
படம்: ராம் கேஷவ்
கடந்த சனிக்கிழமை லண்டனில் கச்சேரியை முடித்துவிட்டு மாலை பாடிய ராகங்களை முணுமுணுத்தபடியே இரவு உறங்கச் சென்றார் பாம்பே ஜெயஸ்ரீ. காலை விழித்ததும் அந்த ஸ்வீட் செய்தி, மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளியிடமிருந்து வந்தது. இந்த வருடத்தின் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு ஜெயஸ்ரீ தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
‘‘எல்லாம் சாரின் செயலன்றோ...’’ என்று நெகிழ்ந்தார் ஜெயஸ்ரீ. தான் புகழின் உச்சத்தில் இருந்த சமயம் எதுவும் தலைக்கேறிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் லால்குடி ஜெயராமன் இயற்றிய ‘யாவும் கந்தன் செயலன்றோ’ என்று தொடங்கும் நாட்டக்குறிஞ்சி ராகப் பாடல் நினைவுக்கு வந்தது.
கொல்கத்தாவில் பிறந்தவர் பாம்பே ஜெயஸ்ரீ. பள்ளி, கல்லூரி படிப்புகள் மும்பையில். இசையை இவர் தன்வசப்படுத்திக்கொண்டது சென்னையில். ஆரம்பத்தில் தாய் தந்தையிடமும் பிறகு டி.ஆர்.பாலாமணியிடமும் இசை கற்றவர், 87-ல் லால்குடியிடம் சேர்ந்தார். ‘Notes to Myself' என்று தலைப்பிட்டு சவிதா நரசிம்மன் தயாரித்து வெளியிட்ட யூடியூப் பேட்டியில் இதுபற்றி விரிவாகப் பேசியிருக்கிறார் ஜெயஸ்ரீ.
அப்போது தங்கியிருந்த ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து 12B பஸ் பிடித்து பாண்டிபஜாரிலோ பனகல் பூங்காவிலோ இறங்கி, இரு பக்கமும் மரங்கள் சூழ்ந்த வெங்கட் நாராயணா சாலையில் நடந்து ராமானுஜம் தெருவில் 13/14 இலக்கமிட்ட வீட்டுக்குள் நுழைந்த தினம் இன்றும் ஜெயஸ்ரீயின் மனதில் ஆணி அடித்த மாதிரி பதிந்திருக்கிறது.

முதல் நாள் YACM நடத்திய பாட்டுப் போட்டியில் பங்கு பெற்றிருக்கிறார் இவர். முதல் பரிசு கிடைத்திருக்கிறது. தலைமை விருந்தினராக வந்திருந்து பரிசு வழங்கியவர் லால்குடி ஜெயராமன்! ஏற்கெனவே மும்பையில் ஒருமுறை நடந்த சந்திப்பை நினைவுபடுத்தி, ‘‘இப்போ நீ மெட்ராஸ்ல தானே இருக்கே! நாளைக்கு வீட்டுக்கு வா...’’ என்றிருக்கிறார் அவர்.
‘‘13/14 வீட்டில் நான் நுழைந்தபோது பகுதாரி வர்ணம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார் சார். அவரின் அம்மா பூஜையில் இருந்தார். மணியின் சப்தம்... ஊதுபத்தியின் மணம்... தீபாராதனை... அந்தச் சூழலில் பரவசமானேன்’’ என்கிறார் ஜெயஸ்ரீ, நெகிழும் குரலில்.
‘‘காலையில் நான்கு மணி நேரம், மாலை நான்கு மணி நேரம் என்று தொடர்ந்து நான்கரை வருடங்கள் சார் எனக்கு வகுப்பெடுத்ததை என்னால் மறக்கவே முடியாது. பாட்டு டீச்சராக மட்டும் இல்லாமல், நண்பராக, வழிகாட்டியாக இருந்து எனது வாழ்க்கையைச் செப்பனிட்டவர் லால்குடி சார்...’’ என்றார் ‘சங்கீத கலாநிதி designate’ பாம்பே ஜெயஸ்ரீ!
வகுப்பு ஆரம்பித்ததும் அறைக்குள் ராக தேவதையின் ஆக்கிரமிப்பு நிறைந்துவிடுமாம். லால்குடியின் உருவம்கூட கண்களில்படாதாம். ஜன்னலில், நாற்காலியில், தரைவிரிப்பில் என்றும் எங்கும், எதிலும் பைரவியோ கல்யாணியோ கலந்துவிட்டிருக்கும் உணர்வில் திளைத்துவிடுவாராம் ஜெயஸ்ரீ!
இந்த சங்கீத அஸ்திவாரத்துக்கு ஆரம்பப்புள்ளியாக அமைந்தது, கல்லூரி நாள்களில் ஒருமுறை மும்பை செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டியில் நடந்த மகனுடன் லால்குடி வாசித்த வயலின் கச்சேரி. முடிந்து வீட்டுக்கு வந்ததும், ‘‘அம்மா, நீ சாரை சந்திக்கணும், என்னுடன்...’’ என்றார் ஜெயஸ்ரீ. சந்திப்பு நடந்தது. பாடியும் காட்டினார். ‘‘சீதாலட்சுமி... நீ இவளை சென்னைக்கு அழைச்சுட்டு வந்துடு. நான் வாய்ப்பாட்டு சொல்லித்தரேன்...’’ என்றிருக்கிறார் லால்குடி. மற்றவை வரலாறு!
கேட்போரைக் கிறங்கடிக்கச் செய்யும் குரல் ஜெயஸ்ரீக்கு. தானும் உருகி, மற்றவர்களையும் உருக வைக்கும் வசீகரக் குரல் அது. சென்ற ஜனவரியில் மியூசிக் அகாடமி நடத்திய தியாகராஜர் ஆராதனை விழாவில் அவர் பாடிய சண்முகப்ரியாவும், பிலஹரியும் அரங்கில் அத்தனை ரசிகர்களையும் தியானநிலைக்கு அழைத்துச் சென்றது லேட்டஸ்ட் உதாரணம்!
கர்நாடக இசை மட்டுமன்றி, சினிமாப் பாடல்கள் மட்டுமன்றி, இந்துஸ்தானி இசை உட்பட எல்லா ஜானர்களிலும் தனக்கென்று உருவாக்கிக் கொண்டிருக்கும் தனி ஸ்டைலில் பிரமாதப்படுத்தக் கூடியவர் ஜெயஸ்ரீ. தவிர, தம்பட்டம் அடித்துக்கொள்ளாமல் ஆட்டிஸம் குழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக்கொடுத்துவருகிறார். மஞ்சக்குடிக்குச் சென்று அங்கே தயானந்தா சரஸ்வதி பள்ளியில் பாரபட்சமின்றி அனைத்துவித சிறுவர், சிறுமிகளுக்கும் இசைப் பாடம் எடுக்கிறார். இப்படி இன்னும் பல...
தகுதிமிக்க பாம்பே ஜெயஸ்ரீக்கு இந்த விருது வழங்கப்போவதில் பலருக்கும் மகிழ்ச்சி!