சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சரிகமபதநி டைரி 2019

டி.எம்.கிருஷ்ணா
பிரீமியம் ஸ்டோரி
News
டி.எம்.கிருஷ்ணா

வீயெஸ்வி

சரிகமபதநி டைரி 2019

‘சமூக வலைதளங்களில் சங்கீதக் கலைஞர்கள்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தால் முனைவர் பட்டம் நிச்சயம்! அந்த அளவுக்கு சீனியர், ஜூனியர் என்ற வகையறையில்லாமல் வரிசைகட்டி வலைதள மேடையேறுகிறார்கள் பாட்டுப் புலிகள். ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என்கிற ஸ்மார்ட்போன் மும்மூர்த்திகள் இவர்களுக்கு 24x7 சந்நிதி திறந்து வைத்திருக்கிறார்கள்!

பாடுமிடமெல்லாம் வெற்றிக்கொடி பறக்க விடும் ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் RaGa Candid என்ற பெயரில் ஒவ்வொரு திங்களன்றும் வீடியோ கேமரா முன் உட்கார்ந்து ஜாலியாக சிரித்தபடியே ஹலோ சொல்வது அழகு!

டி.எம்.கிருஷ்ணா
டி.எம்.கிருஷ்ணா

இளமை நாள்களில் மும்பை மாதுங்கா பகுதியில் ஓயாத சலசலப்புக்கும் சப்தங்களுக்கும் நடுவில் இவர்கள் பாட்டு பிராக்டீஸ் செய்ததைக் குறிப்பிட்டபோது, பக்கத்துப் பிள்ளையார் கோயிலில் இருந்து ஸ்பீக்கரில் ஒலித்த ‘விநாயகனே வினை தீர்ப்பவனே...’ பாடலை சீர்காழி கோவிந்தராஜனின் குரலிலும், ‘மருதமலை மாமணியே...’ வை மதுரை சோமுவின் ஸ்டைலிலும் ரஞ்சனி பாடியது கலக்கல். இந்த எபிசோடுகள் குறுந்தொடரா, மெகா சீரியலா என்பது தெலியலேருராமா!

சரிகமபதநி டைரி 2019

நவம்பர் முதல் தேதி முதல் முப்பதாம் தேதி வரை முகநூலில் கிளாஸ் எடுக்கிறார் வீணை இசைக்கலைஞர் ஜெயந்தி குமரேஷ். ‘Season of carnatic’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இரண்டு ராகங்களுக்கு இடையிலுள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை மீட்டியும் பாடியும் காண்பித்து விளக்கும் ஜெயந்தி, இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கையில், சரஸ்வதிக்கும் நாராயணிக்கும் இடையேயான ஸ்வர வித்தியாசத்தை வாசித்துக்காட்டினார். ஆந்தோளிகாவில் ‘ராக சுதா ரச...’ வாசித்தார். இப்படி கலைஞர்கள் பலர் இசை தொடர்பாகப் பயனுள்ள வகையில் பதிவேற்றம் செய்துகொண்டிருக்க, வேறு சிலர் சொந்தச் சரக்கைக் கடைவிரிப்பதும் உண்டு!

பாடகர் ரித்விக் ராஜா, மொபைலும் கையுமாக சலூனுக்குப் போயிருக்கிறார். முடிவெட்டிக் கொள்வதற்கு முன்பாக ஒன்று, முடி வெட்டும் போது ஒன்று, வெட்டிய பிறகு இன்னொன்று என்று வரிசையாகப் படமெடுத்து, இன்ஸ்டா வழியே நட்பு வட்டத்துக்குக் காணிக்கை செலுத்தியிருக்கிறார்!

இளம் பாடகி வித்யா கல்யாணராமன் வேறுவகை. தான் தயாரிக்கும் விதவிதமான பதார்த்தங்களை குளோசப்பில் படமெடுத்துப் பதிவிடுவது இவருக்கு ஹாபி. பனீர் டிக்கா, ஆலுகோபி, ஆனியன் ரய்தா என்று போட்டோ வழியே பரிமாறும் அயிட்டங்கள் பார்ப்பதற்கு யம்மி. சாப்பிட்டுப் பார்த்ததில்லை!

கச்சேரிக்குக் கட்டிச் செல்லும் சேலையுடன் மாடல் மாதிரி ஒய்யாரமாகப் போஸ் கொடுத்து, புடவையின் பெயர், நெய்தவர், மடித்தவர்களின் இருப்பிடம் போன்ற விவரங்கள் வெளியிடுவார் எஸ்.மஹதி.

ரஞ்சனி - காயத்ரி
ரஞ்சனி - காயத்ரி

சமூக வலைதளங்களில் கலைஞர்களின் பயணங்கள் முடிவதில்லை!

‘ஏற்றதொரு கருத்தை

என்னுள்ளம் ஏற்றால்

எடுத்தியம்புவேன் எவர்

வரினும் நில்லேன் அஞ்சேன்’ என்ற கண்ணதாசனின் வரிகள் டி.எம். கிருஷ்ணாவுக்கு என்னமாய்ப் பொருந்துகின்றன!

கிருஷ்ண கான சபாவுக்காக இவர் செய்த கச்சேரி ‘டிசம்பர் சீசன்’ கணக்கில் வராது. ஆனால், சிறப்பான, உருக்கமான கச்சேரி என்ற முத்திரை பெறும்.

ஜெயந்தி குமரேஷ்
ஜெயந்தி குமரேஷ்

வில் இல்லாத ராமர் மாதிரி, அன்றைய மேடையில் வில் தவிர்த்த கிருஷ்ணா. அதாவது முதல் தடவையாக வயலின் இல்லாமல் பாடினார். மிருதங்கமும் கஞ்சிராவும் மட்டுமே துணைக்கு. ஆனாலும் இரண்டு மணி நேரக் கச்சேரியில் வயலின் இல்லை என்பதே தெரியாமல் செய்தது கிருஷ்ணசாகசம்!

அவுன்ஸ் கிளாஸில் ஆலாபனைகள். கீர்த்தனைகளுக்கு நடுவில் அண்டா நிறைய தானம் - நிரவல் - ஸ்வரங்கள். தன் மெஸ்மரிசிங் குரலால் மிரட்டினார் கிருஷ்ணா. முகாரிப் பாடலுடன் ஆரம்பித்து இரண்டாவதாகக் கல்யாணி ராக வர்ணம். மேல்பூச்சுப் பூசாமல், கீழடி மாதிரியாகத் தோண்டித் துருவி ஆராய்ந்து கல்யாணியின் நல்முத்துகளைக் கண்டறிந்தார். நடுநடுவே தானமும் ஸ்வரமும் பாடி ராகத்துக்கான சங்கதிகளையெல்லாம் வெளிக்கொண்டு வந்தார். பாடும்போது ராகத்தில் தோய்ந்து லயித்துவிடுகிறார். கேட்போரையும் சுற்றம் மறக்கச் செய்துவிடுகிறார்.

‘மறி மறி நின்னே மொறலிட’ கீர்த்தனை காம்போதி ராகத்தில் தியாகராஜர் இயற்றியது. இதை ‘சிந்துபைரவி’ படத்துக்காக சாரமதி ராகத்தில் யேசுதாஸைப் பாட வைத்தார் இளையராஜா. அப்போது அது சர்ச்சையானது.

ரித்விக் ராஜா
ரித்விக் ராஜா

காம்போதி ராகப் பாடலில் ஒவ்வொரு வரிக்கும் பதின்மூன்று சங்கதிகள் உள்ளன. ஆலத்தூர் சகோதரர்கள் அந்த நாளில் நிறைய பாடுவார்கள். மற்றவர்களுக்கு இதைப் பாட எப்போதாவதுதான் மனசு வரும். “மறைந்த வித்வான் செங்கல்பட்டு ரங்கநாதனிடம் இதை நான் கற்றுக்கொண்டேன்...” என்று அறிவித்துவிட்டு இந்தப் பாடலைப் பாடினார் கிருஷ்ணா. காம்போதி பாடுவதற்கென்றே படைக்கப்பட்ட குரல் அவருக்கு, கேட்கணுமா என்ன!

மிருதங்கத்தில் கே.வி.பிரசாத், கஞ்சிராவுடன் அனிருத் ஆத்ரேயா பாடகருக்கு வீசிய வெண்சாமரம் நம் காதுகளை இதமாக வருடி விட்டது. இவர்கள் வாசித்த தனி ஆவர்த்தனம் அமோகம்.

கேரளாவில் மறுமலர்ச்சியின் தந்தையாகவும் தத்துவ ஞானியாகவும் போற்றப்படுபவர் நாராயண குரு. மும்மொழிகளில் இவர் எழுதியிருக்கும் பாடல்களை வைத்தே முழுக் கச்சேரி ஒன்று மிக அண்மையில் மும்பையில் நிகழ்த்தினார் டி.எம்.கிருஷ்ணா. அவற்றில் ஒன்றையாவது பாடுவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தார்கள் சென்னை ரசிகர்கள்!

வித்யா கல்யாணராமன்
வித்யா கல்யாணராமன்

பின்குறிப்பு: மேடையில் தம்புராவுடன் உட்கார்ந்த இளம் பாடகருக்கு தூக்கமா, அல்லது மயக்கமா? இடப்பக்கம், வலப்பக்கம், பின்பக்கம் என்று தம்புராவுடன் முப்பக்கமும் சரிந்து சரிந்து விழப்பார்த்துக்கொண்டே இருந்தார்.

பாரத் சங்கீத் உற்சவம் 2019.

டிசம்பரில் ஹால் கிடைக்காது என்பதால் நவம்பரிலேயே நவ நாள்களுக்கு நாரத கான சபா அரங்கில் நடந்துமுடிந்துவிட்டது. பார்த்தசாரதி சுவாமி சபாவுடன் இணைந்து கர்நாடிகா நடத்தும் உற்சவம் இது. இங்கு பகல், மாலை, இரவு என்று மூன்று வேளையும் நடந்த நிகழ்ச்சிகளில் ‘காம்போ’ கச்சேரிகள், பட்டிமன்றம், ஃப்யூஷன், கன்ஃப்யூஷன் எல்லாம் உண்டு. சஞ்சய் சுப்ரமணியன், விஜய் சிவா போன்ற ஒரு சிலர் மட்டும் ஃப்யூஷன் வலையில் சிக்காத மீன்கள்!

மஹதி
மஹதி

கச்சேரியின் ஆரம்ப நிமிடங்களில் மைக்குடன் மல்லுக்கட்டாத பாடகர், விஜய் சிவா. ஏற்கெனவே ஒரு மணி நேரமாகப் பாடிக்கொண்டிருப்பது போன்ற உணர்வை முதல் பாட்டிலேயே ஏற்படுத்தி விடுவார். Straight into Business!

வாரண முகனைத் துணைக்கு அழைத்துவிட்டு, கடைக்கண் வைத்து என்னை ஆளம்மா என்று தேவியை வேண்டிவிட்டு விஜய் சிவா பாடிய முகாரி அவ்வளவு துல்லியம். தப்பித் தவறிக்கூட எந்தச் சங்கதியிலும் பைரவி பக்கத்தில் வந்து கண்சிமிட்டி விட்டுப் போகாத கட்டுக்கோப்பான முகாரி. வாய் திறந்து, குரல் உயர்த்தி முகாரியில் சஞ்சாரம் செய்தபோது சிலிர்க்க வைத்தார். சுப்பராய சாஸ்திரி இயற்றிய ‘ஏமநின்னே’ பாடலின் வரிகளைத் தெள்ளத்தெளிவான உச்சரிப்புடன் விஜய் பாடினார் என்று சொல்வது சூரியன் கிழக்கே உதிக்கும் என்று சொல்வதற்கு சமம்.

காம்போதியை இரண்டு பகுதிகளாக விரிவாக்கம் செய்துவிட்டு, குழிக்கரை விஸ்வநாதர்மீது முத்துசுவாமி தீட்சிதர் பாடியிருக்கும் ‘காசி விஸ்வேஸ்வரா’வை விஜய் சிவா தொடங்கியபோது ஹாலில் சாம்பிராணியின் நறுமணம்!

விஜய் சிவா
விஜய் சிவா

வயலின், அக்கரை சுப்புலட்சுமி. கேட்போரின் காதில் புனல் வைத்துத் தேன் கலந்த பால் ஊற்றுவது போன்ற குளுமை. இவரின் வயலினிலிருந்து புறப்பட்டு வரும் சுநாதம் இன்றைய தேதியில் ‘தி பெஸ்ட்’ என்று சொன்னால் மற்ற வயலின் கலைஞர்கள் வயலன்ட் ஆகக் கூடாது!

கச்சேரியில் தனி ஆவர்த்தனம் முடிந்ததும், மிருதங்கம் வாசித்த என்.சி.பரத்வாஜை (உமையாள்புரம் சிவராமனின் தயாரிப்பு) புன்முறுவலித்தபடியே கைகுலுக்கிப் பாராட்டினார் விஜய் சிவா. மற்றபடி கணக்கு வாத்தியார் மாதிரி கடுகடுவென்று முகத்தை வைத்திருக்கும் இந்தப் பாடகரின் செயல், இளம் மிருதங்கக் கலைஞருக்குப் பெரிய அங்கீகாரம். அன்று கஞ்சிரா, சுனில் குமார்.

பின்குறிப்பு: தம்புராவுடன் பின்னால் உட்கார்ந்த சீடர் சஞ்சய் சுவாமிநாதனுக்கு அங்கங்கே பாடுவதற்கு வாய்ப்பு தந்தார் விஜய் சிவா. சஞ்சய்க்கு நல்ல குரல்வளம்.

- பக்கங்கள் புரளும்...