராகத்தில் இளையராஜா மாற்றியமைத்து சர்ச்சையான பாடலை சகோதரிகள் முதலாவதாக எடுத்துக்கொண்டார்கள். முடிவில் ‘பாடறியேன் படிப்பறியேன்.’ அன்று சின்னக்குயில் பாடியதை இரண்டு கர்நாடகக் குயில்கள் பாடிக் கைத்தட்டல்களை அள்ளிச் சென்றன.

மூன்று மணி நேர மெனுவில் இரண்டு மெட்லிகள். ஏழு ஸ்வரங்களில் ஒவ்வொரு ஸ்வரத்தையும் பிரதானமாகக் கொண்டு ராஜா மெட்டமைத்த (சலநாட்டை முதல் ஸரசாங்கி வரை) பாடல்களுடன் எட்டாவதாக ஒரு போனஸ் உண்டு. இன்னொரு மெட்லியில் கிரகபேதம் அடிநாதம். பல்வேறு ராகங்களில் அமைந்த பாடல்களை ஹம்சானந்தியில் தொடங்கி பேதப்படுத்திக்கொண்டே பாடியது சரவெடி!

எந்தக் கச்சேரியாக இருந்தாலும் அசுரத்தனமான உழைப்பைக் கொடுப்பவர்கள் ரஞ்சனியும் காயத்ரியும். இங்கே தங்கள் அபிமான இசையமைப்பாளர் பாடுபொருள் என்பதால் இருமடங்கு உழைப்பு. பாடல் வரிகள், அவற்றைப் பாடும்போது மாடுலேஷன்கள், மெட்ரோ ரயில் வேகத்தில் ஸ்வரங்கள் என்று சங்கீத ரகளை.

‘‘மற்ற கம்போஸர்களுக்கு சந்தர்ப்பமே வைக்காமல் கல்யாணி ராகத்தை அக்குவேறு, ஆணிவேறாக அலசிப் பிழிந்துவிட்டவர் இளையராஜா. அதுவும் ‘கலைவாணியே...’ பாடலை ஆரோகணத்தில் மட்டுமே அமைத்து அதிசயிக்க வைத்தவர்’’ என காயத்ரி மெச்சினார். சகோதரிகள் இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்க, கே.வி.மகாதேவனும் எம்.எஸ்.விஸ்வநாதனும் கடைவிரித்த கல்யாணிகள் காதில் கபடி விளையாடின.

ரஞ்சனி, காயத்ரியின் திரைப்படப் பிரவேசத்திற்குக் கதவு திறந்து விட்டதும் ராஜா தான். மாயோன் திரைப்படத்துக்காக தேனுகா ராகத்தில் ‘மாயோனே மணிவண்ணா...’ என்ற தொடக்க வரி கொண்ட பாடலை இருவரும் நன்றியுணர்வுடன் பாடி, பொதுவெளியில் அரங்கேற்றம் செய்தார்கள்.

இளையராஜாவுடன் ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள்
இளையராஜாவுடன் ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள்

ராகம் - தானம் - பல்லவிக்கு ரீதிகௌள ராகம். ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பல்லவி வரிகள், லேசான மாற்றத்துடன். பாலமுரளிகிருஷ்ணா பாடியது, இன்றுவரை கேட்டால் சிலிர்ப்பூட்டும். சாய் கிரிதர் (மிருதங்கம்) கிருஷ்ணா (கடம்) லயத்தில் சிங்கமாக கர்ஜித்தார்கள். வயலின் விட்டல் ரங்கன் எப்போதும்போல் இனிமை இதோ... இதோ..! இவருக்கு இளையராஜாவிடமிருந்து விரைவிலேயே அழைப்பு வரக்கூடும்.

விருத்தமும் பாபநாசம் சிவனின் ‘மனமே கனமும்’ பாடிவிட்டு முடிவில் மராட்டிய அபங். முன்கூட்டியே இளையராஜா வெளிப்படுத்திய நேயர் விருப்பமாம். வழக்கமான கச்சேரிகளில் இவர்கள் பாடிவரும் அபங் பாடல்களில் வேகமும் வீரியமும் அதிகமிருக்கும்.

முதல் வரிசையில் உட்கார்ந்த இடத்திலிருந்தே எழுந்து நின்று பேசினார் இசைஞானி. தான் இசையமைக்கும் ஸ்டைலை வர்ணித்தார். ‘‘இப்படி ஒரு கச்சேரி செய்யணும்னு எப்படி முடிவாச்சு? நீங்க சொல்லுங்க...’’ என்று மாஸ்டர் ஒருவித மிரட்டல் தொனியில் கேட்க, மிரண்டுபோன காயத்ரி வார்த்தை வராமல் திணறினார். ‘‘வாரா வாரம் சஞ்சய் சுப்ரமணியன் short notes வழங்குறதைப் பார்த்துட்டு வரேன்... கடைசியில் ‘ஸ’வில் வந்து நிற்பார். இப்போ இப்படியொரு கச்சேரி நடக்க சஞ்சய் சுப்ரமணியன் கூட காரணமாக இருக்கலாம்’’ என்று ராஜா தீர்ப்பு வழங்கியது ரஞ்சனி, காயத்ரிக்கு அபஸ்வரமாக ஒலித்திருக்கும். இருவரும் நிச்சயம் அப்செட் ஆகியிருப்பார்கள், அது தார்மிகமும் கூட!