பேட்டி - கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

சரிகமபதநி டைரி 2019

பரத்சுந்தர்
பிரீமியம் ஸ்டோரி
News
பரத்சுந்தர்

வீயெஸ்வி

பிள்ளையார் சாமியை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் தோப்புக்கரணம்போடும் மாணவமணிகளுக்கு மார்க் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் எடுத்த எடுப்பில் தன்னைத் துதிக்கும் இசைக் கலைஞர்களுக்கு அருள் புரிவது அவசியமாகிறது.

சரிகமபதநி டைரி 2019

பாரதிய வித்யா பவன் கலைவிழாவில் ‘சக்தி கணபதி பஜேஹம்’ என்று கச்சேரியைத் தொடங்கினார் ஷோபனா விக்னேஷ். ‘மகாநதி’ ஷோபனா என்று பரவலாக அறியப்படுபவர். பக்திப் பாடல்கள் நிறைய பாடிப்பாடி, அதற்கென்றே பக்குவப்பட்ட குரல் ஷோபனாவுக்கு. இவரது பவன்ஸ் கச்சேரியும் கோயில் வளாகத்தில் உட்கார்ந்து பாட்டுகேட்கும் உணர்வையே அதிகம் ஏற்படுத்தியது.

மெயினாக ஷோபனா பாடியது தோடிதான் என்றாலும், முன்னதாக வசந்தா ராக ஆலாபனையில் கொடுத்த அசைவுகளும், செய்த நகாசு வேலைகளும் இவரது இனிமை கலந்த குரலுக்குப் பொருத்தமாக அமைந்தன.

‘சதாசிவ பஜனமே ஜன்ம சாபல்யம் தரும்’ என்ற பாபநாசம் சிவனின் தோடி ராகப் பாடலை உயிரோட்டமாகப் பாடினார் ஹோபனா. ஆனால், ஆலாபனை? விமான நிலையம் விரைந்து சென்று போர்டிங் பாஸ் வாங்க வேண்டிய அவசரத்தில் 7 நிமிடங்களிலேயே தோடிக்கு send off கொடுத்துவிட்டார்! இந்த ராகத்தை அக்குவேறு, ஆணி வேறாக அலசினால் மட்டுமே கேட்போருக்கு ஜன்மம் சாபல்யமடையும்!

ஷோபனா விக்னேஷ்
ஷோபனா விக்னேஷ்

‘யாழ்முரி’ என்ற ‘பண்’ணில் அமைந்த - அதாவது அடாணா ராகத்தில் ‘மாதர் மட பிடியும்’ என்று தொடங்கும் தேவாரம் பாடினார் ஷோபனா. இதுமாதிரியான பதிகங்களை ஓதுவார்கள் பாடணும்... நாம கேட்கணும்!

ஜெயதேவரின் மூன்றாவது அஷ்டபதியை சுஹானுபாவத்துடன் பாடிவிட்டு, கச்சேரியின் நிறைவுப் பகுதியில் ‘தேஹிமுதம்... தேஹி ஸ்ரீராதே... ராதே...’ என்ற முண்டாசுக் கவிஞனின் பாடல். இது கமாஸ் ராகத்தில், மணிப்பிரவாள நடையில் அமையப்பெற்றது.

90 நிமிடங்களில் தேவாரம், அஷ்டபதி, பாரதி என்று வெரைட்டி காண்பித்த ஷோபனா, நோட்புக், பேப்பர் என்று எதையும் பார்த்துப் பாடவில்லை. எல்லாமே லேப்டாப்தான்!

மயிலை மாடவீதியில் பங்குனி உத்திர விழாவில் அன்று அதிகார நந்தி உற்சவம். அதிகார நந்தியில் கம்பீரமாக வலம் வந்த கபாலியைத் தரிசித்து உருகினார் பாபநாசம் சிவன். காம்போதி ராகத்தில் புத்தம் புதிய பாடலொன்று பிறக்கிறது. ‘பாட கமிஷன் கோடி வேண்டும்’ என்று கேட்கவில்லை அவர். மாறாக, ‘காணக் கண் கோடி வேண்டும்’ என்று பரவசமாகிறார். வரிகளில் வர்ணனையின் உச்சம் தொட்டிருக்கிறார்.

பாரதிய வித்யா பவனில் இதுவரை பாடியிருக்கும் பலரும் கபாலியைக் காணக் கண் கோடி வேண்டும் என்று வேண்டியிருப்பார்கள். இந்த வருட கலைவிழாவில் பாடிய பரத்சுந்தர் உட்பட.

மகாதேவன்
மகாதேவன்

இரண்டு வருடங்களுக்கு முன்பு மியூசிக் அகாடமியில் பரத் பாடிய தோடியை ஊரே கொண்டாடியது. இப்போது அவரின் காம்போதியைக் கேட்ட பெரிசுகள் மனதார மெச்சினார்கள். பட்டுத் துணி மாதிரி வழவழப்பும் இல்லாமல், சாக்குத்துணிபோல முரட்டுத்தனமும் இல்லாத நடுவாந்திரமான குரல் பரத்சுந்தருக்கு. கேட்பதற்கு அலுப்புத் தட்டாதது. காம்போதியின் சங்கதிகளில் பாத்திக் கட்டி ரோஜா செடிபோல் வளர்த்தினார். நடுநடுவே ‘தம்’ பிடித்துக் கார்வை கொடுத்து கம்பீரமாக்கினார். ‘மாணிக்கம் வைரம் முதல்...’ வரிகளை நிரவலில் மின்ன வைத்தார். வரும் காலத்துக்கு வளம்!

வயலினுடன் நாகை ஸ்ரீராம். இவருக்கு இன்னொரு பெயர், கிளிப்பிள்ளை. பாடல் வரிகளாகட்டும், ஸ்வரங்களாகட்டும் ‘டிட்டோ’வாக வயலினில் வாசித்துக் காட்டுவதில் ஜித்தர்! சில சமயம் ஒரே தேதியில் இரண்டு கச்சேரிகளுக்கு ஒப்புக்கொண்டு குழப்புவதில் மன்னர்!

தொலைவில் உட்கார்ந்து பார்க்கும்போது இளைஞர் ப்ரவீண் ஸ்பார்ஷ், மைக்கின்றி மிருதங்கம் வாசிப்பதுபோல் தெரிந்தது. அருகில் சென்று பார்த்தபோது, மிருதங்கத்துடன் ‘காலர் மைக்’ மாதிரியான ஒன்று இணைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

“DPA 4099 வகையைச் சேர்ந்தது இது. மிருதங்கத்தின் இரு பக்கமும் ஒவ்வொன்றை இணைப்போம். கச்சேரி முடிந்ததும் கழற்றி விடுவோம். மிருதங்கத்தின் சவுண்ட் கூட்டவோ, குறைக்கவோ தேவையில்லை. இந்த மைக் வழியே வாத்தியத்தின் ஒரிஜினல் நாதம் அச்சு அசலாக அப்படியே வெளிப்படும்...” என்றார் ப்ரவீண். இவருடைய மனைவி ஷ்ரேயா தேவநாத், வயலினிசைக் கலைஞர். கணவர் மாதிரியே இவரும் தன் வயலினுடன் இந்தப் புதுவகை மைக் இணைத்து வாசிக்கிறார். டெக்னாலஜி ரொம்பவும் முன்னேறிக்கிட்டே வருது!

சரிகமபதநி டைரி 2019

அன்று கஞ்சிராவுடன் கே.வி.கோபாலகிருஷ்ணன். இதே பிரவீண் - கே.வி.ஜி. ஜோடிதான் முன்னால் பாடிய நிஷா ராஜகோபாலுக்கும் வாசித்தார்கள். தொடர்ந்து ஒரே மேடையில் மூன்றரை மணி நேரம். அட தேவுடா! அந்த அளவுக்கா இங்கே வாத்தியக் கலைஞர்களுக்கு வறட்சி?

லஸ் கார்னர் ஆர்.கே.கன்வென்ஷன் சென்ட்டரில் அதன் ஒன்பதாவது ஆண்டு விழா. அந்த சேம்பர் ஹால் நிரம்பியது. அழைக்கப் பட்டிருந்த நான்கு சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக சுதா ரகுநாதன். வரவேற்புரை வாசித்த மையத்தின் முதலாளி ராமகிருஷ்ணன், முதலில் தனது எட்டு வருட சாதனைகளைப் பட்டியலிட்டார்.

சுதா ரகுநாதன் இந்த ஹாலில் இதுவரை பாடியதே இல்லை என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், இனிமேலாவது பாட வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்காமல், மறைமுகமாகவும் சுதாவுக்குப் புரியும் வகையிலும் வார்த்தை விளையாட்டு விளையாடி அழைப்பு விடுத்தார் ராமகிருஷ்ணன்.

“இனி ஒவ்வொரு வருடமும், என் குரு எம்.எல்.வி பிறந்த ஜூலை 3-ம் தேதியும், அவர் மறைந்த அக்டோபர் 31-ம் தேதியும் இங்கே நடக்கவிருக்கும் கச்சேரிகளை நான் ஸ்பான்சர் செய்கிறேன்...” என்று கமிட் செய்த சுதா ரகுநாதன், “ராமகிருஷ்ணன் குறிப்பிட்ட இன்னொரு விஷயம் 2020-ல் நடக்கும்...” என்று தான் இந்த மினி ஹாலில் கச்சேரி செய்யப் போவதை உறுதி செய்தார்! ஆக, நடக்கப்போகும் இசை உலக அற்புதமாக தன்னுடைய இந்த அறிவிப்பை நினைத்து பெருமிதமடைந்தார் மிஸஸ் ரகுநாதன்!

கண்களை மூடிக் கேட்கும்போது அப்பா டிவி சங்கரநாராயணன் சின்ன வயசில் பாடியது போலிருக்கிறது. ஸ்வரங்களில் சிலம்பாட்டம் ஆடியபோது மதுரை மணி ஐயர் நினைவுக்கு வந்தார். மகாதேவன் சங்கரநாராயணன், தந்தைக்குப் பின்பாட்டாகப் பாடிய சமயங்களில் பம்மிப் பதுங்கியே இருப்பார். இப்போது தனி மேடையில் பாயும் புலி!

ராதா பாஸ்கர்-முத்ரா பாஸ்கர்
ராதா பாஸ்கர்-முத்ரா பாஸ்கர்

மதுரத்வனிக்காக மகாதேவன் பாடியது கேட்க பிரமிப்பாக இருந்தது. வெண்கலக் குரலோன். அன்று சிங்கிள் மைக் கச்சேரிதான். அதுகூட தேவையில்லை அவருக்கு! கீழ் ஸ்தாயியில் பாடும்போது பாதாளக் குகைக்குள் போய் விடாமலும், மேல் ஸ்தாயியிகளில் பிசிறு தட்டாலும் பாடுகிறார்.

கரகரப்ரியா ஆலாபனையின்போது ராகத்தின் ராஜ கம்பீரத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, தியாகராஜரின் எவர்கிரீன் ‘சக்கநி ராஜ...’வில் ராஜநடை நடந்துவிட்டு, ஸ்வரங்களில் கணக்கு வழக்கு வைத்து சோதிக்காமல் சர்வலகுவில் சாய்ந்து அமர்ந்தார் மகாதேவன். ஏனைய சபாக்களின் கண்கள் இவர் மீதும் விழ வேண்டும்.

ராமகிருஷ்ணன் - சுதா ரகுநாதன்
ராமகிருஷ்ணன் - சுதா ரகுநாதன்

நிற்க, தான் சொந்தமாக இயற்றிய பாடல் ஒன்றையும் நாட்டக்குறிஞ்சி ராகத்தில் பாடினார் மகாதேவன். கர்நாடக இசை மேடைகளில் பாட ஏற்கெனவே ஆயிரக்கணக்கான பாடல்கள் உள்ளன. அவற்றைக் கற்றுத் தெளிந்து பாடவே ஈழேழு ஜன்மங்கள் பத்தாது. அப்படியிருக்க, பாடவருவோரெல்லாம் பாட்டெழுத உட்கார்ந்து விட்டால் பூமி தாங்காது!

முத்ராவுக்கு இது வெள்ளிவிழா ஆண்டு.தம்பதி சகிதம் இதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள் ‘முத்ரா’ பாஸ்கரும் ராதா பாஸ்கரும். பாஸ்கர், மிருதங்க வித்வான். ராதா, பாடகர் மட்டுமல்லாமல் இசை ஆராய்ச்சி செய்து வரும் பன்முகர். இரண்டு இசைக்கலைஞர்கள் சபா நடத்தி மற்ற சகக் கலைஞர்களுக்கு மேடை கொடுப்பதைப் பாராட்டாமல் இருத்தால் அது பாவம்!

இந்த வருடம் டிசம்பர் சீஸனை வரலாறு காணாத வகையில் நடத்த ஒரு வருடமாகவே திட்டமிட்டு வருகிறது முத்ரா. ஒவ்வொரு கச்சேரிக்கும் முன்பாக 10 நிமிட வீடியோவில் நடந்து வந்த பாதை ஆவணப் படமாகத் திரையிடப்படும்.

இந்த முறை இங்கே அநேகமாக பெரிய தலைகள்’ எல்லோரும் பாடப்போகிறார்கள். பட்டியலில், கர்நாடக இசையுலகின் ரஜினியும் நயன்தாராவும் மிஸ்ஸிங்!

- பக்கங்கள் புரளும்..