Election bannerElection banner
Published:Updated:

1 பில்லியன் வியூஸ்... `ரௌடி பேபி'யிலிருந்து தனுஷுக்கு எவ்வளவு கோடி வருமானம் கிடைத்திருக்கும்?!

'ரௌடி பேபி'
'ரௌடி பேபி'

ஒரு வீடியோ எந்த நாட்டில் இருந்து பார்க்கப்படுகிறது என்பது, ஒரு வீடியோவிலிருந்து வரும் வருமானம் எவ்வளவு என்று கணிப்பதில் முக்கிய பங்காற்றும். 'ரௌடி பேபி' பாடலை பொறுத்தவரையில் அது பெரும்பாலும் இந்தியாவிலிருந்து பார்க்கப்பட்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

யூடியூப் பெரிய அளவில் பிரபலமாவதற்கு முன்பே தனுஷ் - அனிருத் கூட்டணியில் உருவான 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் உலக வைரலானது. சரியாக அந்தப் பாடல் வெளியாகி ஒன்பது வருடங்களுக்கு பிறகு இப்போது தனுஷின் 'ரௌடி பேபி' பாடலும் இமாலய சாதனையை யூடியூப்பில் படைத்திருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் 'மாரி 2' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் யூடியூப்பில் 1 பில்லியன் (100 கோடி) வியூஸை தாண்டியிருக்கிறது. இந்திய அளவில் வெகுசில வீடியோக்களே பில்லியன் வியூஸை கடந்துள்ளன. இதில் பெரும்பாலானவை குழந்தைகளுக்கான பாடல்கள். சினிமா பாடல் என்று பார்த்தால் இதற்கு முன்பு இரண்டு பாடல்கள் மட்டுமே இந்த 1 பில்லியன் என்ற நம்பரைத் தொட்டிருக்கின்றன.

''1 பில்லியன் என்ற இந்த எண்ணிக்கையைத் தொடும் தென்னிந்தியாவின் முதல் பாடல் இது என்பதில் பெருமைகொள்கிறோம். அனைவருக்கும் நன்றி!'' என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார் தனுஷ். யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் பாலாஜி மோகனும் அனைவருக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பலர் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி 'இந்த பாடலிலிருந்து எவ்வளவு வருமானம் வந்திருக்கும்?' என்பதுதான்.

யூடியூப்பில் வரும் வருமானத்தைத் துல்லியமாகக் கணிப்பது என்பது கிட்டத்தட்ட முடியாத ஒரு காரியம். நேரடியாக வியூஸை மட்டும் வைத்து இவ்வளவு வருமானம் வந்திருக்கும் எனத் தீர்மானமாகச் சொல்ல முடியாது. அது ஏன்?
Youtube
Youtube
Photo by Christian Wiediger on Unsplash

யூடியூப்பிலிருந்து வரும் வருமானம் பொதுவாக மூன்று வழிகளில் வருகிறது. இதில் முதன்மையானது விளம்பரங்கள். அடுத்தது யூடியூப் பிரீமியம் சந்தாதாரர்களிடமிருந்து வருவது. கடைசி 'Channel Membership', 'Super Stickers' போன்றவற்றிலிருந்து வருவது. இதில் கடைசி இந்தியாவில் அவ்வளவு பிரபலம் இல்லை. 'ரௌடி பேபி' பாடலை வெளியிட்ட தனுஷின் வுண்டர்பார் ஸ்டூடியோஸ் சேனலும் 'Channel Membership' பெறுவதில்லை. அதனால் வருமானத்தில் பெரும் பகுதி விளம்பரங்களிலிருந்து வருவதுதான். இதிலிருந்து வரும் வருமானம் என்பது யார் பார்க்கின்றனர், எங்கிருந்து பார்க்கிறார்கள் என்பதை வைத்து மாறுபடும். ஆயிரம் வியூஸிலிருந்து வரும் விளம்பர வருமானத்தை CPM (Cost Per Mile) என்று கூறுவார்கள். இது ஒவ்வொரு நாட்டுக்கும் மாறும்.

வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் CPM மிகவும் குறைவுதான். இந்தியாவை விட அமெரிக்காவில் CPM சுமார் மூன்று மடங்கு அதிகம் என்கிறார்கள். இதனால் அங்குள்ளவர்கள் ஒரு வீடியோவை அதிகம் பார்க்கிறார்கள் என்றால் வருமானம் அதிகமாக இருக்கும். இதனால் எங்கிருந்து வீடியோ பார்க்கப்பட்டது என்பதும் ஒரு வீடியோவிலிருந்து வரும் வருமானம் எவ்வளவு என்று கணிப்பதில் முக்கிய பங்காற்றும். 'ரௌடி பேபி' பாடலை பொறுத்தவரையில் அது பெரும்பாலும் இந்தியாவிலிருந்து பார்க்கப்பட்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

அடுத்தது, ஒரு வீடியோவை பார்க்கும் அனைவருக்குமே விளம்பரங்கள் காட்டப்படுவதில்லை. இதனால் 'Monetized Views' எப்போதும் சாதாரண வியூஸை விட சற்று குறைவாகவே இருக்கும். இது எவ்வளவு என்று தெரிந்துகொள்வதும் ஒரு வீடியோவிலிருந்து எவ்வளவு வருமானம் வந்திருக்கும் என்பதைக் கணிக்க முக்கியமானது. விளம்பர வருமானத்தில் 45% யூடியூப் எடுத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை காரணிகள் பின்னிருப்பதால் வியூஸ் கணக்கை மட்டும் வைத்துக்கொண்டு வருமானம் என்னவென்பதை முடிவு செய்துவிட முடியாது.

3.7 கோடி ரூபாய் - 29.8 கோடி ரூபாய்
Social Blade என்ற பிரபல அனாலிடிக்ஸ் நிறுவனம் 'ரவுடி பேபி' பாடல் வீடியோ $5,00,700 - $40,00,000 வரை சம்பாதித்திருக்கலாம் எனக் கணிக்கிறது. இந்திய மதிப்பில் இது 3.7 கோடி ரூபாய் - 29.8 கோடி ரூபாய்.
Estimated Earning from Youtube for Rowdy Baby
Estimated Earning from Youtube for Rowdy Baby
Social Blade

இது CPM $0.25 - $4 இருக்கும் என்று எடுத்துக்கொண்டு செய்யப்படும் கணிப்பு. முன்பு சொன்னது போல இந்தியாவில் CPM என்பது குறைவுதான் என்பதால் 5-10 கோடி ரூபாய் வரை இந்த ப்பாடலிலிருந்து தனுஷின் வுண்டர்பார் ஸ்டூடியோஸ் பெற்றிருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், இந்தக் கணிப்பு எந்த அளவு சரி, உண்மை நிலவரம் என்ன என்பதெல்லாம் வுண்டர்பார் ஸ்டூடியோஸுக்கு மட்டுமே தெரியும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு