Published:Updated:

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்தநாள்: பாடும் நிலா பாலு பற்றிப் பலரும் அறிந்திடாத 15 விஷயங்கள்!

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்தநாள் ஸ்பெஷல்: பல தலைமுறை தாண்டி ரசனை பரப்பிய பாடும் நிலா பாலுவின் பெர்சனல் பக்கங்கள் இதோ...

Published:Updated:

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்தநாள்: பாடும் நிலா பாலு பற்றிப் பலரும் அறிந்திடாத 15 விஷயங்கள்!

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்தநாள் ஸ்பெஷல்: பல தலைமுறை தாண்டி ரசனை பரப்பிய பாடும் நிலா பாலுவின் பெர்சனல் பக்கங்கள் இதோ...

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இன்று, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாள். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உட்படப் பல மொழிகளில் பாடி இந்தியா முழுக்கவே தன் ஆளுமையை நிலைநாட்டியவர். ஆறு தேசிய விருதுகள், 45,000 பாடல்களுக்கு மேல் பாடிய பாடகர் என்ற கின்னஸ் சாதனை உட்பட, பல முறியடிக்கவே முடியாத சாதனைகள் அவர் வசம் உண்டு. கொரோனா பாதிப்பால் இறந்த அவரின் நினைவலைகள் அவரின் பாடல்கள் ஒலிக்கும்வரை உயிர்ப்புடனே இருக்கும். பல தலைமுறை தாண்டி ரசனை பரப்பிய பாடும் நிலா பாலுவின் பெர்சனல் பக்கங்கள் இதோ...
'ஆயிரம் நிலவை அழைத்தவர்' - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
'ஆயிரம் நிலவை அழைத்தவர்' - எஸ்.பி.பாலசுப்ரமணியம்

* புத்தகங்கள் படிக்காமல் ஒருநாளும் எஸ்.பி.பிக்கு நிறைவே அடையாது. வெளியூருக்குப் போனால் லக்கேஜில் முதல் இடம் புத்தகங்களுக்கு. புத்தகக்கடை விசிட்டும் அடிக்கடி நடக்கும்.

* கடைசி வரைக்கும் புதுப்புது செல்போன்களை மாற்றிக்கொண்டே இருப்பார். நவீன செல்போன்களின் வசதிகள் குறித்து கமல் கூட இவரிடம்தான் கேட்டுத் தெரிந்துகொள்வார்.

* வெறும் ஐந்து நிமிடத்தில் அவர் சாப்பாட்டு நேரம் முடிந்து விடும். அவருடன் உட்காரும் நண்பர் முதல் ரவுண்டு வருவதற்குள் இவர் சாப்பிட்டு முடித்து விடுவார். அவ்வளவு கொஞ்சமாகவே சாப்பிடுவார்.

* சினிமா பார்ப்பதே அரிது. எப்போதாவது தான் பாடிய பாடல் எப்படிப் படமாகி இருக்கிறதெனப் பார்ப்பார், அவ்வளவுதான். ஆனால் வெளிநாட்டுப் படங்களின் அருமைப் பற்றியெல்லாம் அவ்வளவு நேரம் பேசுவார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்

* கிட்டத்தட்ட வாழ்நாளில் பாதி நாள்களை வெளிநாட்டுப் பயணங்களில் கழித்திருக்கிறார். 15 பாஸ்போர்ட் புத்தகங்கள் மாற்றிவிட்டார். அநேகமாக எல்லா வெளிநாடுகளுக்கும் போய் வந்திருக்கிறார். சமயங்களில் குடும்பத்தினருக்கே அவர் எந்த நாட்டில் இருக்கிறார் எனத் தெரியாது.

* அவர் வாழ்நாளில் அதிக நேரத்தை அவரது பள்ளித் தோழரும் உதவியாளருமான விட்டலுடன் கழித்திருக்கிறார். அவர் மனைவி சாவித்திரி என்னைவிட விட்டல் அண்ணாவோடு அதிக நேரம் இருந்து இருக்கிறீர்கள் எனக் கிண்டல் செய்வார். அவர் தான் எஸ்.பி.பி-யின் நிழல், மனசாட்சி எல்லாம்.

* ஜூன் 4 பிறந்தநாளை முன்பு பெரிய கொண்டாட்டமாகக் கொண்டாடுவார். கடந்த பத்து வருடங்களிலிருந்து இறக்கும்வரை ஏனோ தன் பிறந்தநாளைக் கொண்டாடவே இல்லை.

* தீவிர ஆன்மிகவாதி. திருப்பதி, கொல்லூர் மூகாம்பிகை ஸ்தலங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் காரிலேயே போய் வந்துவிடுவார். கடவுள் தரிசனத்திற்கு நேரம் காலம் பார்க்கக்கூடாது என்பார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்

* 45,000 பாடல்கள் பாடியிருக்கிறார். இதில் அதிகாரபூர்வமாகக் கணக்கில் வராத பாடல்கள், கடவுள் பாடல்கள் தனி.

* சொந்த ஊர், மாநிலம் ஆந்திரா என்பார்கள். ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையில் அமைந்துள்ள கோனேட்டம்பேட்டாதான் அவரது சொந்த ஊர்.

* விரும்பினால் மட்டும் திரைப்படங்களில் நடிப்பார். அவருக்குப் பிடித்த இயக்குநர், சக நடிகர் என்று பார்த்துத்தான் நடிப்பார்.

* உடல் பருமன் குறைப்புச் சிகிச்சை செய்த பிறகு கணிசமாக அவருக்கு எடை குறைந்தது. ஆனால் அதனாலேயே சில உடல்நல பிரச்னைகள் புதிதாக எழுந்தன.

* ரஜினியும் கமலும் மட்டுமே மிக நெருங்கிய நண்பர்கள். அடிக்கடி சந்தித்து நீண்ட நேரம் பேசுவார்கள். கமல் எஸ்.பி.பி-யை அவரின் அண்ணா என்றே அழைத்து வந்தார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்

* எஸ்.பி.பி முதன் முதலில் ஆடிஷனில் பாடிய பாடல் 'நிலவே என்னிடம் நெருங்காதே'. ஜெமினி கணேசன் நடித்த 'ராமு' (1966) படத்தின் இந்தப் பாடலை பின்னர் P.B.ஶ்ரீனிவாஸ் பாடினார்.

* வெளியிடங்களில் குழந்தைகள் பாடச் சொன்னால் பாடுவார். மாற்றுத்திறனாளிகள் கேட்டுக் கொண்டாலும் நாலு வரி பாடி அவர்களை மகிழ்விப்பார். எல்லோருடனும் அன்பும், நட்பும் பாராட்டும் எளிய மனிதராய் வாழ்ந்து மறைந்தார்.

உங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்களை கமென்ட்டில் தெரிவியுங்கள்.