Published:Updated:

டி.எம்.கிருஷ்ணா குரலில், கர்நாடக இசைக் கச்சேரியில்... எப்படியிருந்தது அம்பேத்கர் பாடல்?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டி.எம்.கிருஷ்ணா அம்பேத்கர் பாடல்
டி.எம்.கிருஷ்ணா அம்பேத்கர் பாடல் ( T.M. Krishna | YouTube )

பிலவ வருடம், சித்திரைத்திங்கள் முதல் நாள் கர்நாடக இசை உலகின் டாப் ஸ்டார்ஸ் இருவர் தனித்தனியாக தமிழ்ப்பாடல்களுடன், மூன்று நிமிட சொச்சம் வீடியோவை யூ-டியூபில் பதிவேற்றம் செய்ததில் இசை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை போதிக்கும் மதத்தையே நான் விரும்புகிறேன்...'' என்று சூளுரைத்த டாக்டர் அம்பேத்கரின் 130-வது பிறந்தநாளையொட்டி அவரைப்பற்றிய பெருமாள் முருகனின் கவிதையை பாடி நேற்று அரங்கேற்றம் செய்தார் வித்வான் டி.எம்.கிருஷ்ணா. கர்நாடக இசை எனும் பெரிய குடைக்குள் அம்பேத்கரை கரம்பிடித்து அழைத்துவந்துவிட்டார் அவர். "இனி எல்லா கச்சேரிகளிலும் பாபாசாகேப் பாடப்படுவார்" என்றார் பெருமிதத்துடன்.

"கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் என்றே

கருத்தை நெஞ்சில் விதைத்த வீரர்

போர்க்களத்தில் நின்று விளைத்த சூரர்

அற்பச் சாதியை அழித்திட வந்தே

அறிவை ஊட்டிய அரிய தீரர் - எம் அகத்தில் வாழ்கின்ற சிங்காரர்

மாற்ற ஊற்று மதியில் நெருப்பு

மநுவைக் கொல்ல வந்த மழுவாம் - அவர் மண்ணைப் பிளந்து தந்த கொழுவாம்

ஆற்றல் வேகம் அருளும் மேகம்

அனலின் சொற்கள் பிடித்து எழுவோம் –அவர்

அடியில் விழுந்து வணங்கித் தொழுவோம்

ஏற்றி வைத்து எம்மைக் காத்த

ஏந்தல் நாங்கள் பெற்ற சீராம்

ஏழை எங்கள் அண்ணல் அவர்தான் யாராம்

போற்றிப் பாடித் துதிக்க வந்த

பாபா சாகேப் அம்பேத் காராம் - அது

போரா டென்று தூண்டும் பேராம்"

என பெருமாள் முருகன் எழுதிய இந்த வரிகளைக் காவடிச்சிந்து வடிவில் பாடியிருக்கிறார் கிருஷ்ணா. முருகன் எழுதிய பல்வேறு பாடல்களைத் தொடர்ந்து பாடிவருபவர் கிருஷ்ணா.

"சில சமயம் நான் ஐடியா கொடுப்பேன் அல்லது பாடுபொருளை முருகன் சொல்வார். பாபாசாகேப் பாடலைப்பொருத்தவரை அவருடைய சிந்தனை அது. காவடிச்சிந்து வடிவினை இந்தப் பாடலுக்குத் தேர்வு செய்ததும் முருகன்தான்" என்கிறார் கிருஷ்ணா.

சில மாதங்களுக்கு முன்பாக இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் பெருமாள் முருகன். இவரின் பாடல்களைவைத்து இந்த மாதம் 13-ம் தேதி நாமக்கல்லில் கச்சேரி செய்ய, ஏற்பாடு செய்திருந்தார் கிருஷ்ணா. அது ரத்தாகிவிடவே பாபாசாகேப் பாடலை மட்டும் ஆன்லைனில் பதிவுசெய்ய தீர்மானித்திருக்கிறார்கள்.

அம்பேத்கர்
அம்பேத்கர்
கலைஞர் சஞ்சய் சுப்ரமணியன், மியூசிக் வீடியோ ஒன்றை வெளியிட்டதும் நேற்றுதான் முதல் தடவை. வயலின், மிருதங்கம் எதுவுமின்றி தனி ஒருவராகப் பாடி ஜகத்தினை அவர் மகிழ்வித்ததும் நேற்றுதான் - எனக்குத் தெரிந்து. அதுவும் நடந்துகொண்டும், நடித்துக்கொண்டும் பாடியிருப்பது சிறப்பு!

'தமிழன்' என்று தலைப்பிட்டு இந்த 'ஒரு பாடல்' நிகழ்ச்சியை வெளியிட்டிருக்கிறார் சஞ்சய். எம்.ஜி.ஆர் நடித்து ஶ்ரீராமுலு இயக்கத்தில் 'மலைக்கள்ளன்' படத்துக்காக நாமக்கல் கவிஞர் எழுதிய 'தமிழன் என்றொரு இனம் உண்டு' பாடலை இதற்காகத் தேர்வுசெய்துகொண்டிருக்கிறார். சஞ்சய் என்றாலே எப்போதும் தமிழ்ப்பாட்டுக்கென்றொரு இடம் உண்டுதானே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாமக்கல் கவிஞரின் பாடலை அப்படியே ஈயடிச்சாம் காப்பியடிக்கவில்லை சஞ்சய். ராகத்தை மாற்றி (கமாஸ்) பாடியிருக்கிறார். 'அமிழ்தம் அவனது மொழியாகும்' என்ற இடத்தில் 'அவளது' என்ற சொல்லையும் சேர்த்துக்கொண்டு தமிழ் இருபாலருக்கும் சொந்தமானது எடுத்துச்சொல்லியிருக்கிறார்.

இந்த குறும்படத்துக்குப் படைப்பாளி (Auteur) - பார்கவி மணி பாராட்டுக்குரியவர். கற்பனை வளத்துடன் தமிழனை அழகுபடுத்தியிருக்கிறார். அவனின் பெருமையை உணரச்செய்திருக்கிறார்.

நாலு நிமிட வீடியோவில் கமாஸ் ராகத்தின் முப்பரிமாணங்களை சலவை செய்து இஸ்திரி போடப்பட்ட எட்டு முழ வேட்டிமாதிரி அத்தனை தூய்மையாக வெளிப்படுத்தியிருக்கும் சஞ்சய், டிவி பட்டிமன்றம் மாதிரி பண்டிகை நாளுக்கென்று காத்திருக்காமல் தமிழனை அடிக்கடி அழைத்துவரவேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு